வேலைக்காரன் படத்தில் நடிகை ஸ்நேகா, வீட்டிற்குள்ளேயே இருந்து தினமும் விதவிதமான பாக்கெட் உணவுகளை ஆர்டர் செய்து உண்ணும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இறந்த தனது குழந்தைக்காகத் தினமும் பாக்கெட் உணவுகளை உண்டு, அதன் மூலம் தனக்கு ஏற்படும் உடல் உபாதைகளை வெளிக்கொணர்ந்து, பாக்கெட் திண்பண்டங்களை விற்கும் நிறுவனத்திற்கும் சமூகத்திற்கும் பாடம் புகட்டும் ஸ்நேகாவின் கதாபாத்திரத்தை அத்திரைப்படத்தைப் பார்த்த யாரும் மறந்திருக்க முடியாது. அந்தத் திரைபடத்தைப் பார்த்த பலரும் தங்களது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பாக்கெட் திண்பண்டங்கள் குறித்து ஒரு நிமிடமாவது சிந்தித்திருப்பார்கள் .

நம் குழந்தைகள் வளர்வது போன்று அவர்கள் சாப்பிடும் பாக்கெட் உணவுகளால் நோய்கள் வருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் சேர்ந்தே வளருகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறையில் பெற்றோருடைய நேரமின்மை மற்றும் அலட்சியத்தால் இந்த பாக்கெட் உணவு கலாச்சாரம் குழந்தைகளிடம் திணிக்கப்படுகிறது. நம்மால் மட்டுமே இது போன்ற ஆரோக்கியமற்ற ஓர் உணவுப் பழக்கம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு நம் தலைமுறையில் எத்தனை பேர் ஸ்நாக்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்போம்? நமக்குத் தெரிந்து வீட்டில் செய்த அவலும் முறுக்கும் சுண்டலும் தாம்! எப்போது பாக்கெட் உணவுக் கலாச்சாரம் உணவுச் சந்தையில் நுழைந்ததோ அப்போதே அதனோடு ஒட்டிக்கொண்டு வந்ததுதான் ஸ்நாக்ஸ் பழக்கம்.

இந்தத் தலைமுறைக்கு ஸ்நாக்ஸ் என்றாலே அது பாக்கெட்டுகளில் விற்கப்படும் வண்ண வண்ணத் தின்பண்டங்கள் மட்டும் தான், அதைத் தாண்டி சிறு தானியங்களையோ வீட்டில் செய்யப்படும் பலகாரங்களையோ அவர்கள் ஸ்நாக்ஸாக மதிப்பதில்லை. தொடர்ந்து உட்கொள்ளப்படும் பாக்கெட் உணவுகளால் குழந்தைகளுக்கு மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு கற்றல் குறைபாடு, மறதி, உடல் பருமன் போன்ற பல நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இது போன்ற உணவுகளில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் குழந்தைகளை மீண்டும் மீண்டும் அவற்றை ருசிக்கத் தூண்டி, உடல் பருமன் அதிகரிக்கும் முக்கியக் காரணியாக அமைகிறது.

