எங்கள் விருப்பத்திற்கு எதிராக – 2

2012 டிசம்பர் 16 அன்று இந்தியாவின் டில்லி நகரில், 23 வயது மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்குப் பின்னர் உருவான மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டங்களால் இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2013 மார்ச் 21 அன்று கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தம் பாலியல் குற்றங்கள் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டங்களில் திருத்தங்களை உள்ளீர்த்தது. இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நிர்பயா வழக்கை விடவும் மோசமான பல பாலியல் வன்புணர்வுக் குற்றங்கள் நடைபெற்றன. நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஒரு நாளைக்கு 88 வன்புணர்வுப் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுபான்மை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளும் பெண்களும்.
2014 ஆகஸ்டில், இந்தியாவின் சரவா கிராமத்தில் ஒரு இளம் இந்து பெண், முஸ்லீம் ஆண்கள் குழு தன்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பின்னர் அவர்களில் ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக இஸ்லாத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார். நரேந்திர மோடி வெற்றியின் பின்னணியில், இந்தக் குற்றச்சாட்டு உடனடியாக இனப் பதட்டத்தின் தீப்பிழம்புகளைத் தூண்டியதுடன், ஆயுதமேந்திய இந்து கும்பல்களுடன் கலவரங்களுக்கு வழிவகுத்தது. பின்னர், அந்த இளம் பெண் தனது கூற்றை வாபஸ் பெற்றதுடன், அவரது வலதுசாரி முஸ்லீம்-விரோத குடும்பம் எவ்வாறு பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரக் கட்டாயப்படுத்தியது என்பதும் வெளிப்படுத்தப்பட்டது. உண்மையில் அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை காதலித்து வந்தார்.

newslaundry.com (ஆசிஃபா)

2018 ஜனவரி மாதம் சம்மு காஷ்மீர் மாநிலத்தில் கதுவா அருகே உள்ள ரசானா கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடத்தப்பட்டு, பாலியல்வன்முறைக்குப் பின் கொலை செய்யப்பட்ட ”கதுவா பாலியல் வன்முறை வழக்கு” சிறுபான்மையினரின் இந்திய உடல் அரசியலுடனான உறவைச் சித்தரிக்கும் மற்றொரு கொடூரமான உதாரணம். விசாரணையில் சிறுமி மயக்கமடைந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தனது சொந்த தாவணியால் கழுத்தை நெரிக்கப்பட்டது தெரியவந்தது. அவளுடைய தலை ஒரு பாறையால் சிதைக்கப்பட்டிருந்தது. ஒரு சிறிய இந்து சன்னதியில் நான்கு நாட்களாக இந்தக் கொடூரம் நடந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி பாக்கர்வால் நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர்.

குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்களாய் இருந்ததால், வலதுசாரி இந்துக் குழுக்கள் கைது நடவடிக்கையைக் கண்டித்து எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தின. அத்தகைய ஒரு போராட்டத்தில் ஆட்சியிலிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் இருவர் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் காலனித்துவ காலத்திலிருந்தே, சிறுபான்மையின சமூகங்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டிவிடுவதற்காக ”பாலியல் பலாத்காரம்” தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. ஆளும் வர்க்கம் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கும் சமூகப் பெண்களின் உடல்களைத் தீண்டுவதையும் பாலியல் வன்புணர்வு செய்வதையும் ”தூய்மை”யாகக் கருதுகின்ற இந்திய அரசியலில் ”தீட்டு” என்ற சொல்லாட்சி எவ்வாறு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.

