2019 ரியாத் தமிழ்ச்சஙக சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை

சரவணன் ஏற்கனவே ஒரு முசுடுதான். இப்போதோ கேட்கவே வேண்டாம். எதைச் சொன்னாலும், எதைக் கேட்டாலும் ஒரு முறைப்பு. அதிகம் போனாலும் சிடுசிடுவென ஒரு பதில். ஆறுமாதம் முன்பு செத்துப்போன தன் அம்மாவின் மேல்தான் ஹேமாவுக்கு கோபம் கோபமாக வந்தது. ” சித்தி மகன்…தம்பி..தொம்பின்னு ஒரு சிடுமூஞ்சிக் கொரங்குகிட்ட கட்டிக் குடுத்துட்டு இப்பிடி பொறுப்பேயில்லாம சட்டுபுட்டுன்னு செத்தும் போவாளா ஒருத்தி எல்லாம் என் தலையெழுத்து … ”

விளக்கு, தாம்பாளம், சூடத்தட்டு ஒவ்வொன்றையும் புளிபோட்டுத் தேய்த்து, தேய்த்து, பாத்திரம் துலக்கும் தூள் போட்டுத் தேய்த்து அழுத்துகிற அழுத்தில், என்றாவது ஒருநாள் வலிதாங்காமல் சாமியே வெடித்துக் கொண்டு வெளிவந்து விடக் கூடும். ” வேறென்ன செய்றது? சோறாக்கலாம், வீடு கூட்டலாம், பாத்திரம் தேய்க்கலாம். அதுக்குள்ளே அடுத்த வேளை வந்துடும் திரும்ப சோறாக்கலாம், பாத்திரம் வெளக்கலாம். இடையில் ஆத்தாமையா இருந்தா சாமி கும்புடலாம்”. இதெல்லாந்தான் கஷ்டம்னு போனவாரம் வரைக்கும் நெனச்சுக்கிட்டிருந்தா.

அதுக்கும் வந்துச்சு வினை…
சரவணன் பட்டறைக்கும்,பசங்க பள்ளிக்கூடத்துக்கும் கெளம்பிட்டா பேசி புழங்க ஒரு நாதி கிடையாது. வேத்துமுகம் ஒண்ணு வராது…. சாமிமாடத்தில் அதனதன் இடத்தில் வைத்து மஞ்சள், குங்குமம், எண்ணெய், திரி எனக் கிரமமாக இட்டு முடித்தபோது கடும் எரிச்சலாக வந்தது.

“இஞ்சேரு ..ஒரு நா இல்ல ஒருநா ஒங்களல்லா எங்கியாச்சும் குப்ப குழில கொண்டோய் வீசிட்டு அப்பிடியே கண்காணாம நடையக் கட்டப் போறேன்…அதான் நடக்கப் போவுது பாத்துக்க….அதுவரக்கி பழக்கதோசம் தேக்கிறேன் வெளக்கேத்துறேன்,..சூடங்காட்டுறேன் ..அனுபவிச்சுக்க …” இன்ன சாமியிடம் என்றில்லாமல் பொத்தாம்பொதுவாக ஒரு மிரட்டலை விடுத்துவிட்டு வாசல் பக்கம் போனாள்.

தெருமுனை திரும்பி பிள்ளைகள் இருவரும் வருவது தெரிந்தது. எட்டாம் வகுப்பு போய்விட்ட மாது தண்ணீர் பாட்டிலைத் தூக்கிப் போட்டு பிடித்து விளையாடியபடி முன்னால் வர, சற்றுப்பின்னால் மலர் அவன் சாப்பாட்டுப் பையையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டு தொய்ந்த முகத்தோடு வந்து கொண்டிருந்தாள். மகள் முகத்தைப் பார்த்ததுமே “சொரேல்”என்றிருந்தது ஹேமாவுக்கு. எப்போதுமே பெரிய கலகலப்பு கிடையாது இந்தப் பெண். அப்பனப் போல இருக்கு பாரு…என்று இவளே அவ்வப்போது குட்டவோ, கிள்ளவோ செய்திருக்கிறாள்.தொய்ந்த அந்த முகம் வயிற்றைப் பிசைய பெருகிய தவிப்போடு வேகமாக உள்ளே திரும்பி விட்டாள்.

