பெண் உடல்மீதான உரிமை என்பதை உடல் நிர்வாணம் என்பதைத் தாண்டி ஆழமாகப் பல்வேறு கோணங்களில் பேச வேண்டியிருக்கிறது. அதில் ஒன்று கருப்பையும், தாய்மையும். பெண்ணுக்குத் தாயாவது என்பது அவளது தேர்வாக இருக்கிறதா? பெரும்பான்மையான பெண்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

முதலில், தன் இணையை தானே தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்வது என்ற பெண்ணின் அடிப்படை உரிமையே இங்கு மறுக்கப்படுகிறது. தன் விருப்பப்படி இணையைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்ளும் சில பெண்களுக்கும் தாய்மை என்பது அவள் தேர்வாக இல்லை.

‘குழந்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா? பெற்றுக் கொள்வதாக இருந்தால் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்?’ என்ற கேள்வியெல்லாம் அவளிடம் கேட்கப்படுவதில்லை.”கல்யாணமாகி மூணு மாசமாச்சே, எதாவது விசேசமுண்டா?”, என்று குடும்பத்தார் ஆரம்பித்து சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் கேட்க ஆரம்பிப்பார்கள்.

இந்த கேள்வி அரேஞ்சுடு மேரேஜ், லவ் மேரேஜ் செய்த எல்லாப் பெண்களிடமும் கேட்கப்படும். கல்யாணமான பெண் என்ற ஒரு தகுதி போதும், அவளிடம் கேட்க. தெரிந்தவர், தெரியாதவர் என்று எல்லாரும் இந்தக் கேள்வியைக் கேட்கும் தகுதியை, நமது சமுதாயத்தில் பெற்றுள்ளார்கள். இதெல்லாம் அவளின், அந்தத் தம்பதியின் தனிப்பட்ட விசயமாயிற்றே, இது நாகரிகம் அல்லவே என்றெல்லாம் பொது சமுதாயம் எண்ணுவதில்லை.

`உனக்குத்தான் கல்யாணம் ஆயிருச்சே, குழந்தை பெத்துக்கோ’, என்பது தான் பொது புத்தியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதாவது, கல்யாணம் ஆகிவிட்டால் குழந்தை பெற்றுத்தருவது என்பது அவளின் அடிப்படை கடமையாகிவிடுகிறது.

பெண்ணின் உடலின் ஓர் அங்கம் கருப்பை. அதன் மூலம்தான் அவள் குழந்தை பெற்றுத் தரவேண்டும். தன்னுடைய கருப்பை மீதான முழு உரிமையும் அவளுக்குத்தான். பத்து மாதம் குழந்தையை கருப்பையில் சுமக்க வேண்டுமென்றால், அவள் மனதளவிலும், உடலளவிலும் அதற்குத் தயாராக வேண்டும்.

Photo by Jonathan Borba on Unsplash

ஹோம் மேக்கர் என்றாலும், வேலைக்கு போகும் பெண் என்றாலும் தனது உடலும், மனநிலையும் ஒரு குழந்தையை மகிழ்ச்சியாகப் பெறுவதற்கும், கவனிப்பதற்கும் ஏற்றதாக இருக்கிறதா என்று அவள் தான் தீர்மானிக்க வேண்டும். இப்போது குழந்தை பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்பதை பெண் முடிவு செய்வதுதானே சரியாக இருக்கும்.

‘எனக்கு குழந்தை வேணும்னு ஆசையாக இருக்கு, இப்பவே பெத்துக்கோ’ என்று கணவனும்,’வயசான காலத்துல பேரன் பேத்தியைக் கொஞ்சணும்மா’ என்று மாமியார், மாமனாரும், ‘எங்களுக்கு தெம்பு இருக்கிறப்பவே, நாங்க வளர்த்துவிட்டர்றோம்’, என்று பெற்றோரும் வலியுறுத்துகின்றனர். அவளது கருப்பையின் மேல் அதிகாரம் செலுத்துகின்றனர். கருவுறுவதற்குத் தயாராக இல்லாத, விருப்பம் இல்லாத பெண்ணை நிர்ப்பந்திப்பது மனித உரிமை மீறல். மேலும், பிறர் கட்டாயத்தின் பேரில், தாய் பெற்று வளர்க்கும் குழந்தையின் உடல், மன ஆரோக்கியம் எப்படி நன்றாக இருக்கும்? தன் விருப்பத்தின் பேரில் மகிழ்ச்சியாக ஒரு பெண் பெற்றுக் கொள்ளும் குழந்தையின் உடல், மன ஆரோக்கியம் தானே சிறப்பாக இருக்கும்.

