‘துப்பட்டா போடுங்க தோழி’ எனும் நூலை முன்வைத்து சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நூல் திறனாய்வு.

பெண்: கட்டமைப்பும் கருத்தியலும்

தமிழிலக்கிய மரபில் அதன் சமூக வரலாற்றைக் (Social History) கண்ணுற்று நோக்கும்போது பெண்கள் குறித்தான வரலாற்றுப் பதிவுகள் எப்படிப்பட்ட வரலாறாக இருந்தன; மானுடவியல் (Anthropology) பாடம் உணர்த்துகிற தாய்வழிச் சமூகம், தனி மனிதர் சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக நிலைபெற்ற பின்பு தந்தையாதிக்கச் சமூகமாகத் (Patriarchal Society) தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. அப்போது தொடங்கிப் பெண்களின் மீது கட்டமைக்கப்பட்ட கடுமையான ஆணாதிக்கப் போலி பண்பாட்டுச் சாயங்கள் பெண்களை ஓர் அடிமைத்தனமாக, சுயத்தை இழந்தவர்களாக மாற்றிவிட்டன என்பதே வரலாறு நமக்கு உணர்த்துகிற பாடம். ஆணாதிக்க மனநிலையில் கட்டமைக்கப்பட்ட பண்பாட்டுக் கருத்தாக்கங்கள் பெண்கள் மீது திணிக்கப்பட்டு மூளைச் சலவை (Brain wash) செய்யப்பட்டனர். இதன் காரணமாகவே ஆணாதிக்கத்திற்கு எதிரானப் பெண்களின் குரல்களை வரலாறு நெடுகிலும் காணமுடியாத நிலை உள்ளது.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட போலியான பண்பாட்டுக் கருத்தாக்கத்தின் இயங்கியலே சமூகத்தின் உயரிய மதிப்புக்குரியவனாக ஆணை நிலைநிறுத்துகிறது. தாய்வழிச் சமூகம் என்றைக்குத் தந்தையாதிக்கச் சமூகமாக நிலவுடைமைத் தன்மைக்கு மாறியதோ, அன்றைக்கே பெண்களுக்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுவிட்டன. இதனால், ஆணின் சொத்துக்கு வாரிசைப் பெற்றுத்தருவதும் குடும்பத்தைப் பேணிக்காப்பதும்தான், பெண்களுக்கு விதிக்கப்பட்ட கருத்துருவாக்கங்களாக உருவாகின.

பெண்: கருத்தியலும் அதன் இயங்கியலும்

பெண்ணும் ஆணுக்குரிய சொத்தாகப் பாவிக்கப்பட்டாள். பெண்களின் அகவெளி சார்ந்த இலக்கிய ஆக்கங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரலாற்றில் காணப்பட்டாலும் அவை தன்னுணர்வு சார்ந்த காதல் பாடல்களாகவே உள்ளன. அவர்களின் புறவெளி என்னவாக இருந்தது? சமூகத்தில் பெண்கள் குறித்தான மதிப்பீடுகள் என்னவாக இருந்தன? அவர்கள் உடல், உடை, உணர்வு சார்ந்த பதிவுகளின் காத்திரமான வெளிப்பாடுகள் எங்கே என்பது போன்ற கேள்விகளுக்கு வரலாற்றில் பதிவில்லை. பெண் எனும் கட்டுமானப் பொருளில் உள் அங்கமாக இருக்கும் உடல் உறுப்புகளை மேன்மை, மென்மை, அழகு என்ற தன்மையிலேயே இலக்கியக் கச்சாப்பொருளாகக் கட்டமைத்துள்ளதையும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் எடுத்துக்காட்டுகின்றன. கால மாற்றத்தின் கருத்தியல் வளர்ச்சி இவ்வாறான கொச்சைப் பொருள்கோடலைக் கேள்விக்குள்ளாக்க ஆரம்பித்தது. அவ்வாறான கருத்தியலின் இயங்கியலானது பெண்களின் உடல் குறித்தான அரசியலைப் பலரும் பேசுமாறு வளர்த்தெடுத்துள்ளது. இவ்வாறான பின்புலத்திலேயே பெண்ணியக் கோட்பாடுகளும் உருவாகியுள்ளன.