இலங்கையில், அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 30 ஆண்டுகால மோதலின் போது, வாக்குமூலங்களைக் கட்டாயப்படுத்தவும், இழிவுபடுத்தவும் பாலியல் பலாத்காரங்களும் வன்முறைகளும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்டன. பெண் முன்னாள் கைதிகளின் பிறப்புறுப்புகள் அல்லது மார்பகங்களை நிமிண்டிக் காயமேற்படுத்தி துன்புறுத்தப்பட்டனர். வாய்மொழியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கேலிக்குள்ளாக்கப்பட்டனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் பரிசோதிக்கப்பட்ட பல மருத்துவ அறிக்கைகள் பிட்டம், மார்பகங்களில் கடித்தது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு சான்றுகளைக் காட்டுவதை உறுதி செய்கின்றது. உள் தொடைகளிலும் மார்பகங்களிலும் சதைத்த பகுதிகளிலும் சிகரெட்டினால் சுட்டெரித்தனர். பாலியல் வல்லுறவுக்குப் பின்பு கம்பிகள், கண்ணாடித் துண்டுகள், உடைந்த போத்தல்களைப் பெண் உறுப்பில் திணித்துக் கொலை செய்த கோரச்சம்பங்கள் ஆயிரம் உண்டு. பெண் உறுப்பில் கைக்குண்டுகளை வெடிக்கச் செய்வதனால் பாலியல் வல்லுறவுத் தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு எதிராக இலங்கை இராணுவமும் பொலிஸ் பிரிவும் பயன்படுத்திய சட்டவிரோத கருவிகளில் ஒன்றாக பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் வன்புணர்வு ஆகியன நீண்டகால பாரதூரமான வன்முறைகள்.

bbc (இலங்கை வீரர்களுக்கு பயிற்சி தரும் இந்திய அமைதி காக்கும் படை வீரர்)

ஜூலை 30, 1987 அன்று இந்திய அமைதி காக்கும் படை (IPKF) உள்நாட்டுப் போரை முடிவுக்குக்கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை மக்களைக் காப்பாற்றும் தேவதைகளாக நாட்டுக்குள் வந்து, 1987 – 1990 வரையான மூன்று ஆண்டுகள் காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவு புரியும் பிசாசுகளாக வெறிபிடித்து அலைந்தது. பத்து வயதுச் சிறுமிகள் வரையில் பாலியல் வன்வுணர்ந்து, பெண்ணுறுப்பில் குண்டுகளை வெடிக்கச் செய்து கொல்வதையும், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது தமிழ்ப் பெண்களின் வீடுகளுக்குள் புகுந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்வதையும் இந்திய அமைதி காக்கும் படை வழக்கமாகக் கொண்டிருந்தது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாகியும் குணம் பெறாத பெண்களினதும், தற்கொலை செய்து கொண்ட பெண்களினதும் பட்டியல் மிக நீளம்.

வடக்கிலும் கிழக்கிலும் இவர்கள் பாலியல் வன்புணர்வு செய்த பெண்களில் பெருந்தொகையானோர் 30 வயதிற்குட்பட்ட, ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள். பாலியல் வன்புணர்வு செய்வதுடன் அந்த வீடுகளைக் கொள்ளையடிப்பதும் இந்திய இராணுவத்தின் வழக்கமான செயல்பாடாக இருந்தது. நகைகள், பொருள்கள், கால்நடைகள் என்று அகப்பட்ட அனைத்தையும் திருடிக் கொண்டுபோனார்கள். 8,000 பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொன்றும், சாவுக்குக் காரணமாக இருந்தும் கொடுமையிழைத்த இந்திய இராணுவத்திற்கு எதிராக வெறும் மூன்று வழக்குகளே பதிவாகின. அதிகார அடுக்குகளுக்குள் நுழைவதற்கு எளிய மக்களுக்கு இருக்கும் தயக்கம், அச்சம், முதலாளிய இராணுவ படைகள் உருவாக்கும் எச்சரிக்கைகள் நீதியைப் புதைக்கின்றன.

இந்திய இராணுவம் நாட்டுக்குள் வருவதற்கு முன்பே இலங்கைப் பெண்களைப் பாலியல் வன்புணர்வுக் கொலை கலாச்சார வரலாறு உலுக்கத் தொடங்கிவிட்டிருந்தது. 1971 ஆம் ஆண்டு நடந்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வதைக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டவர் இடதுசாரி இயக்க செயற்பாட்டாளர் பிரேமாவதி மனம்பேரி. 1971 ஏப்ரலில் தென்னிலங்கையில் இடம்பெற்ற ஜேவிபி கிளர்ச்சியில் கதிர்காமம் முக்கிய நகரமாக செயற்பட்டது. ஏப்ரல் 16 இல் இலங்கை இராணுவம் கிளர்ச்சியை அடக்கி, நகரைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது.