யாராவது, “அட…இதெல்லாம் ஒண்ணுமேயில்ல“, எனச் சொல்ல மாட்டார்களா….பெரிய உறவு வட்டமோ, நட்பு வட்டமோ கிடையாது. போக வர இருக்கும் யாரிடமும் இதுபற்றிப் பேச முடியும் எனத்தோன்றவில்லை. இப்போதைக்கு ஊர் உறவு எனப் போகவும் வாய்ப்பில்லை. பேசுவதென்றாலுந்தான் எப்படிப் பேசுவது..இவளுக்கென்று தனியாக அலைபேசி கிடையாது. கணவனுடையதை அவனறியாமல் கூட எடுத்து ஆள முடியாது. பேச முடிந்தாலும் இந்த சங்கடத்தை என்னவென்று சொல்வது? சரவணன் திட்டுவதுபோலத் தன் மேல்தான் தவறோ? பத்து பதினோரு வயசுப் புள்ளைக்கி இதப் பத்தியெல்லாம் என்ன சொல்றது ..எனக்கெல்லாம் யார் சொன்னா… இந்தக் குட்டியும் அப்பிடியொண்ணும் மடியில விழுந்து பெரண்டு செல்லங்கொஞ்சாது ..வெளாடாது..அம்முக்குளி .. புத்தகப் பையை வீசிவிட்டு வந்த மாது, “திங்கிறதுக்கு ஏதாச்சி இருக்காமா? “ என்றான்.

“போ..போய் கை காலக் கழுவிட்டு வா எரும ..”
இவள எங்க காணம்…”மலரு…மலரு…”
பதில் சொல்லாமல் புத்தகப் பை வைத்த சுவர் ஓரத்திலேயே உட்கார்ந்திருந்தவளைக் கிட்டே போய் அசைத்து…”ஏ பாப்பா ..போடீ..போய்க் கை காலக் கழுவிட்டு வா…” அசதியாக இருக்கும்போல. தூரம்தான். பள்ளி மாற்றி..வீடு மாற்றி …மாறவேண்டிய ஆளுங்கதான் மாறுறதில்ல…சரவணனின் பட்டறையிலிருந்தும் இந்த வீடு தூரம்தான்.
அப்போதும் வாழ்க்கைமேல் எரிச்சலாகத்தான் இருந்தது. ஆனால் அதுவே பரவாயில்லை என்று ஏங்கும் காலம் வருமென ஹேமா நினைத்ததில்லை.

வீட்டு வேலைகளோடு கூடுதலாகத் தையல் வேலையும் இருக்கும். நேரடி வாடிக்கையாளர்கள் என்று கிடையாது. பக்கத்து வீட்டு முன்வாசலில் கடை வைத்திருந்த பக்கிரி தனக்கு வரும் சில வேலைகளை இவளிடம் கொடுப்பார். அதற்கும் தன் வழக்கப்படி சரவணன் முறைக்கத்தான் செய்தான். “பள்ளியோடத்துக்குப் பணங்கட்டவாச்சும் ஆவும்ல” என்று பக்கிரியின் மனைவிதான் வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தாள். பிள்ளைகளும் தானே குளித்து, சாப்பிட்டு போய்வரும் கட்டமாகிவிட்டதே. நேரம் மிச்சந்தான். இந்தப் பிள்ளைகளின் கணக்கு வேறு அவளைப் படுத்தியது.

“இப்பவே என்னா டூஷன்….நீதான் பன்னண்டாவது படிச்சிருக்கல்ல..”
“நீங்க வேற..நாம் படிச்சதுக்கும் இதுவோ பாடத்துக்கும் ஒரு சம்மந்தமுந் தெரியில. அதுவும் இங்கிலீசுல வேற இருக்கு. டூசன் போட்டாதான் சமாளிக்க முடியும்“, அதுதான் வினையாகப் போயிற்று. எங்கிருந்துதான் வந்ததோ அப்படி ஒரு காய்ச்சல். நான்கு நாட்கள் மருத்துவமனையில் சேருமளவு போய் விட்டது. கொஞ்சம் எழுந்து நடமாட ஆரம்பித்தவுடன் மனசு கேட்கவில்லை. தனக்குத் தெரிந்த அளவில் சரவணன் ஏதோ வீட்டையும் பிள்ளைகளையும் சமாளித்திருந்தான். ‘தட்டிப்போட்ட அடையத் திருப்பி போடக்கூட நாதியத்துப் போனா இப்பிடித்தான்’, என்று புலம்பியவாறே ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினாள். தலைக்குக் குளிக்க வைத்து நாளாயிற்றே என்று மகளை மல்லுக்கட்டி இழுத்துப்போனாள் .