இப்படியான வரலாற்று மரபில் தற்போது வெளிவந்துள்ள ‘துப்பட்டா போடுங்க தோழி’ எனும் நூல் அதன் எதிர்மறைப் பொருளில் துப்பட்டா போடாதீர்கள் என்று வலியுறுத்த முற்படுகிறது. அவ்வாறு தோன்றினாலும் இந்நூலின் மையச் சரடுகளாகப் பெண்களின் சமகால வாழ்வியல் சிக்கல்களைப் பதிவுசெய்தல், அவற்றில் கட்டமைக்கப்படும் பண்பாட்டுக் கருத்தியல், அவற்றில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தி, இவற்றிற்கான எதிர்வினை என்பதாக நீண்ட உரையாடல்களைக் கட்டுரை இலக்கியமாகப் படைத்தளித்துள்ளது.

இந்நூலில் ஆணாதிக்கச் சிந்தனையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக So called கற்பு, குடும்பப் பெண், ஹவுஸ் ஒய்ஃப், துப்பட்டா போடுங்க, பெண் என்றால் ஒழுக்கமாக இருக்க வேண்டும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லக்கூடாது, வண்டி ஓட்டக்கூடாது, பிற ஆண்களுடன் பேசக்கூடாது, வெளிப் பயணங்கள் கூடாது, தாய்மை தான் பெண்ணுக்கு அழகு, தனக்குத் தன்னம்பிக்கையைத் தரும் உடை கூடாது, கல்யாணம் தான் பெண்ணுக்கு எல்லாமும், பேரழகுப் பெண் போன்ற கருத்தாக்கங்கள் சமூகத்தில் எப்படியான கருத்துருக்களாக நிலைபெற்றுக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை பெண்ணியப் பார்வையில் விளக்கி ஆராய்ந்துள்ளார். மேலும் பெண்கள் ஏன்? எதற்கு? எப்படி? எதனால்? என்ற கேள்விகளையே கேட்கக்கூடாது, கேள்வி கேட்கவும் முன்வருவதில்லை, அப்படிக் கேட்டால் அவள் குடும்பப் பெண் இல்லை என்று வகுப்பெடுக்கும் சிந்தனையாளர்களையும் கவனப்படுத்துகிறார். இவ்வாறான போலி மாயைகளில் பெண்களின் வாழ்வியல் சிக்குண்டு சின்னாபின்னமாகிறது, இந்தச் சிதைவுகளிலிருந்து அதாவது ஆணாதிக்க மனநிலையில் இருப்பவர்களிடமிருந்து பெண்களை எப்படிக் காப்பது என்பது குறித்தும் விவாதித்துள்ளார்.

உடை அரசியல்

பெண்ணடிமைத் தன்மையிலிருந்து தங்களுக்கு விலக்களிப்பதற்கு உடை குறித்தான சிந்தனைத் தெளிவு வேண்டும் என்கிறார் இந்நூலாசிரியர். தனக்கான வெளியைத் தானே தேர்வுசெய்ய வேண்டும்; தனக்குப் பிடித்தமான உடையை அணிந்து தன்னம்பிக்கையுடன் கம்பீரமாக நிமிர்ந்து நடைபோட வேண்டுமென்கிறார். பெண்களின் உடலை, உடையை யாரேனும் விமரிசித்துக் குறைகூறினால், மோசமாகப் பேசினால் அது அவர்களின் அறியாமையையே வெளிக்காட்டுகிறது என்பதைப் பெண்களே புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு நிறுவவும் முற்படுகிறார். பெண்களின் ஆளுமைத்திறன் பேராற்றல் மிக்கது, அதை வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் உடல். அந்த உடலைப் பற்றி எந்தக் குற்றவுணர்வும் பெண்களுக்கு இருக்கக்கூடாது என்பதாகவும் அதுவே பெண்களை முடக்கும் மூலதன உத்தி என்பதாகவும் விளக்குகிறார்.

