பெரும்பான்மையான விலங்குகளைப் பொறுத்தவரை குட்டியைக் கருப்பையில் சுமந்து பெற்றெடுக்கும் தன்மை பெண் விலங்குகளுக்கே உரித்தானதாக இருக்கிறது. முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் விலங்குகளில்கூட, அதை அடைகாக்கும் பொறுப்பு பெண் விலங்குகளுடையதே.

ஒரே ஒரு மீன் குடும்பத்தில் மட்டும் இந்தப் பண்பு ஆண்விலங்குகளிடம் காணப்படுகிறது.

கடற்குதிரைகள், குழல்மீன், கடல்டிராகன் மீன் ஆகிய மீன்களைக் கொண்ட சிக்நாத்திடே குடும்பத்தில், கருமுட்டைகளை உருவாக்குவதோடு பெண்மீன்களின் வேலை முடிந்துவிடுகிறது. அவற்றில் உயிரணுக்களை செலுத்தி, முட்டைகளை வயிற்றுக்குள்ளேயே பாதுகாத்து, குஞ்சு பொரித்து வெளிஉலகத்துக்குப் பிரசவித்து அனுப்பும் பொறுப்பு ஆண்மீனுடையது.

ஆண் மற்றும் பெண் கடற்குதிரைகளின் ‘நடனம்’

இனப்பெருக்கத்துக்கு முந்தைய கடற்குதிரைகளின் நடனம் (Courtship dance) மிகவும் அழகானது. ஆண் கடற்குதிரையும் பெண் கடற்குதிரையும் பல்வேறு உடல் அசைவுகளோடு நிறைய நேரம் எடுத்துக்கொண்டு நடனமாடுகின்றன. பிறகு, தன்னிடம் உள்ள எல்லா கருமுட்டைகளையும் ஆண் கடற்குதிரையின் வயிற்றுப் பையில் (Brood pouch) போட்டுவிட்டு பெண் கடற்குதிரை கிளம்பிவிடும்.

கருமுட்டையில் இருக்கும் மரபணுக்கூறுகள், சத்தான மஞ்சள் கரு ஆகிய இரண்டும்தான் எதிர்கால சந்ததியினருக்கான பெண்மீனின் பங்களிப்பு. மற்ற எல்லா பொறுப்புகளும் ஆண்மீனுடையவை. முதலில் ஆண்மீன் கருமுட்டைகளின்மீது உயிரணுக்களை செலுத்தி அவற்றை குஞ்சுகள் உள்ள முட்டையாக மாற்றுகிறது. வயிற்றுப் பையைக் கருவறையாகவே பாவித்து, முட்டைக்குள்ளிருக்கும் குஞ்சுகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்கிறது.

முட்டைக்குள் கடற்குதிரை

கடற்குதிரைகளின் உடம்பு சிறு ஓடுகள் போன்ற அமைப்பால் மூடப்பட்டிருப்பதை கவனித்திருப்போம். அந்த ஓட்டை உருவாக்குவதற்கான கால்சியத்தை, வயிற்றுப்பை மூலமாகக் குஞ்சுகளுக்குத் தருகிறது ஆண்மீன். முட்டையின் மஞ்சள் கரு உணவு தவிர, அவ்வப்போது கொழுப்பு சத்துக்களையும் தருகிறது. குஞ்சுகள் வெளியேற்றும் சிறு கழிவுகளை அகற்றவும் வயிற்றுப்பையில் வசதி உண்டு! மனிதக் குழந்தைக்குத் தொப்புள் கொடி மூலமாக ஆக்சிஜன் தரப்படுவதைப் போலவே, வயிற்றுப்பையில் இருக்கும் தடிமனான தோல் வழியாக முட்டைக்குள்ளிருக்கிற குஞ்சுகளுக்கு ஆக்சிஜன் தரப்படுகிறது.

‘கர்ப்பமுற்ற’ ஆண்

20 முதல் 24 நாட்கள் வரை இந்த “பேறு காலம்” தொடரலாம். இந்தக் காலகட்டத்தில், கருமுட்டைகளை இட்ட பெண்மீன், தினமும் காலை ஒரு முறை வந்து ஆண்மீனைப் பார்த்துவிட்டுச் செல்லும். இதை “Morning greetings” என்று அறிவியலாளர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். உள்ளே குஞ்சுகள் வளர வளர, கர்ப்பிணிப்பெண்ணின் வயிறைப் போலவே ஆண் கடற்குதிரையின் வயிற்றுப்பையும் உப்பிப் பருக்கிறது.

