எப்பவும் தன்னோட குதூகலமா விளையாடும் டுமாங்கி இன்னிக்கி சோகமா இருக்கறதைப் பார்த்து உதயா கேட்டான். “ஏன் சோகமா இருக்க?”
“அதுவா ஒண்ணுமில்ல. . .இந்தப் பெண் குழந்தைகள நெனச்சிட்டு இருக்கேன். . .ப்ச்ச இப்படி கூடவா இருக்கு சமூகத்துலன்னு. . .”, என்றார் டுமாங்கி ரோபோ.

“அதென்ன பெண் குழந்தைகன்னு தனியா இழுக்கறிங்க. புரியும்படி விளக்கமாச் சொன்னாத்தான் என்னவாம் டுமாங்கி”, என்று கடுகடுத்தான் உதயா. “எனக்குத்தான் மனுசங்க மனசுல நினைக்கறது அப்படியே கேட்குமே. . .இன்னிக்கி உன் பெண் நட்புகள் நினைக்கறதெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தேன்”, என்றது டுமாங்கி.

“நீதான் மனச அப்படியே படிச்சிடுவன்னு எனக்குத் தெரியாதா! சரி சரி பெண் நட்புகள் என்ன நினைச்சாங்க. . .சீக்கிரம் சொல்லேன்”என்று பரபரத்தான் உதயா. “இதோ பாரு உதயா! சொல்றேன் பொறுமையாக கேளு”, என்று ஆரம்பித்தது டுமாங்கி ரோபோ.

“உங்க வகுப்பு ஆசிரியர், வகுப்புல இருக்குற எல்லோரும் வீட்ல இருந்து உணவு எடுத்துக்கிட்டு வந்து ஒண்ணா உட்கார்ந்து, ஒவ்வொருத்தர் உணவையும் எல்லோரும் பங்கிட்டு உண்டு, ரொம்ப மகிழ்வா உணவுத் திருவிழா நடத்தினாங்க இல்லையா…?”, என்று கேட்டது டுமாங்கி.

PC: Dinathanthi

“ஆமா. . .ஆமா. . .நாங்க எல்லோரும் ஒண்ணா உட்கார்ந்து எல்லோர் உணவையும் பங்கிட்டு உண்டதுல அடடா அதன் உணர்வும் நெகிழ்ச்சியும் வார்த்தைல விவரிக்க இயலாது டுமாங்கி. எவ்ளோ அன்பா மகிழ்வா அனைவரும் அப்போ சாப்பிடுவோம் தெரியுமா! அடிக்கடி இப்படி உணவுத் திருவிழா டீச்சர் வைக்க மாட்டாங்களான்னு மனசு ஏங்கும்”, என்று உதயா உணர்ச்சி பெருக்கில் மிதந்ததை வெகுவாக இரசித்தது டுமாங்கி.

“உணவுத் திருவிழாவுல எந்தப் பாகுபாடும் இல்லாம பங்கிட்டு உண்ணும் போது பெண் குழந்தைகள் மனசுக்குள் நினைச்சது என்னன்னா….
உன்னோட நெருங்கிய தோழி பானு, அவங்க வீட்ல அவங்கத் தம்பிக்குத்தான் தினமும் பால், முட்டைனு இன்னும் பல சத்தான உணவைக் கொடுப்பாங்களாம். இவ எனக்கு வேணும்னு கேட்டா….”, என்று இழுத்தது டுமாங்கி. “கேட்டா என்னன்னு சொல்லேன்? இழுக்கறயே டுமாங்கி. . .”

“சரி….சரி….சொல்றேன். இவ கேட்டா அவன்தான் எங்களுக்குக் கடைசி வரை சோறு போடப்போறான். கூடவே இருந்து எங்கக் கடைசி காலம் வரை பார்த்துக்குவான். நீ வேறொரு வீட்டுக்குப் போறவதானன்னு சொல்றத நினைச்சு வேதனைப்பட்டாடா உதயா”, என்று டுமாங்கி உதயா மனதின் கணத்தைக் கூட்டியது. “அடக்கொடுமையே, இதென்னடா அநியாயமா இருக்கே”, என்று துயர் கொண்டான் உதயா.