Sunday Observer (பிரேமாவதி மனம்பேரி)

இதில், பிரேமாவதி மனம்பேரி உட்பட சில பெண்கள், போராளிகளுக்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிரேமாவதி இரவு முழுவதும் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். பின்னர் அவரை கதிர்காமம் புனித நகரின் வீதிகளில் நிர்வாணமாக இழுத்து வந்து, பொது மக்கள் முன்னிலையில் துன்புறுத்தி, அஞ்சலகம் ஒன்றின் முன்னால் வைத்துச் சுட்டு தீ வைத்து விட்டு அகன்றனர். பின்னர் மீண்டும் திரும்பி வந்து சுட்டுக் கொன்றனர். மனம்பேரி இறுதியில் தலையில் சூட்டுக் காயம் பட்டு இறந்தார்.

1990 முதல் 2002 வரை, வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்புப் படையினரால் பல தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை இலங்கை சிவில் சமூக அமைப்புகள் துணிந்து கூறின. இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரில் பாலியல் வன்முறை பரவுவதை மதிப்பிடுவதற்கு முறையான கணக்கெடுப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், ஐ.நா.வின் பல்வேறு சிறப்பு வழிமுறைகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்களின் வழக்கமான அறிக்கைகள் பாலியல் துன்புறுத்தல்கள், வன்புணர்வுகள், துஷ்பிரயோகங்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்களை வைத்துள்ளன.

பாலியல் வன்முறைகள், இலங்கை பாதுகாப்புப் படையினரால் செய்யப்பட்ட ஏனைய கடுமையான துஷ்பிரயோகங்களைப் போலவே, ஆழமாக வேரூன்றிய தண்டனையின் பின்னணியில் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், ஒரு அடையாள வழக்கு பொதுமக்களின் கவனத்தை ஊக்குவித்து, இறுதியாக குறைந்த அளவிலான இலங்கை இராணுவ வீரர்களையும் காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்யவும், வழக்குத் தொடரவும் வழிவகுத்தது. செப்டம்பர் 1996 இல், 18 வயதான கிருஷாந்தி குமாரசாமி யாழ்ப்பாணத்திற்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைத் தேடிச் சென்ற குமாரசாமியின் தாய், சகோதரர், அயலவர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் ஆறு கீழ் மட்ட பணியாளர்கள் உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதன் மூலம் தண்டனைகள் உறுதி செய்யப்பட்டன. விசாரணைகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள புதைகுழிகள் பற்றிய தகவல்கள் வெளிவந்தன. 400 தமிழர் உடல்களைப் புதைத்திருந்த செம்மணிப் புதைகுழியைத் தோண்டுவதற்கு இந்த விசாரணைகள் வழிகாட்டின.

பல பிற நிகழ்வுகளில், குற்றவாளிகள் பொறுப்புக்கூறலுக்கான அனைத்து முயற்சிகளையும் தவிர்க்க முடிந்தது. அரசியலமைப்பு வைத்தியம் தண்டனை வைத்தியம் போல பயனற்றது என்பதை நிரூபித்தது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதான தமிழ் பெண் யோகலிங்கம் விஜிதாவுக்கு ஒரு அடிப்படை உரிமை விண்ணப்பத்தில் இழப்பீட்டுச் செலவுகளை வழங்குமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் நீதின்றக் கதவுகளைச் சாத்தியது.

1997 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி, வேலன் ராசம்மாவும் அவரது சகோதரி வேலன் வசந்தாவும் மட்டக்களப்பு மாவட்டம், மயிலம்பாவெளி காலனியில் உள்ள வீட்டில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் உள்ளூர் பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கும், தளபதிக்கும் கூட்டுத் தொடர்புகள் இருப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனால் வழக்குகள் எதுவும் தொடங்கப்படவில்லை. கல்முனையில், முருகேசுபிள்ளை கோணேஸ்வரி தனது வீட்டில் இருந்த மரக்கட்டைகளை காவல்துறை உறுப்பினர்கள் திருடியதாகப் புகார் கூறியதையடுத்து உள்ளூர் காவல்துறை அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டார். மே 17, 1997 அன்று, பொலிஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் நுழைந்து குழந்தைகள் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். அவரது பிறப்புறுப்பில் வெடித்த ஒரு கையெறி குண்டு அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தது. இந்த குற்றத்திற்காக யாரும் தண்டிக்கப்படவில்லை. இவை சில உதாரணங்கள் மட்டுமே.

