“மொத்தமாகவே உன் கணவரின் அலுவலகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டாயா என்ன?”
“பாபுஜி, ஒரு வேளை நான் அப்படி செய்து இருந்தால், அது நிச்சயமாக நீங்கள் சொல்லித் தந்த வழியே. பெண்கள் தங்களைச் சுற்றி உலகில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் அதில் முழுமனதுடன் பங்கு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியது நீங்கள் தானே?”
மேற்கண்ட உரையாடல் மகாத்மா காந்திக்கும் அவரது பிரிய தோழி சுமதி மொரார்ஜிக்கும் இடையே நடைபெற்றது என்று எழுதி இருக்கிறார் எழுத்தாளர் கீதா பிராமல்.

முழுக்க இந்தியர்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுதேசிக் கப்பல் கம்பெனி சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி. 1919ம் ஆண்டு ஏப்ரல் 5 அன்று எஸ்.எஸ்.லாயல்டி என்ற சுதேசிக் கப்பல் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்குப் புறப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நாளைத் தான் இந்தியா ‘தேசிய கடல்வழி தினமாக’ இன்றளவும் கொண்டாடி வருகிறது. சிந்தியா கப்பல் கம்பெனியின் உரிமையாளர்களில் ஒருவரான நரோத்தம் மொரார்ஜியின் வீட்டுக்குள் சுமதி காலடி எடுத்து வைக்கும்போது அவருக்கு வயது 13!

மதுரதாஸ் கோகுல்தாஸ் என்ற செல்வந்தர் வீட்டில் பிறந்து, ஆறு சகோதரர்களுடன் வளர்ந்த ஜமுனா, தன் திருமணம் குறித்து பேசும் போது, “நான் பிறந்து வளர்ந்த குடும்பமும், என் புகுந்த வீட்டைப் போல தொழில் முனைவோர் நிறைந்தது. ஆறு ஆண் குழந்தைகளுடன் பிறந்த ஒரே பெண் என்பதால், வீட்டில் சகோதரர்களுக்கு இணையாகத் தான் நடத்தப் பட்டேன். புகுந்த வீட்டில் கிடைத்த அதே சுதந்திரம், நான் பிறந்த வீட்டிலும் எனக்குக் கிடைத்தது”, என்று கூறி இருக்கிறார். நரோத்தம் மொரார்ஜியின் மகனான சாந்தகுமார் மொரார்ஜியை தன் பதிமூன்றாவது வயதில் 1922ம் ஆண்டு ஜமுனா மணக்கும் போது மும்பை நகரமே விழாக் கோலம் பூண்டு இருந்தது!

மனைவியை இழந்த நரோத்தம் தன் மருமகள் மீது அளவு கடந்த அன்பை வைத்து இருந்தார். சுமதி என பெயர் மாற்றம் செய்து, அவரது அபார நிர்வாகத் திறமையைக் கண்டு ரசித்தார். உற்றார் உறவினருடனான அந்தப் பெரிய வீட்டை நிர்வகித்த சுமதி, கணவர் சாந்திகுமாரின் தூண்டுதலால், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கினார். கூடவே, நரோத்தம் மொரார்ஜி நிர்வாக ஏஜன்சியில் மாமனாரின் ஆசைக்காக பணிக்கு சென்று வரத் துவங்கினார். அலுவலகப் பணி பிடித்துப் போக, 1923ல், திருமணம் ஆன ஓர் ஆண்டிலேயே நிர்வாக ஏஜன்சியில் இயக்குனராக அமர்ந்தார். மிகச் சில கப்பல்களேக் கொண்டு இயங்கிய நிறுவனம், சுமதியின் நுணுக்கமான வியாபாரத் திறமையால் அசுர வளர்ச்சி காண ஆரம்பித்தது.

சிந்தியா நிறுவனக் கப்பல் Credit: Back to godhead

சிந்தியா கப்பல் கம்பெனியின் பெரும்பான்மைப் பங்குகளை நரோத்தம் கையில் வைத்து இருந்தாலும், நிர்வாகத்தை இரும்புக்கரம் கொண்டு பிடித்து இருந்தது- வால்சந்த் என்ற அவரது நண்பர். 1929ம் ஆண்டு ஒரு விபத்தில் நரோத்தம் இறந்துவிட, சிந்தியா கப்பல் நிறுவனத்தின் நிர்வாகம் பிரச்சினைகளை சந்திக்க ஆரம்பித்தது. 1940ல், ‘எக்ஸ்-அஃபீஷியோ இயக்குனர்’ என புதிய பதவியை ஏற்படுத்திக் கொண்ட சுமதி, தினசரி நிர்வாகத்தில் முக்கியப் பங்கு, எடுக்க ஆரம்பித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முழுமூச்சுடன் ஈடுபட விரும்பிய சுமதி, தன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.