“அப்புறம் குமுதா வீட்ல கறி எடுத்து அவதான் சமைப்பாளாம். ஆனா அவங்க அப்பா, அண்ணன்கள் எல்லாம் சாப்பிட்ட பிறகு மிச்சம் இருந்தாத்தான், இவ சாப்பிடணுமாம். சில முறை சாப்பாடு தீர்ந்துட்டா சமைச்சு சாப்பிடுன்னு சொல்வாங்களாம். இவளும் இனி எங்க சமைக்கறதுன்னு அப்படியே வெறும் வயிறோட படுத்துக்குவாளாம். பசி எடுத்தாக்கூட இவ முன்ன சாப்பிடக்கூடாதாம். நெனச்சாலே ரொம்ப மனசு கணத்து போய்டுதுடா உதயா “, என்றது டுமாங்கி.

“என்ன டுமாங்கி சொல்ற. . .இவ்ளோநாள் அவுங்க கூட படிக்கிறேன். இது எனக்குத் தெரியாம போச்சேன்னு வருத்தமா இருக்குடா டுமாங்கி… அப்புறம் சொல்றா….”

“பொதுவாக குடும்பங்களில் ஆண்கள் முதலில் சாப்பிட்டு கடைசியில்தான் பெண்கள் சாப்பிடணும்னு எழுதப்படாத விதி இருக்கு டுமாங்கி. இது பெண் குழந்தைங்க வரை நீடிக்குதே…”, என்று நொந்தான் உதயா.
“பெண் குழந்தைகளுக்குக் கல்வில முதற்கொண்டு பல பாகுபாடுகள் இருக்குன்னு அம்மா, அப்பா சொல்லியிருக்காங்க. ஆனா உணவுல பாகுபாடா? நான் நினைச்சுக்கூட பார்க்கலியே இப்படில்லாம் இருக்கும்னு டுமாங்கி”, என்றான் உதயா.

“சில பெண் குழந்தைகளுக்கு உடல் பருமனா இருப்பதால் அளவாச் சாப்பிடுன்னு சொல்றாங்கன்னு கவலைப்பட்டாள் நிசா… அதனால அவள இறைச்சிலாம் கொழுப்புன்னு வேணாம்ன்னு சொல்லிடறாங்களாம். ஆனா இவளுக்கு இறைச்சினா ரொம்ப பிடிக்குமாம்டா உதயா”, என்றது டுமாங்கி. “நல்லா சாப்பிட்டு விளையாண்டா உடம்பு கட்டுக்கோப்பா ஆயிடப் போகுது. இதெல்லாம் பிரச்சனையாடா டுமாங்கி”, என்றான் உதயா.

“அடேய் நீ வேற தலைப்புக்கு என்ன இழுக்காதே. அதை அப்புறம் பேசலாம்டா உதயா. வீட்ல பெண் குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்கறத பல பேர் மகிழ்ச்சியா நெனச்சுப் பார்க்கறது தெரிஞ்சப்போதான் மனசே நிம்மதி ஆச்சுன்னா பாரேன்டா உதயா”, என்றது டுமாங்கி.

“அப்பாடா இது ஆறுதல் அளிக்குது. பெண் குழந்தைகள்ல மாதவிடாய் வரப்போறவங்க, வந்தவங்களும் இருப்பாங்க… குழந்தை பொறப்பு அது இதுன்னு என்னென்னவோ எதிர்காலத்துல நிகழ்ந்தா நிகழப்போகுது. இது போன்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புதான் பெண்கள். அதுவுமில்லாம பெண்களுக்குச் சத்தான உணவு கிடைக்கணும்ங்கிறது அவங்க உரிமை. ஆனா இந்த மாதிரி மாண்பில்லாத காரணங்களுக்காக தினம் தினம் சரியான சத்து கிடைக்காம இருக்கறது நல்லதில்லை. என்ன செய்யலாம்ன்னு யோசிக்கணும்டா டுமாங்கி… “, என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினான் உதயா.

