கலை தான் எப்போதும் மனித மனங்களுக்கு ஆறுதலும், வடிகாலுமாக இருக்கிறது. அதனால் தான் கூத்து என்றாலும் சரி, நாடகம் என்றாலும் சரி, ஏதோ ஒரு கலை வடிவத்திற்குப் பாமர மனிதன் கட்டுப்பட்டு இருந்தான். கலை வழியாகத்தான் பழங்கால இதிகாசங்களும், வரலாறுகளும், ஏன் மொழியும், வட்டார வழக்குகளும்கூட மனிதனுக்குக் கடத்தப் பட்டுள்ளன.

எங்கள் ஊரின் (கள்ளிகுளம், நெல்லை மாவட்டம்) வடகிழக்கு மூலையில் சில சமயம் நாடகம் போடுவார்கள். நல்லதங்காள் கதையை பாவைக்கூத்தாகப் பார்த்த நினைவு உள்ளது.

கூத்து, நாடகம் வடிவிலிருந்த கலை சினிமாவிற்குள் நுழைந்த போது அந்த மாய உலகத்திற்குள் கட்டுப்பட்ட மனிதர்களால், இன்றும் விடுபட முடியவில்லை என்பதே உண்மை. அது பன்னெடுங்காலமாக நம்மோடு தொடர்ந்து பயணித்து வரும் கலையாத கனவுலகம். அன்றும் இன்றும் என்றும், மக்களின் மிகப் பெரிய பொழுதுபோக்கு, திரைப்படம் பார்ப்பது தான்.

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலகட்டத்தில் எப்போதாவது அருகில் இருக்கும் நகரத்திற்குச் சென்று திரைப்படம் பார்ப்போம். அப்போதெல்லாம் பயணம் என்பதே எப்போதாவது நிகழ்வது தான். அதனால் சினிமாவுக்குப் போவது ஒரு திருவிழா மாதிரி கொண்டாட்டமாக இருந்ததாக நினைவு. ஒரு சில திரைப்படங்களுக்கு, ஜீப் பிடித்துப் போனதாக நினைவு. பார்த்த திரைப்படத்தை விட ஜீப் புறப்படும் முன், ஒரு கம்பி (Starter) வைத்து அதைப் புறப்பட வைப்பது தான் நினைவில் இருக்கிறது.

பேருந்தில் செல்வதென்றால், இரவில் திரும்பி வரும் போது ஒரே ஒரு பேருந்தில் தான் அனைவரும் வர வேண்டும். பெரும் நெரிசலாக இருக்கும். அதனால், பெரிய அளவில் திரைப்படத்திற்குச் செல்வது கிடையாது. ஊர்க் கோவில்களின் திருவிழா, கொடை விழா என பல விழாக்களுக்கும், கட்டணமின்றி திரைப்படம் போடுவார்கள். ஊரிலுள்ள கல்லூரியிலும் விடுதி மாணவர்களுக்காகப் போடப்படும் திரைப்படங்களைச் சென்று பார்த்ததுண்டு. அவ்வப்போது பீடி கம்பெனிக்காரர்கள் ஊருக்குள் வந்து படம் போடுவார்கள்.

அரசு அதிகாரிகள், வேன் கொண்டுவந்து அவ்வப்போது வந்து, போலியோ சொட்டு மருந்து, குடும்ப கட்டுப்பாடு போன்ற குறும்படங்கள் போடுவார்கள். புயல்/வெள்ளம், மனிதன் விண்வெளி செல்லுதல் (யூரி ககாரின்) போன்ற செய்திப்படங்கள் போடுவார்கள். வேனில் ப்ரொஜெக்டர் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போடுவார்கள்.இவ்வாறான செய்தி குறும்படங்களைத் திரையரங்கங்களிலும், வழக்கமான திரைப்படங்களுக்கு முன் போடுவார்கள்.

https://www.tripoto.com/madurai/trips/asia-s-last-touring-talkies-in-madurai-to-close-down-in-february