குட்டிகள் ‘ஈனும்’ ஆண் கடற்குதிரை

குஞ்சுகள் வெளிவருவது, பாலூட்டிகளின் பிரசவம் போலவே நடக்கக்கூடிய நிகழ்வு. ஆண் கடற்குதிரை உடல் முழுவதையும் நெளித்து, வளைந்து சிரமப்படும். அடுத்த சில நொடிகளில் வயிற்றுக்குள்ளிருந்து குஞ்சுகள் வரத்தொடங்கும். குஞ்சுகள் வர வர, வயிறும் உள்வாங்கி, சுருங்கி விரியும். மிக அற்புதமான காட்சி அது, இணையத்தில் பல காணொலிகள் பார்க்கக் கிடைக்கின்றன.

Courtesy: National Geographic (https://www.youtube.com/watch?v=b_nEA3dtOZs)

ஒரு பிரசவத்தில், ஆண் கடற்குதிரை 1000 முதல் 2000 கடற்குதிரைகள் வரை ஈன்றெடுக்கும். பிரசவித்த களைப்பில் வேட்டையாட முடியாது என்பதால், அடுத்த சில மணிநேரங்களுக்கு ஆண் உணவு எதுவும் உண்பதில்லை.

” அடடா… பாவம்!” என்று உச்சுக் கொட்டுவதற்கு முன்பு ஒரு நிமிடம் கேட்டுவிடுங்கள். பிரசவித்த குஞ்சுகளில் எதாவது அந்த நேரம் பக்கத்தில் வந்தால், எளிதாக இரை கிடைக்கிறதே என்று சொந்தக் குழந்தையையே விழுங்கவும் ஆண் மீன்கள் தயங்குவதில்லை! இதை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லி முகம் சுளித்துவிட முடியாது. அது நம் மதிப்பீடு. ஆண் கடற்குதிரைகளைப் பொறுத்தவரை, அருகில் வரும் குஞ்சுகள் எளிதில் கிடைக்கும் இரைகள். அவ்வளவே.

இந்த பேறுகால நிகழ்வின் மரபணுப் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது. ஆண் கடற்குதிரையின் பேறுகாலத்தின்போது இயங்கும் எல்லா மரபணுக்கூறுகளுமே பொதுவாகப் பெண் விலங்குகளில் மட்டுமே காணப்படுபவை!

ப்ரோலாக்டின் என்கிற, பால் சுரப்பைத் தூண்டுகிற ஒரு வேதிப்பொருள் ஆண் கடற்குதிரைகளுக்குள் உருவாகிறது, அவை குஞ்சுகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிற அக உணர்வைப் பெறுகின்றன,பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரஜன்கூட ஆண் கடற்குதிரையின் உடலில் உருவாகிறது!

இதற்கு ஆராய்ச்சியாளர்கள் எளிமையான ஒரு விளக்கம் சொல்கிறார்கள் – “ஆணோ பெண்ணோ, குழந்தையை சுமப்பது எந்த பெற்றோராக இருந்தாலும் அங்கு உள்ள இயங்கியலும் பொறுப்புகளும் ஒப்பீட்டளவில் ஒன்றுதான். குட்டிகளுக்கு உணவு, பாதுகாப்பு, ஆக்சிஜன் வழங்கவேண்டும், கழிவுகளை நீக்கவேண்டும். இவற்றை செய்ய இந்த வேதிப்பொருட்கள் கட்டாயம் தேவை. பொதுவாகப் பெண் விலங்குகளே குட்டிகளைக் கருவில் சுமக்கின்றன என்பதால், இவற்றைப் பெண் மரபணுக்கூறுகள் என்றும் பெண் வேதிப்பொருட்கள் என்றும் நாம்தான் சொல்லிக்கொண்டிருக்கிறோம். மற்றபடி அவை பாலினம் கடந்த வேதிப்பொருட்கள்தானே” என்கிறார்கள்.

தாயுமானவராக மாறி ஏன் ஆண் கடற்குதிரைகள் குஞ்சுகளை சுமக்கின்றன? ஏண் பெண்விலங்குகள் அதை செய்வதில்லை. இது ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது. சில முதற்கட்ட ஆராய்ச்சிகள் ஒரு கருத்தாக்கத்தை முன்வைக்கின்றன. ஒரு பெண் கடற்குதிரை, தன்னிடம் இருக்கும் எல்லா கருமுட்டைகளையும் ஆணின் வயிற்றுப்பைக்குள் போட்டுவிடுகிறது. அடுத்தபடியாக மஞ்சள்கருவும் ஊட்டசத்துக்களும் நிறைந்த கருமுட்டைகளை உருவாக்க அதிக ஆற்றலும் நேரமும் தேவை. முட்டைகளை அடைகாத்துக்கொண்டிருந்தால் அது சாத்தியப்படாது. அதானாலேயே ஆண் விலங்குகளுக்கு அந்தப் பொறுப்பு வந்திருக்கிறது என்கிறார்கள்.

இந்த விளக்கம் சுவாரஸ்யமானது என்றாலும், எல்லா பெண் விலங்குகளுக்கும் இதே நிலைதான் என்றபோது எல்லா விலங்குகளிலும் ஆண்கள் கருவை சுமக்கும் பண்பு ஏன் பரிணாம வளர்ச்சியில் ஏற்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. ஏதோ ஒரு வகையில் இந்த முறையில் சறுக்கல் இருந்ததாலேயே இது ஒரு மீன் குடும்பத்தோடு மட்டுமே நின்றுவிட்டது என்றும் தோன்றுகிறது. வருங்கால அறிவியலின் பதிலுக்காக நாம் காத்திருக்கலாம்.

ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை குஞ்சுகள் வெளிவரலாம் என்பது நமக்குக் கேட்க ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், வெளிவரும் குஞ்சுகளில் வெறும் 0.5% மட்டுமே தப்பிப் பிழைத்து வளர்ச்சியடைகின்றன என்பதைப் பார்த்தால், ஆயிரம் கூடப் போதாது என்பது புரியும்.

மிக அதீதமான எண்ணிக்கையில் முட்டைகள் இட்டு, குஞ்சுகள் வெளிவந்த பின்பு அவற்றைத் தன்போக்கில் விட்டுவிடும் இந்த விலங்குகளுக்கு r selected species என்று பெயர். முதுகெலும்பற்ற பல விலங்குகள், மீன்கள் போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இதற்கு எதிர்ப்பதமாக, மொத்த வாழ்நாளில் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று குட்டிகளைப் பெற்றெடுத்து, அவற்றைக் கூடவே இருந்து வளர்க்கும் விலங்குகள் உண்டு. அவை k selected species என்று அழைக்கப்படுகின்றன. மனிதன் உட்பட பெரும்பாலான பாலூட்டிகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.

தற்காலத்தில் ஹெலிகாப்டர் பேரண்டிங் முறைப்படி குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் மனிதப் பெற்றோர் இந்தப் பண்பை மிக அதீதமாக வெளிப்படுத்துகிறார்கள் என்றே சொல்லவேண்டும்!

ஒரே ஒரு குட்டியைப் பெற்றெடுத்து, அதைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பது பல விலங்குகளுக்கு இயல்புதான் என்றாலும், அடுத்து நாம் பார்க்கப்போகும் சமூக விலங்குகள், ஒரு கூட்டுக்குடும்பமாக இருந்து குட்டியை வளர்க்கின்றன. ஒரு சமூகத்தின் கூட்டு அறிவு மொத்தமாக அந்தக் குட்டிக்குத் தரப்படுகிறது. இதில் இன்னொரு சுவாரஸ்யம், அந்தக் கூட்டுக் குடும்பத்தில் குடும்பத்தலைவன் கிடையாது. பெண்வழிச்சமூகம் என்பதால் அங்கு முடிவுகள் எடுப்பது குடும்பத் தலைவிதான்.
அது என்ன விலங்கு?

தொடர்ந்து பேசுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.