நான் சந்தித்த மலசர் பழங்குடிப் பெண்களின் சமத்துவ வாழ்வியல் முறை, சிறப்பியல்புகள், பொது சமூகப் பெண்களிடமிருந்து அவர்கள் வேறுபட்டிருக்கின்ற விதம், பொது சமூகத்தோடு கலப்பதற்காக பொது சமூக நாகரீகத்தை ஏற்கின்ற பொழுது, மலசர்கள் இழக்கின்ற தனிப்பண்புகள் போன்றவைகளை இக்கட்டுரை பேசுகின்றது.

தமிழக ஆனைமலைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட மலசர்கள் சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன்பு மலைகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பொழுதும், மலைகளின் மீது உரிமையிழந்த பொழுதும், வாழ்வாதாரம் தேடி பொள்ளாச்சி வட்டத்தின் கிராமங்களில் தஞ்சம் அடைந்தனர். தொடக்கத்தில் மலசர்கள் பண்ணை அடிமைகளாக இருந்துள்ளனர். தற்பொழுது பெரும்பாலான மலசர்கள் விவசாயக் கூலிகளாக இருக்கின்றனர். தேங்காய் வியாபாரிகளின் கீழ் பல ஊர்களுக்கு சென்று நெட்டை ரக தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிப்பது, சுமப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலசர் பழங்குடிகள் கிராமத்திலிருந்தாலும், குழந்தைப் பருவம் முதலே வேட்டையாடும் நுட்பத்தை கற்றுக்கொள்கின்றனர். வளர்ப்பு நாய்களைக் கொண்டு முயல் பிடிப்பதில் மலசர் குழந்தைகள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர். மலசர்களின் தோற்றமும் உடலும் தனித்துவமான வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றது. தலைமுறை தலைமுறைகளாக உழைத்து வந்ததன் சாட்சியமாக, அவர்களது உடல் தோற்றம் காட்சியளிக்கின்றது. உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெற்றிருந்தால் மலசர்களின் உடல்கள் கடுமையாக இறுகி இருக்காது. உழைப்பின் பெரும்பகுதியை பண்ணையாரும் வியாபாரிகளும் எடுத்துக்கொள்ள, மலசர்கள் தங்களது உடலை இரும்பை போல பழக்கி வைத்துள்ளனர்.

மலசர்கள் சுருட்டைத் தலை மயிர் கொண்டவர்கள். இன்றைய தலைமுறையில் சில மலசர் குழந்தைகளின் தலை மயிர் சுருட்டை வடிவத்திலிருந்து சற்று மாறியுள்ளது. மரபணு ரீதியாக சுருட்டை முடியென்றால், இன்றைய குழந்தைகளுக்கும் அதே சுருட்டை வடிவ மயிர் இருந்திருக்க வேண்டும். வேறு எதாவது பாரம்பரியக் காரணங்கள் இருக்குமோ என்பதைத் தேடிய பொழுது ஒரு உண்மையை உணர முடிந்தது.

மலசர் பழங்குடிகள் புற்களின் மீது படர்ந்திருக்கும் அதிகாலைப் பனித்துளிகளைத் திரட்டி குழந்தைகளின் தலையில் பூசும் வழக்கத்தினை பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு பூசுவதை சடங்காகவும் செய்கின்றனர். இத்தகைய பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பதால்தான் தங்களது தலை மயிர் சுருட்டையாக உள்ளதாக மலசர்கள் கூறுகின்றனர். எண்ணெய் வாங்கித் தேய்ப்பதற்கான பொருளாதார வசதி அற்றவர்களாக கிராமங்களைத் தஞ்சமடைந்த மலசர்கள் காலம் காலமாக சுரண்டப்பட்டுள்ளனர் என்பதையும் நாம் இதன் மூலம் உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. சில மலசர் குடும்பங்கள் எண்ணெய் வாங்கும் அளவிற்கு வளர்ந்துள்ளன. வளர்ந்த மலசர் குடும்பங்களின் குழந்தைகளின் தலை மயிர் சற்று மாறுபாட்டைப் பெற்றுள்ளது.

