பெட்டியிலிருந்து இரண்டு பைகளை எடுத்த கஸ்டம்ஸ் அதிகாரி, ஸ்போர்ட்ஸ் டே – பேரன்ட்ஸ் ஈவன்ட்ல ஆறுதல் பரிசு வாங்குன ஆன்ட்டி மாதிரி பெருமையுடன் என்னைப் பார்த்து சிரித்தார். “மாட்டிக்கிச்சே…மாட்டிக்கிச்சே “ னு ஆடாத குறை தான். ‘அப்படியென்ன இல்லீகல் பொருள் இருக்கு எனக்கே தெரியாம என் பெட்டில’ னு டவுட் வந்து எட்டிப் பார்த்தேன்.

ஒண்ணு கவரிங் நகை இருந்த பாக்ஸ் ( எல்லாம் ‘தமிழ்ப்பெண்’ பேன்சி ட்ரெஸ் வேஷத்துக்குத்தான்!!!!) பார்த்தாலே பச்சையா தெரியுது, அது கல்யாணி கவரிங் கூட இல்ல, கலர் போன காயலான் கடை கவரிங்குனு….அது கூட தெரியாம இன்னாய்யா ஆபிசரு நீயின்னு மனசுக்குள்ள புலம்பினாலும் , “அய்யோஓஓஓ…….அய்யோ, இதெல்லாம் நெசம்னே நம்பீட்டீங்களா ஆபிசர் சார்? தங்கத்த கடத்துற அளவுக்கு நான் ஒண்ணும் பிஸ்தா இல்லங்க , சாதாரண இஸ்கோல் டீச்சரு தானுங்க” னு எலக்‌ஷனுக்கு முந்திய அரசியல் மேடையாக நினைத்து கதறிக் கதறி நிரூபிக்க முயன்றேன்.

ம்ஹூம்..அவர் கொரோனா கால பிரதமர் போல என்னைக் கண்டுக்கிடவே யில்லை. உத்து உத்துப் பார்த்து, உரசி, தேய்ச்சி, யார் யாரிடமோ காட்டி, மீண்டும் சிரித்தபடி அதை என் கையில் கொடுக்கறதுக்குள்ள… உஸ்ஸ்ஸ்…..அப்பான்னு ஆயிடிச்சி. அடுத்ததாக, பேக்கிலிருந்த ஆப்பிள் பழங்களை எடுத்து டேபிளில் கடைவிரித்தார். வைரத்தை கண்டுபிடிச்சு பங்கு கொடுப்பாருன்னு நினைச்சா, ஆப்பிளை எடுத்துகிட்டு என்னா பண்றார்? பசிச்சிடிச்சோ…?? இல்ல, ‘ ஆப்பிள் பெண்ணே நீ தானோ’னு பாடப் போகிறாரோ??? அவசரம் அவசரமாக ஸ்டைலாக நிற்க முயற்சி செய்தேன். ஆப்பிளைக் கையில் எடுத்தபடியே அந்த மனுசன் தஸ்புஸ் இங்கிலிபீசில் கூறிய விளக்கம் கேட்டு தலைசுற்றியது. ஆப்பிள் பழத்திற்குள் விதை இருக்குமாம்…..(அடடா எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு? பெரிய விஞ்ஞானியா வருவார், நோட் பண்ணிக்கோங்க, நோட் பண்ணிக்கோங்க ) ‘சீட்ஸ் ஆர் நாட் அலௌட்”. இளித்தார். என்ன கொடும்ம்….மை ஆபிசர் இது? தலையில் அடித்துக் கொண்டேன்.

வெளிநாடுகளுக்குச் சென்றால், நிற்பதூஉம், நடப்பதூஉம், பறப்பதூஉம், ஊர்வனஊம்….என அத்தனையும் அரைத்து உப்பு சப்பில்லாமல் கிண்டி வைத்திருக்கும் சாப்பாடு இந்த ‘ச்சொனப்பா’ கேட்கிற நாக்குக்கு செட் ஆவறதில்ல என்பதால், பழங்களிலும், காப்பி, டீயிலுமே உயிர் வாழ்ந்து , அரைகுறை உயிருடன் திரும்பி வரும்போதே, ‘ ஆ…நெல்லுச்சோறு நெல்லுச்சோறு’ னு பஞ்சத்தில அடிபட்ட ‘பர’ தேசி போல ஆலாய் பறந்துட்டு வருவேன். அதனால் அம்மாவும் தம்பியும் போட்டி போட்டு மதுரை ஆரப்பாளையத்தில் வாங்கிக் கொடுத்த நான்கு கிலோ ஆப்பிள் தான் இப்போது காட்சிப்பொருளாக டேபிளில்.