Elayaraja Swaminathan

நெஞ்சுக்குக் குறுக்கே சின்னத் துண்டைக் கட்டிக் கொண்டு நின்றவளை,
“யே எரும….இன்னும் எனக்கு மூச்சு எரக்கிதுடி….ஒழுங்கா கிட்ட வந்து தலையக் காட்டுனாத்தான் என்னா “என இழுத்தபோது துண்டு நழுவி விட்டது. “இரு இரு..யே என்னா இது…கிட்ட வா…எங்கடி போயி மரத்துல ஏறி சரிஞ்ச?தடிப்பய வேலயெல்லாம் பண்ண வேண்டியது”, என்றவாறே தொட்டுப் பார்க்க முனைந்தபோது கத்தி அழ ஆரம்பித்து விட்டாள் மலர். “சரி..சரி…ஒண்ணும் இல்ல. அழுவாத…இரு இரு…குளிச்சதும் அம்மா பத்து போட்டு வுடுறன். மொதல்லயே அம்மாட்ட சொல்லணும்ல, உழுந்துட்டன். இப்படி இப்படி இருக்குன்னு சொல்லணுமா இல்லியா? அழுவாதடி பாப்பா…போய்த் தொவட்டிக்க. இஞ்சேரு…கண்ணத் தொடைங்கிறேன்ல? தலையில் தண்ணி ஊத்திட்டு அழுது குமிக்காத சொரம் வந்து தொலையப் போவுது…இந்தா வர்றேன். மருந்து அரச்சிட்டு வர்றேன்.”

சமாதானமாகச் சொல்லிக்கொண்டே வேப்பிலை பறிக்கப் போனாலும் கன்றிப் போயிருந்த நெஞ்சுப் பகுதியைப் பார்த்து பதற்றமாகத்தான் இருந்தது. வேப்பிலையும் மஞ்சளும் அரைத்த கிண்ணத்தோடு வந்து பார்த்தால் குழந்தை சுருண்டு கிடக்கிறாள். விசும்பல் நிற்கவில்லை.
“அழுவாத..அழுவாத…ஏண்டா எங்க போயி வுழுந்த…..மரத்துல ஏறுனியா…. அடிபட்டவொடன அம்மாட்ட சொல்லியிருக்கலாம்ல…? கூச்சமும் அழுகையுமாய்த் திணறியபடி மலர் சொன்ன விவரம் கேட்டதும் ஆவேசம் பொங்கிவிட்டது ஹேமாவுக்கு.

“அந்தக் கம்மனாட்டிய என்ன பண்ணுறன் பாரு”, எனக் கத்தத்தொடங்கிட
சரியாக சரவணன் வீட்டுக்குள் நுழைந்தான். சிறப்பு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் ராசப்பனை யாரோ ஒருவன் உள்ளே புகுந்து தாக்குகிறான் என்ற செய்தி அந்தத் தனியார் பள்ளியை உலுக்கியது. கணக்குவழக்கு பார்த்துக் கொண்டிருந்த தாளாளரும் அவரது அணுக்க ஊழியர்களும் சட்டென மற்றவர்களை விலக்கி அவனைத் தனியே கொண்டு வந்தனர். ராசப்பனும் பின்னே வரப் பணிக்கப்பட்டான். சரவணன் நேராக வந்து சட்டையைப் பிடித்தபோது இருந்த உதறல் ராசப்பனுக்கு இப்போது சற்று தணிந்திருந்தது. தாளாளருக்கு சரவணனை நன்றாகத் தெரியும். அவர் வாகனங்களுக்கும் அவன்தான் பராமரிப்பு. “என்னப்பா இதெல்லாம்? படிக்காட்டியும் திருத்தமான ஆளுன்னு நம்பிதான ஒம்பசங்கள சேத்துகிட்டேன். இப்பிடி உள்ள பூந்து சட்டையப் புடிக்கிற ?”

