தோழிகளே வணக்கம். என் பெயர் ஆன் ஃப்ராங்க் (Anne Frank). 1929ம் ஆண்டு ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில், ஓட்டோ ஃபிராங்க் – எடித் ஆகியோரின் இளைய மகளாகப் பிறந்தேன். என் அக்கா மார்காட். வசதி படைத்த குடும்பம் எங்களுடையது. ஜெர்மனி, நாஸிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தவுடன் ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமுக்கு என் குடும்பம் குடிபெயர்ந்தது. அப்போது எனக்கு வயது 4. அப்பாவும் அம்மாவும் படித்தவர்கள். எங்களை அருமையாக வளர்த்தார்கள்.

என்னுடைய 13வது பிறந்தநாள் அன்று மிகவும் பிடித்த ஒரு பரிசு கிடைத்தது! தடித்த அட்டை கொண்ட அந்த டயரியைக் கண்டதும் என் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை! சராசரி பெண்களைப் போல் இதில் கண்டதையும் எழுதக் கூடாது என்று முடிவு செய்தேன். இந்த டயரியில் நான் எழுதப் போகும் விஷயங்களுக்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எனக்கு நண்பர்கள், அக்கா, அம்மா, அப்பா இருந்தாலும் இன்னும் நெருக்கமான ஒரு நண்பன் வேண்டும். அதுதான் இந்த டயரி. இன்று முதல் கிட்டி என்று பெயர் கொண்ட என் நண்பனிடம் நான் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளத் தீர்மானித்தேன்.

டயரி எழுத ஆரம்பித்த சில நாள்களுக்குள் அந்தக் குலை நடுங்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்தது. ஆம், நாங்கள் எங்காவது தலைமறைவாகச் சென்று வாழ வேண்டும். அல்லது வதை முகாம்களுக்குச் செல்ல வேண்டும். எதற்காக?

ஆன் ஃப்ராங்க்கின் டயரி, history.com

நாங்கள் யூதர்கள். எங்கள் மதச் சின்னமான மஞ்சள் நட்சத்திரத்தை நாங்கள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்லக்கூடாது. தள்ளிக்கொண்டுதான் நடக்க வேண்டும். டிராம்கள், வாகனங்களில் நாங்கள் பயணம் செய்யக்கூடாது. யூதர்களின் கடைகளில் மாலை 3 முதல் 5 மணிக்குள் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும். 8 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது. சினிமா, நாடகம் பார்க்கக்கூடாது. பொழுதுபோக்கு மட்டுமின்றி, டென்னிஸ், நீச்சல், ஹாக்கி போன்ற விளையாட்டுகளும் நாங்கள் விளையாடக்கூடாது. குறிப்பாக யூதர்களுக்கான தனிப்பட்ட பள்ளியில் மட்டுமே நாங்கள் படிக்க வேண்டும்.

ஜெர்மனியின் நாஸிப் படை நெதர்லாந்தைக் கைப்பற்றியவுடன் இங்கும் அதே சட்டங்கள் தொடர்ந்தன. என் அப்பா கஷ்டப்படும் யூதர்களுக்கு உணவு, உடை, பணம் போன்ற உதவிகளைச் செய்து வந்தார். இந்தச் செயல்கள் எல்லாம் எங்களுக்கு எவ்வளவு ஆபத்தைக் கொண்டுவரும் என்று எல்லோருக்கும் தெரியும். இன்னொருவரைக் காப்பாற்ற முடிந்தால் மற்ற விஷயங்கள் அற்பமானவை என்பார் என் அப்பா.

என் அக்காவுக்குத்தான் அன்று சம்மன் வந்தது. சம்மன் வந்தவர்களை ரகசிய வதை முகாம்களுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். அந்த வதை முகாம்களைப் பார்த்துதான் நரகம் என்ற வார்த்தை உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன். சரியான உணவு, உடை கொடுக்க மாட்டார்கள். நூறு பேருக்கு ஒரு கழிப்பறைதான் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறை. ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக குறுகிய இடத்தில் அடைத்திருப்பார்கள்.

மனித தன்மை அற்ற அந்த முகாம்களில் ஒழுக்க விதி மீறல்கள் அதிகமிருக்கும். சிறுமிகள் கூட கர்ப்பமாக இருப்பார்கள். தினமும் சிலர் செத்துக்கொண்டிருப்பார்கள். பலர் சாவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சுகாதாரமின்மையால் நோய்கள் உற்பத்தியான வண்ணம் இருக்கும்.