என்னைப் பார்த்து மீண்டும் சிரித்தவர், பழங்களைத் தூக்கி கூலாக குப்பைக்கூடையில் போட்டு விட்டு, ஸ்டைலாக தோள்குலுக்கி, “யெஸ்… யூ கேன் கோ”, என்று சிரித்தவனைப் பார்த்து ( இனி மரியாதை கிடையாது, அவன், இவன் என்ற ஏக வசனம் தான் ) ‘போடா டேய் எரும’ என மைன்ட் வாய்சில் பேசுவதாக நினைத்து சத்தமாக முணுமுணுத்து விட, ‘வாட்’ என்றவனின் புருவச் சுருக்கலுக்கு, ‘ யூ ஆர் சோஓஓஓஓஓ ஸ்மார்ட்’, என பல்லைக் கடித்துக்கொண்டே கூற மறுபடியும் ஈஈஈஈஈஈஈ…. ஹெராயின், டயமண்ட்ஸ் கடத்திட்டு வர்றவங்க கிட்ட கூட இப்படி சிரிச்சிட்டே தான் இருப்பானோ..? நம்ம நாட்ல தாம்ப்பா அதிகாரிங்க எல்லாம் உர்ருனே இருக்காங்க. ஏன்னு ஒரு சைக்கலாஜிகல் ரிசர்ச் பண்ணனும்னு மைன்ட்ல குறிச்சிக்கிட்டே ஏக்கத்துடன் குப்பைக் கூடையைப் பார்க்க, அடுத்த மூன்று நாட்களுக்கான என் உணவு என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.

எனக்குப் பின்னால் இரண்டு பெரிய டின்களில் ட்ரைடு மீட் ( ஏதோ ஒரு விலங்கின் கறியை உப்புக்கண்டம் போட்டு) எடுத்து வந்த ஆப்பிரிக்க அண்ணாத்த, என் ஆப்பிளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து பேஸ்து அடிச்சுப் போய் நின்றிருந்தான். மெடிக்கல் காலேஜில படிக்கிற தம்பிய பார்க்கப்போற கிராமத்து விஜயகாந்த் போல ரெண்டு பெரிய டின்னுடன் க்யூவில் நின்றிருந்தவனை நான் விசாரித்த போது, அல்ஜீரியாவிலிருந்து இங்கு படிக்க வந்திருப்பதாகவும் அடுத்த ஆறு மாசத்துக்கான உணவு என்றும் சொல்லிக் கொண்டிருந்தான். பாவமாய் நின்றிருந்தவனைப் பார்த்து கையறு நிலையில் சிரித்தபடியே, பப்பரக்கா என திறந்து, கலைந்து ,விரிந்து கிடந்த பெட்டிக்குள் எல்லாத்தையும் அள்ளிப் போட்டு, “ சோதனை மேல் சோதனை, முடிந்ததடா சாமி” னு அடுத்த அறை நோக்கி நகர்ந்தேன்.

Photo by CHUTTERSNAP on Unsplash

அங்கயும் விடல, வித விதமான கருவிகளை வைச்சி கை, விரல், நகம், பாதம் என அணு அணுவாய் செக் செய்து எந்த கிருமியையும் நான் கொண்டு வரல என உறுதிப்படுத்திக் கொண்டு, (அப்ப இன்னும் சோதனை முடியலியா..??) வெளியே விட்டனர். நான் அறிந்த வரையில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு பாதுகாப்பு சோதனைகள் இருக்கான்னு தெரியல. இந்தியன் ஏர்போர்ட் எல்லாம் வந்தாரை வாழ வைக்கும் ரகம் தான். கொரானாவையே வரவேற்று, நாம செத்தாலும் பரவாயில்லன்னு அதை வாழ வைச்சி, ஊட்டி வளர்த்து விட்டுக்கிட்டு இருக்கிற பரம்பரையாக்கும் நாம!