மேலும் பாக்கெட் உணவுகளில் சேர்க்கப்படும் முக்கிய சுவையூட்டியான எம்.எஸ்.ஜி (மோனோ சோடியம் குளோடோமேட்), சோடியம் பென்சோயட் போன்றவற்றின் அளவு அனுமதிக்கபட்ட அளவைவிட அதிகம் சேர்க்கப்படுகிறது. அதிக சர்க்கரை, அதிக உப்பு மற்றும் அதிக கொழுப்பு சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகளால் உலகளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஏறத்தாழ ஒரு கோடியே நாற்பது லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பாக்கெட் உணவுகளுக்கான நெறிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சர்க்கரை மற்றும் கொழுப்பின் அனுமதிக்கப்பட்ட அளவை மீறும் உணவுகள், உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளின்படி, அவை எந்த அளவிற்குக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டும் சிவப்பு மற்றும் பச்சை அடையாளங்கள் பாக்கெட்டின் வெளியில் அச்சிடப்பட வேண்டும் என்ற விதிகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. ஆனால், உணவு நிறுவனங்கள் சர்க்கரைக்கு உள்ள மாற்று பெயர்களான கார்ன் சிரப், பிரக்டோஸ், லாக்டோஸ், மால்டோஸ் என்று சாமர்த்தியமாக பாக்கெட்டுகளில் குறிப்பிட்டுவிடுகின்றன. மேலும் அதில் இருக்கும் மூலப் பொருட்கள் குழந்தைகளுக்கு உகந்ததா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி, என்.வி.என். சோமு ஆகியோர் மாநிலங்களவையில் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். கூடுதல் சர்க்கரை, தேவையற்ற கொழுப்பு அடங்கிய உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருட்களை விற்பனை செய்யும்போது, அந்த பாக்கெட்டுகளில், ‘இது குழந்தைகளின் உடல்நலனுக்குத் தீங்கானது’ என்ற வாசகம் இடம்பெறுவது குறித்துப் பேசியிருக்கிறார்கள்.

அதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீண் பவார், இனிப்புச் சுவைக்காகச் சேர்க்கப்படும் செயற்கை வேதிப்பொருட்கள் அடங்கிய உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களில் ‘குழந்தைகளுக்கு இது உகந்ததல்ல’ என்ற வாசகம் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது என்பதைத் தெரிவித்தார். அது மட்டுமின்றி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, சமச்சீரான சத்துள்ள உணவுப்பொருட்களை வழங்க வகை செய்யும் விதமாகச் சட்டப்படி பள்ளி வளாகத்தைச் சுற்றி 50 மீட்டர் சுற்றளவுக்குள், குழந்தைகளின் உடல்நலனுக்குத் தீங்கான தேவையற்ற கொழுப்பு மற்றும் கூடுதல் இனிப்புக்காகச் சேர்க்கப்படும் செயற்கை வேதிப்பொருட்கள் அடங்கிய உணவுப்பொருட்களை விற்பதோ இலவசமாகக் கொடுப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுப்படுத்தினார்.

அத்துடன், பாக்கெட் உணவுப்பொருட்களை விற்கும்போது உடல்நலனுக்குத் தீங்கானது என்ற எச்சரிக்கை வாசகங்களை அந்த பாக்கெட்டுகளில் எளிய முறையில் மக்களுக்குப் புரியும் வகையில் அச்சிடுவதை உறுதிசெய்யும்படி ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தை ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சிப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது என்பதையும் சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நவீன உணவுக் கலாச்சாரத்தால், ஹார்மோன் உந்துதல் ஏற்பட்டு, பெண் குழந்தைகள் இளம் வயதிலேயே பருவம் அடைந்துவிடுகின்றனர். மேலும் பல குழந்தைகளுக்கு மாத விடாய் சுழற்சி சரியான கால இடைவெளியில் வருவதில்லை. உணவில் சரியான விகிதத்தில் ஊட்டச்சத்து உட்கொள்ளாததன் விளைவு தான் இதற்கு முக்கியக் காரணம். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி 2010இல் 6.7% இருந்தது, 2020இல் 9.1% ஆக உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வளரிளம் பருவத்தினரின் உடல் பருமன் 18.1% ஆக உயர்ந்துள்ளது. ஐந்தாவது தேசியக் குடும்பநல ஆய்வின்படி 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் தமிழகத்தில் மட்டும் 40 % பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படியான கருத்துக்கணிப்புகள் அவ்வப்போது தோன்றி நமக்கு எச்சரிக்கை மணி அடித்தாலும் நம்மால் இந்த நவீண உணவு அரசியலில் இருந்து முழுதாக மீண்டு வர முடிவதில்லை.

படைப்பாளர்

ரம்யா சுரேஷ், Mphil ஆங்கில இலக்கியம் பயின்றவர்.