“தெருக்களில் வியாபாரம் செய்யும் பெண்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். சேலையை வரிந்து கட்டுவது தொடங்கி பொது இடங்களில் தனக்கான இடத்தை லாவகமாக எடுத்துக் கொள்வது வரை என அவர்களிடம் உள்ள இயல்பான துணிவு, எதையும் எதிர்கொள்ளும் சமயோசிதம் கண்டு வியக்கிறேன். அதிலும் முதிய பெண்கள் காலை நீட்டியும், ‘அசால்ட்டாகவும்’ அமர்வதை ரசிக்கிறேன். ‘பெண் பார்வையில்’ அவர்கள் குறித்து நாம் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்.”
“கலைத் துறையோ அவர்களைத் தொடர்ந்து ‘பொருளாகவே’ பார்க்கிறது. அவர்களது மிடுக்கு+இயல்பு+பொது இடங்களில் இயங்க வேண்டும் என்ற முனைப்பு போன்றவை அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை. பெரும்பாலும் முதிய பெண்களை நீங்கள் ஓவியங்களில் காணமுடியாது; அவர்களை விட ‘கொழுகொழு’ பெண்களே அதிகம் கவனப்படுத்தப்படுகிறார்கள். (சலவை செய்யும் பெண்கள் ஓவியம் ஒன்று நினைவுக்கு வருகிறது). ஆணாதிக்க பார்வையும், வர்க்க பார்வையும் கூட கலையில் இந்தப் பெண்களுக்கான இடத்தை மறுத்து வருகிறது”, என்று சொல்கிறார் Archestudio நிறுவனத்தின் டிசைன் இயக்குனர், ஓவியக் கலைஞருமான வெண்ணிலா. இந்த வாரம் கலை முற்றம் ஓவியத் தொகுப்பில், வெண்ணிலா வரைந்த சென்னை சுற்றுப்புறங்களில் உள்ள பெண் வியாபாரிகள் ஓவியங்கள் இடம்பெறுகின்றன.
ஓவியக் கலைஞர்:
தி. வெண்ணிலா
சென்னை நகரின் மூத்த கட்டிடக்கலை நிபுணர்களில் ஒருவர்; பரந்துபட்ட அனுபவம் கொண்டவர். தனது ஓய்வு நேரத்தில் டிஜிட்டல் ஸ்கெட்சுகள் வரைந்துவருகிறார். பெண்களை முன்னிறுத்தி இவர் வரைந்த ஓவியங்கள் பெருமளவு கவனம் பெற்றவை.