பால்புதுமையினர் அறிமுகக் கட்டுரைகள்- 3

இனிமையான தருணங்களும் உண்டு… கசப்பான தருணங்களும் உண்டு… ஆனால், நாம் அனைவரும் கசப்பான நினைவுகளையே அதிகம் நினைவில் வைத்துள்ளோம். அவற்றில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளிவருவது சற்றுக் கடினமே. இருப்பினும் சிலர் அவற்றையே புதிய பாதையாக மாற்றி பயணிக்கின்றனர்.

பயணங்கள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் இலக்கை அடையும் வரை முயற்சி செய்பவர்கள் தோற்பதில்லை. இம்மாத திண்ணைப் பகுதியில் அப்படிப்பட்ட ஒருவரை நேர்காணல் வாயிலாகச் சந்தித்தோம்.

ப்ரீத்தி. ஒரு நாடகக் கலைஞராக, திரைத்துறை நடிகராக, தொழில் முனைவராகத் தாம் கொண்ட பரிணாமங்களில், தாம் கடந்துவந்த பாதையை நம்முடன் பகிர்ந்துகொண்ட தருணங்கள் உங்களுக்காக…

எப்படி இருக்கிறீர்கள் ப்ரீத்தி?

“நான் ரொம்ப நல்லா இருக்கேன். வாழ்க்கையோட போராட்டத்துல ஒவ்வொரு நாளும் ஜெயிச்சுட்டு இருக்கேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவம் கிடைக்குது. சந்தோசமா இருக்கேன். இருப்பேன்.”

உங்களை அறிமுகம் செய்துகொள்ளலாமே?

“நான் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலி மாவட்டம் கல்யாணிபுரம் கிராமத்துல தான். என்னோட பதினான்கு வயசுல நான் என்னைத் திருநங்கையாக உணர்ந்து அறுவைசிகிச்சை செஞ்சுக்கிட்டேன். சில திருநங்கைகள் உதவியோடு புனேயில் அது நடந்தது. அறுவை சிகிச்சைக்கு அப்புறம் வாழ்வாதாரத்துக்கு இரண்டு வழிகள் தான் பெரும்பாலும் இருக்கு. பாலியல் தொழிலும் பிச்சை எடுக்கறதும்தான் அந்த வழிகள். ஆனா, எனக்கு அதுல சிறிதும் உடன்பாடு இல்லை. சக திருநங்கைகளை மீறி ட்ரெயின்ல கீ செயின் வித்தேன். ஆனா, அதுலயும் நெறைய எதிர்ப்புகள் வந்ததால, டெல்லி போனேன். அங்க பதாய் சொல்லப்படற சுபநிகழ்ச்சிகளில் திருநங்கைகள் கலந்துகொள்வது வழக்கம். கொஞ்சம் நாட்கள் அதுல இருந்தேன், ஆனா ஏழைகளையும் கஷ்டப்படுத்துற விதத்துல மற்ற திருநங்கைகளோட செயல் இருந்ததால, எனக்கு அதுல உடன்பாடு இல்லாம போய்டுச்சு. கடைசியா தெருக்கூத்து பண்ற ஒரு குழுவோடு இணைந்து அவங்களோட பயணிக்க ஆரம்பிச்சேன். நெறைய விஷயங்கள் அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டேன். இப்போ சினிமா, மேடை நாடகங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன்.”

பல திருநங்கைகளைப் பேட்டி எடுத்துவிட்டோம். பெரும்பாலும் ஒரே மாதிரியான கசப்பான அனுபவங்களை அவர்கள் பெற்றுள்ளனர். நீங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

“கசப்பான அனுபவங்கள் பற்றிச் சொல்லணும்னா, புனேயில் ட்ரெயின்ல சக திருநங்கைகளால் தள்ளிவிடப்பட்டது நினைவுக்கு வருது. ஆனா, அந்த மாதிரியான கசப்பான அனுபவங்களை நான் சந்திக்கிற போது எனக்கு ஒரு புதிய பாதை தெரியுது. ஒவ்வொரு கசப்பான அனுபவங்களும் எனக்குள்ள இருக்கிற எதிர்மறை எண்ணங்களை அழிச்சு புத்துணர்வைக் கொடுக்குது. இதனால் என் வாழ்க்கையோட படிநிலைகள் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்குது.”

