மனைவி: ஏங்க, கல்யாணத்துக்குப் போகணும். ஒரு 500 ரூபாய் கொடுத்துட்டுப் போங்க. மொய் வைக்க.

கணவன்: ஆமா உங்க அப்பன் வீட்டுக் காசு தான் இங்க நிறையுது . போய் முதுகு முறிய சம்பாதிச்சா தெரியும். இந்தா 200 ரூபா. அங்க வச்சிட்டுப் போறேன். எடுத்துக்கோ.

மற்றோர் உரையாடல்

கணவன்: இது என் வீடு. நான் சம்பாதிச்ச வீடு. வீட்டைவிட்டு வெளிய போடி.

மனைவி: நான் இந்த வீட்டுக்கு மாடா உழைக்கலையா? எல்லா வீட்டு வேலையும் செய்யலையா? புள்ளைங்கள வளர்க்கலையா? இந்த வேலைக்கெல்லாம் சம்பளமா வாங்குனேன்?

கணவன்: ஆமா, தருவாங்க இவங்க செஞ்ச வீட்டு வேலைக்கு… போடி வெளியில.

இது போன்ற உரையாடல்களைப் பல வீடுகளிலும் நாம் கேட்டிருப்போம். இந்த உரையாடல்கள் பொருளாதாரச் சுதந்திரமற்ற பெண்களை ஆண்கள் நடத்தும் விதமாகவே இருக்கின்றன.

பொருளாதாரச் சுதந்திரம்தான் பெண் விடுதலையின் முதற்படி என்று கருதுகிறேன். ஒரு பெண்ணை அடிமையாக்குவதற்கு இச் சமூகமும் ஆண்களும் பயன்படுத்திய ஒரு முக்கியமான யுத்திதான் அவளிடமுள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்தது. பொருளாதாரத்தில் அவளை மண்டியிட வைத்தது. பொருளாதாரத்தில் ஓர் ஆணை முழுமையாகச் சார்ந்திருக்கும் பெண்ணால் முழுமையான பெண் விடுதலையை எட்டவே இயலாது.

ஆதிகாலத்தில் பெண்ணாதிக்கம் ஓங்கியிருந்தபோது, சொத்துகளாகப் பல ஆடு, மாடுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆண்கள் பெண்களிடம் வேலை செய்பவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். ஆண்கள் ஆடு, மாடுகளைச் சரியாகப் பராமரிக்காத பட்சத்தில் அவர்களை வேலையிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் சில பெண்கள். அவர்களை வெளியேற்றும்போது வெறும் கையோடு எப்படி அனுப்புவது என்று எண்ணி ஆடு, மாடுகளைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். முதன்முதலில் ஆடுமாடுகளைச் சொந்தமாகப் பெற்றுக்கொண்ட ஆண்கள், பெண்களின் சொத்தான அவற்றை அபகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆணாதிக்கம் ஓங்கத் தொடங்கியிருக்கிறது. பெண் ஆதிக்கத்தின் சரிவைப் பெண்ணின் பொருளாதாரச் சரிவிலிருந்தே முன்னெடுத்திருக்கிறார்கள் ஆண்கள். ஆணாதிக்க அடக்குமுறையே தனிச் சொத்துரிமையில் இருந்துதான் தொடங்கியுள்ளது. தாங்கள் சொத்தாகக் கருதிய கால்நடைகளுக்கு ஆண்கள் சொந்தக்காரர்களாகிய இந்நிகழ்வுதான் அதுவரை முதல் நிலையில் இருந்த பெண் தலைமையைக் கீழே இறக்கியது என்கிறார் எங்கெல்ஸ்.