மலசர்களின் பொருளாதார நிலை என்பது விளிம்பு நிலைப் பொருளாதாரத்தை விடவும் மோசமானது. மலசர்களின் உயர் கல்வி விழுக்காடும் குறைவாக உள்ளது. அரசு வேலைவாய்ப்புகளிலும் பின்தங்கியுள்ளனர். மலசர் பழங்குடியென்றால் மலையில் வசிக்க வேண்டும்; கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் உங்களுக்கு மலசர் என்ற பழங்குடிச் சான்றிதழை எப்படித் தரமுடியும்? மலையில் வசிக்காத மலசருக்கு இட ஒதுக்கீட்டின்படி அரசு வேலை எப்படித் தர முடியும் போன்ற சந்தேகக் கேள்விகளால் கிராமங்களில் நான்கு தலைமுறைக்கு மேலாக வாழ்ந்து வருகின்ற மலசர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகின்றது. இதுதான் இன்றைய மலசர் பழங்குடிகளின் சமூகப் பொருளாதார நிலை.

மலசர் குடும்ப ஆண், மகன், வீடு. PC: Sanjayankumar, Faecbook

இந்நிலையிலுள்ள மலசர் பழங்குடிப் பெண்களின் வாழ்க்கை முறை பொது சமூகப் பெண்களின் வாழ்க்கை முறையிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றது. பாலின சமத்துவத்தை மலசர்கள் கடைபிடிக்கின்றனர். பொது சமூகத்தில் பெண்கள் செய்ய வேண்டிய பணிகளென வகுக்கப்பட்டிருக்கின்ற பணிகளையும் மலசர் பழங்குடி ஆண்கள் இயல்பாகச் செய்து வருகின்றனர். பாறையில் அமைக்கப்பட்ட ஆட்டுக் கல்லில் மாவாட்டுவது, குழந்தைகளை தங்கள் முதுகில் துணியால் கட்டிக் கொண்டு பணி செய்வது, சமைப்பது, துப்புரவு பணி செய்வது என அனைத்துப் பணிகளிலும் ஆண்கள் பங்கெடுக்கின்றனர். மலசர் பழங்குடிகள் மட்டுமே வழிபடக்கூடிய கோவில்களில் மலசர் பழங்குடிப் பெண்களும் பூசை செய்கின்றனர். பெரும்பாலும் பெண் தெய்வங்களையே மலசர்கள் வழிபடுகின்றனர்.


“சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே; பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே” என்று நண்பனுடன் (அதியமான்) ஒன்றாக அமர்ந்து கள்ளுண்ட ஔவையாரை நான் மலசர் பழங்குடி பெண்களிடத்தில் பார்க்கின்றேன். (சிறிய கள்ளைப் பெறின், எனக்கு அருந்தக்கொடுத்து அதியமான் மகிழ்வான்; அதிகப்படியான கள் கிடைக்கையில், எனக்கு கொடுத்து நான் மகிழ்ந்து பாடக்கேட்டு அவன் அருந்தி மகிழ்வான் என்ற செய்தியை அதியமான் போர்க்களத்தில் மரணித்த பொழுது ஆற்றாமையில் இருந்த ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடலே மேற்கண்ட பாடலாகும்; பாடல் எண்- 235 ) மலசர் பழங்குடிப் பெண்கள் மது அருந்தும் பழக்கமுடையவர்கள். ஆண்கள் குடித்துவிட்டு வந்து வீட்டுப் பெண்களை அடித்துத் துன்புறுத்தி அராஜகம் செய்வது போல் மலசர் பழங்குடியைச் சேர்ந்த ஆண்கள் செய்வதில்லை. மாறாக கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து மது அருந்தி மகிழ்கின்றனர்.

