ஒருமுறை வள்ளியக்காவோடு பம்புசெட்டுக்குத் துணிதுவைக்க துணைக்குப்போய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது தான் அந்த அக்காவைப் பார்த்தேன்.


எங்கள் கிராமத்தின் சுற்றுப் பகுதிகளில் நகரத்தார்கள் வீடு கட்டிக்கொண்டு வந்த நேரம் அது.


அந்தப் புது அக்கா ரொம்ப அழகாக இருந்தாங்க! பேரு ஷீலாவாம், மெலிதான தங்கசங்கலியோடு ஒல்லியாக அழகான கூந்தலோடு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. எங்க ஊர்ப் பெண்கள் தங்கச்சங்கலி அணிவதில்லை.


வள்ளியக்காவை நல்லா படிக்கிறீயானு கேட்டு ஒவ்வொரு டீச்சரா விசாரிச்சு, அது இப்படி இது இப்படினு பேசிட்டிருந்தாங்க, நான் ஒரு பெரிய மனுஷி இருப்பதையே மறந்துட்டாங்க.


வள்ளியக்காவும் நடு நடுல நீங்க எப்படி இருக்கீங்க ஷீலாக்கானு கேட்டப்போல்லாம், அவரு நல்லவரு அவரு நல்லவருனு நொடிக்கொருதரம் சொன்னாங்க.


வள்ளியக்கா துணியைத் துவைச்ச பிறகும், ஷீலாக்கா துவைச்சி குளிக்கும்வரை கூடவே இருந்து அவங்க போகும்போது தான் இவங்களும் கிளம்பினாங்க. எனக்கு அப்பவே தெரிஞ்சுபோச்சு எனக்கு இன்னைக்கு வீட்ல விசேஷ பூஜை இருக்குன்னு.
அப்போ நான் ஏழாவதோ எட்டாவதோ படிச்சேன். வள்ளியக்கா பத்தோ , பதினொண்ணோ என்னமோ சரியா ஞாபகம் இல்லை.
சுபா ஷீலாக்கா ஒரு அண்ணன் பேரைச் சொல்லி அவரை லவ் பண்ணாங்க, எப்படிப் பண்ணாங்க தெரியுமா?


இந்த மேல்நிலைப்பருவக் காதலில் அடிக்கடி இடம்பெறும் இந்த வார்த்தை. எப்படி லவ் பண்ணாங்க தெரியுமா, இப்ப தான் பார்க்கிறேன். அந்த அண்ணனை இவங்களால மறக்கவே முடியாது. அவரு நல்லவரு நல்லவருன்றாங்க. எனக்கெல்லாம் இவங்க தான் இன்ஸ்பிரேஷன். நானெல்லாம் லவ் பண்றேன்னா அதுக்கு இவங்க தான் காரணம்னு சட்னு சொல்லிட்டாங்க.


சொன்னவுடனே டக்குன்னு இடுப்பில் இருந்த அன்னக்கூடையைக் கீழ வச்சிட்டு, என் கைகளைப் பிடிச்சிட்டு, சுப்பு சுப்பு உன் அம்மாகிட்ட சொல்லிடாத, என் அம்மா, என் பாப்பா (வள்ளியக்காவோட தங்கைக்கு என் வயசு) யார்ட்டயும் சொல்லக்கூடாது. அது நம்ம அய்யனார் மேல சத்தியம். உம் சொல்லு, ”சுப்புவாகிய நான், நான் யார்கிட்டயும் சொல்லலை, ஆனா சத்தியம் பண்ணக்கூடாதுன்னு எங்கம்மா சொல்லியிருக்காங்க…’’
”இல்லல்ல நீ சத்தியம் பண்ணு, இல்லன்னா உங்கம்மாகிட்ட சொல்லிடுவ”ன்னு வம்படியா சத்தியம் வாங்கினாங்க, இது தான் நான் செய்த முதல் சத்தியமும்கூட.


இந்த வயதில் காதல் வர காரணங்கள் ஆயிரம் இருப்பினும் தனக்குப் பிடித்த நபர்கள் காதலிப்பதைப் பார்த்து தானும் காதலித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதுதான் ஆகச் சிறந்த வேதனை.
தேவையா, அவசியமா இவற்றையெல்லாம் தாண்டி ஒரு காதல் நிச்சயமாக வேண்டியிருக்கிறது.


பிளஸ்டூ வரை பம்புசெட்டில், வரப்பில், புத்தகத்தின் நடுவில் லட்டராக, சைக்கிளில் காற்றை வெளியேற்றிவிட்டுத் தள்ளிக்கொண்டே பள்ளிக்கு நடந்து, பேசிக்கொண்டே போவதில் இப்படியாக வள்ளியக்கா காதலும் வளர்ந்தது.


வள்ளியக்காவின் அப்பா ஆசிரியர், அண்ணன் தலைநகரில் முதுகலை பயின்றார். ஊரில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பட்டதாரி மாணவர்களில் ஒருவர். வள்ளியக்காவை அப்படி ஒரு படிப்பு படிக்க வைக்க கனவு கண்டுகொண்டிருந்தார்.


ஆனால், வள்ளியக்காவின் எண்ணம் முற்றிலும் வேறாக இருந்தது. காதலித்த அண்ணனைக் கரம்பிடிப்பதும், அண்ணன் டிராக்டர் ஓட்டி வீட்டுக்கு வரும்போது தூக்குவாளியில் சாப்பாடு கொடுப்பதுமே வாழ்வின் லட்சியமாக இருந்தது.