Anganwadi children, PC: Malaimalar

“நம் அரசாங்கம் சத்துணவுடன் வாரத்துக்கு 5 நாள்கள் முட்டை தருது. பதின்ம வயது பெண் குழந்தைகளுக்கு இரும்பு சத்து மாத்திரைன்னு கவனமெடுத்து பார்த்துக்குது. மதிய உணவுல என்ன கறி போடணும்னு அந்தந்த பள்ளியோட பெற்றோர் ஆசிரியர் சங்கம் முடிவு எடுக்குதோ, அதைத் தான் கேரள அரசாங்கம் அங்க உள்ள பள்ளிகள்ல மாசம் ஒரு முறை போடறாங்களாம்டா. அந்த நாளை பிரியாணி நாள்னு எல்லாரும் சேர்ந்து கொண்டாடுறாங்க! அதுவுமில்லாம முக்கியமா நாம செய்ய வேண்டிய வேலை ஒண்ணு இருக்குடா டுமாங்கி”, என்றான் உதயா நெஞ்சை நிமிர்த்தி….
“நாம என்னடா செய்ய முடியும்… நீ வேற சும்மா இருக்காம ஏதேதோ ஒளறிக் கொட்டறியேடா”, என்று அலுத்துக் கொண்டது டுமாங்கி.

“அடேய் டுமாங்கி, இப்படி பொண்ணுங்களுக்குக் கொடுக்காம சாப்பிடற ஆம்பளப் பசங்க எங்கக்கூடத்தான ஒண்ணா விளையாட வராங்க… அப்போ நம்ம வீட்ல இருக்கற உணவை அனைவரும் ஒண்ணா உக்கார்ந்து பங்கிட்டு உண்ணுவோம்ல? அதுதான் நம்ம தாத்தா திருவள்ளுவர், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்ன்னு சும்மாவா சொன்னார்னு இந்த ஆம்பள பசங்ககிட்ட எல்லாம் பேசி புரிய வைக்கப்போறேன். இனி அவங்க வீட்ல பங்கிட்டு சாப்பிட ஆரம்பிக்கறதுதான் நல்ல குடும்பத்துக்கு அழகுன்னு சொல்லப்போறேன்”, என்று நம்பிக்கை கலந்த பெருமிதத்தோடு சொன்னான் உதயா.

“ஆண்கள்கிட்ட பேசறது நல்ல யோசனைதான் உதயா. எங்களுக்கும் சத்தான உணவு வேணும்னு கேட்கற பெண் குழந்தைகளும் இருக்காங்க. ஆண்களுக்குத்தான் முன்னுரிமை தரணும், நாம கடைசிலயோ கிடைக்கலன்னாவோ சரின்னு ( காலங்காலமா குடும்பங்களில் இருக்கறதால) நெனக்கிறவங்களும் இருக்காங்க. அது அவங்களோட உரிமைன்னும்; உடம்புக்கும், மனசுக்கும் ஊட்டச்சத்து முக்கியம்னும் உரையாடணும்டா… உதயா”, என்று உரிமைப் பார்வையைத் தட்டி விட்டது டுமாங்கி.

“எல்லா குடும்பத்துலயும் எப்பவும் உணவு சம பங்கீட்டை வகுப்புல பண்ற உணவுத்திருவிழா மாதிரி தினம் தினம் கொண்டாடணும். ஆண், பெண் இருவர்கிட்டயும் பேசி புரிய வைப்போம். இருவரும் சேர்ந்துதான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்”, என நம்பிக்கையூட்டினான் உதயா.
குழந்தைகளுக்குச் சத்தான உணவு கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டியது அரசாங்கம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பும் கடமையும் கூட. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுக்கற மாதிரி சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி இன்னும் வேறு திட்டங்களை அறிவிச்சா நல்லா இருக்கும். பெண் குழந்தைகள் மீதான உணவு பாகுபாடு நீங்கி சமத்துவம் துளிர்க்கட்டும் சமூகத்தில்”, என்று முடித்தது டுமாங்கி.

“சரி… நேரமாச்சு நான் தூங்கப் போறேன் “, என தூங்கப்போனான் உதயா.

தொடரின் முந்தைய பகுதி:

கட்டுரையாளர்

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.