உலகிலேயே பின்னங்கால்களால் தாவிக் குதிப்பதை இடப்பெயர்வு முறையாக வைத்திருக்கும் ஒரே  விலங்கு கங்காருதான். கங்காருக்களின் விநோதமான தோற்றம், தாவிக்குதிக்கும் பண்பு, வயிற்றுப்பைக்குள் வளரும் குட்டி ஆகிய எல்லாமே வழக்கத்திலிருந்து மாறுபட்டவை. “இது என்னடா இப்படி ஒரு விலங்கு?!” என்று நம்மை ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துவிடுகின்றன.

வயிற்றில் பை இருக்கிற Marsupial இனத்தைச் சேர்ந்தவை கங்காருக்கள். இவற்றின் குழந்தை வளர்ப்பு முறை விநோதமானது.

இனப்பெருக்கம் முடிந்து 33  அல்லது 35 நாட்களிலேயே கங்காருக்குட்டி பிறந்துவிடும். ஆங்கிலத்தில் இதன் பெயர் ஜோயி (Joey). ஜோயிக்களுக்குக் கண் தெரியாது, உடலில் முடிகள் இருக்காது, பின்னங்கால்கள் வளராமல் ஒரு சின்ன மொட்டு போலத்தான் இருக்கும். சில சென்டிமீட்டர்கள் நீளத்தில், ஒரு நெல்லிக்காய் அளவே உருவம் கொண்ட குட்டிகள் இவை.

இவற்றின் உடலில் நன்கு வளர்ந்த பாகங்கள் இரண்டு : முன்னங்கால்கள்,வாசனையை அறியும் மூளையின் ஒரு பகுதி. அடுத்த சில நிமிடங்களில் தன் வாழ்க்கையை கரைசேர்த்துக்கொள்ள கங்காருக்குட்டிகளுக்கு இந்த இரண்டும் போதுமானது.

வாசனையை வைத்து தாயின் மடி எங்கு இருக்கிறது என்று நுகர்ந்து உணரும் குட்டிகள், அந்த மணத்தைப் பின்தொடர்ந்தபடியே முன்னங்கால்களால் தாயின் உடலில் உள்ள ரோமங்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு முன்னேறுகின்றன. தாயின் மார்புக் காம்புகளில் வந்து அடைந்து வாய் வைக்கின்றன. இதற்கே இவற்றுக்கு 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும்!

தாயின் மார்பகம் வயிற்றுப்பையின் உள்ளே திறக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் இவை வாசனையைத் தேடிக்கொண்டு வந்தாலே வயிற்றுப்பையை அடைந்துவிடலாம். இந்த முதல் 5 நிமிடப் போராட்டத்தோடு குட்டிகளின் வேலை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு எல்லாம் தாயின் பாடு. தாயின் மார்புக் காம்புகளைப் பற்றிக்கொண்டு பாலை உறிஞ்சிக் குடிக்கும் அளவுக்குக் கூட புதிதாய்ப் பிறந்த ஜோயிக்களுக்கு வளர்ச்சி போதாது! ஆகவே குட்டி வாயை வைத்தவுடன் தாயின் தசைகள் வேகமாக இயங்கி, பாலைச் சுரந்து, குட்டியின் தொண்டைக்குழிக்குள் நேராக செலுத்தவேண்டியிருக்கும்.

ஜோயிக்களின் வயிற்றுப்பையை நோக்கிய பயணம் மிகவும் முக்கியமானது. பிறந்த ஜோயிக்கள் தாங்களாகவேதான் வயிற்றுப்பையைச் சென்றடையவேண்டும். தாய் அதற்கு எந்த உதவியும் செய்யாது. ஒருவேளை வழி கண்டுபிடிக்க முடியாமல் ஜோயிக்கள் சொதப்பிவிட்டால் அவை அடுத்த சில நிமிடங்களில் இறந்துவிடும்!

Western grey kangaroo Macropus fuliginosus Mother with eight-month-old joey in pouch Kangaroo Island, Australia

பிறந்த குட்டி வயிற்றுப்பையை அடைந்த பிறகு தாயின் உடலில் வேக வேகமாக மாற்றங்கள் நடக்கின்றன. தாய் கங்காரு உடனே அடுத்த இனப்பெருக்கத்துக்குத் தயாராகிறது. சினை முட்டை ஒன்று உருவாகிறது. ஒருவேளை இந்த ஜோயி வயிற்றுப்பையில் இருக்கும் வேளையிலேயே இனப்பெருக்கம் நடந்தால், அடுத்த முட்டையும் கருத்தரித்துவிடும்.