யாருங்க இந்தக் குடும்பப் பெண்?

நம் சமூகத்தில் ‘குடும்பப் பெண்’ எனும் சொல்லாடல் ஊடகங்களிலும் நடைமுறை வாழ்விலும் வெகு இயல்பாகப் பயன்படுத்தப்படுகிறது. குடும்ப ஆண் என்ற சொல்லாடல் நம்மிடம் வழக்கில் இல்லை. வெளிநாடுகளில் குடும்பப் பெண் (Family Girl) எனும் பதம் புழக்கத்திலேயே கிடையாது. இங்குதான் குடும்பப் பெண் ஒற்றைச் சொல்லாடலை வைத்து பெண்களின் மீதான உடல், உழைப்புச் சுரண்டல்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஓர் ஆணுக்கு வாழ்க்கைத் துணை தேட வேண்டுமென்றால் குடும்பப் பெண்ணாக இருக்க வேண்டும், குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாகப் பாருங்கள், நல்ல குடும்பப் பாங்காக வளர்த்துள்ளார்களா என்று பாருங்கள் என்றெல்லாம் பெண்களின் மீதான பாலினப் பாகுபாடு கட்டமைக்கப்படுவதைக் கண்டித்துக் கவனப்படுத்துகிறார்.

இந்தக் குடும்பப் பெண் யார்? எனும் கட்டுரையில் ஒரு குடும்பப் பெண் என்பவள் யாரையும் எந்தக் கேள்வியும் கேட்காதவள்; தன் குடும்பத்தையே பேணிக் காப்பவள்; குடும்பத்தின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சி என்று தன் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவள்; அடக்க ஒடுக்கமாக இருப்பவள்; குடும்ப அமைப்பினரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு குழந்தை பெற்று வளர்ப்பவள் என்றெல்லாம் உருவாக்கி வைத்திருக்கும் சமூகக் கட்டமைப்பை கவனப்படுத்துவதோடு, குடும்ப அமைப்பு முறையில் ஒடுக்கப்படும் வர்க்கமாக பெண் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அங்கு பெண், பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கும் ஆளாவதாக எடுத்துக்காட்டுகிறார்.

அதே குடும்பப் பெண்ணானவள் புடவைதான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதும், அவ்வாறு புடவை கட்டாவிட்டால், “இவள் குடும்பப் பெண்ணா?” என்று விமரிசிக்கப்படும் அவலத்தையும் சுட்டிச் செல்கிறார். தன் சுயமரியாதையைக் காக்கப் பயன்படும் உடையை அணியவோ, வீட்டிலிருந்து வேலைக்குச் செல்வதையோ இந்தச் சமூகம் கேலிக்குள்ளாக்கி, “மாலை ஆறு மணிக்குள் வந்துவிட வேண்டும்” என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும் எழுதப்படாதச் சட்டமாக உருவாக்கி வைத்திருப்பதையும் அதில் முழுக்க முழுக்க ஆணாதிக்கச் சிந்தனையின் தலையீடே இவ்வாறான கட்டமைப்பிற்குக் காரணம் என்றும் விளக்க முற்படுகிறார். மேலும் இன்னும் எத்தனையோ கட்டுப்பாடுகளையும் விதிக்கும் இந்த ஆணாதிக்க மனநிலை, எந்த வகையிலும் இந்தக் கட்டுப்பாடுகள் தம் ஆண் சமூகத்திற்குப் பொருந்தாத வகையில் பார்த்துக்கொள்வதையும் சுட்டுகிறார். குடும்ப ஆண், குடும்பம் அல்லாத ஆண் என்று ஆணைப் பிரித்துப் பார்க்காத இந்தச் சமூகக் கட்டமைப்பு, பெண்ணை மட்டும் அவ்வாறான கட்டமைப்பிற்குள் அடைத்துவைத்து பாகுபாடு காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்புகிறார். அத்தோடு இந்தப் பாலினப் பாகுபாட்டைக் களைந்து நம் சிந்தனையையும் சொற்களையும் எவ்விதச் சார்புமின்றிச் சமமாக நடத்த உறுதியேற்கவும் விழைகிறார்.