கற்பு என்ற வார்த்தைக்குள் பெண் சமூகத்தைச் சிறையிலிட்ட பெருமையும் ஆண் சமூகத்தையே சாரும். கற்பு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை அடைமொழிகள்? மாசில் கற்பு, தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு, திருநகர் அடங்கிய கற்பு, நாணொடு மிடைந்த கற்பு, இகலடு கற்பு, கடவுட் கற்பு, செயிர்தீர் கற்பு, பொறையொடு மலிந்த கற்பு, வடமீன் புரையுங் கற்பு, மறம் கடிந்த அருங் கற்பு, நன்றி சான்ற கற்பு, மனுவில் கற்பு, விளங்கு நகர் அடங்கிய கற்பு என்று சங்க இலக்கியம் கூறிய இந்த வகை வகையான கற்புகளில் வள்ளுவர் கூறிய மழையைப் பெய்விக்கும் ஆற்றல்மிக்க கற்பு எது என்றுதான் தெரியவில்லை. இத்தனை வகையான கற்பும் பெண்ணுக்கு மட்டுமே என்பதுதான் வேதனைக்கும் நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது. இந்தக் கற்பு என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி பெண்களை வேலைக்குச் செல்ல விடாமல் தடுக்கும் குடும்பங்களும் இருக்கத்தானே செய்கின்றன.

சமூகத்தில் பெண்களுக்கான இடம் வீடு, அதாவது மனை என்ற காரணத்தினால் மனைவி என்ற பெயர் வந்திருக்கிறது. கணங்களின் தலைவன் என்ற சொல்லிலிருந்து கணவன் என்ற வார்த்தை வந்திருக்கிறது.

மனைவி, இல்லாள் போன்ற வார்த்தைகள் பெண்கள் வீட்டிற்கு மட்டுமே உரியவர்கள் என்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது.

சென்ற தலைமுறை வரை ஆண்களிடம் அல்லது கணவனிடம் அடி, உதை வாங்கிக்கொண்டு குடும்பத்திலிருந்து பிரியாமல் குடும்பத்தைக் கட்டிக்காத்த பெண்கள், பெரும்பாலும் பொருளாதாரச் சுதந்திரமற்றவர்களாகவே இருந்திருக்கிறார்கள். கணவன் இறந்த பிறகு கைம்மை நோன்பு இருப்பதைக் காட்டிலும் அச்சிதையோடு இறந்துவிடுவது மேல் என்று பெண்களை எப்படி இச்சமூகம் நம்ப வைத்திருந்ததோ அதைப் போலவே கணவன் அடித்தாலும் சித்திரவதைச் செய்தாலும் சமூகத்திற்காக, நற்பெயருக்காக, குழந்தைகளுக்காக அவர்கள் குடும்ப அமைப்பிலிருந்து பிரிந்து போய்விடக் கூடாது என்பதையும் ஒரு நம்பிக்கையாகவே பெண்களின் மனதில் பதிந்திருக்கிறது. அந்தக் கண்களுக்குப் புலப்படாத மாயவலையை முறியடிக்கும் வலிமை பெண்கள் ஈட்டும் பொருளாதாரச் சுதந்திரத்துக்கே உண்டு.

பொருளாதாரத்திற்காக ஆணைச் சார்ந்திருக்கும் பெண்ணால் சுய முடிவுகளை எளிதாக எடுத்துவிட இயலாது. பொருளாதாரத் தடை அவளின் சிந்தனைத் தடையாகவும் மாறவியலும். பொருளாதாரச் சுதந்திரம் பெண்களுக்கான மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளிக்கும்.

ஏதோ ஒரு துறையில் சாதிப்பதற்கு மட்டுமல்ல, இவ்வாழ்வை எளிமையாகச் சுயமரியாதையுடன் கடப்பதற்குப் பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அவசியம். திருமணவாழ்வு பொருந்தி வராத பட்சத்தில் தன் வாழ்வை மாற்றி அமைத்துக் கொள்ள பெண்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் இன்றியமையாதது.

ஆண் பிள்ளைகள்தாம் திருமணத்திற்குப் பிறகு தன் பெற்றோர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கட்டமைப்பு மாறி இன்று பெண்களும் தன் பெற்றோர்களை எல்லா வகையிலும் பாதுகாக்கின்றனர். அப்படித் தன் பெற்றோரையும் பிள்ளைகளையும் பாதுகாக்கப் பொருளாதாரச் சுதந்திரம் என்பதுதானே அடிப்படை.

நடிகர் கமல்ஹாசன் தன் கட்சியின் சார்பில் பேசப்பட்ட ஒரு பேச்சில் இல்லத்தரசிகளுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்ற யோசனையை அறிவித்திருந்தார். நம் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாவிட்டாலும் பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.