அப்படியானால் அந்தக் குட்டியும் பிறந்து வயிற்றுப்பையை அடையுமா? ஒரு வயிற்றுப்பைக்குள் இரு குட்டிகள் வளருமா?

அதுதான் இல்லை. 

ஏற்கனவே வயிற்றுப்பைக்குள் ஒரு குட்டி இருந்தால், கருத்தரித்த முட்டை 100 செல்களாகப் பிரிவதோடு தன் வளர்ச்சியை நிறுத்திக்கொள்ளும்! இது Embryonic Diapause என்று அழைக்கப்படுகிறது. ஒருபுறம் வயிற்றுப்பையில் குட்டி வளர்ந்துகொண்டிருக்கும்போதே, இந்தப் பக்கம் கர்ப்பப்பைக்குள் வளர்ச்சிக்கு “Pause” பட்டன் அழுத்தியதுபோல் ஒரு முட்டை காத்திருக்கும். அந்தக் குட்டி வளர்ந்து முடிக்கும் வரை இது வளராது! 

கங்காருவின் கர்ப்பப்பையில் இருந்து கவனத்தைத் திருப்பி மீண்டும் வயிற்றுப்பைக்கு வருவோம். தம்பியோ தங்கையோ முட்டையாக உருவாகும் இடைவெளிக்குள் ஜோயி ஓரளவு வளர்ந்துவிட்டது. தானாகவே பால் குடிக்கிறது. 6 மாதங்கள் ஆனபின்பு, வயிற்றுப்பையிலிருந்து வெளியேறி சும்மா வெளி உலகத்தைப் பார்க்கிறது. இது நிரந்தர வெளியேற்றம் அல்ல. வயிற்றுப்பைக்குள் போவதும் அங்கிருந்து வெளியேறுவதுமாக வெளி உலகிற்குத் தன்னை மெல்லப் பழக்கிக்கொள்கிறது. 8 அல்லது 11 மாதங்கள் ஆனபின்பு நிரந்தரமாக வயிற்றுப்பையை விட்டு குட்டி வெளியேறிவிடும்!

“அப்பாடா! இந்தக் குட்டிக்கு உணவளிக்கும் பொறுப்பு முடிந்தது. அடுத்ததாக அந்த 100 செல் குவியலை மட்டும் வளர்த்து, பெற்றெடுத்தால் போதும்” என்று கங்காருத்தாய் ஓய்வெடுத்துவிட முடியாது. வயிற்றுப்பையை விட்டு வெளியேறிய பின்னும் குட்டிகள் 4 முதல் 8 மாதங்கள் வரை பால் குடிக்கும். குட்டிகள் வெளியேறியதுமே கருத்தரித்த முட்டைகளும் வளரத் தொடங்கிவிடும் என்பதால் காலபோக்கில் அவையும் ஜோயிக்களாக வயிற்றுப்பைக்குள் வந்து சேர்ந்துவிடும். அந்த சூழலில் ஒரே நேரத்தில் இருவேறு வளர்ச்சி நிலை உள்ள குட்டிகளுக்குப் பால் தர வேண்டியிருக்கும்.

குட்டிகளின் வளர்ச்சி

இங்குதான் கங்காருக்கள் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பண்பை வெளிப்படுத்துகின்றன. குட்டிகளின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப வெவ்வேறு வகையான தாய்ப்பால்களை அவை உருவாக்குகின்றன! வளர்ந்துவிட்ட பெரிய குட்டிகளுக்காக கொழுப்பு நிறைந்த பாலையும், வயிற்றுப்பைக்குள் இருக்கும் ஜோயிக்களுக்காக மாவுச்சத்து நிறைந்த பாலையும் உருவாக்கி, தனித்தனியாக உணவூட்டுகின்றன!

கங்காருக்கள், வாலபிக்கள், கோலா கரடி, பாஸ்ஸம், ஒப்போஸம், வாம்பட் போன்ற 330க்கும் மேற்பட்ட Marsupial இனங்களில், வெவ்வேறு வகையான வயிற்றுப்பைகளும் குழந்தை வளர்ப்பு முறைகளும் காணப்படுகின்றன. வயிற்றுப்பைகளில் குட்டிகளை வைத்து வளர்ப்பதால் பல நன்மைகள் உண்டு. குறைவான பேறுகாலம் இருந்தாலே போதும். அதிக நாட்கள் பேறுகாலத்தில் உழன்று, அந்த சூழலில் வேட்டை மிருகங்களிடம் தப்பிப்பது, உணவு தேடுவது போன்றவற்றையும் கவனித்துக்கொண்டு சிரமப்படவேண்டாம். கருப்பைக்குள் சில நாட்களே குட்டிகள் இருக்கின்றன என்பதால் குட்டி வெளியில் வந்த உடனேயே ஆபத்தான இடங்களிலும் உணவு தேடப் போகலாம். வெளியில் கூடு கட்டி அடுத்த தலைமுறையைப் பராமரிப்பதை விட உடலுக்குள் பராமரிப்பது எளிது.