உங்களிடம் சுய பரிவு இருக்கிறதா?

சுய பரிவு (Self Compassion) என்பது நீங்கள் என்ன செய்தாலும் உங்களை நீங்களே பரிவுடன் பார்ப்பதே; பெண்கள் தங்களின் குறைகளை (Imperfections) ஏற்றுக்கொண்டு தங்களைத் தாங்களே கனிவுடன் தட்டிக்கொடுக்கும் சுயபரிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார். பெண்கள் தங்கள் மீது தாங்களே குறைந்தபட்ச பரிவைக்கூடக் காட்டுவதில்லை; அதைச் சுயநலம் என்றும் தங்களைவிடப் பிறர் நலனில் அக்கறை காட்டுவதே சிறந்த பெண்ணின் அடையாளம் என்பதாகவும் இந்தச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பைப் போலிக் கட்டமைப்பு என்பதாகவும் அதில் ஆண் வர்க்கத்தினரின் சுயநலமே முதன்மையாகத் தொழிற்படுகிறது என்பதாகவும் வெளிப்படுத்துகிறார். ஒருவர் நலனில் மற்றொருவர் அக்கறை காட்டுவது என்பது இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும் குடும்ப அமைப்பில் உள்ள ஒவ்வோர் அங்கத்தினரையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு (Care givers) பெண்கள் மீதே சுமத்தப்படுவதால் அதிலும் பெண்களே பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்.

பெண்களால் ஒரு வேலையைச் செய்ய இயலவில்லை என்றாலோ, இல்லையேல் தவறாகச் செய்துவிட்டாலோ அந்த இடத்தில் தன்னைத்தானே தாழ்த்திக் குறைகூறாது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதாகத் தனக்குத்தானே தட்டிக்கொடுக்கும் சுய பரிவு வேண்டும் என்கிறார். அவ்வாறின்றித் தங்களைத் தாங்களே குறைகூறும் போது, தவறைச் சரிசெய்து மேம்படலாம்; மேலும் முன்னேறலாம் என்பது பெரும்பான்மையான பெண்களின் எண்ணங்களாக இருந்தாலும் அது பெண்களையே பாதிப்பிற்கு உள்ளாக்கிப் பின்னோக்கித் தள்ளுவதையும் ஆங்காங்கு சுட்டிச் செல்கிறார். இதனை கிறிஸ்டின் நெஃப் என்பவரின் ‘செல்ஃப் கம்பேஷன்’ (Self Compassion) எனும் நூலிலிருந்து எடுத்துக்காட்டி நிறைவு செய்கிறார். அதாவது “நம்மை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு, சுய பரிவுடன் அரவணைத்துச் செல்வதுதான் உள்ளார்ந்த வளர்ச்சியை நோக்கிச் செலுத்தும்; அதுவே நம் மனதை அமைதிப்படுத்திச் செயல்திறனைப் பன்மடங்கு அதிகரிக்கும்” என்றும் சொல்கிறார்.