“எதுவாருந்தாலும் சாருட்ட வந்துதான சொல்லியிருக்கணும் சரவணா?” தன் விசுவாசத்தைக் காட்ட முனைந்தார் அலுவலக உதவியாளர் ரங்கசாமி . “யோவ் ..பச்சப்புள்ள மேல கை வெச்சிருக்கான். இவனுக்குலாம் நீ சப்போட்டா? ஒம்புள்ளகிட்ட எவனாவது இப்பிடி செஞ்சா நீ போயி கம்ப்லேண்டு பண்ணியிட்டு நிப்பியா? விடுங்கய்யா, அவன ரெண்டுல ஒண்ணு பாத்தர்ரன். வாத்தியாராடா நீ….” “என்ன ராசப்பன் என்ன சொல்றான் இந்த ஆளு…அடிச்சீங்களா நீங்க..” “எனக்கு ஒண்ணும் புரியல சார். மொதல்ல இந்த ஆளு யாரு எதுக்கு அடிக்கிறான்னே தெர்ல சார். நாம்பாட்டுக்கு ஸ்பெசல் கிளாஸ் எடுத்துக்கிட்டுருந்தேன்….”

“யே..நாயே நடிக்காதடா…மனுசனாடா நீ…டூசன் படிக்க புள்ளைய அனுப்புனா கொரங்கு மாறி பிராண்டி வெச்சுருக்க…” தன்னை இறுகப் பிடித்துக் கொண்டிருந்த பியூன் கையிலிருந்து திமிறியபடி கத்தினான் சரவணன். புரிந்தாலும் புரியாத மாதிரி நடிக்கத் தொடங்கினான் ராசப்பன். தொடர்ந்த அமளியில் சரவணன் சொல்வதுபோல் தான் எந்தத் தவறும் செய்யவில்லையென உறுதியாகச் சொல்லத் தொடங்கியதோடு நீதி கேட்டு முறையிடவும் முடிந்தது அவனால். “இப்பிடிலாம் அபாண்டமாப் பேசறான். அதப் பாத்துட்டு இருக்கீங்களே சார்? நம்ப ஸ்கூலு புள்ளங்க மார்க்கு குறையக் கூடாதுன்னு பேருக்கு ஒரு பீசு வாங்கிட்டு பாடுபட்டுக்கிட்டு கெடக்கேன். யாராச்சும் இதுவரக்கும் இப்பிடி என்ன சொல்லியிருக்காங்களா …”

“யோவ்…அப்ப எம்புள்ள சொல்றது என்னா?” சீறினான் சரவணன். “புள்ளங்கள்லாம் இப்ப செரியில்ல சார்..சினிமாவுலயிம் டிவியிலயிம் எதாச்சும் பாத்துட்டு கண்டபடிப் பேசக் கெளம்பிருதுவோ சார்..“ ரத்தம் கொதித்தாலும் எதுவும் செய்ய வழியற்றுப் போனான் சரவணன்.
கூட்டம் கூட்டவோ, எங்கும் முறையிடவோ, விவரம் தெரியாத, கூசிப் போகிற ஆட்களில் ஒருவன் என்பது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் பிடிபட்டது. ராசப்பன் தாளாளருக்கு தூரத்து உறவு வேறு. இதைப் பரவலாகப் பேசி, அவனை வேலையை விட்டு நிறுத்தி, வழக்கு வாசியென்று போனால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும். அதோடு ராசப்பன் கணக்குப் பாடத்தில் திறமையான ஆள். வெளியில் விட்டால் இப்படி அனுபவமுள்ளவன் கிடைப்பது கடினம். கொஞ்சம் வசதி இருப்பதால் போட்டிக்கு இன்னொரு பள்ளி ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சரவணனை விட்டால் இன்னும் மூன்று மெக்கானிக்குகள் உண்டு ஊரில்.

“சரி சரி..போதும் நிறுத்துங்கப்பா…ஏங்க…ரங்கசாமி…சரவணன் எதோ டென்சன்ல இருக்காப்ல…போங்க, கூட்டிட்டுப்போயி பேசிவிடுங்க. ராசப்பன் சார்…நீங்க என் ரூம்ல போயி உக்காருங்க கொஞ்சம் பேசணும்…”, இதில்தான் உன் சாமர்த்தியத்தைப் பார்க்கப் போகிறேன் என்பதுபோல விஷயத்தை ரங்கசாமியிடம் தள்ளிவிட்டு நகர்ந்தார் தாளாளர். சரவணன் சொல்லவந்த விஷயம் புரிந்ததிலிருந்து உள்ளுக்குள் கோபம் பொங்கினாலும் அதை விசுவாசத்தால் அணைத்துவிட்டு, மெல்ல சரவணனின் தோளில் கைவைத்து திமிறுபவனை அணைப்பதுபோல் கூட்டிச் சென்றார் ரங்கசாமி.

“எனக்கே மகா சங்கடமாத்தான் இருந்துச்சி சரோ…ஆனா என்ன செய்ய…நமக்கு சோறு போடற மொதலாளி. சொன்னா செஞ்சிதான ஆவணும்? இந்த சரவணம்பய மேலயும் தப்பு இருக்கு. என்னதான் பொண்டாட்டி ஆஸ்பத்திரில கெடக்கான்னாலும் டூசனுக்கு போன புள்ளைய நேரா நேரத்துல கூட்டியிட்டு வந்துருக்கணும். பையனும் பந்து வெளாடப் போயிட்டானாம். எல்லாப் புள்ளவோளும் வீட்டுக்குப் போனப்பறமும் டூசன்லையே இருக்கட்டும்னு வூட்டுக்குப் போறப்ப வந்து சாவாசமா கூட்டிட்டுப் போயிருக்கான். ராசப்பன் வூட்லயும் ஒருத்தருமில்ல…நம்ம கண்ணுக்கு வேணா கொழந்தையா இருக்கலாம். மத்தவன் எப்பிடி இருப்பானோன்னு யோசனயே இல்லாமையா இருப்பான் ஒருத்தன்? எவம் புத்தி எப்ப எப்பிடி போவுமோன்னு யோசிச்சிகிட்டே வாழுறது கொடுமதான். ஆனா ஒலகம் அப்பிடி கேட்டுப் போயி கெடக்கே … அப்பிடியே நொடிச்சிப் போயி ஒக்காந்திருந்தவனப் பாத்தா ரொம்ப வயித்தெரிச்சலாத்தான் இருந்துச்சி…இருந்தாலும் சமாளிச்சிகிட்டு பேச்ச கொடுத்தேன்…”

” சரவணா. இதெல்லாம் வெளில சத்தம் போட்டுயிட்டு கெடக்காத. நமக்குதான் அசிங்கம். நாளக்கி நம்ம புள்ளக்கிம் ஒரு நல்லது கேட்டது நடக்கணும்ல? ஒங்கோவம் எனக்குப் புரியிது. இவனுங்க சாவாசமே வேணாம். சப்ஜாடா டிசி கிசிலாம் நானே கடைல கொணாந்து தந்துர்றேன். நீ வேற பள்ளியோடத்துல கொண்டோய் சேத்து வுட்டுரு. நடுவழில ஏண்டா வர்றேன்னு கேப்பானுவோ. இஞ்ச நடத்துறது புடிக்கிலன்னு சொல்லு, இல்ல வூட்ட மாத்திக்க. அதுக்குத்தான்னு சொல்லு….அப்பிடி இப்படின்னு பேசி அவன ஒரு வழிக்கி கொண்டாறங்காட்டியும் பிராணம் போயிருச்சு சரோ….
சமாதானமா ஆயிடலன்னு எனக்குந்தெரியிம். எப்பிடி முடியும்? பச்சப் புள்ளையப் புடிச்சி அலங்கோலம் பண்ணி வுட்டுருக்கான். என்ன செஞ்சான் எது செஞ்சான்னு கூட எப்பிடிக் கேக்குறது சார்னு குமுறிட்டான்…நானும் சேந்து அழுதுட்டன். ஆனா இவ்ளோ தூரம் பேசிட்டு நானும் ஒரு தப்பு பண்ணிட்டேன் சரோ…”