நான் 6/7 படித்த காலகட்டத்தில், ஊரின் தென்கிழக்கில் ஒரு திரையரங்கம் திறக்கப் பட்டது. V யைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்தது போல் ஒரு பெரிய ஓலைக் கொட்டகை. அதற்குள் நான்கடி மண் சுவர்களால் ஆண், பெண், தரை சீட்டு, பெஞ்சு சீட்டு எனப் பிரித்திருப்பார்கள். ஆண்கள் அமரும் இடத்தை ஒட்டி ஒரு சிறு உணவகம். திரையரங்கம் முழுவதுமே ஓலை தான். ஆபரேட்டர் அறை மட்டும் தான் பூட்டிய அறை. மற்றவை எல்லாம் திறந்த வெளி தான்.

https://www.tripoto.com/madurai/trips/asia-s-last-touring-talkies-in-madurai-to-close-down-in-february

தரை கட்டணம் 40 பைசா. மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு, படுத்துக் கொண்டு, சுகமாகப் படம் பார்க்கலாம். இயற்கையான காற்று கிடைக்கும். சாதி, சமய வேறுபாடுகளைக் களைந்த இடம். கூட்டமில்லை என்றால், மணலைக் கூட்டி தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்தவாறே பெரியவர்கள் படம் பார்ப்பார்கள். திரையரங்கத்தில் முதலில் போடுகிற பாட்டு நம்மைக் கூப்பிடுகிற மாதிரி இருக்கும்.

“என் தேவனே என் இறைவனே என் இனிய நேசனே என் அன்பனே நண்பனே இதயம் வாருமே வா வா விரைந்து வா என்னில் வா எழுந்து வா”

என்று அப்பாடல் ஆரம்பிக்கும் அதில் ‘வா வா விரைந்து வா என்னில் வா எழுந்து வா’ என்ற வரியின் தொனி கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதனால் உண்மையிலேயே வா வா என்று கூப்பிடுகிற மாதிரி தான் இருக்கும்.

இடையில் பெரும்பாலும் சந்திரபாபு பாடல்கள் ஒலிபரப்புவார்கள். ஏறக்குறைய இறுதிப்பாட்டாக ‘சாந்தா உட்கார்’ எனத் தொடங்கும் சிங்கார வேலனே பாடல் இருக்கும். அந்தப் பாட்டுக் கேட்டுவிட்டால், அனைவரும் ஓட்டமும் நடையுமாக, திரையரங்கை நோக்கிச் செல்வார்கள்.

https://www.tripoto.com/madurai/trips/asia-s-last-touring-talkies-in-madurai-to-close-down-in-february
https://www.tripoto.com/madurai/trips/asia-s-last-touring-talkies-in-madurai-to-close-down-in-february

திரையரங்கத்தில் ஒரு ப்ரொஜெக்டர் தான் உண்டு. அதனால் ஒவ்வொரு ரீல் முடிந்ததும் அதைக் கழற்றி விட்டு அடுத்த ரீலை மாட்டுவார்கள். திடீர் என்று ரீல் மாறிவிடும். பிறகு, சமாளித்துச் சரியான ரீலைப் போடுவார்கள். சில சமயங்களில் ரீல் அறுந்து போனதும், ஒரு குண்டு பல்ப் எரியும். உடனே ‘முறுக்கு, சவ்வு மிட்டாய்’ என வியாபாரம் ஆரம்பித்து விடும். இப்படியும் பல இடை வேளைகள் உண்டு.

சில படங்களை அதில் உள்ள சில பாட்டுக்களுக்காகப் பார்க்கப் போவோம். ஆனால் அந்தப் பாட்டுப் பகுதியே இருக்காது. அதென்ன அடிக்கடி சினிமாவுக்குப் போகிற பழக்கம்? என ஒருபுறம் பெரியவர்கள் திட்டினாலும், நடுத்தர வயதுப்பெண்கள் தொடர்ந்து சினிமா பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். எங்கள் அம்மாக்களுக்குத் திரைப்படத்தின் முகவரியாக இருந்தவை, பாடல்கள்தான். பெரும்பாலும் நல்ல பாடல்கள் உள்ள படங்களுக்குச் செல்வார்கள். நடிகைகள், நடிகர்கள், எனப் பார்த்துச் செல்வதும் உண்டு.