அம்மாவும் அப்பாவும் நண்பர்களிடம் பேசினார்கள். நானும் அக்காவும் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றை எடுத்துக்கொண்டோம். ஒவ்வொருவரும் அணிந்திருந்த ஆடைகள் மீது மேலும் 2, 3 உடைகளை அணிந்துகொண்டோம். (பெரிய பைகளுடன் சென்றால் எங்களைக் கண்டுபிடித்துவிடுவார்கள்!)

ஆன் ஃப்ராங்க் ஒளிந்திருந்த அவர் அப்பாவின் அலுவலகம், The Sun

சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு ஒரு பெரிய கட்டடத்துக்கு வந்து சேர்ந்தோம். இது என் அப்பாவின் அலுவலகம். இந்த அலுவலகத்தின் மேல் தளங்களில்தான் நாங்கள் ரகசியமாகத் தங்கப் போகிறோம். நாங்கள் இங்கே வருவோம் என்று அப்பா ஏற்கெனவே தீர்மானித்து இருந்தபடியால் உணவு, படுக்கை என்று பல பொருள்களைச் சேர்த்து வைத்திருந்தார். எங்களுடன் அப்பாவின் நண்பர் வாண்ட்டான் குடும்பமும் மருத்துவர் ஒருவரும் தங்கினர். 8 பேர் இந்தச் சிறிய இடத்தில் வசித்தோம்.

இப்போது நாங்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறவர்கள். பகல் நேரத்தில் ஜன்னல் திரையை விலக்கிக்கூட வேடிக்கை பார்க்க முடியாது. அலுவலக நேரத்தில் நாங்கள் எந்த வேலையும் மேலே செய்யக்கூடாது. வேகமாக நடக்கக்கூடாது. பேசக் கூடாது. சிரிக்கக்கூடாது. முக்கியமாக கழிவறையைப் பயன்படுத்தி, தண்ணீரை இறைக்கக்கூடாது. மொத்தத்தில் நாங்கள் இங்கே இருப்பது அங்கு வேலை செய்யும் சில நண்பர்களைத் தவிர, யாருக்கும் தெரியக்கூடாது.

ஆன் ஃப்ராங்க் பதுங்கியிருந்த இடம், annefrank.org

காலை 8 மணிக்குள் எங்கள் வேலைகளை முடித்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் உணவு வேளை வரை காத்திருக்க வேண்டும். அந்த ஒரு மணி நேரத்தில் வேகமாக வேலைகளை முடிக்க வேண்டும். மீண்டும் அமைதி. மாலை 5 மணிக்கு மேல் எங்கள் நாள் ஆரம்பமாகும்.

பகல் நேரங்களில் நானும் என் அக்காவும் பாடம் படிப்போம். சுருக்கெழுத்துப் பயிற்சி செய்வோம். பிரெஞ்சு, டச்சு, ஆங்கில மொழிகளைக் கற்போம். புராணங்கள், மன்னர்களின் வரலாறுகள் என்று நிறைய புத்தகங்களைப் படிப்போம். வானொலியில் செய்தி கேட்போம். மீதி நேரத்தில் என் நண்பன் கிட்டியிடம் அன்று நடந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வேன்.

புத்தகங்களின் அருமை எங்களைப் போல் தலைமறைவாக வசிக்கும் மனிதர்களுக்குத்தான் தெரியும்! புத்தகம் இல்லா உலகை என்னால் கற்பனை கூட செய்யமுடியாது. சனிக்கிழமை தோறும் நண்பர்கள் புத்தகங்கள், உணவுப் பொருள்கள் போன்றவற்றை ரகசியமாகக் கொண்டுவந்து தருவார்கள். அந்த நாளை நானும் அக்காவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருப்போம்!

ஒரு சிறிய இடத்தில் கருத்து ஒற்றுமை இல்லாதவர்களுடன் சேர்ந்து வசிப்பது சாதாரணமான விஷயம் ஒன்றும் இல்லை. அவ்வப்போது சண்டை சச்சரவுகள் தோன்றும். ஆனாலும் நாங்கள் வெளியே துன்பப்படும் யூதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்குள் வருடப் பிறப்பு, பிறந்தநாள், திருமண நாள் போன்ற கொண்டாட்டங்கள் சிறிய அளவில் நடைபெறும். அதில் ஒருவருக்கொருவர் சிறிய பரிசுகளைக் கொடுத்து, பரிமாறிக்கொள்வோம். (என் அம்மாவின் பிறந்த நாள் பரிசாக ஓர் இனிப்புச் செய்வதற்கு, நான் ஒரு மாதம் சர்க்கரையும் வெண்ணெய்யும் சாப்பிடாமல் சேர்த்து வைத்தேன்!)

