அறிமுகமில்லாத பெண்களிடம் உரையாடும் போது, “வேலை பாக்கறீங்களா?”, என்ற இயல்பான கேள்விக்கு, பெரும்பாலானோர் சற்றே கூச்சத்துடன், தாழ்வுணர்ச்சி கலந்த குரலில், “இல்லங்க, நா ஹவுஸ் வொய்ஃப் தான்”, என்பார்கள். சிலர் தன்னம்பிக்கையுடன் குரல் உயர்த்தி “ஹோம் மேக்கரா இருக்கேன்”, என்று கூறுவார்கள். ஹவுஸ் வொய்ஃபின் தன்னம்பிக்கைமாதிரி ஹோம் மேக்கர்.

`ஹவுஸ் வொய்ப்’ எனப்படுபவர் யார்? கல்யாணமான பெண், வீட்டு வேலைகளை, கணவனை, குழந்தைகளை, குடும்பத்தாரை கவனிக்கும் பணியை மட்டும் செய்து கொண்டு இருந்தால், அவரே ஹவுஸ் வொய்ஃப் என்று அழைக்கப்படுகிறார்.

‘கணவன் உழைத்துக் கொட்ட இவ உட்கார்ந்து சாப்பிடுறா’, ‘வீட்டுல சும்மாதான் உட்கார்ந்திருக்கா’, ‘அப்பா அம்மா கடன் வாங்கி பணத்தைக் கொட்டி என்ஜினியரிங் படிக்க வச்சாங்க. இவ என்னடான்னா கல்யாணத்துக்கப்புறம் வேலைக்குப் போகாம ஜாலியா வீட்ல உக்கார்ந்துட்டு இருக்கா’, ‘குழந்தையை வளர்க்கிறேன்னு சாக்கு சொல்லிட்டு தண்டமா வீட்ல இருக்காளே’, `வெளியே போய் வேலை பார்க்க துப்பிருக்கா இவளுக்கு’ , இப்படியெல்லாம் பொதுச்சமுதாயத்தால் கரித்துக் கொட்டப்படுகிறார்கள் இந்த ஹவுஸ் வொய்ப்ஸ்.

மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எல்லாம் உண்மை இருக்கிறமாதிரி தான் தெரியும். கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போமா ? ஆதியில் தாய்வழிச் சமூகமாக இருந்த காலத்தில், பெண் தலைமையில்தான் வேட்டைக்குப் போவார்கள். அவள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. காலப்போக்கில் இது, ஆணாதிக்க சமுதாயமாக மாறிப் போனதும், ஆண், தன் சொத்துக்கு வாரிசைப் பெற்றுத் தருவதும், குடும்பத்தை பேணுவதும்தான் பெண்ணின் வேலை என்று அவளையும் தனது சொத்தாக ஆக்கிவிடுகிறான். அவள் வெளியை வீடாக மட்டும் சுருக்கிவிடுகிறான்…

எல்லோரும் சாப்பிடப் பணம் வேண்டும். அதை ஆண்தான் வெளியே சென்று சம்பாதிக்கிறான், அவன்தான் முதன்மையானவன், அவன் தேவைகளை கவனிப்பவள்தான் பெண். ஆணின் மகிழ்ச்சியே அவள் மகிழ்ச்சி, அவனுக்கான பெருமையே அவள் பெருமை என்று வேப்பிலை அடிக்கப்படுகிறது. இதன் நீட்சியாக ஆணாதிக்க சமுதாயத்தின் கூறுகளான மதம், ஜாதியம் ஆகியவற்றை கட்டிக் காக்கும் பொறுப்பும் பெண்ணின் மீது திணிக்கப்படுகிறது. இதெல்லாம் தான் பெண்ணின் கடமைகள் என்று மதமும், ஜாதியமும், பெண்ணுக்கும், ஆணுக்கும் மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன. இந்த நிலையில், வீட்டை மட்டுமே வெளியாகக் கொண்ட பெண்ணின் நவீன பெயர்தான் `ஹவுஸ் வொய்ஃப்’ என்றறிக.

பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வு பெருகத் தொடங்கும் போது, பெண்கள் கல்வி கற்கவும், பல துறைகளில் பணிபுரியவும் ஆரம்பிக்கிறார்கள். ஆனாலும், கல்வி கற்று, வெளியே போய் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. விவசாயத்தில் பெண்கள் அதிகம் உழைக்கிறார்கள். கட்டிடப்பணி, அன்-ஸ்கில்டு (குறிப்பிட்ட திறன் தேவைப்படாத) & அன்-ஆர்கனைஸ்டு (ஒழுங்குபடுத்தப்படாத) துறைகளில் பெண்கள் அதிகம் பணிபுரிகிறார்கள்.

wikihow

பெரும்பாலும், படித்த, கீழ்-நடுத்தர வர்க்கமும், நடுத்தர வர்க்கமும், மேல் வர்க்கமும், இன்றும் பெண்களை வெளியே வேலைக்குப் போக ஊக்குவிக்காமல், ஆணாதிக்கத்தின் தேவையை மட்டும் நிறைவேற்றும் `ஹவுஸ் வொய்ஃப்’புகளாக வைத்திருக்கின்றன. (அடிமட்டத்தில், ஆண்-பெண் இருபாலரும் அன்றாடம் உழைத்து, இணைந்தே பொருளீட்டி சாப்பிடுகின்றனர்.)

இந்தக் குடும்பங்களை ஆராய்ந்தால், ஒரு தரப்பு ‘பொண்ணு நிறையப் படிச்சு வேலைக்குப் போனா, அவளுக்குத் தக்க மாப்பிளை பார்க்கணும், அது நம்மால முடியாது’ என்பர். மற்றோர் தரப்போ, ‘கல்யாணம் பண்ணி, குடும்பம் நடத்துறதுக்கு தேவையான அளவு பொண்ணு படிச்சாப் போதும், அவ படிப்புக்கு ரொம்ப செலவழிக்காம கல்யாணத்து சேத்து வைக்கணும்’ என்பார்கள். ‘பொண்ணு நல்லாப் படிக்கட்டும், அப்பத்தான் நம்ம ஜாதியில, நம்ம அந்தஸ்துக்கு தக்க மாப்பிள்ளையைப் பார்த்து, கட்டிக் கொடுக்க முடியும், மத்தபடி வேலைக்கெல்லாம் போக வேண்டாம்’, என்பார்கள் பலர்.’பொண்ணு விருப்பம் போல படிக்கட்டும், மாப்பிள்ள வீட்ல ஒத்துக் கிட்டா வேலைக்குப் போகட்டும், இல்லன்னா வீட்ல இருக்கட்டும்’, என்று சொல்வார்கள் சிலர்.

இதில் அந்தப் பெண்ணுக்கு என்ன விருப்பம் என்று யாராவது கேட்பார்களா? பெரும்பான்மையினர் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், இங்கு பெண்குழந்தைகளின் மீது செலுத்தப்படும் அன்பு நிபந்தனைக்கு உட்பட்டது. குடும்பத்தினர் – குறிப்பாக அப்பா, இல்லாவிட்டால் அப்பாவின் விருப்பத்தை/ ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்தும் அம்மா – விரும்பும் நடை உடை பாவனை, அவர்கள் சொல்லும் படிப்பு, வேலை, மாப்பிள்ளை, இதையெல்லாம் ஏற்றுக் கொண்டால், மகளுக்கு பாசம் கிடைக்கும். இல்லாவிட்டால், ‘நோ’தான். ஒப்புக்கு மகள் விருப்பத்தைக் கேட்போரும், தம் விருப்பத்தை அவள் வாயிலிருந்து வர வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில், ‘உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்’ என்று மறைமுகமாக வலியுறுத்துவார்கள். தான் விரும்பும் படிப்பு, வேலை என்பதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு இன்றும் எட்டாக்கனவுதான். கல்யாணம் ?

‘அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, பாட்டி சாகுறதுக்குள்ள உன் கல்யாணத்தை பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க’, ‘நான் வேலையில இருக்கும்போதே உனக்கு கல்யாணம் பண்ணிடனும்…நல்ல மாப்பிள்ள வந்திருக்கு, இனி இப்படி ஒண்ணு அமையுமான்னு தெரியல’, இப்படி பல காரணங்களை சொல்லித்தான், விருப்பமில்லாத பெண்ணை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்கள். (விரும்பி கல்யாணம் செய்யும் பெண்ணும், தான் தொடர்ந்து வேலைக்குப் போகவேண்டும் என்று கண்டிஷனெல்லாம் போடமுடியாது, தற்செயலாக அவர்கள் ஒத்துக்கொண்டால் ஓகே.)

Photo by Molly Belle on Unsplash

கல்யாணமே பெண்ணின் தேர்வாக இல்லாத போது, ‘ஹவுஸ் வொய்ஃப்’ என்பது மட்டும் அவள் தேர்வாக இருக்க முடியுமா? ‘பொண்ணு வேலைக்குப் போகக் கூடாது’, என்று கண்டிஷன் போட்டுத்தான் நிறைய கல்யாணங்கள் இங்கு நடக்கின்றன.

ஹவுஸ் வொய்ஃப்பாக இருக்கும் பெண்கள், காலை முதல் இரவு வரை செய்யும் வேலைகளையும், அந்தப் பணிகளுக்கான ஊதியத்தையும் பட்டியல் போட்டால், கார்ப்பரேட் ஊதியத்திற்கு இணையாக இருக்கும். அவர்கள் வீட்டிலேயே எப்போதும் இருக்கிறார்கள் என்பதற்காக, `டேக் இட் ஃபார் கிராண்டட்’ ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வீட்டில் 24 மணி நேரமும் பணிபுரியும் உதவியாளர் வைத்திருந்தால் எப்படி இருக்கும்? அந்த வசதியைத் தான் ஹவுஸ் வொய்ஃப்ஸ் தருகிறார்கள்.

தன்னை சும்மா இருக்கிறோம் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக இழுத்துப் போட்டுக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். பணத்துக்காக கணவனை சார்ந்திருக்கிறோம் என்ற உணர்வே, அவனது மதக்கட்டுப்பாடுகளுக்கும், ஜாதிய செயல்பாடுகளுக்கும், ஆணாதிக்கத்திற்கும் தலையாட்ட வைக்கிறது. காலப்போக்கில் அதுதான் சரியென்றும் நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பெரும்பாலான பெண்கள், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்று வேலைக்குப் போவதில்லை, அல்லது வேலையைத் துறக்கிறார்கள். வேலைக்குப் போக விரும்பும் இத்தகைய பெண்களுக்கு, போதுமான அளவில் குழந்தைகள் காப்பகங்களை, அனைத்து ஊர்களிலும், கிராமங்களிலும் அமைத்துக் கொடுத்திருக்கிறோமா ? அல்லது பணியிடங்களைத்தான், பாலூட்டும் தாய்மார்களுக்கும், சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் தாய்மார்களுக்கும் ஏற்ற வசதியுடன் அமைத்திருக்கிறோமா ? இன்றும், அரசில் பணிபுரியும் பெண்களுக்குத்தான் `சைல்ட் கேர் லீவ்’ தரப்படுகிறது. ஆண்களுக்கு (ஒற்றைப் பெற்றோர் அல்லாதோருக்கு) தரப்படுவதில்லை. இது சின்ன உதாரணம் மட்டுமே. குழந்தை வளர்ப்பு என்பதை பெண்ணின் கடமையாகத்தானே, பொதுச்சமுதாயமும், அரசும் இன்றும் பார்க்கின்றன.

வேலைக்குப் போகும் பெண்ணுக்கு, வீட்டு வேலை, அலுவலக வேலை என்று இரட்டைச்சுமைதான். வீட்டுவேலை என்ற ஒரு சுமையே போதும், நான் ஹவுஸ் வொய்ஃபாகவே இருந்து கொள்கிறேன் என்று ஒரு பெண் முடிவெடுத்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும் ? ஏனென்றால், வீட்டு வேலையை ஆணும் பெண்ணும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் நிலை இங்கு இன்னும் வரவில்லையே.

அன்புத் தோழர்களே, நமது சமுதாயம், அனைத்துப் பெண்களும் வெளியே சென்று பணிபுரியக்கூடிய அடுத்த நிலைக்கு நகர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு, பெண்ணுக்கான உரிமைகளை – கல்வி, படிப்பு, வேலை, இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை – அவர்களுக்கு கிடைக்கச் செய்ய, நாம் குரல் கொடுக்க வேண்டும்.

வீட்டுவேலை, சமையல்வேலை, குழந்தை வளர்ப்பு ஆகிய பணிகளை ஆண்களும் சமமாக பகிந்துகொள்ளச் செய்ய வேண்டும். பெரியார் பரிந்துரைத்த சமுதாய சமையலறை-community kitchenஐயும் நாம் யோசிக்கலாம். ஆணுக்கு இணையான எண்ணிக்கையில், பெண்கள் பணியிடங்களில் வேலை செய்வதற்கு ஏற்ற வசதிகளை, அண்ணல் அம்பேத்கர் தொடங்கிவைத்த பணியை, நாம் மேம்படுத்த வேண்டும். ஆண்களுக்கு, பெண் சமத்துவம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது முக்கியம். இதை நாம் குடும்பங்களில், சுற்றுப்புறங்களிலிருந்து தொடங்க வேண்டும் தோழர்களே. இத்தோடு, ஹவுஸ் வொய்ஃப்பாக இருக்கும் தோழிகளை, empathyயோடு பார்ப்போம், அன்பு செய்வோம், உரையாடுவோம் !

முந்தைய கீதா பக்கங்கள் இங்கே:

கட்டுரையாளர்

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.