twitter

ஒரு ஏழை அம்மா அனைத்துப் படங்களும் பார்ப்பார். எம் ஜி ஆர் படமென்றால் எத்தனை நாள் ஓடுகிறதோ அத்தனை நாளும் பார்ப்பார். என் அம்மா அவ்வப்போது, இவ்வளவு சிரமப்பட்டுச் சம்பாதித்து விட்டு தினமும், இப்படிப் போகிறாயே எனக் கேட்டால், ‘ஐயா (எம் ஜி ஆர்) வந்தா எப்புடி காப்பாத்துவாக தெரியுமா?’ எனச் சொல்லுவார். இப்படிப்பட்ட ரசிகர்கள் எம் ஜி ஆருக்கு நிறையப் பேர் இருந்தனர். சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, பத்மினி போன்றோருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது.

பாட்டுப் புத்தகம், நன்றி: kovaineram.in

எங்களைப் பொறுத்தவரை, பத்திரிகைகளில் வரும் திரை விமரிசனங்கள் தான், திரைப்படத்தின் முகவரியாக இருந்தன. அது போல, சினிமா பாட்டுப் புத்தகம் வாங்கினால், அதில் கதைச் சுருக்கம், மற்றும் திரைப்படம் குறித்த விவரங்கள் இருக்கும். பாடல் வரிகள், பாடியவர்கள் பெயருடன் கொடுக்கப்பட்டிருக்கும். கதைச் சுருக்கம் போட்டு, ‘மீதியை வெள்ளித் திரையில் காண்க’ எனப்போடுவார்கள். இவற்றைப் பார்த்தும் திரைப்படங்களுக்குச் செல்வதுண்டு.

பொதுவாகத் தெருவில் பலர் இணைந்து கூட்டமாகப் படத்துக்குப் போவோம். வீட்டுப் பாடங்களை எல்லாம் விரைவில் முடித்து விட்டு படத்துக்குக் கிளம்புவோம். பெரியவர்கள் செல்லும் அனைத்துப் படங்களுக்கும்
நாங்கள் போவது இல்லை. சில சமயம், அவர்கள் பார்த்து விட்டு, நல்ல படம் என எங்களை அழைத்துச் செல்வார்கள். அவ்வாறு என் அம்மா, ‘பிரியா’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஒரே வானம் ஒரே பூமி’ எல்லாம் அழைத்துச் சென்றார்கள். அவற்றில், ‘ சிங்கப்பூர், ஹாங்காங், அமெரிக்கா எல்லாம் காட்டுகிறார்கள், நாம நேரில் போயா பார்க்கப் போகிறோம்?’ எனச் சொல்லி அழைத்துச் சென்றார்கள். இப்போது அந்த நாடுகளுக்கெல்லாம் சென்ற அனுபவம் எனக்குக் கிடைத்துள்ளது. அதைச் சொல்வதற்குத்தான் அம்மா இல்லை. படம் பார்த்துவிட்டு எங்களுக்குள் ஏற்படும் விவாதம், திரைப்படத்தை விடச் சுவாரஸ்யமானதாக இருக்கும்.

imdb

சில நாள்கள் ஒரே காட்சியில் இரண்டு படம் போடுவார்கள். இரண்டு படங்களிலுள்ள துண்டுகளைச் சேர்த்துப் போட்ட மாதிரி தான் இருக்கும். ஆனால், இரவு முழுவதும் படம் பார்க்கலாம். அப்படி ஒரு நாள் ஒரு எம் ஜி ஆர் படமும் ஒரு சிவாஜி படமும் சேர்த்துப்போட்டிருக்கிறார்கள். மகா தேவி, தெய்வ மகன் என்று நினைவு. தெய்வ மகனில் அப்பாவும் பெரிய மகனும் சந்திக்கிற காட்சி. திடீரென ‘இன்றைக்குப் படம் ஓடாது; இந்த சீட்டை வைத்து நாளைப் படம் பார்க்கலாம்’ என அறிவிப்பு போட்டிருக்கிறார்கள். அது பெரிய பிரச்னை ஆகிவிட்டது. அதன் பிறகு தியேட்டர் திறக்கப்படவே இல்லை.

கட்டுரையாளரின் பிற படைப்புகள்:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.