ஒருமுறை இலங்கையிலிருந்து மதுரை வந்து இறங்கிய போது, ஸ்கேனர் கூட வேலைசெய்யவில்லை. ஒவ்வொருத்தர் முகத்தைப் பார்த்தே “ நீ நல்லவனா, கெட்டவனா”? னு ஆராய்ச்சி செய்து வெளியே அனுப்பியதை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

ஹா…..அமெரிக்க ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் கிச்சுகிச்சு மூட்ட, 11 டிகிரி குளிரைத் தாங்க முடியாமல் உடம்பு வெடவெடத்தது. ஒரு வழியா இன்டர்னல் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிச்சி , மெயின் எக்ஸாம் எழுத 12,000 கிலோமீட்டர் தாண்டி வந்தாச்சி. “ புதிய வானம், புதிய பூமி” என எம் ஜி ஆர் போல ஓடியாடி, பாட்டுப் பாட முடியாமல் லக்கேஜ் தடுத்தது. அவர் மட்டும் இந்தனூண்டு சூட்கேஸ் வைச்சிகிட்டு என்னமா ஓடுறார், ஒளியறார், குதிக்கிறார், உருளுறார், ம்ம்ம்ம்…”பு(உ)திய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொள்ளும் வேளையிலே”… அதாங்க (எனக்கு ஏதும் லேபிள் ஒட்டிறாதீங்க) காலங்கார்த்தால சூரியன் கெழக்கால உதிக்கற நேரத்துக்கு, ஏர்போர்ட் உள்ளிருந்து வெளியேறி அமெரிக்க மண்ணில் கால்பதித்தேன்.

வெளியேறும் இடத்தில் இரத்தினசாமி EI ( Education International) என என் அப்பா பெயர் மட்டும் எழுதிய போர்டு ( போர்டில் செகண்ட் நேம் மட்டுமே இருக்கும் என்று கூட குறிப்பிட்டு மெயில் வந்திருந்தது) பிடித்திருந்ததைப் பார்த்தவுடன், அமெரிக்காவின் வணிகத் தலைநகரிலே, அப்பா பெயர் எழுதிய பலகையுடன் என்னை வரவேற்க ஒரு அமெரிக்கர் காத்திருக்கிறார்; இந்நேரம் அப்பா மட்டும் இருந்திருந்தா…என கொஞ்சம் மனசு மெல்ட் ஆக, ஹேய்…நோ சென்டிமென்ட் .. நோ இமோஷன், ஒன்லி ஆக்‌ஷன் என மனசைத் தட்டிக் கொடுத்து அடக்கிக் கொண்டேன்.

அந்த மனிதரைப் பார்த்தால் தமிழ் சினிமாவில் சாதுவான அப்பாவாக வரும் டில்லி கணேஷ் போல நம்பிக்கையானவராகவேத் தெரிந்தார். ஏற்கனவே அவரது பெயர், உருவமைப்பு, கண் கருவிழியின் நிறம், அணிந்திருக்கும் கோட் கலர், நிற்கும் இடம் எல்லாத் தகவலும் தரப்பட்டிருந்தது. என்றாலும் ஒரு சின்ன லப்டப்…டப்லப்…இருக்கவே செய்தது. வழக்கமான வடிவேலு பாடி லாங்குவேஜுடன், அதாங்க பேஸ்மென்ட் வீக்னைஸை வெளியே காட்டாமல் பாடியை ஸ்ட்ராங்காக வைச்சிக்கிட்டு, முகத்தில் ஒரு தெனாவெட்டை வரவழைத்துக் கொண்டு அருகில் சென்றேன்..யெஸ்….என்னைக் கண்டதும் புன்முறுவலுடன் “ரத்த்னாசமி ??? பெயரைக் கடித்துக் குதறி கேள்வி கேட்டவர், நான் ‘யெஸ்’ என்ற விநாடியில், ‘போ உம்பேச்சு கா’, என கோபித்து கொண்டவர் போல திரும்பி நடக்க ஆரம்பித்தார்.

