A pretty, smiling asian girl on a carpet with a black notebook sitting in the outside

அது ஒரு மதிய இடைவேளை நேரம். அதற்கு முன்பு ஆறாவது பிரிவுவேளையின் போது லட்சுமி டீச்சர் எட்டாம் வகுப்பில் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். முதல் மாடியில் அமைந்திருந்தது

எட்டாம் வகுப்பு . அதன் வெளிப்பக்கத்திலிருந்து பார்த்தால் விளையாட்டு மைதானம் முழுவதையும் பார்க்க முடியும். பாடத்தை நடத்திய பிறகு, மாணவிகள் கணக்குப் போட்டுக்கொண்டிருப்பதை அருகே சென்று பார்த்து, திருத்தங்கள் சொல்லி, வகுப்பை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வெளியே வாசலுக்கு வந்து நின்று இரண்டடி முன்னால் நகர்ந்து கீழே எட்டிப் பார்க்கிறார் ஆசிரியர் லட்சுமி. ஒரே மகிழ்ச்சி… காரணம், தான் வகுப்பாசிரியராக இருக்கும் ஒன்பதாம் வகுப்புக் குழந்தைகள் உற்சாகமாகத் தங்கள் PET (உடற்கல்வி) பிரிவுவேளையின் சாகசங்களைச் செய்துகொண்டிருந்ததைக் கண்டு தான்.

ஒரு குழு கைப்பந்து விளையாட , மற்றொரு குழு கோ-கோ விளையாட்டில் வீறிட்டுக் கத்திக்கொண்டு, மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தான் எத்தனை சந்தோஷமாக விளையாடுகின்றனர், இந்த வாய்ப்புகள் எல்லாம் பெண் குழந்தைகளுக்கு ரொம்ப நாள் நீடிச்சா பரவாயில்லை, ஆயிற்று இன்னும் சில மாதங்களிலேயே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விளையாட வேண்டாம் என்று சொல்லிவிடப் போகிறார்கள் என்றெல்லாம் யோசித்துக்கொண்டு, பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி, இடைவேளை மணியடிக்கவே, குழந்தைகளிடம் நன்றி கூறிவிட்டு , ஆசிரியர்கள் அறைக்குச் செல்ல நினைத்து, படியிறங்கித் தரைத் தளத்திற்குச் சென்றார்.

இடைவேளை என்பதால் கழிப்பறைகளுக்குச் செல்லவும் தண்ணீர் குடிக்க, விளையாட எனப் பள்ளி முழுவதும் ஒரே பரபரப்பு , கூட்டம் கூட்டமாகக் குழந்தைகள் பரவி இருந்தனர். தலைமை ஆசிரியரது அறையைத் தாண்டி தான் ஆசிரியர்களது அறை, அதை நோக்கி நடந்த லட்சுமியின் கால்களை நிறுத்தின அந்தக் குரல்கள். மிஸ் … மிஸ் …. அனிதாவும் கமலாவும் ஓடி வந்து மூச்சிரைக்கப் பேசியது கேட்டு லட்சுமிக்கும் பகீர் என்றது.

“என்னம்மா?”

“நம்ம க்ளாஸ் செல்வராணிக்கும் +2 அக்காங்களுக்கும் என்னமோ பிரச்னை மிஸ் …”

“செல்வராணி ஹெச்சம் ரூம்ல இருக்கா…”

“என்ன பிரச்னை?” பதைபதைத்துப் போய் லட்சுமி டீச்சர் கேட்க, இடைவேளை முடிந்ததற்கான பெல் சத்தம் நீண்ட ஒலி எழுப்ப, “அவங்க ரெண்டு பேரையும் வகுப்புக்குப் போங்க” என்று அனுப்பி விட்டு , தலைமையாசிரியர் அறை நோக்கி நகர்கிறார் லட்சுமி.

அறையின் வெளியே ஒரே கூட்டம் . பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தலைமையாசிரியருடன் சேர்ந்து இரண்டு பெண் குழந்தைகளையும் சுற்றி நின்றுகொண்டு, குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தியது போல அந்த இரு குழந்தைகளை நிற்க வைத்த காட்சியைப் பார்த்ததும், என்ன இது, இப்படி கும்பலாக இருக்கும் ஆசிரியர்களிடமிருந்து இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவது எப்படி என்ற யோசனையில் லட்சுமி டீச்சர் நடப்பதைக் கவனித்தார்.

மாற்றி மாற்றி ஆசிரியர் கூட்டம், சிறுமியிடம் (9ஆம் வகுப்பு ) “நீ எப்படிப் பெரிய பொண்ண (12 ஆம் வகுப்பு ) அடிக்கலாம்” எனக் கேள்விக்களை அள்ளி வீசியும் அதட்டியும் மிரட்டியும் பேசிய குரல்களையும் பார்க்க முடிந்தது.

நடந்தது இதுதான்.