” இல்லாதப்பட்டவனாச்சேன்னு எளக்காரமா நெனக்கிற புத்தி நமக்கும் வந்துருது. சேர்மானம் அப்பிடி. ஒட்டுவாரொட்டி தானே… பாப்பாவ டவுன் டாக்டருகிட்ட காட்டி ஏதாச்சும் மருந்து கிருந்து வாங்கித் தரியா? செலவுக்குக் கொஞ்சம் பணம் குடுக்க ஏற்பாடு பண்ணவான்னு கேட்டுட்டேன். நிமிந்து ஒரு மொற மொறச்சான் பாரு…ஈரக்குல ஆடிருச்சு..ஆயுசுக்கும் போறும்….செருப்படி…”, இவ்வாறாக நிலைமையை சமாளித்த விதத்தை ரங்கசாமி தன் மனைவியிடம் ஒப்புவித்ததோடு அந்தப் போராட்ட நாளின் ஆயுள் முடிந்தது.

வேறு யாரிடமும் இது குறித்து ஆலோசனை கேட்கவோ, ராசப்பனோடு எதிர்த்துப் போராடவோ இயலாத சரவணனுக்கும், ரங்கசாமியின் வார்த்தைகள் தவிர வேறு வழி இல்லாமல் போனது. அந்தச் சிறிய ஊரின் புறப்பகுதியில் வயலுக்குள் முளைத்த ஒரு பள்ளிக்கு பிள்ளைகளை மாற்றிவிட்டு, வீட்டையும் மாற்றியதோடு எல்லாவற்றையும் மாற்றிவிட்ட சின்ன திருப்தியில் பட்டறையைப் பார்க்கக் கிளம்பிவிட்டான். வயிறு இருக்கே? நாலு வயிறு…. ஹேமா ஆங்காரத்தின் உச்சியிலிருந்து ஆற்றாமையின் படுகுழிக்குள் விழுந்தாயிற்று.

செத்துவிடலாமா….பத்துவயசுக் குழந்தையின் அந்தரங்க உறுப்புகளைக் கூச்சமே இல்லாமல் கையாண்டுபார்க்கும் ஆளெல்லாம் வாழ்கிறான்.
சாவதென்று முடிவெடுத்தால் அந்த நாயைக் குறைந்தபட்சம் காறித் துப்பிவிட்டு மண்ணை வாரித் தூற்றிவிட்டாவது செத்துப் போகணும்
ஆனால் அப்படி எந்த முடிவெடுக்கவும் பெரிய தைரியம் வேண்டும் போல. அந்தத் திராணி இல்லை என்பதே நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம் போலிருந்தது.

காமம் எத்தனை அசிங்கம் என்று அருவருப்பாகும் மனதோடுதான் மிச்ச வாழ்வு போகுமோ. இனி ஒருநாளும் கணவனின் தொடுகையை இயல்பாக ஏற்க முடியும் எனத் தோன்றவில்லை. திடீர் திடீரென எழுந்து உட்கார்ந்துகொண்டு வெறித்துப் பார்க்கும் மலர்….
பள்ளியிலும் அப்படித்தான் இருக்கிறாள் எனப் புதிய பள்ளியின் ஆசிரியை புகார் சொன்னாள்.

வேப்பிலையும் மஞ்சளும் விழுது விழுதாய் அரைத்துப் பத்து போடுவதும் குப்பைமேனியை அப்புவதுமாக மலரின் காயங்களை ஆற்றிவிட்டோம் என நம்பும் முயற்சியில் இருக்கிறாள் ஹேமா. சாமி மாடத்தில் இருந்த நல்லவிளக்குதான் நடுங்கிக் கொண்டிருந்தது. பருவத்தின் அடுத்த வீச்சு மலரைச் சுழற்றுகிறது. அவள் சின்னஞ்சிறு மனசுக்கும் உடம்புக்கும் இதைத் தாங்கிடப் பக்குவம் வேண்டுமே…
ஐயோ தங்கமே… சொல்லி அழவாவது கற்றுக்கொண்டுவிடேன்….

படைப்பாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.