போதிய அளவில் விசாரிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட பிற வழக்குகளில் 1999 இல் ஐடா கமாலிற்றா கூட்டுப் பாலியல் வன்புணர்வு, கொலை, 2001 மன்னாரில் விஜிகலா நந்தகுமார், சிவமணி வீரகூன் ஆகிய இரு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது ஆகியவை அடங்கும். சில வழக்குகள் இன்னமும் நடைபெறுகின்றன. முன்னேற்றம் மெதுவாக உள்ளது. 2010 ஜூன் மாதம், விஸ்வமடுவில் பாதுகாப்புப் படையினர் ஒரு பெண்ணை அவரது வீட்டிலேயே பாலியல் வன்புணர்வு செய்தனர். பாதிக்கப்பட்டவரும் ஒரு சாட்சியும் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தாலும், வழக்கறிஞர் வழக்கை முன்னோக்கி நகர்த்துவதில் மெதுவாக இருக்கிறார் அல்லது அஞ்சுகிறார். சாட்சியும் பாதிக்கப்பட்டவரும் காவல்துறையினதும் இராணுவத்தினரினதும் மிரட்டல்களுக்கு உள்ளாவது இத்தகைய வழக்குகள் அனைத்திலும் ஒரு பொதுவான அம்சம். பல ஆண்டுகளாக ஒரு வரைவு நிலுவையில் இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் திறம்பட பாதுகாக்க இலங்கை இதுவரை ஒரு சட்டத்தை இயற்றவில்லை.

ஒரு பொது விதியாக, பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள், பலாத்காரங்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்குகள் மோசமாக விசாரிக்கப்பட்டுள்ளன அல்லது தொடரப்படவில்லை. பாலியல் பலாத்காரத்தின் புகார்கள், சித்திரவதை தொடர்பான பிற புகார்களைப் போலவே, பெரும்பாலும் காவல்துறை, நீதிபதிகள் அல்லது மருத்துவர்களால் திறம்பட கையாளப்படுவதில்லை. குற்றவியல் விசாரணை செயல்முறையின் ஆரம்ப கட்டங்களில் உள்ள பலவீனங்கள் வன்புணர்வு, பிற பாலியல் வன்முறைச் செயல்களின் விசாரணைகளின் இறுதி சரிவுக்குப் பலமுறை பங்களித்தன.

Colombo Telegraph (இசைப் பிரியா)

2009, மே மாதம் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குமான இறுதிப் போரில் நந்திக்கடலில் சதுப்பு நிலத்தில் நான்கு சிங்கள இராணுவ வீரர்கள் சூழ அரை நிர்வாணமாக அமர்ந்திருந்த 27 வயது இசைபிரியாவைக் காண்பிக்கும் ஒளிப்படங்ளையும் காட்சிகளையும் பிரிட்டன் சேனல் 4 நிகழ்ச்சியில் பார்த்தபோது உலகமே அதிர்ச்சிக்குள்ளானது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தொலைக்காட்சித் தொகுப்பாளரான இசைப்பிரியா சரணடைந்த பின்னர் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதானது மூன்று தசாப்தகாலப் போரியல் வரலாற்றில் பெண் உடலை இலங்கை இராணுவம் கையாண்ட விதத்திற்கு மாபெரும் சாட்சியானது.

இவை, போர்க்கால வன்முறையின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை காட்டுபவை மட்டுமல்ல, பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் குழுக்களின் எண்ணங்களின் தத்துவார்த்தக் கட்டமைப்பும் கூட்டு மனமும் சிறுபான்மை பெண்கள், ஒடுக்கப்பட்ட இனத்துப் பெண்களின் உடல்களின் மீது அத்துமீறும் உரிமைகளில் தாக்கங்களைக் கொண்டுள்ளது. பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து உருவாக்கும் வன்முறையின் பின்னணியில் சியோனிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட மனிதநேயமற்ற இதேபோன்ற மோசமான உருவங்களின் ஒரு பகுதியே முஸ்லீம் ஆண் “பாலியல் வன்புணர்வாளர்கள்”. அமெரிக்க இனவெறி கண்டுபிடித்த ”கறுப்பின வன்புணர்வாளர்கள்” என்பதற்கு இணையான ஒரு பகுதி.