கசப்பான அனுபவங்களுக்கு இணையான நல்ல அனுபவங்களும் உண்டு. உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் பற்றிக் கூற முடியுமா?

“மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு. ஆனால், நான் எதையும் அவ்வளவு கொண்டாடுவதில்லை. ஒரு வரையறையோடு இருக்கேனுகூடச் சொல்லலாம், தேவையான அளவு மகிழ்ச்சியும், அதே நேரம் வாழ்வாதாரத்துக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடத்துக்காக நான் நிறையவே நேரம் செலவிட்டேன். அதனாலேயே பெரிய கொண்டாட்டங்களுக்கு ஆர்வமில்லை.”

உங்கள் குடும்பப் பின்னணி எப்படிப்பட்டதாக இருந்தது?

“எங்க வீட்டுல நான், அக்கா, அண்ணன். நான் எட்டாம் வகுப்பு முடிச்சதுக்கு அப்பறம் புனே போய்ட்டேன். டெல்லியில் எங்க கலைக்குழு மூலம் சம்பாதிச்சுட்டு, அங்க இருந்து பாண்டிச்சேரியில் குடியேறினேன். இந்தக் காலகட்டத்துல வீட்டுல என்னைப் புரிஞ்சுகிட்டு ஏத்துக்கிட்டாங்க. அம்மா இப்போ என்கூடவே இருக்காங்க, அப்பா திருநெல்வேலில இருக்கார். அடிக்கடி வந்து போய்ட்டு இருக்கார்.”

உங்கள் காதல் திருமணம் பற்றி?

“பிரேம் என்னோட வாழ்க்கையில வந்து ஐந்து வருடங்கள் ஆச்சு. திருநம்பியா தன்னை மாத்திக்கறதுக்கு முன்னாடி இருந்தே என்னிடம் நல்ல தோழனாக இருந்தார். அப்பறம் காதலிக்க ஆரம்பிச்சி ஒன்றரை மாசத்துல திருமணம் பண்ணிக்கிட்டோம். ஒரு திருநம்பியும் திருநங்கையும் ஒன்றாக வாழமுடியும் என்பதை நாங்க ரெண்டு பேரும் ரொம்பவே நம்பினோம். அந்த நம்பிக்கை தான் எங்களோட பலம்னு சொல்லலாம்.”

உங்கள் நாடகங்களைத் தனிப்பட்ட முறையில் பார்த்ததில் இரண்டும் சிறப்பாக இருந். நாடகக் கலை மீதான தங்களுடைய ஆர்வம், பயணம் பற்றிச் சொல்லுங்கள்.

“சின்ன வயசுல இருந்தே நாடகம், சினிமால நடிக்கணும்ங்கற ஆசை இருந்தது. ஆனா, குடும்பச் சூழ்நிலையால என்னால அந்த ஆர்வத்தைத் தொடர முடியல. சென்னை வந்த பிறகு, தன்னார்வலர் குழுவைச் சேர்ந்த மணிக்குட்டி என்பவரோட உதவியால தியேட்டர் லேப் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்தேன். ஜெயராம் மாஸ்டர்கிட்ட நடிப்பு கத்துகிட்டு, ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களோட மேடை நாடகங்களில் நடிச்சேன். நெறைய பேரோட பாராட்டுகளைப் பெற்றேன்.”

சினிமா துறையில் தங்களுடைய பங்களிப்பு?

