குட்டி பகுதி – 5

முன்கதைச் சுருக்கம்:

செல்லப் பிள்ளையான குட்டிக்கு அவள் அப்பா, ஒரு திருப்தியான வரனைப் பார்த்திருந்தார். குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை அத்தை, குட்டியிடம் சொன்னார். குட்டி தன் அம்மாவிடம் இதைப் பற்றி விசாரிக்க, அவர் அதைப் பற்றி எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இனி…

மதியம் தூங்கிவிட்டார்கள் இருவரும். மாலை 3 மணி இருக்கும்போது அம்மா எழுந்துவிட்டாள். குட்டி தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் மாறாதிருக்கும் குழந்தைத்தன்மையை அவள் அம்மா ரசித்துக்கொண்டிருந்தார். அது சரி, எத்தனை வயதானாலும், அம்மாவுக்குப் பிள்ளைகள் குழந்தை போலத் தெரிவதில் ஆச்சரியம் ஏதும் இல்லைதானே!

எழுந்து மாட்டுக் கொட்டகையைச் சுற்றியிருக்கும் மரங்களின் கீழ் இருக்கும் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கினாள்.

ரமேஷ் ஆடியபடியே ஓடிவந்தான்.

ரமேஷ்: அத்த, குட்டியக்கா எங்க? வீட்டு வாசல்ல நின்னு ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். ஆளயேக் காணாம்.

ரதியாள் (குட்டியின் அம்மா): முன்னாடி இருக்க கொட்டாயில தூங்கிட்டு இருக்கறாடா? ஏன்டா ரமேசு, உனக்கு இன்னும் பள்ளிக்கோடம் ஆரம்பிக்கலயா? என்னேரம் பாத்தாலும் ஊருக்குள்ள தான் சுத்திட்டு இருக்கற?

ரமேஷ்: ஆரம்பிச்சுட்டாங்க அத்த. அரை நேரம் தான் பள்ளிக்கோடம். இன்னும் முழு நேரமா வரச் சொல்லல.

ரதி: வீட்டுப்பாடமெல்லாம் தரதில்லையா உனக்கு?

ரமேஷ்: அதெல்லாம் மின்னலாட்டம் முடிச்சிருவேன் த்த.. என் ஸ்பீடு உனக்கு தெரியுமா? ஸ்பைடர் மேனாட்டம்.

ரதியாளுக்குச் சிரிப்பு வந்தது.

“இப்படியாபட்ட சின்னப் பசங்களோட விளையாடிட்டு இருந்தா, இவளுக்கு எப்ப வெவரம் வரும்? வெவரம் இருந்துகிட்டே இப்படி இருக்காளா? இல்ல இவளுக்கு அவ்வளவு தான் தெரியுதா? கட்டிக் குடுத்த அப்றம் இவ எப்படிப் போயி புகுந்த வீட்ல பொழைப்பா?

ஏதேதோ யோசனைகளில் மூழ்க ஆரம்பித்தாள் ரதியாள்.

ரமேஷ் கோணப்புளியாங்காய் மரத்தை நோண்டிக் கொண்டிருந்தான். மேலே நிமிர்ந்து பார்த்தால், நிறைய பழுத்த கோணப்புளியாங்காய்கள் ரோஸ் நிறத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. பார்க்கும்போதே எச்சில் ஊறியது.

ரமேஷ்: அத்த கொஞ்சம் கோணப்புளியாங்காய் பறிச்சுக்கட்டா?

ரதி: இருடா, நான் வந்து பறிச்சு தரேன். கொண்டிய மேல போட்டுக்காத.

ரமேஷ்: அதெல்லாம் நான் நல்லா பறிப்பேன் அத்த. நான் ஸ்பைடர் மேன். தெரியும்ல..

ரதி: ஓஹோ.. இருக்கட்டும் இருக்கட்டும். இப்ப நான் பறிச்சு தரேன். கொஞ்சம் பெரிய ஸ்பைடர் மேன் ஆன அப்புறம் நீயே பறிச்சுக்கோ.

ரமேஷ்: ம்ம்ம்ம் சரி அத்த. நீயே பறிச்சு குடு.

ரதி: தரேன் இரு.

ரமேஷ்: சீக்கிரமா பறி அத்த.

ரதி: இருடா. கொண்டிய எடுக்கற வர பொறுக்க மாட்டான் போல..

ரமேஷுக்குக் கைகள் பரபரவென்று இருந்தன. ரதியாள் கை நிறைய கோணப்புளியாங்காய்களை எடுத்துக் கொடுத்தார். அதன் பின் தான் ரமேஷுக்கு பரபரப்பு அடங்கியது.

சாப்பிட்டவுடன் திரும்பவும் குட்டியின் நினைவு வந்தது ரமேஸுக்கு.

ரமேஷ்: அத்த, குட்டியக்கா எங்க?

ரதி: அட, காய கையில வாங்குன உடனே எல்லாத்தையும் மறந்துட்டியா நீ? அவ தான் கொட்டாயில தூங்குறானு சொன்னேன்ல?