பைக்குள் வளர்வதால் கங்காருக் குட்டிகளுக்கும் பல பயன்கள் கிடைக்கின்றன. வயிற்றுப்பைக்குள் கிருமி நாசினியாக செயல்படும் பல வேதிப்பொருட்கள் இருப்பதாக 2004ல் கண்டறிந்திருக்கிறார்கள். விருந்தினர் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்வதுபோல், ஒரு குட்டி வருவதற்கு முன்பு இந்த கிருமிநாசினி திரவத்தைச் சுரந்து, அம்மாக்கள் வயிற்றை சுத்தம் செய்து வைக்கின்றன. எந்த பாதுகாப்பு அம்சமும் இல்லாமல், வளர்ச்சியடையாமல் பிறக்கும் குட்டிகள், வயிற்றுப்பைக்குள் கதகதப்பாக வைக்கப்படுகின்றன. அம்மா கங்காரு எந்த காட்டுப்பகுதிக்குச் சென்றாலும், வயிற்றுப்பையின் சூழல் ஒரே மாதிரியாகவே வைக்கப்படுகிறது. இதில் உள்ள ஈரப்பதத்தையும் தாயின் உடற்கூறுகள் பராமரிக்கின்றன.

மனிதக் குழந்தைகளுக்கும் இதுபோல உடலோடு உடல் ஒட்டிய பிணைப்பு தேவை என்பது மருத்துவர்களின் அறிவுரை. குறிப்பாக, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உடலைக் கதகதப்பாக வைத்து பாசத்தோடு பராமரிப்பதற்காக, அம்மாவின் உடலுடன் ஒரு சிறு துணியால் குழந்தையைப் பிணைக்கும் முறை ஒன்று உண்டு. இதை உலக சுகாதார நிறுவனம் Kangaroo Mother care என்றே குறிப்பிடுகிறது!

அம்மாவின் வயிற்றுப்பையைத் தேடிச் செல்வதற்காக வயிற்றுப்பை கொண்ட விலங்கினங்கள் எல்லாமே வலுவான முன்னங்கால்களோடு பிறக்கின்றன. இந்த இனங்களுக்கு முன்னங்கால் அந்த குறிப்பிட்ட அமைப்பிலேயே இருக்கவேண்டியது அவசியம். ஆகவேதான் இவற்றின் முன்னங்கால்கள் ஒரு சிறகாகவோ துடுப்பாகவோ மாறவில்லை என்று ஒரு கருதுகோள் உண்டு. அதாவது, வயிற்றுப்பை மூலமாகக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டியிருப்பதாலேயே, இவை நீர் பாலூட்டிகளாகவோ பறக்கும் பாலூட்டிகளாகவோ மாறும் தகுதியை இழந்திருக்கின்றன என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அது பற்றிய விரிவான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தூக்கச்சொல்லி அடம்பிடிக்கிற குழந்தையை இடுப்பில் வைத்து அணைத்துக்கொண்டு ஒற்றைக்கையால் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டிய மனித இனத்தோடு ஒப்பிடும்போது, இந்த பாக்கெட் பேபி திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. பாக்கெட் இருந்தால் பெண்களுக்கு வசதி என்பதை இயற்கை எப்போதோ உணர்ந்துவிட்டது!

வயிற்றுப்பை, தாவுதல் போன்ற விநோதங்கள் மட்டுமின்றி மூர்க்கமான சண்டைக்காரர்களின் பட்டியலிலும் கங்காருக்களுக்கு முக்கியமான இடம் உண்டு. இனப்பெருக்க காலத்தில் ஆண் கங்காருக்களின் சண்டை மிகவும் அதீதமாக நடக்கும். சண்டையிட்டு பெண் விலங்குகளைக் கவர்வது ஒரு வகை என்றால், சில விலங்குகள் அலட்டிக்கொள்ளாமல் தன் திறமையை வெளிப்படுத்தி பரிசைத் தட்டிவிடுகின்றன. பெண் விலங்குகளைக் கவர்வதற்குப் பயன்படுத்தப்படும் யுத்திகள் என்ன?

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.