நமது சமுதாயத்தில் ‘குடும்பப் பெண்’ என்ற சொல் ஊடகங்களிலும், நடைமுறை வாழ்க்கையிலும் சர்வசாதாரணமாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘குடும்ப ஆண்’ என்ற சொல் இல்லை. ‘குடும்பப் பெண்’ தான் இருக்கிறது.
வெளிநாடுகளில் குடும்பப் பெண் (family girl) என்ற பதம் புழக்கத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்குதான் –

“பையனுக்கு நல்ல குடும்பப் பெண்ணா வேணும்”

“அவளைப் பார்த்தா குடும்பப் பெண் மாதிரியா தெரியுது?”

” நல்ல குடும்பப்பாங்கா வளர்த்திருக்கீங்க”

“இதெல்லாம் குடும்பப் பெண்ணுக்கு அழகா?”

“நல்ல குடும்பப் பெண்ணா இருந்தா இப்படி எல்லாம் செய்திருக்க மாட்டாள்” என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

யார் இந்தக் குடும்பப் பெண்? எதிர்த்துப் பேசாத, தன் விருப்பத்தை விட குடும்பத்தின் விருப்பத்திற்கே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும், அவர்கள் சொல்லும் உடைகளை அணியும், சொல்லும் பையனை (அந்தந்த ஜாதியில், மதத்தில்) கல்யாணம் செய்து கொள்ளும், அடக்க ஒடுக்கமாக குடும்ப வேலைகள் செய்யும், குடும்பம் சொன்னவாறு குழந்தைகளைப் பெற்று வளர்க்கும் பெண்ணே ‘குடும்பப் பெண்’ என்று அழைக்கப்படுகிறார்.

தான் so called ‘கற்புள்ளவள்’ என்று தினமும் அவள் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியதும் முக்கியம். உதாரணத்திற்கு, ஒரு போன் வந்தால்,”பக்கத்து வீட்டு அக்கா தான், எக்ஸ்ட்ரா சிலிண்டர் இருக்கான்னு கேக்குறாங்க”, “ஆபீஸ் மேனேஜர் பேசினார், அக்கவுண்ட் ஸ்டேமெண்ட் பத்தி கேட்டார்”, “ஊரிலிருந்து அண்ணன், பொங்கலுக்கு வரச் சொன்னார்”… இப்படி விளக்கமாக குடும்பத்தினருக்கும், இணையருக்கும், சுற்றியிருப்போருக்கும் சொல்ல வேண்டும்.

கல்யாணத்திற்கு முன்பு, தான் விரும்பும் வண்ணத்தில், விரும்பும் ஆடைகளை அணியும் பெண்ணையும், குட்டை முடி வைத்திருக்கும் பெண்ணையும், மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டுக்கு வரும் பெண்ணையும், “இதெல்லாம் குடும்பப் பெண்ணுக்கு அழகா? இப்படியெல்லாம் அலைஞ்சா, நாளைக்கு உன்னை எவன் கட்டுவான்?” என்று குடும்பத்தினர் கண்டித்து திருத்தப் பார்ப்பார்கள். முடியாவிட்டால், “கல்யாணம் வரைக்குமாவது கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ”, என்று கெஞ்சுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ? அதை புகுந்த வீடு பார்த்துக் கொள்ளும்.

pic: behance.net

கல்யாணமாகிப் போகும் இடத்தில் பல கண்டிசன்கள் –

“இந்த வீட்டுக்கு மருமகள் என்றால் புடவைதான் கட்டணும்”

“சுடிதார் போட்டுக்கலாம், ஆனா கண்டிப்பா ஷால் போடணும்”

“வேலைக்குப் போகக் கூடாது, வீட்டுவேலை செஞ்சுட்டு, குழந்தைகளையும் புருஷனையும், மாமனார், மாமியாரையும் பார்த்திட்டு இருந்தா போதும்

“வாய்க்கு ருசியா சமைக்கணும்”