போர் காலத்தில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது வரலாறு முழுவதும் நிகழ்ந்துள்ளது. உண்மையில், பாலியல் வன்புணர்வு நீண்டகாலமாக ஒரு துரதிர்ஷ்டவசமான ஆனால் தவிர்க்கமுடியாத போராக கருதப்பட்டதையே வரலாற்று உதாரணங்கள் காட்டுகின்றன. நீண்டகாலமாக எல்லையில் இருக்கும் துருப்புக்களின் பாலியல் இழப்பினதும், போதாமையான இராணுவ ஒழுக்கத்தின் விளைவாகவும் இந்த வன்புணர்வுகளைக் கருதும் ஆய்வுகளும் இருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின்போது நேச நாட்டுப் படைகள் எதிரி குடிமக்களை அச்சுறுத்துவதற்கும் எதிரி துருப்புக்களைத் தாழ்த்துவதற்கும் ஒரு வழிமுறையாகப் பாலியல் வன்புணர்வுகளைச் செய்தபோது, போரின் ஆயுதமாக அதன் பயன்பாடு பயங்கரமாக நிரூபிக்கப்பட்டது. ஜப்பானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பெண்களை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தியது, ரஷ்ய வீரர்களை முன்னேற்றுவதன் மூலம் ஜேர்மன் பெண்களுக்கு எதிரான வெகுஜன பாலியல் வதை ஆகியவை மிக மோசமான எடுத்துக்காட்டுகள்.

20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், 20 க்கும் மேற்பட்ட இராணுவ, துணை இராணுவ மோதல்களில் பாலியல் வன்புணர்வு வழக்குகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. 1990 களில், முன்னாள் யூகோஸ்லாவியாவில் இன அழிப்புக்கான கருவியாகவும், ருவாண்டாவில் இனப்படுகொலைக்கான வழிமுறையாகவும் பாலியல் வன்புணர்வு பயன்படுத்தப்பட்டது. அடிமைப்படுத்தப்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வேண்டுமென்றே எதிரி படையினரால் வன்புணர்ச்சி மூலம் செறிவூட்டப்பட்டனர். துட்ஷி இனத்தைச் சேர்ந்த பெண்கள் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களைக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பால்கன் – ருவாண்டா மோதல்களில் பாலியல் பலாத்காரம் அதிகமாக இருந்ததால், சர்வதேச சமூகம் பாலியல் பலாத்காரம், துஷ்பிரயோகங்களைப் போரின் ஒரு ஆயுதமாகவும் மூலோபாயமாகவும் அங்கீகரிக்கத் தொடங்கியது. 1977 இல், ஜெனீவா உடன்படிக்கையின் 27 வது பிரிவு, போரின் போது பொதுமக்கள் பாதுகாப்போடு தொடர்புடைய விதியில், பெண்களைப் பாதுகாக்கும் முன்மொழிவை உள்ளடக்கியது.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறை என்பது புராண காலத்தின் அட்டூழியம் என்றும், இன்றைய உயர் தொழில்நுட்ப யுகத்தில் யுத்த பேராயுதங்களில் ஒன்றாக பாலியல் இனிப் பயன்படுத்தப்படாது என்றும் கற்பிக்கப்படும் சமகாலப் போக்கும் கவனிக்கத்தக்கது. ரகசியத்தையும் களங்கத்தையும் முழுமையாக மூடி மறைப்பதற்கான ஒரு போர்வையைத் தயார் செய்யும் ஒரு உத்தி மட்டுமே இது. இது கூட்டு மனசாட்சியின் கறையைப் பிரதிபலிக்கின்றது.

எழுவோம்…

திமிறி எழு கட்டுரைத் தொடரின் எங்கள் விருப்பத்திற்கு எதிராக – முதல் பகுதியை இங்கே படிக்கலாம்.

கட்டுரையாளர்:

ஸர்மிளா ஸெய்யித்

ஸர்மிளா ஸெய்யித், ஒரு விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர்.
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012),
உம்மத் (2014 நாவல்),
ஓவ்வா ( கவிதை 2015),
பணிக்கர் பேத்தி (நாவல் 2019),
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்)
ஆகியன இவரது நூல்கள்.