நம்ம ஊர் டிரைவர்ஸ் போல லக்கேஜை வாங்குவார் என நினைத்தவள் , இல்லாமல் போகவும் பல்பு வாங்கி ‘ஙே’ என விழித்து விட்டு பெட்டியை இழுத்துக்கொண்டு கிட்டத் தட்ட ஓடினேன். ஏற்கனவே ஜனக்புரி – சாணக்யபுரி அனுபவத்துல சூடு கண்ட பூனையாகி விட்டபடியால், ரொம்ப முன்னெச்சரிக்கையுடன், போக வேண்டிய ஹோட்டல் குறித்த டாக்குமென்டை எல்லாம் எடுத்து நீட்டினேன். அவரோ அதைத் திரும்பிக்கூட பார்க்காமல் , ” ஓகே ஓகே, ஐ நோ”, எனக்கூறியதும், ‘மறுக்கா மறுக்கா முதல்ல இருந்தா ..?’ சாணக்யபுரி தாத்தா நினைவுக்கு வந்து பயமுறுத்தினார். ‘அய்யோ…இங்கயும் சுத்த விட்றாதம்மா தாயே’னு நியூயார்க் மாரியாத்தாவை வேண்டிக்கிட்டு வண்டியில் கால்வைத்தேன்.

20 கி.மீ தொலைவிலுள்ள மன்ஹட்டன் போக வேண்டும். வண்டிக்குள்ளிருந்த மானிட்டரில் முகவரியைத் தட்டி விட்டு, வண்டியோட்டத் துவங்கிய பிறகே, ”வார்ம் வெல்கமில்” ஆரம்பித்து, பேசத் தொடங்கினார். பிறகு ஒருவருக்கொருவர், “உங்கூட்ல என்ன குழம்பு, எங்கூட்ல கீரைக்குழம்பு”, வரைக்கும் குசலம் விசாரித்து, ப்ரெண்டாயிட்டோம்.

செப்டம்பர் மாதத்தில் இன்னும் தெருவெங்கும் ஓரங்களில் வெள்ளைப் பூக்களாய் பனி மிச்சமிருந்தது. விமான நிலைய எல்லை விட்டு புறநகர் பகுதிக்கு செல்லச் செல்ல ரோட்டின் இருபுறமும் நிலம் முழுக்க முழுக்க பனியால் போர்த்தப் பட்டிருந்தது. இறங்கிப் போய், ‘ புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது’னு பாடிகிட்டே , பனியை அள்ளியெடுத்து மதுபாலாவாய் மாறிவிட சின்னச் சின்ன ஆசை வந்தாலும் , ஹோட்டல் போனவுடனே அட்டென்ட பண்ண வேண்டிய மீட்டிங், போக வேண்டிய ஒரு ஸ்கூல் விசிட் நினைவுக்கு வந்தது.

Photo by Josh Hild on Unsplash

நம்ம ஊர்ல, தேனியில இருந்து, ஒரு குதி குதிச்சா கையை நீட்டி தொட்டு விடற தூரத்தில இருக்கற போடிமெட்டு மலைக்கு போகும் போதே அடடா மலைடா , அடடா மழைடா, அடடா தண்ணீடா, அடடா மிஸ்ட்டுடானு பத்தடிக்கு ஒரு தடவை காரை நிப்பாட்டி போய்ச்சேர நாலு மணி நேரம் ஆக்கி, ட்ரைவிங் பண்றவங்கள நொந்து போக வைக்கிற அளவு இயற்கையை ருசிச்சி குடிச்சாலும், மென்னு துப்பினாலும், கடமைன்னு வந்திட்டா கர்மவீர்ர் பேத்தியாயிடனும்னு மனசாட்சி அலாரம் கொடுக்க, பொங்கி வந்த ஆசையை பெட்ரோல் ஊத்தி அணைச்சிட்டு, சன்னல் வழியே (விண்டோ ஷாப்பிங் போல விண்டோ என்ஜாயிங்) ரசித்துக் கொண்டே மன்ஹட்டன் பற்றி ட்ரைவரிடம் கடலை போடத் துவங்கினேன்.

ஐக்கிய அமெரிக்காவில் இருக்கக்கூடிய நியூயார்க் மாநிலத்தின் தென் கிழக்கில் வாஷிங்டன் டி.சி.க்கும் பாஸ்டனுக்கும் நடுவில இருக்கிறது நியூயார்க் நகரம். நம்ம ஊரு மதுரையப் போலவே நியூயார்க்குக்கும் தூங்கா நகரம்னு இன்னொரு பெயர் இருக்கு. அது மட்டுமல்ல, கோத்தம், பெரிய ஆப்பிள், உலகத் தலைநகரம்னு ஏகப்பட்ட பட்டப் பேர் வேற. அதன் ஒரு பகுதியே மன்ஹட்டன் தீவு. இங்கு வசிச்ச அமெரிக்க பூர்வகுடிகள் பெயர்- ” லென்னபி’. அவங்க தான் நியூயார்க் பூரா இருந்திருக்காங்க, 1626 ல டச்சுக்காரர்கள் குடியேறுகிறார்கள். அதில் ஒரு அதிகாரி 24 அமெரிக்க டாலர் மதிப்புள்ள கண்ணாடி மணிகள் கொடுத்து லென்னபிகள் கிட்டயிருந்து மன்ஹட்டன் தீவை வாங்கினாராம்.