கருவுறுவது எப்படியொரு பெண்ணின் தேர்வாக இருக்க வேண்டுமோ, அதே போல் கருவைக் கலைப்பதும் அவள் தேர்வாக இருக்க வேண்டும். தோழியொருவர் கர்ப்ப காலத்தில் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், “இந்தக் குழந்தையின் வளர்ச்சி சரியாக இல்லை, கலைத்துவிடுங்கள், மீறிப் பெற்றுக் கொண்டாலும் ஓரிரு வருடங்கள் தான் இருக்கும்”, என்று மருத்துவர் அறிவுறுத்தினார். தோழி ஒப்புக் கொண்டார். இணையரும், புகுந்த வீட்டினரும், பிறந்த வீட்டினரும், “அதெப்படி முதல் குழந்தையைக் கலைப்பது? அதெல்லாம் நன்றாகத்தான் இருக்கும், பெத்துக்கோ”, என்று வலியுறுத்தினர்.

தன் முடிவை தோழி அழுத்தமாகச் சொல்ல `நீயெல்லாம் தாயா, பொண்ணே இல்லை’ என்று ஏசி, நிர்பந்தப்படுத்தி, பெற்றுக் கொள்ள வைத்தனர். விளைவு, தலை வீங்கி, உடல் சூம்பி, எந்த இயக்கமும் இல்லாமல், உயிர் மட்டும் இருந்த அந்தக் குழந்தையுடன் தோழி பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது அவள் உதவிக்கு, புகுந்த வீடோ, பிறந்த வீடோ வரவில்லை, ஒதுங்கிக் கொண்டனர். இரண்டரை வயதில் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இங்கே பெண்ணின் தேர்வை மதிக்காமல், அவள் உரிமையை மீறி, உழைப்பை சுரண்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கியது எந்த வகையில் நியாயம் ?

கருவைக் கலைப்பது என்பதற்கு அவளின் உடல், மருத்துவநிலை, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்கள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. தனிப்பட்ட காரணமாக இருக்கலாம். அது சரியா தவறா என்றெல்லாம் கருத்து சொல்ல பிறருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனென்றால், தன்னுடலில் உருவாகும் கருவுடன் பெண்ணுக்கு உணர்வுப்பூர்வமான பிணைப்பு இருக்கிறது. அதையெல்லாம் தாண்டி, தனது மனப்போராட்டங்களைக் கடந்து, கருவைக் கலைப்பது என்பது அவளின் கடினமான முடிவு. அவள் முடிவை, உணர்வுகளை குடும்பமும், சுற்றியிருப்பவர்களும் மதிக்க வேண்டும். குறைந்தபட்சம், அவளை ஜட்ஜ்மெண்டலாக பார்க்காமல் இருக்கலாம்.

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்கள் முடிவை ஏற்றுக் கொள்ளும் இணையை கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். கல்யாணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதா, அப்புறம் எதற்கு கல்யாணம் என்றெல்லாம் கேட்பது நமக்கு தொடர்பில்லாத விசயம். அது அந்தப் பெண்ணின், இணையரின் தேர்வு, அவ்வளவுதான்.

அன்புத் தோழர்களே, கருப்பை இருப்பதாலேயே எல்லாப் பெண்களும் குழந்தை பெற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை. குழந்தை பெற விரும்பும் பெண்ணை, எப்போது பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவளை முடிவெடுக்கவிட வேண்டும். பெண்ணுக்கு தன் உடல் மீதான, அந்த உடலில் இருக்கும் கருப்பை மீதான உரிமையை மதிப்போம். ஒரு காலத்தில் நாமெல்லாம் அங்கு தான் குடியிருந்தோம்.

கட்டுரையாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.