So called கற்பு

கற்பு எனும் ஒற்றைச் சொல்லில் சமூகத்தின் ஒட்டுமொத்த ஒடுக்குமுறையும் அடங்கியுள்ளது. எதேச்சையாகக் கேட்பது போலவே பெண்களை மட்டும் ‘அவள் ஒழுக்கமாக இருக்கிறாளா?’ என்று கேள்வி கேட்கும் பெரும்பான்மையான ஆண்களின் ஒடுக்குமுறை உளவியல் குறித்தும் கவனப்படுத்த முனைகிறார். அதில் ஒருவேளை பெண்கள் ‘சந்தேகப்படுகிறீர்களா’ எனும் கேள்வியை எதிராகக் கேட்க முனைந்தால் ‘இல்லை’ என்று சப்பைக்கட்டு கட்டும் ஆண்களின் உளவியலையும் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார். So called கற்பு, அதாவது ஒழுக்கத்தைக் கேள்விகேட்கும் உரிமையைத் தெரிந்தவர், தெரியாதவர், குடும்பத்தினர், முன்பின் அறிமுகம் இல்லாதவர் என அனைவருமே பெற்றுள்ளனர்.

ஆனால், ஆணைக் கேள்வி கேட்கும் உரிமை மட்டும் இங்கு யாருக்கும் தரப்படவில்லை. இவற்றிற்கெல்லாம் அடி அலகாக, அச்சாரமான கச்சாப்பொருளாக அதன் உள்நிலையில் இருப்பது கற்பு எனும் கருத்தாக்கமே என்பதுதான் இவ்வாசிரியரின் வாதமாக வெளிப்படுகிறது. அதனுள் ஒளிந்திருப்பது ஆணாதிக்க மனநிலையில் பாலின ஒடுக்குமுறையே என ஆணித்தரமாக நிறுவுகிறார்.

பெரியாரைத் தேடு, விடுதலையை நாடு

இவ்வாறு ‘துப்பட்டா போடுங்க தோழி’ எனும் நூலில் பல்வேறு உரையாடல்கள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. குறிப்பாகப் பெண்களுக்கு எதிராக ஆணாதிக்க மனநிலையில் முன்வைக்கப்படும் போலியான பண்பாட்டுக் கருத்தியல் கேள்விகளைத் தானே எழுப்பி, பல்வேறு கட்டுரைகளில் அவரே அதற்கு விடை காணவும் முற்பட்டிருக்கிறார். ஆணாதிக்க மனநிலையை எதிர்கொள்ள நினைக்கும் பெண் சமூகம், தனக்கான கல்வி, பொருளாதாரம் போன்றவற்றைத் தன்வசப்படுத்திக் கொண்டுக் கேள்வி கேட்கத் தயாராக வேண்டும் என்பதாகவும் விளக்கியுள்ளார். அதற்கு வழிகாட்டும் கருத்தியல் தரவுகள் தந்தை பெரியாரின் தரவுகளே. பெண்கள் பெரியாரைப் படிக்க வேண்டும் என்கிறார்.

இந்த ஆணாதிக்கச் சமூகத்தைப் புரிந்துகொள்ள, ஏன் இந்த ஆண் வர்க்கம் இப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, பெண்களே ஏன் அடிமைத்தனத்துடன் வாழ்கின்றனர்? இருபாலரின் நிலையில் சாதி, மதங்களின் பங்கு என்னவாக இருக்கிறது? அவை எப்படி ஆதிக்கம் செய்கின்றன என்பது பல்வேறு வினாக்களைத் தொடுத்து, இவற்றையெல்லாம் புரிந்து தெளிந்துகொள்ள பெரியாரைப் படிக்க வேண்டும் என நிறைவு செய்துள்ளார். சமகால இலக்கியப் போக்கில் கட்டுரை இலக்கியம் எனும் கவனம் பெறாத இலக்கிய வகைமையில் மிகவும் காத்திரமான பெண்ணியக் கருத்தியலின் உந்து சக்தியாக இந்த நூல் விளங்குகிறது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

படைப்பாளர்

.சசிகலா,

முனைவர் பட்ட ஆய்வாளர்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை