ஹெர் ஸ்டோரீஸ் வாசகி லூயிசா மேரி அவரது தாய் பற்றி எழுதியிருக்கும் ‘என் அம்மா’ கட்டுரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.

’அம்மா’ என்றவுடன் எல்லோரையும் போன்று வெளியில் அவரைப் போற்றிக்கொண்டும் ’அன்பு’ எனும் போர்வை போர்த்தி, இயந்திரங்களைப் போன்று நடத்திக்கொண்டும் இருக்கும் அந்தப் பெரும்பான்மை கூட்டத்தில்தான் நானும் இருந்தேன். எவ்வளவு பெரிய கொடுமை அது? இந்தச் சமூகத்தில் அதிகம் ஏமாற்றப்படும் உறவு அம்மா. அதிகம் சுரண்டப்படும் மனித ஆற்றல் அம்மா. உரிமை என்ற பெயரில் பலவகையான தனிமனித தாக்குதலுக்கு ஆளாக்கப்படுபவர் அம்மா.

இத்தனையும் எனக்குப் புரியும்வரை வீட்டின் எல்லா வேலைகளையும் தனி ஒருத்தியாகச் செய்துகொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி துறைகளாகப் பிரித்து, தனித்தனி ஆட்கள் போட்டு செய்யும் அளவுக்கு வேலைகள் அதிகமாக இருக்கும். ஆனால், ’தாயின் அன்பு’ என்றெல்லாம் ஏமாற்று சொற்களைப் பொழிந்து, நம் அம்மாக்களை மல்டி டாஸ்கிங் மட்டுமல்ல அதற்கும் மேலாக வேலைகளை வாங்கிக்கொண்டு, நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு வேலைகளை வாங்கிவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை ‘அன்னையர் தினம்’ அன்று ஒரு பதிவு போட்டுவிட்டால் போதுமா?

“சாப்பாட்டுல உப்பு இல்ல…”
“சட்டைய ஒழுங்கா துவைக்கல…”
“வீடு சுத்தமாக இல்ல…”
“நேத்து நா தூக்கிப் போட்ட சாக்ஸ் காணோம்…”
“போன வாரம் நா வச்ச ஃபைலைக் காணோம்” என்பது போன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள், குறைகள் வேறு அவர்கள் மீது. இவ்வாறெல்லாம் நானும் என் அம்மாவைக் காயப்படுத்தி இருக்கிறேன். வளர வளர எனக்கும் அறிவு முதிர்ச்சி அடைவதால், அம்மாவைப் புகழ மட்டுமே இப்போது தோன்றுகிறது எனக்கு.

பதினைந்து வயதில் என் அப்பாவை இழந்தேன். நான் உட்பட அம்மாவுக்கு மூன்று குழந்தைகள். அதுவரை எனக்குத் தெரியவில்லை, அம்மா எவ்வளவு பலம் கொண்ட மாபெரும் வீராங்கனை என்று. மெல்லியக் குரல்காரர். கோதுமை நிறத்தழகி. துறுதுறுவென்று எதையோ செய்துகொண்டேயிருக்கும் எங்கள் வீட்டின் நாடித் துடிப்பு அவர். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். ஓரளவுக்கு ஆங்கிலம் படிக்க, எழுத தெரியும். எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்வார். உதவும் மனப்பான்மை அதிகம். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.

படம் நன்றி: லூயிசா மேரி

வளம் நிறைந்த குடும்பம் இல்லை. ஆனால், அனைத்து வளங்களையும் தவறாமல் எங்களுக்குத் தந்துவிடுவார் அம்மா. அவரின் 24 மணி நேரச் சிந்தனையும் எங்கள் மூவரைப் பற்றிதான். அவரின் மீதி வாழ்க்கையே எங்களை பற்றியதாக மாறிப் போனது என் அப்பாவின் மறைவுக்குப் பிறகு. அதுவரை அப்பாவை மட்டுமே சார்ந்து வாழ்ந்து கொண்டிருந்த ஓர் அமைதியான பெண். இப்போது தலைமைப் பொறுப்பை ஏற்ற குடும்பத் தலைவி. அந்தப் பணியையும் சிறப்பாகச் செய்துவருகிறார் அம்மா.

ஒற்றைப் பெற்றோராகப் பிள்ளைகளை வளர்த்து, அவர்களுக்கு வாழ்க்கையை அமைப்பது என்பது கடினமான போர். அந்தப் போரில் ஒவ்வொரு பெண்ணும் வெற்றி பெற்று விடுகிறார். கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் மன வலிமை பெறுகிறார். அது அவர்களுக்குத் தொடர்ந்து உழைக்க, அதிக உடல் வலிமையையும் தந்துவிடுகிறது. தனித்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் அதீத ஆற்றலைப் பெறுகிறார்கள் என்பதற்கு என் அம்மாவே சாட்சி.