‘மது பழக்கமுடைய ஆண்கள் குடிக்கின்ற பொழுது தங்களுடைய நிலையை மறந்து எல்லைகளை மறந்தே வீட்டுப் பெண்களைத் தாக்குகின்றனர்’; ‘ஆண்கள் நல்வர்கள்; ஆண்கள் குடிக்கும் மதுவே அவர்களை மதியிழக்கச்செய்கின்றது’, போன்ற ஆண்களின் குற்றங்களை நியாயப்படுத்தக்கூடிய நிலைப்பாட்டை பொது சமூகம் வெளிப்படையாகக் கொண்டியங்குகின்றது. மது அருந்துவதனால் ஆண்கள் வீட்டுப் பெண்களை அடித்துத் துன்புறுத்துவதில்லை. ‘பெண்கள் ஆண்களின் சொத்து’ என்றும், ‘மகளாக இருந்தால் தந்தைக்கும், மனைவியானால் கணவனுக்கும் பெண்கள் கீழ்படிந்து இருக்க வேண்டும்’ எனவும் பொது சமூகம் கட்டமைத்துள்ளது. கூடவே, ‘வீட்டுப் பெண்களை ஆண்கள் அடித்து துன்புறுத்துகின்ற பொழுது, மூன்றாவது நபர் தலையிடக் கூடாது’ என்றும், ‘கணவன் அடித்தால் மனைவி தாங்கித்தான் ஆகவேண்டும்’ என்றும், ஆண்களுக்கெதிரில் பேசுவதோ, கை ஓங்குவதோ, திருப்பி அடிப்பதோ நல்ல குடும்பத்து பெண்களின் பண்பல்ல’, என்றும் பொது சமூகம் கட்டமைத்திருக்கின்ற இந்த ஆதிக்க உளவியலினாலேயே ஆண்கள் குடித்து விட்டு வந்து வீட்டுப் பெண்களை அடித்து, உதைத்து துன்புறுத்தும் அராஜகத்தைப் பழகியுள்ளனர்.

மலசர் பழங்குடிகளில் மதுவை அருந்தாத பெண்களும் உண்டு. அப்பெண்களை அவர்களது கணவன்மார்கள் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்துவது கிடையாது. காரணம் மலசர் பழங்குடிகளின் நாகரீகம் அவர்களுக்கு பெண் என்பவள் ஆணின் சொத்து என்றோ, கணவன் அடித்தால் மனைவி தாங்கிக் கொள்ள வேண்டுமென்றோ கற்றுக்கொடுப்பதில்லை. பழங்குடி நாகரீகம் மலசர்களுக்கு சமத்துவத்தை கற்றுக்கொடுத்திருக்கின்றது.

குழந்தைகளை கட்டித் தூக்கிக் கொள்ளும் பழங்குடி ஆண், பெண்கள். PC: Vikatan

மலசர் பழங்குடி பெண்களின் மெனோபாஸ் (மாதவிடாய் நிறுத்தம்) வயது என்பது 50 வயதிற்கு பின்பானதாக பெரும்பாலும் உள்ளது. சராசரியாக 50-55 வயது என்று அவர்களது மெனோபாஸ் வயதைத் தீர்மானிக்கலாம். 58, 61 வயதுகளில் எல்லாம் மெனோபாஸ் அடைந்த பாட்டிமார்களும் மலசர் பழங்குடிகளிடத்தில் இருக்கிறார்களென்பதை அறிந்த பொழுது ஆச்சரியமாக இருந்தது. உலக அளவில் சராசரியான மெனோபாஸ் வயது 45-55 என்றுள்ளது. மேற்கத்திய நாடுகளில் சில நாடுகள் மெனோபாஸ் வயதை நீட்டிப்பதற்கான வாழ்க்கை முறைகள் குறித்து விவாதித்தும் ஆய்வு மேற்கொண்டும் வருகின்றன. ஆனால் இந்திய ஒன்றியத்தில் 45 வயதிற்கு முன்பாகவே முன்கூட்டிய மெனோபாஸ் அடையும் பெண்களின் வாழ்க்கை முறையை சீரமைக்க பரவலான விவாதங்கள் நிகழாமல் இருக்கின்றன.

நாம் இன்னும் மாதவிடாயையே தீட்டு என்று அறியாமையில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கையில் மெனோபாஸ் குறித்த விழிப்புணர்வும் விவாதங்களும் ஏற்பட இன்னுமொரு 50 ஆண்டுகள் காத்துக்கிடக்க வேண்டும் என்பது போல் தற்போதைய சூழல் இருக்கின்றது. 30 வயதிலிருந்தே சில பெண்கள் மெனோபாஸ் அறிகுறிகளை அடையத் தொடங்கி விடுகின்றனர். வழக்கமான சீரான உதிரப்போக்கு இல்லாமல் முதல் நாள் மட்டும் குறைந்த அளவு உதிரப் போக்கு ஏற்படுவது, வறண்ட தன்மையை அடையும் புணர்புழை, எலும்புத் தேய்மானம், இரண்டு மாதங்களுக்கொரு முறை மாதவிடாய், சில சமயங்களில் 3-6 மாதங்களுக்கொருமுறை மாதவிடாய், மாதம் முழுக்க தொடர்ச்சியான உதிரப்போக்கு போன்ற பல அறிகுறிகளை 30 வயதுகளிலிருந்தே உழைக்கும் மகளிர் அடைகின்றனர்.