1944ம் ஆண்டு ஆகாகான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்ட காந்தி விடுதலை ஆனதும் முதலில் சென்றது சாந்திகுமார் மற்றுன் சுமதியின் ஜுஹு வீட்டிற்குத்தான். கஸ்தூர்பாவின் மரணத்தின் போது, காந்தியுடன் துணை நின்றதும் இந்தத் தம்பதி தான்! காந்தியின் அறிவுறுத்தலால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் 1946ல் பணியில் அமர்ந்தார். இம்முறை, முழு மூச்சாக, முழு நேர நேரடி இயக்குனராகக் களம் இறங்கினார் சுமதி. வால்சந்த் வேறு வழியின்றி நிர்வாகத்தில் ஒதுங்க நேர்ந்தது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சிந்தியா கப்பல் நிறுவனத்திடம் இருந்த கப்பல்களின் எண்ணிக்கை 19. ஏறத்தாழ 6000 ஊழியர்களை நிர்வகித்து வந்தார் சுமதி. ஆகஸ்டு 15, 1947ல் சுமதி தயாரித்த ஆவணப்படம் ஒன்றும் இந்திய விடுதலையோடு வெளியிடப்படுகிறது. “தேசிய கப்பல் துறையில் இந்தியாவின் போராட்டம்” என்ற அந்தப் படம், சிந்தியா கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் சுதேசிக் கப்பல் நிறுவனங்களின் பங்கு என கப்பல் துறை அது வரை சந்தித்த சவால்கள் குறித்துப் பேசுகிறது. பால் சில்ஸ் என்ற ஜெர்மானியரால் இயக்கப்பட்ட படம், இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ஆவணப் படம் என்ற பெருமையையும் பெறுகிறது.

credit: CollectorBazar (சிந்தியா கப்பல் கம்பெனியின் பங்குச் சான்றிதழ்)

1948ன் துவக்கத்தில் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக் கலவரங்களின் போது, பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இந்துக்களை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்தன சிந்தியாக் கப்பல்கள். 1957ம் ஆண்டு, இந்திய தேசிய கப்பல் உரிமையாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுகிறார் சுமதி. உலகிலேயே கப்பல் உரிமையாளர் சங்கம் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையையும் அடைகிறார். தொடர்ச்சியாக 1964 மற்றும் 1970ம் ஆண்டு அந்தப் பதவிக்கு இவரையே தேர்வு செய்கிறார்கள்.

1965ம் ஆண்டு சுமதியைத் தேடி வருகிறார் கிட்டத்தட்ட எழுபது வயதை நெருங்கிய துறவி ஒருவர். அமெரிக்கா சென்று கிருஷ்ண பக்தியைப் பரப்ப விரும்புவதாகவும், அதற்கு உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கிறார். வயது முதிர்ந்தவர் நெடிய கப்பல் பயணத்தைத் தாங்க மாட்டார் என்று எண்ணி மறுத்தார் சுமதி. இறுதியில், அவர் கண்களில் இருந்த அதீத ஒளியைக் கண்டு வியந்து, ஜலதூதா என்ற தன் சரக்குக் கப்பலில் பயணித்து அமெரிக்கா அடைய அனுமதிக்கிறார், அவருக்கு நிறைய பழங்களும், காய்கறிகளும் எடுத்து செல்லும்படி கப்பலின் மாலுமிகளுக்குப் பணிக்கிறார். சுமதி செய்த இந்த சிறு உதவியால், இன்று நீக்கமற உலகெங்கும் வியாபித்து இருக்கின்றன ‘இஸ்கான்’ கோயில்கள். கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகளாவப் பரப்பிய சுவாமி பிரபுபாதா தான் சுமதியை சந்தித்த அந்த முதியவர்.

பிரபுபாதருடன் சுமதி. credit: Back to Godhead

1970ம் ஆண்டு லண்டன் நகரைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச கப்பல் ஃபெடரேஷனின் துணைத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுகிறார் சுமதி. 1971ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது அளித்து சுமதியை கவுரவிக்கிறது மத்திய அரசு. 43 கப்பல்களுடன் வளர்ச்சி கண்டு நின்ற சிந்தியா கப்பல் நிறுவனம், கொஞ்சம் கொஞ்சமாக கடனில் மூழ்கத் தொடங்க, 1988ல் அரசுடைமை ஆக்கப் படுகிறது. மும்பை ஜுஹுவில் சுமதி வித்யா கேந்திரா என்ற பள்ளியையும் நிர்வகித்து வந்தார் சுமதி. நரோத்தம் மொரார்ஜி கப்பல் பயிற்சிக் கூடத்தின் தலைவராகவும் இருந்தார். 1992ம் ஆண்டு வரை சிந்தியா நிறுவனத்தின் கவுரவ இயக்குனராகப் பணியாற்றினார்.

இந்தியக் கப்பல் நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாகப் பார்க்கப்படுகிறது சிந்தியா கப்பல் நிறுவனம். 1998ல் மரணம் அடைந்த சுமதி, இந்தியக் கப்பல் துறையின் அன்னையாக இன்றும் போற்றப்படுகிறார்.

“சரக்கு வர்த்தகத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தலைசிறந்து நாம் விளங்கினாலும், இன்றளவும் உயர்ந்த பொருளாக நாம் உலகிற்கு ஏற்றுமதி செய்தது சகோதரத்துவமும், ஆன்மீகமும் தான்.”- சுமதி மொரார்ஜி.

கட்டுரையாளர்:

நிவேதிதா லூயிஸ்

ஹெர் ஸ்டோரிஸ் இணை நிறுவனர் மற்றும் ஹெர் ஸ்டோரிஸ் இணைய இதழின் ஆசிரியர். இவர் சென்னையைச் சேர்ந்த சமூக, பெண்ணிய வரலாற்றாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், தொல்லியல் ஆர்வலர், பயணக் காதலர்.