“நான் பாம்புச் சட்டை, ஐங்கரன், வெள்ளை யானை மாதிரியான எட்டுப் படங்களில் நடிச்சிருக்கேன். எடிட்டர் லெனினோட ’கண்டதைச் சொல்கிறேன்’ போன்ற ஆவண படங்களிலும் நடிச்சிருக்கேன். கடைசியா ’இலக்கு’ அப்படிங்கற படத்துல நடிச்சேன். அது விரைவில் திரையிடப்பட இருக்கிறது. ஒரு வலைத்தள தொடர்ல நடிச்சிருக்கேன். இன்னும் வாய்ப்புகள் கிடைக்கும் போது என்னோட திறமைகளை வெளிப்படுத்துவேன்.”

திணைநில வாசிகள் நாடகக் குழு சிறந்த நவீன நாடகக் குழுவாக அடையாளப்பட்டு வருகிறது. அக்குழுவைப் பற்றி?

“உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்துல வேலை செய்யும் போது அருண்மொழி மாஸ்டர சந்திக்கிற வாய்ப்பு கெடச்சுது. அவர் தான் என்னைத் திணைநில வாசிகள் குழுவுல சேர்த்து விட்டாரு. அவங்கள பத்திச் சொல்லனும்னா எந்தவிதப் பாகுபாடும் இல்லாம என்னை அவர்களில் ஒருத்தராகப் பார்த்தாங்க. அவங்களோட பயணிச்சது ரொம்பவே சிறப்பானது.”

ஒரு தொழில் முனையும் திருநங்கையாக நீங்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள்?

“நானும் என் கணவரும் இணைந்து ஒரு உணவு விடுதியை நடத்திட்டு வர்றோம். மார்ச் ஆறாம் தேதி கடைய ஆரம்பிச்சோம். ஆனா, கொரோனா காரணமா 23ம் தேதி ஊரடங்கு தொடங்குச்சு. அதனால இதுவரை எந்த இடர்பாடுகளும் இல்லை. இனி மறுபடியும் கடையைத் திறக்கும்போது சில இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனா, அதையும் கடந்து போவேன் கண்டிப்பா.”

ப்ரீத்திக்கு யாரேனும் முன்னுதாரணமாக இருந்தது உண்டா?

“குறிப்பிட்டு யாரும் இல்லை. நான் கடந்து வந்த பாதையில் நான் சந்திச்ச ஒவ்வொரு திருநங்கையையும் முன்னுதாரணமா பாக்கறேன். என்ன செய்யணும், என்ன செய்யக் கூடாதுனு ஒவ்வொரு நாளும் கத்துக்கறேன்.”

ஒரு திருநங்கையாக, திருநங்கைகள் அல்லாத சமுதாயத்திற்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

“திருநங்கைகளை மனிதர்களாகப் பாருங்க. அவங்க மேல கருணை காட்டி அவங்க பிச்சை எடுக்கறத ஊக்குவிக்காதீங்க. முடிஞ்சா அவங்களுக்கு வாய்ப்புகளைக் குடுக்கப் பாருங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கறது மூலமா கண்டிப்பா அவங்களோட வாழ்க்கை மேம்படும்.”

திருநங்கைகளுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை?

“வேலை செய்ங்க. யார்கிட்டயும் கருணை எதிர்பார்க்காதீங்க. வாய்ப்புகள் கிடைக்கும் போது அது உங்க வாழ்க்கையை மாற்றும். நம்மளும் சமுதாயத்தோடு இணைந்து வாழ இதுதான் ஒரே வழி. கண்டிப்பா இது நடக்கும் போது நம்மள யாரும் தனியாகவோ வித்தியாசமாகவோ யாரும் பாக்கமாட்டாங்க. சமுதாயம் நம்மளோட நிலைக் கண்ணாடி. நாம மாறுவதன் மூலம் எல்லாம் நிச்சயம் மாறும்.”

இளைப்பாறுவோம்…

அகமகிழ்செய்திகள் பிரிவு.

படைப்பு, படம் நன்றி:

அணியம் அறக்கட்டளை.