Land of the Lenape: A Violent Tale of Conquest and Betrayal - The Bowery  Boys: New York City History
லென்னபி ( Lenape) பழங்குடியினரிடமிருந்து டச்சுக் காரர்கள் மன்ஹட்டனை வாங்கிய காட்சி, ஓவியம்: TheBoweryBoys

அதுக்கும் பிறகு ஆங்கிலேயர்கள் கைக்கு இந்த பகுதி போகுது, அப்போது ஒரு ஆங்கில இளவரசன் யார்க் என்பவரின் நினைவாக இந்த நகரத்துக்கு நியூயார்க்னு பெயர் வவைத்தார்களாம். 1700ல லென்னபிகளின் எண்ணிக்கை வெறும் 200 ஆயிடிச்சாம். ஒண்ட வந்த பிடாரி கதை தான் போல . 1790 லேயே நியூயார்க் மிகப் பெரிய நகரமாயிடிச்சு. இப்ப பூர்வகுடிகளே இல்ல, எல்லோரும் வந்தேறிகள் தான். வெள்ளை அமெரிக்கர் 45 சதவீதமும், ஆப்ரிக்க அமெரிக்கர் 25 சதவீதமும் இருக்காங்களாம். கதை கூறிக்கொண்டே வந்தார் நியூயார்க்கின் டில்லிகணேஷ். வாயை இறுக மூடிப் கொண்டே அவர் பேசும் ஆங்கிலம் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும் கதை இன்ட்ரஸ்டா இருந்தது.

குளிர் பிரதேசங்களில் வசிப்போர் பொதுவாக உடல் சூடு வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக வாயை மூடிக்கொண்டே தான் பேசுவார்கள். நம்மைப் போல வெப்ப மண்டலத்தில் உள்ளவர்கள் உடல் சூட்டை வெளியேற்ற வாயைப் பிரித்து பேசுவோம். அதனால் தான் அவங்க பேசறது நமக்கும், நாம பேசறது அவங்களுக்கும் புரியறதில மழையில நனைஞ்ச டி வி எஸ் 50 போல ஸ்டார்ட்டிங் பிரச்சினை.

பிறகு போகப்போக பிக் அப் ஆயிடும். பேசிக்கொண்டே மன்ஹட்டன் நெருங்க நெருங்க, போக்குவரத்து நெரிசல் அதிகமாகியது. ஒரு கட்டத்தில் வண்டி நகர முடியாத சூழல் ஏற்பட ரோட்டை பார்த்தால், வரிசையாக பாதுகாப்பு வீரர்கள், குறுக்கும் நெடுக்குமாக காவல் துறையினர், கலர் கலர் யூனிபார்மில் மிலிட்டரி ஆட்கள் ( அப்படித்தான் நினைக்கறேன்!!) என பரபரப்பான இங்கிலீஷ் படத்த ம்யூட்ல பார்த்தது போல இருந்திச்சி. ஒருத்தர் முகத்திலும் நேசமில்லை. இறுக்கமான முகத்துடன் வில்லன் போல பார்க்கவே பயமா இருக்கு. எல்லார் கையிலயும் அம்மாம் பெரிய துப்பாக்கி வேற.

எந்த நேரம் ‘டப்பு டப்புனு’ சுட்டுறுவாங்களோன்னு நெஞ்சு வேற கெதக் கெதக் . “எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்கப்பூ, பயம்மா இருக்குல்ல. குறிப்பிட்ட வண்டிகள் மட்டுமே அனுமதி . ஆங்காங்கே வண்டியை நிப்பாட்டி ட்ரைவரிடம் ஏதோ கேட்க, இவர் ஏதோ காட்ட, ‘வாட்ஸ் கோயிங் ஆன்?’ என நான் விசாரிக்க……அவர் கூறிய பதில் கேட்டு எம்டன் மகன் அம்மா சரண்யாவுக்கு வந்தது போல் எனக்கு ஒரே மயக்க மயக்கமா வந்தது.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!