அன்று பீரங்கிகளின் சைரன் ஒலி காதைக் கிழித்தது. வானில் போர் விமானங்களின் உறுமல். என் உடல் நடுங்கியது. நள்ளிரவு வரை குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. கண்ணீர் விடுவதைத் தவிர என்னால் என்ன செய்ய முடியும்?

ஆன் ஃப்ராங்க் ரகசிய அறை வீடியோ, jemslife

நாங்கள் ரகசிய அறைக்கு வந்து ஒரு வருடமாகிவிட்டது. ஆனால் எங்கள் நிலைமைதான் மோசமாகிக்கொண்டே வருகிறது. இரண்டாம் உலகப் போரின் விளைவால் உணவுப் பற்றாக்குறை. பொருள்களின் விலை எங்கோ சென்றுவிட்டது. நாங்கள் உணவைச் சுருக்கிக்கொண்டோம். சில நாள்கள் உருளைக் கிழங்கு மட்டும் சாப்பிடுவோம். சில நாள்கள் பயறுகளை உண்போம். நேற்று எங்களுக்குக் காய்கறி கொடுக்கும் நண்பரை ராணுவம் பிடித்துச் சென்றுவிட்டது. இனி காய்கறிகளும் கிடைக்காது. ஒரு சாதாரண ரொட்டி சாப்பிட்டு எவ்வளவு காலமாகிவிட்டது!

எங்களின் ஆடைகள் பழசாகிவிட்டன. என் உடை மிகவும் குட்டையாகி விட்டது. செருப்பு போட முடியவில்லை. குளிருக்கு இதமான கம்பளிகள் இல்லை. எனக்குக் கண்பார்வை கோளாறு வந்துவிட்டது.

தலைமறைவு வாழ்க்கையில் இன்னொரு சங்கடம்… திருடர்கள் யாராவது கீழ்த்தளத்துக்கு வரும்போது எங்கள் இதயமே நின்றுவிடும். எங்களைக் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது? தலைமறைவு வாழ்க்கையில் திருடர்களைக் கண்டு அஞ்சத்தான் முடியுமே தவிர, கூப்பாடு போட முடியாது. திருடர்கள் வந்தால் பயம். புதியவர்கள் வந்தால் பயம். கீழே மராமத்து பணி செய்ய வந்தால் பயம். சாவதை விட எப்போது சாவோம் என்று காத்திருப்பது கொடுமையானது.

பீட்டர் வான் பெல்ஸ், NY Daily News

எத்தனைக் கஷ்டங்கள் வந்தாலும் மனித மனம் அதிலிருந்து விடுபடவே எண்ணும். ஆம், எனக்குள்ளும் சந்தோஷமான விஷயங்கள் நிகழ்கின்றன. பீட்டர். வாண்ட்டானின் மகன்தான் பீட்டர். ஆரம்பத்தில் எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. நாள் ஆக ஆக அவனை எனக்குப் பிடித்துவிட்டது. என் வயது அப்படிப்பட்டது என்று நினைக்கிறேன். சில நேரங்களில் நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் சில நேரங்களில் அவன் குறைந்த புத்திசாலித்தனத்துடனும் சற்று சோம்பேறித்தனமாகவும் இருப்பதாக எண்ணுகிறேன்.

என் சிந்தனைகள் வேறு; பீட்டரின் சிந்தனைகள் வேறு. இவன் எனக்கு ஒத்துவரமாட்டான் என்றும் தோன்றுகிறது.. ஆனாலும் அவனுடன் நட்பு கொள்வது எனக்கு இந்தச் சூழலில் மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.

இன்னொரு விஷயம் நானும் அக்காவும் சுருக்கெழுத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்றுவிட்டோம். என்னைப் பெரிய பெண்ணாக அங்கீகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அக்கா படிக்கும் சில புத்தகங்களை நான் வாசிக்க அனுமதி கிடைத்திருக்கிறது. கிரேக்க, ரோமானிய புராணங்கள் என்னைக் கவர்கின்றன. புகழ்பெற்ற நாவல்களை வாசிக்கிறேன்.