அப்பாவுக்கு முன்பு இருந்த அம்மா வேறு; அப்பாவுக்குப் பின்பு இருக்கும் அம்மா வேறு. அதிக பலம் பொருந்திய ஆளுமையாகவே எனக்குத் தோன்றுகிறார். பல முறை அவரின் மன உறுதியைக் கண்டு மகிழ்ச்சிகொண்டேன், பெருமைகொண்டேன், தைரியமும் கொண்டேன். என் முதல் முன்மாதிரி, என் முதல் ஆசிரியை, என் முதல் வழிகாட்டி, என் முதல் அனைத்துமாகி வாழ்க்கை நெறிமுறைகளைத் தெளிவாகக் கற்றுக் கொடுத்தவர் அம்மா.

அப்பா மறைந்த சில நாட்களில் சமூகத்தில் இருந்த அந்த நான்கு பேர், “அப்பா இல்லாம மூணு பேரை எப்படிப் படிக்க வைப்ப? படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பு” என்று அறிவுரை கொடுத்தார்கள். ஆனாலும் அம்மா எங்களை எப்போதும் போல பள்ளிக்கு அனுப்பினார். கல்லூரிக்கும் அனுப்பினார். வாழ்க்கை பாடங்களையும் எங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பினார். எத்தனை உறுதியான உள்ளம் அவருக்கு!

படம் நன்றி: லூயிசா மேரி

எங்களுக்காகப் பல்வேறு இழப்புகளையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால், அவற்றை ஒருபோதும் சொல்லிக் காட்டியது இல்லை. அனைத்து வலிகளும் அவருக்குள் காட்டுத் தீயாக எரிந்திருக்கும் போல, அந்த ஆற்றல்தான் எங்களை வளர்த்தெடுத்திருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. எட்டு வருடங்கள் அவரின் கடுமையான உழைப்பில், அம்மா இருக்கிறார் என்ற தைரியத்தில், நானும் என் அக்காவும் முதுகலை பட்டம் வரை படித்து முதல் தலைமுறை பட்டதாரிகளாக இன்று நின்றுகொண்டிருக்கிறோம். எங்கள் தம்பியும் கல்லூரி முதல் ஆண்டில் இருக்கிறான்.

நாங்கள் மூன்று பேரும் அந்த மகா வீராங்கனையின் வெற்றிச் சின்னங்கள் என்பதைப் பெருமையுடன் சொல்கிறேன். அம்மாவின் பெயர் ’அருள்மணி.’

அன்று மட்டும் ‌அம்மா எங்களை வறுமையைக் காரணம் காட்டி, படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பி இருந்திருந்தால், இன்று நானும் என் அக்காவும் தனித்து சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருப்போமா? சமூகத்தைச் சந்திக்க அறிவு பெற்றிருப்போமா? பிள்ளைகளுக்குக் கல்வி இன்றியமையாத வளம் என்று எங்களுக்குக் கல்வி கொடுத்த அந்த ஒரு முடிவுதான், இன்று ஆளுக்கொரு துறையில் பட்டம் பெற்றிருக்கிறோம். தனித்து சிந்திக்கிறோம், சுயமரியாதையுடன் வாழ்கிறோம்.

படம்: லூயிசா மேரி

என் அம்மா வரைய முடியாத ஓவியம், படைக்க‌ முடியாத காவியம், வடிக்க முடியாத சிற்பம், தீர்க்க முடியாத‌ கணக்கு. என் அம்மா மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள ஒவ்வோர் அம்மாவும் மன உறுதியை ஏந்திய போராளிகளே. சமூகத்தின் உதவாத கருத்துகளுடன் போராடி, உறவினரின் பயனற்ற அறிவுரைகளுடன் போராடி, அனுதின தேவைகளுக்காகப் போராடி, பிள்ளைகளின் கல்விக்காகப் போராடி, அவர்களின் வாழ்க்கையை நெறிப்படுத்த போராடி என்று பல போராட்டங்களில் வெற்றி பெற்ற போராளிகள் அவர்கள். ஒவ்வொரு பெண்ணின் தனித்துவத்தையும் நான் மதித்துப் போற்றுவதற்கு முழுக் காரணமே என் அம்மாதான். அவர் காட்டிய பெண்ணின் உருவத்தை, பெண்ணின் உள்ளத்தை நான் காணும் ஒவ்வொரு தாயிடமும் உணர்கிறேன்.

’தாய்மை’ எவ்வளவு பெரும் வலிகளையும் தாங்கும் வலிமை பெற்றது. அதற்காக வலிகளைக் கொடுக்கலாம் என்று எண்ணாமல், அவர்களின் வலிகளைப் பகிர்ந்துகொள்வோம். முடிந்தால் அம்மாக்களின் வலிகளை முற்றிலும் தீர்த்துவிடுவோம். அவர்களின் காயங்களைக் குணப்படுத்த நம்மால் மட்டுமே இயலும்.

படைப்பு:

படம் நன்றி: லூயிசா மேரி

லூயிசா மேரி

ஹெர் ஸ்டோரீஸ் வாசகி