இதற்கு எதிர்க் கருத்து தெரிவித்த சிலர் ‘தன்னைப் படைத்த கடவுளுக்குச் சம்பளம் கொடுப்பீர்களா? அப்படித்தான் குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்று வாழ்வில் துணைபுரியும் தன் இணையான பெண்ணுக்குச் சம்பளம் கொடுப்பதும்’ என்று கூறுகின்றனர். பெண்ணின் வாழ்வைப் புனிதப் படுத்துவதையும் தெய்வத்திற்கு ஒப்பாகப் பேசும் பைத்தியக்காரத்தனங்களையும் விடுத்து சக மனுஷியாகப் பெண்ணைப் பார்க்கும் மனநிலை வாய்க்கப் பெறுதல் வேண்டும்.

கல்விதான் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கான அடிப்படை. மத அரசியலின் காரணமாகப் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கர்நாடகாவில் பொதுத் தேர்வு எழுதவில்லை. கல்வி என்ற அடிப்படை உரிமையை மதம், மத அரசியல் என்ற போர்வையில் பெண்களிடமிருந்து களவாடுதல் எப்படி முறையாகும்? இந்த ஜனநாயக நாட்டில் உடையைக் காரணமாகக் காட்டி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களின் படிப்பைச் சூறையாடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்களுக்கான தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும். உடை என்பது அவரவர் உரிமை என்பதை இந்த ஜனநாயக நாட்டில் நிலைநிறுத்த வேண்டும்.

இன்னொரு முக்கியமான கேள்வி வேலைக்குப் போய் பணம் ஈட்டும் பெண்களுக்கு முழுமையான பொருளாதாரச் சுதந்திரம் இருக்கிறதா என்பதுதான். வாங்கிய சம்பளத்தை அப்படியே கணவரிடமோ அல்லது கணவன் வீட்டாரிடமோ கொடுக்கும் பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? குடும்பச் செலவு போக தனக்குத் தேவையான சிறு தொகையாவது தான் சேமித்துக்கொள்ளும் உரிமை எத்தனை பெண்களுக்கு இருக்கிறது?

திருமணத்திற்குப் பிறகு எத்தனை பெண்களால் தன் பெற்றோர்களுக்குப் பிறந்த வீட்டிற்குப் பொருளாதார உதவியைத் தொடர்ந்து செய்துவிட முடிகிறது? பாலின சமத்துவத்தில் மிக முக்கியமானது பெண்களின் பொருளாதாரச் சுதந்திரமே.

இந்தியாவைப் பொருத்தவரை 24 சதவீதப் பெண்கள் மட்டுமே ஊதியம் பெறும் பணிகளில் இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. நுட்பமாகச் சிந்தித்தால் பல பெண்களும் பணிபுரிகிறார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே முறையான ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

தான் எங்கு வசிக்க வேண்டும்? எங்கு பயணிக்க வேண்டும்? எங்கு வேலை பார்க்க வேண்டும்? வியாபாரம் செய்ய வேண்டுமா? என்ன வியாபாரம் செய்ய வேண்டும்? யாருக்குக் கீழே வேலை செய்ய வேண்டும்? வியாபாரத்தில் யாருடன் பங்குதாரராக இருக்க வேண்டும்? தான் ஈட்டிய பணத்தில் குடும்பத்திற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? எவ்வளவு சேமிக்க வேண்டும்? எந்தச் சேமிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் போன்ற சகலத்தையும் பெண்களே தங்கள் வாழ்வின் முடிவு செய்யும்போது அவர்கள் முழுமையான பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றவர்களாகி விடுகிறார்கள் என்பது என் கருத்து.

‘பெண்கள் உண்மையில் வீரம் உடையவர்கள்தாம். நினைத்ததை முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்தாம் என்பதைச் செய்து காட்ட வேண்டும்’ என்றார் பெரியார். நம் வீரத்தையும் ஆற்றலையும் செயல்படுத்திக் காட்ட பேருதவியாக இருப்பது நம் வாழ்வில் நாம் ஈட்டும் பொருளாதாரச் சுதந்திரமே.

சம சுதந்திரம், சம கற்புமுறை, சம உரிமை போன்ற சமநிலைகளை எட்ட முயற்சி செய்வோம். பேசாப் பொருளையும் பேசுவோம். தொடர்ந்து விவாதிப்போம்.

கதைப்போமா?

படைப்பாளர்:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.