விளையாட்டுப் பிரிவுவேளையில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு செல்வராணி தன் தோழிகளுடன் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு அங்கிருந்த தொட்டி தண்ணீரில் கை வைத்து விளையாடிக்கொண்டிருக்க, ப்ளஸ் டூ படிக்கும் ரேணுகா தனது தோழிகளுடன் நடந்து வந்தபோது, செல்வ ராணியின் கைகளிலிருந்த நீர்த் திவலைகள் ரேணுகாவின் மீது பட்டுவிட்டன. இருவரும் மாறி மாறிப் பேச , ரேணுகா ஒரு பக்கெட்டில் தண்ணீரை எடுத்து செல்வராணியின் உடையின் மீது சளேர் என ஊற்ற, செல்வராணி ரேணுகாவை அடி அடித்துவிட்டாள்.

அதற்குள் இருவரையும் தனித்தனியாக இரு மாணவிக் குழுக்கள் இழுத்து, ஆசிரியரிடம் கூட்டிவர, பிரச்னை தலைமையிடம் போய்விட்டது.

இனி நடந்தது …

இரு குழந்தைகளும் பள்ளி மாணவிகள் தாம். ஆனால், தலைமை ஆசிரியர் வயதில் சிறிய செல்வராணியைத் தான் குற்றம் சொல்கிறார். நீ எப்படி உன்னைவிடப் பெரியவளை அடிக்கலாம்? உனக்கு டிசி கொடுக்கிறேன் பார். உங்கப்பாவை வரச் சொல்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வராணி பல்லை நரநரவெனக் கடித்துவிட்டு முறைத்தது தான் காரணம். தலைமைக்கு ஆதரவாக அங்கு நின்றுகொண்டிருந்த மொத்த ஆசிரியர்களும் செல்வராணியைக் குற்றவாளி ஆக்கி கத்தி போல் சொற்களை வீசினர்.

அந்த இடத்திற்கு வந்த லட்சுமி டீச்சர் தனது மாணவி என்றாலும், “ஏன் செல்வா அடிச்சே? டீச்சர் கிட்ட சொல்லலாம்ல?” எனக் கூற, ஓடி வந்து லட்சுமியைக் கட்டிக்கொண்டு கதறினாள் செல்வராணி.

அதற்குள் ஆசிரியர் சிலர் அவளின் அக்காவை வரவைத்து, வேறு ஊரில் வேலை செய்யும் அப்பாவிற்கு தகவல் தந்து, குழந்தையின் மீது குற்றங்களை அடுக்க, அவள் அக்காவும் அழுதாள். “மிஸ், இப்ப எல்லாம் அதிகமா செல்வா கோபப்படுறாள், வீட்லயும் இப்படித்தான்” என்று கூற, தலைமை ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

லட்சுமிக்குச் செல்வராணியின் குடும்ப நிலை தெரியும், பெற்றோரைப் பிரிந்து பாட்டியுடன் வாழும் குழந்தை. வளரிளம் பருவத்தால் பல்வேறு உளச் சிக்கல்களைக் கடந்து வரும் மாணவி. பொருளாதாரச் சூழலாலும் சற்றே நலிவுற்றக் குழந்தை. இவற்றை எல்லாம் எடுத்துக் கூற லட்சுமி முயற்சிக்க, தலைமை ஆசிரியர் கேட்க மறுத்துவிட்டார். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இந்தப் பிரச்னை நீண்டு, பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்குப் போக ஆரம்பித்தனர்.

ஒரு வாளி தண்ணீரை மேலே கொட்டி, தன் உடையை நனைத்ததால் தான் என்னை மீறிக் கோபப்பட்டேன் என்ற செல்வராணி, தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல வாய்ப்பு தர மறுக்கும் தலைமை ஆசிரியர், அவர் சொல்வதற்குத் தலையாட்டும் ஆட்டு மந்தை ஆசிரியர் கூட்டம், இப்படி ஒரு சூழலிலிருந்து செல்வாவைக் காப்பாற்றி, தனது ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று அவளை வருடிவிட , செல்வா மீண்டும் லட்சுமி டீச்சரைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

கண்ணீரைத் துடைத்த லட்சுமி டீச்சர், அவளுக்குத் தைரியம் தந்ததுடன், அவளிடம் இருக்கும் தனித்திறன்களை எடுத்துக் கூறி, அதை மேம்படுத்தக் கூறினார்.

“மிஸ், என்னால தான் உங்களுக்குக் கெட்ட பேரு, சாரிங்க மிஸ்” என வருந்தி இன்னும் அழுகையை நிறுத்த முடியாமல் தவித்தாள்.

“இங்க பாருடா, இது ஒரு பிரச்னையே இல்ல. ஸ்டூடன்ஸ்க்குள்ள சண்டை வர்றது சாதாரண விஷயம். விடு, நீ அந்த அக்காவை அடிச்சது தான் எல்லோருக்கும் கோபம்” எனக் கூறினார்.

இருவரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்ததோடு மீண்டும் அடுத்தடுத்த நாட்களில் அவளை நான் இருக்கேன், பயப்படாதே என நம்பிக்கை வரும் வகையில் உரையாடலைத் தொடர்ந்து நிகழ்த்த, இப்போது செல்வராணி பயத்தைவிட்டு, சகஜமாக வலம் வந்தாள்.

பொறுமையாகச் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் பழகுவதுடன் படிப்பில் கவனம் செலுத்தி, பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாகவும் வந்தாள். வாசிப்பில் மிகப் பெரிய ஆர்வமுடன் லட்சுமி டீச்சரின் உதவியால் தன் வாசிப்பின் எல்லையை விரிவாக்கிக்கொண்டாள்.

ஆனாலும் அவளால் அந்த அவமானத்தை அவ்வளவு எளிதில் மறக்க இயலவில்லை. அந்தக் காயத்திற்கு லட்சுமி டீச்சர் தொடர்ந்து தனது அரவணைப்பால் மருந்து போட ஓரளவு குணமாகி விட்டாலும் வடுவாகப் பதிந்துவிட்டது .

என்ன செய்யலாம்?

பள்ளியில் சாதாரணமாக இரு குழந்தைகளிடையே சண்டை வருவதும் அது அடிதடி வரை போவதும் இயல்பான ஒன்று தான். பெண் குழந்தைகள் என்பதாலேயோ, அல்லது வயதில் சிறியவள் என்பதாலேயோ பொறுத்துப் போக வேண்டும் என்று செல்வராணியைக் கூறுவது சரியல்ல. முதலில் இந்தப் பிரச்னையைத் தலைமை ஆசிரியர் அணுகிய விதமே ஏற்புடையதல்ல.

வகுப்பு ஆசிரியர்களையும் மாணவிகளையும் மட்டும் வைத்து, மற்றவரைக் கூட்டம் கூடாமல் அனுப்பி விட்டு, விசாரித்து எச்சரிக்கை செய்யலாம் . அறிவுரை கூறலாம். இருவரையுமே கண்டிக்கலாம். அதை விடுத்து வலிமையற்றதாலேயே வயதில் சிறிய மாணவியை மட்டும் மாண்பற்ற சொற்களால் திட்டியது குழந்தை உளவியலுக்கு எதிரானது. குழந்தைகள் தவறை உணரவோ சரி செய்யவோ நேரமும் வாய்ப்பும் வழங்க வேண்டும். அதை விடுத்து வாய்க்கு வந்தபடி திட்டுவதும் மாற்றுச் சான்றிதழ் தருவதாக மிரட்டுவதும் சட்டத்திற்குப் புறம்பானது. மனிதப் பண்புகளுக்கும் எதிரானது.

அடிப்படையில் அன்று நடந்த நிகழ்வு குழந்தையின் மீதான வன்முறை, தான் தலைமை ஆசிரியர் என்பதாலேயே அதிகாரம் செலுத்தும் போக்கு கண்டனத்திற்குரியது.

அதோடு ஒரு குழந்தை செய்யும் தவறு குடும்பச் சூழல், தனி நபரின் பண்பு, ஹார்மோன்களின் பங்கு என அனைத்தையும் சார்ந்தது என்பதை மனதில் கொண்டு உளவியல் சார்ந்த அணுகுமுறையைக் கையாள ஆசிரியர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வது அவசியம். கல்வித் துறை பள்ளிகளில் மாணவர் மனசு என்று புகார்ப் பெட்டிகளை வைத்தால் மட்டும் போதாது. களத்தில் இவ்வாறு நடக்கும் அராஜகங்களைக் கண்டு களைய வேண்டும்.

ஒரு நிமிடம் லட்சுமி ஆசிரியரின் அரவணைப்பும் இல்லாமல் போனால் செல்வராணி போன்ற மாணவிகள் வாழ்க்கை திசை மாற வாய்ப்புண்டு. ஆகவே பள்ளித் தலைமைகள், ஆசிரியர்கள் தங்கள் கிரீடத்தைக் கழட்டிவிட்டு சக மனுஷியாகக் குழந்தைகளைத் தாய்மை உணர்வுடன் அணுகினால் நல்லது.

(தொடரும்)

படைப்பாளர்:

சு உமாமகேஸ்வரி

உமாமகேஸ்வரி , அரசுப் பள்ளியில் ஆசிரியர் , கல்வி முறை குறித்தும் வகுப்பறை செயல்பாடுகள் குறித்தும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர். பாடப்புத்தகம், பாடத்திட்டம் ஆகியவற்றைத் தாண்டி குழந்தைகளது மன உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் மதித்து, அதற்கு ஏற்புடைய சூழலை அமைத்துத் தர முயற்சி மேற்கொள்பவர்.