ரமேஷ்: ஆமாமா. நான் போயி அக்காவ எழுப்புறேன். ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.

ரதிக்குப் பகீரென்றது.

“என்ன சொல்லப் போறான் இவன்? யாராவது மாப்பிள பாக்கறத பத்தி இவன்ட ஏதாவது சொல்லிருப்பாங்களா? நம்மகிட்ட விசாரிச்ச மாதிரி, இவன் கிட்ட சொல்லி ஏதாவது விசாரிக்கச் சொல்லிருந்தாளா குட்டி?”

ரதிக்கு அழுகை வருவது போலிருந்தது. எல்லாம் சரிதான் என்றால், குட்டியிடம் உடனே சொல்லிவிடுவார்கள் தான். ஆனாலும் இப்போது தெரியக்கூடாது என்பது ரதியாளின் எண்ணம்.

ரமேஷ் எழுப்பியவுடன் குட்டி எழுந்துவிட்டாள்.

குட்டி: என்னடா முக்கியமான விஷயம்?

ரமேஷ்: அக்கா… கழுகு ராஜ்ஜியத்துக்கும் காக்கா ராஜ்ஜியத்துக்கும் சண்டக்கா. வா பாக்கலாம்.

குட்டி: எங்கடா?

ரமேஷ்: நம்ம தென்னந்தோப்புக்கு வா காட்டுறேன்.

ரதியாளுக்கு மீண்டும் குழப்பம் தலை தூக்கியது.

“அதென்ன கழுகு ராஜ்ஜியம், காக்கா ராஜ்ஜியம்? இதெல்லாம் உண்மையா இல்லை ரகசிய வார்த்தைகளா? இவர்களை எப்படிப் புரிந்துகொள்வது?”

ரதி யோசிப்பதற்குள் அவர்கள் இருவரும் கிளம்பி விட்டார்கள். பேச்சு சத்தம் கேட்கவில்லை.

“தென்னந்தோப்புக்குத் தான போறதா சொன்னாங்க? நாமளும் போகலாமா?”

“ச்சச்சே இது தெரிஞ்சா என்ன? இதுக்காவெல்லாம் புள்ள பின்னாடி போகலமா? இப்ப தெரிஞ்சா தான் என்ன?” சொந்த மனசாட்சியே கேள்வி எழுப்பியது.

“அதுக்குள்ள தெரியணுமா? இப்ப அந்தப் பையனப் பத்தி வீட்டுக்காரரு ஒண்ணுமே சொல்லல. விசாரிச்சதோட எல்லாம் நிக்குது. வேணாம்னு ஆயி போச்சுனா, பிள்ள மனசு பொக்குனு போயிறாது?”

“சரி. ஏதோ ஒண்ணு. இப்ப தோப்புக்குப் போயி என்னனு தான் பாத்துருவோம்.”

ஒரே முடிவாக ரதியாள் கிளம்பினாள்.

ஒரே விஷயத்தைத் தொடர்ந்து யோசிக்கும்போது, அதில் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் யாவும் பூதாகரமாய் தெரிய ஆரம்பிக்கின்றன. ரதியாளுக்கு அது தான் நடந்துகொண்டிருந்தது.

தோப்புக்குப் போய்ப் பார்த்தபோது, நிஜமாகவே கழுகும் காக்காயும் ஒவ்வொரு பக்கம் கூட்டமாகத் தான் இருந்தன. சண்டையெல்லாம் இல்லை. அது அவன் கற்பனை.

நிம்மதிப் பெருமூச்சு விட்டுப் புன்னைத்தாள் ரதி. அம்மாவைப் பார்த்த குட்டி ஓடி வந்தாள்.

குட்டி: இங்க என்னம்மா பண்ற?

ரதி: வெளக்கமாரு செய்ய காஞ்ச தென்னமட்டை ஒடச்சு போட்ருக்கேனு அப்பா சொன்னாங்கடி. அதான் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்.

குட்டி: நானும் எடுக்கவாம்மா?

ரதி: ம்ம்…

மூவரும் சேர்ந்து காய்ந்த மட்டையிலிருந்த குச்சிகளைப் பிய்த்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

ரமேஷ்: அக்கா, உனக்கு அடுத்த மாசம் கல்யாணமாவப் போவுதுனு எங்கம்மா சொன்னுச்சு, அப்புடியாக்கா?

ரதியும் குட்டியும் ஒரு சேர அதிர்ச்சி அடைந்தனர். காரணம் தான் வேறு வேறு.

(தொடரும்)

படைப்பாளர்

சௌம்யா

எம்.பி.ஏ. பட்டதாரி மற்றும் தொழில்முனைவோரான இவர், சேலத்தில் பிறந்து சென்னையில் வசித்து வருகிறார். சிறுவர் இலக்கிய உலகத்தில் கதை சொல்லியாகவும், பத்திரிகை எழுத்தாளராகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.