மாதவிடாய் நிறுத்தத்தை நாற்பது வயதுகளில் அடைகின்ற பெண்களும் கூட, அதன் அறிகுறிகளை 30 வயதிலிருந்தே பெற்று அவதியடைகின்றனர். எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவதற்கோ, விவாதித்து தெளிவதற்கோ வாய்ப்பில்லாமல் பல பெண்கள் அவதியுறுகின்றனர். முன்கூட்டிய மெனோபாஸிற்கான காரணங்களைத் தேடிய பொழுது ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் போன்றவைகள் இந்திய ஒன்றியப் பெண்களுக்கு பொருந்தி வரக்கூடிய முதன்மைக் காரணங்களாக உள்ளன என்பது தெரிய வருகின்றது.

இந்திய ஒன்றியத்தின் பொது சமூகப் பெண்கள் போல் அல்லாமல் மலசர் பெண்களின் மெனோபாஸ் வயது என்பது மிக ஆரோக்கியமானதாக உலக சராசரியோடு பொருந்திவருவதன் காரணத்தையும் தேடினேன்.
குடும்ப வன்முறையற்ற நாகரீகத்தை மலசர் பழங்குடி பெண்கள் பெற்றுள்ளனர். எனவே குடும்பம் என்ற அக அமைப்பால் மலசர் பழங்குடி பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதில்லை. இரண்டாவது பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியிருந்தாலும் பாலின பாகுபாடுகளின்றி கிடைக்கின்ற உணவுகளில் சம பகிர்வை மலசர் பழங்குடிப் பெண்கள் பெறுகின்றனர்.

முதிய மலசர் தம்பதி, PC: The Logical Indian

இதைத்தாண்டி மலசர் பழங்குடிகளிடத்தில் காமம் என்பது இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. மலசர் பெண்கள் விரும்பிய பொழுதுகளில் காம இன்பம் துய்க்க வெளிப்படையாக தங்களது துணைகளை அழைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கின்றனர். மலசர் பெண்கள் ஒன்றாக சேர்ந்து களைபறிக்கையிலும், விளைச்சலை அறுவடை செய்கையிலும் காமம் பற்றி உரையாடிக்கொள்கின்றனர். ஒருவரை ஒருவர் நையாண்டி செய்து கொள்வதுமுண்டு. காமம் எப்பொழுது துய்க்க வேண்டுமென்பதை பெண்களே நிர்ணயிக்கும் சூழலும் மலசர்களிடத்தில் நிலவுகின்றது. மெனோபாஸ் நிலையை ஆரோக்கியமாக மலசர் பெண்கள் கடக்க இத்தகைய சிறப்பியல்புகளே வழிவகை செய்கின்றன. பொது சமூகத்தில் காம ஆவலை பெண் வெளிப்படுத்தினால் அவளது நடத்தை கேள்விக்குள்ளாகும். கணவனிடம் அதை வெளிப்படுத்தக்கூட இன்றளவும் பல தடைகளை சிக்கல்களை பெண்கள் சந்தித்து வருகின்றனர்.

குழந்தைப்பேற்றின் அடையாளமாகவே குடும்ப அமைப்பு பெண்களைப் பார்க்கிறது. பெண்ணின் காம நலன் குறித்து குடும்ப அமைப்பு சிந்திப்பதில்லை. கணவன் விரும்புகையிலெல்லாம் புணரப்படக்கூடிய பொருளாக பெண்ணுடலை குடும்பங்கள் கட்டமைத்து வைத்திருக்கின்றன. குழந்தையின்மையைப் போக்க அல்லது குழந்தை உருவாக வழிவகை சொல்லும் மருத்துவ நிபுணர்கள்கூட கருமுட்டை உருவாகும் சமயங்களில், குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்கு ஒருமுறையாவது உடலுறவு கொள்ளும்படி ஆலோசனை கூறிவருகின்றனர் என்பது வேதனைக்குரிய ஒன்று.

அடுத்த பக்கத்தில் தொடர்ந்து வாசிக்கலாம்