“வேலைக்குப் போகலாம், ஆனா ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடணும்”

“நாளு கிழமைன்னா சுத்தபத்தமா வீட்டை மொழுகி, விளக்கேத்தி, சாமி கும்புடணும்; கோயிலுக்குப் போகணும்”

இப்படியெல்லாம் வரும் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்தால் ‘குடும்பப் பெண்’ பட்டம் கிடைக்கும். பொதுவெளியிலும், குடும்ப நிகழ்வுகளிலும் தனிமரியாதை கிடைக்கும். விவாகரத்தான பெண், ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண், தனித்து வாழும் பெண், திருநங்கை இவர்களுக்கெல்லாம் குடும்பப் பெண் பட்டம் கிடையாது. பாலியல் தொழிலாளி பற்றியோ பேசவே முடியாது! இவர்கள் எல்லோரும் தன் விருப்பங்களுக்கு, உரிமைகளுக்கு, முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுதந்திர உணர்வுடன் இயல்பாக வாழ்பவர்கள். பொது சமுதாயம் வரையறுத்து வைத்திருக்கும் எந்த இலக்கணத்திற்கும் உட்படாதவர்கள். சுருக்கமாக சொல்வதென்றால், மதங்களும், ஆணாதிக்க, ஜாதிய சமுதாயமும் உருவாக்கியிருக்கும் கட்டமைப்புக்கு எந்த வகையிலும் சவால் விடாத பெண்கள் எல்லாம் குடும்பப் பெண்கள். (அதாவது, குடும்ப அமைப்பில் கணவன், குழந்தைகளுடன் வாழ வேண்டும்) அந்தக் கட்டமைப்பை ஏதேனும் ஒருவிதத்தில் (கொஞ்சமாக இருந்தாலும்) தொந்தரவு செய்பவர்கள் எல்லாம் குடும்பப்பெண்கள் அல்ல.

இந்தக் கட்டமைப்பு எல்லாப் பெண்களுக்கும் ஏற்றதாக, ஜனநாயக முறைப்படி இல்லை. தற்செயலாக பொருந்திப் போகிறவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அப்படி இல்லாதவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களை கட்டாயப்படுத்தி, இப்படித்தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்துவது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

குடும்பத்தில் எதிர்கொள்ளும் வன்முறையாலும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்பவர்கள், விவாகரத்து செய்தவர்கள், இணையை இழந்தவர்கள், குழந்தைகளுடன் ஒற்றைப் பெற்றோராக வாழ்பவர்கள், கல்யாணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும் பெண்கள், தனது தேர்வாக திருநங்கைகளான பெண்கள்… இவர்கள் எல்லோரும் தன் உழைப்பில், தன் வாழ்க்கையை வாழ்பவர்கள். ஏதேனும் ஒருவகையில் சமூகத்திற்கு பங்களிப்பு செய்பவர்கள். இவர்கள் தோழியாகவும், அக்காவாகவும், தங்கையாகவும், மகளாகவும், மருமகளாகவும், அத்தையாகவும், சித்தியாகவும், பெரியம்மாவாகவும், பாட்டியாகவும், அம்மாவாகவும் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவர்கள் இருக்கும் உணர்வே இல்லாமல், அவர்களை பாகுபடுத்தி, ஒதுக்கி வைத்து, வேறுபடுத்துகிறோம்; காயப்படுத்துகிறோம். இது சில இடங்களில் வெளிப்படையாகத் தெரிகிறது, பல இடங்களில் நுணுக்கமாக தொக்கி நிற்கிறது. அன்பான ஆண், பெண் தோழர்களே,’குடும்ப ஆண்’ , ‘குடும்பஆண் அல்லாதவர்’ என்று சமுதாயம் பிரித்துப் பார்ப்பதில்லையே. பெண்களிடம் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு? நம் சிந்தனையையும், சொற்களையும் கவனித்து எல்லாரையும் சமமாக அன்பு செய்வோம்.

கட்டுரையாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.