அவங்களோட வீட்டில் படிக்கப் போறதாகச் சொல்லிட்டு, எங்கள் வீட்டிற்குப் படிக்க வரும்போது வள்ளி அக்கா சொல்வது நான் நினைச்சா பிளஸ்டூவில் ஸ்கூல் ஃபர்ஸ்ட்கூட வருவேன், ஆனா பெயில் ஆகணும், அண்ணன் நிச்சயமா பாஸ் ஆக மாட்டாரு, நான் பாஸானா மேல படிக்க வச்சிடுவாங்க, அப்றம் கல்யாணம் பண்ணிவைக்க மாட்டாங்க. அண்ணன்கூட நீ நல்லா படினு தான் சொல்லுது. ஆனா, நான் படிக்க மாட்டேன். இரண்டு பேரும் சமமா இருக்கணும் சுப்புனாங்க.


எனக்கு இந்தக் கணக்கெல்லாம் புரியாத வயது. இரண்டு பேரும் அதே போல பிளஸ்டூவில் ஃபெயிலு.


ஊராரெல்லாம் அரசல்புரசலா பேசி, வெளிப்படையாகவே பேசச் செய்யவும் ஒருவழியாக இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க, ஒரே ஜாதி என்பதைத் தாண்டி வேறெந்த பொருத்தமும் இல்லை.


காதலித்த காலத்தில் டிராக்டரில் போகும் அண்ணனுக்குக் கஞ்சி குடுப்பதே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட வள்ளியக்காவிற்குக் கஞ்சி செய்யவே தெரியவில்லை. மாமியார் பருத்திமிளாரை வெயிலில் வச்சுட்டு உக்காரும்போது, செத்த தூக்குமா எனும்போது, தூக்கி தலையில் வைத்து, அவர்கள் கிளம்பியதும் நான் மருமகளா போனதும் இதையெல்லாம் செய்யவிடமாட்டேன்னு பாசத்தின் மிகுதியில் கண்கலங்கிய வள்ளியக்காவிற்கு மாமியார் செய்யாத பட்சத்தில் தானே செய்யவேண்டும் என்பது உரைக்கக் கொஞ்ச நாள் ஆயிற்று.


விறகு அடுப்பில் சமைக்கத் தெரியவில்லை, இட்லி தோசை வருஷத்துக்கு எப்பவோ பண்டிகையின் போது தான். தூரத்தில் இருக்கும் போது ரொம்பப் பிடித்திருந்தது. தினமும் கூழோ கஞ்சியோ என்பது ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியது.
ஆறே மாதத்தில் புதுப் பெண் பழைய பொண்டாட்டி ஆன போது இன்னும் சில பல சூட்சுமங்கள் தேவைப்பட்டன.


காதலித்த போது அண்ணனின் அண்ணிமார்கள் கொண்டாடிய வள்ளியக்காவை வீட்டிற்கு வந்ததும் சக போட்டியாளராக எண்ணி களத்தில் பிரட்டி எடுத்தபோது வள்ளியக்காவின் எந்த ராஜதந்திரமும் எடுபடவில்லை.


படிச்சா மட்டும் போதுமா, குடும்பத்தை நடத்த துப்பில்லை என்பதான வசவு அடிக்கடி சொல்லப்பட்டது.


இவரோட அண்ணிகள் எல்லாம் அவரோட அம்மாவைச் சேர்த்துக்கறதே இல்லை சுப்பு, நான் போயி அவங்கம்மாவைப் பத்திரமா பார்த்துக்குவேன், அவரோட அம்மா என் அம்மா, என்ன அவங்க இத்துனூன்டு வயித்துக்குச் சோறு போட முடியாதா? பாவம் அவங்க எனப் பரிதாபப்பட்ட வள்ளியக்காவின் மாமியார் வெளியில் பார்த்தப்போ இருந்தது வேறு.


வீட்டில் வேறு மாதிரி இருந்தார். அவர்களுக்குச் சோறு மட்டுமே போதவில்லை. அழகாகச் சொலவடையிலும் பேச்சிலும் குத்தும் குத்தில் புரியவே நேரமாகும். புரிந்ததும் ஏழு தலைமுறையையும் சந்தேகப்படுத்தும்விதமாக இருக்கும், கணவன் மனைவி உறவுக்குள் எந்தத் தடுக்கிலும் புகுந்து வரும் லாவகமும், அதிகாரமும் தெறிக்க இருந்தார்.


ஆறு மாதத்தில் ஆயிரம் சண்டை, வீட்டிலும் சொல்ல முடியவில்லை, அவன் ஃபெயிலாவான்னே நானும் ஃபெயிலானேன்னு சொன்ன பிள்ளைக்கு வீட்டில் என்ன மரியாதை இருக்கும். அண்ணனுக்கும் வள்ளியக்காவிற்கும் தினமும் சண்டையோட நாட்கள் நகர்கின்றன.

படைப்பு:

சுபா கண்ணன்

ஆசிரியர், எழுத்தாளர், கதைசொல்லி. பாடல், கதை என கலை வடிவில் குழந்தைகளுக்கு பாடங்களைக் கொண்டு சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவள் விகடன் இதழில் இவர் எழுதிய ‘மனுஷி’ தொடர் பெரும் ஆதரவைப் பெற்றது.