போர்ச் சூழல் ஒன்றும் திருப்திகரமாக இல்லை. யூதர்கள் வேட்டையாடப்பட்டு, கண்காணா வதை முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்று செய்தி கேள்விப்படும்போது என் இதயம் வெடித்துவிடுவது போல இருக்கிறது. சில முகாம்களில் நச்சுப் புகையைச் செலுத்தி கூட்டம் கூட்டமாகக் கொன்று விடுகிறார்கள். என் நண்பர்கள் குளிரில் அடி வாங்கி வாங்கி மடிந்துபோகும்போது, நான் மட்டும் இந்தப் பாதுகாப்பான இடத்தில் சொகுசாக வாழ்வது நியாயமா?

பள்ளிக்குச் சென்ற பிள்ளைகள் திரும்பி வரும்போது பெற்றோர் காணாமல் போயிருப்பார்கள். கடைக்குச் சென்ற மனைவி திரும்பி வரும்போது வீடு பூட்டியிருக்கும். பெற்றோரைத் தேடி குழந்தைகள் அழும் ஓலம் என்னவோ செய்கிறது. வீதியில் விழும் பிணங்களை அகற்றுவதே பெரிய வேலையாக இருக்கிறது என்கிறார்கள். சே! போர் எவ்வளவு கொடூரமானது? பூகோளமே போரில் ஈடுபட்டிருக்கிறதே… தன் நாட்டு மக்களையே அழித்தொழிக்கும் கொடூரத்தைப் போரில் மட்டுமே காண முடியும். போர் இரக்கமற்றது. அதுக்கு நியாய, தர்மங்கள் கிடையாது. போரால் யாருக்கும் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

நாங்கள் செய்த பாவம் என்ன? யூதர்களாகப் பிறந்தது எங்கள் குற்றமா? ஒரு கிறிஸ்தவன் தவறு செய்தால் அது அவனுடைய தவறாக மட்டும் பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு யூதன் தவறு செய்தால் ஒட்டு மொத்த யூதர்களுமே தவறு செய்தவர்களாகி விடுகிறார்கள். ஒருவேளை யூதர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஹிட்லரைக் கூட நாங்கள் மன்னித்துவிடுவோம்!

தலைவர்கள், அரசியவாதிகள், பெரு முதலாளிகள் மட்டும் இந்தப் போருக்குப் பொறுப்பாளர்கள் இல்லை; மக்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. இல்லை என்றால் இந்தப் போருக்கு எதிராக மக்கள் புரட்சி செய்திருக்க மாட்டார்களா? மனிதனுக்குள் அழித்தொழிக்கக்கூடிய கொடிய மனப்பான்மை இருக்கும் வரைக்கும் உலகில் அழகான அனைத்து விஷயங்களும் அழிந்துகொண்டேதான் இருக்கும்.

என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். டயரி எழுத ஆரம்பித்தபோது இருந்த ஆன் வேறு; இன்று இருக்கும் ஆன் வேறு. அடிக்கடி அம்மாவிடம் சண்டை போடும் ஆன் இப்போது இல்லை. என்னுடைய உடல் வளர்ந்ததைப்போலவே என் சிந்தனைகளும் வளர்ந்திருப்பதை உணர முடிகிறது. அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நிறைய படிக்கிறேன். நிறைய தெரிந்துகொள்கிறேன். பலமும் துணிச்சலும் உள்ள பெண்ணாக மாறியிருக்கிறேன். எல்லோரையும் புரிந்துகொள்கிறேன்.
எதிர்காலத்தில் நான் என்னவாக வர விரும்புகிறேன்?

ஆன் ஃப்ராங்க்கின் குடும்பம், annefrank.org

என் அம்மா போன்ற மற்ற பெண்களைப் போல் பிறந்தோம், வாழ்ந்தோம் என்று என்னால் இருக்க முடியாது. ஒருநாளும் மறந்து போகக்கூடிய ஒரு சாதாரணப் பெண்ணாக நான் வாழ்ந்து, சாக விரும்பவில்லை. எதிர்காலத்தில் குடும்ப வாழ்க்கைக்கு அப்பால் நான் எதையாவது செய்யவேண்டும்.

எழுத்தாளர். ஆம், நான் சிறுகதைகள் நிறைய எழுதி வைத்திருக்கிறேன். ஒரு நாவல் எழுதும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன். (ஒரு சிறுமி எழுதும் நாவலை யாரும் விரும்புவார்களா என்ன!) இரண்டு ஆண்டுகளாக நான் கிட்டியிடம் டயரியில் பகிர்ந்துகொண்ட விஷயங்களை ஒரு புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறேன். இறந்த பிறகும் வாழ வேண்டும் என்றால் ஓர் எழுத்தாளரால்தான் சாத்தியம்.

அதேபோல பத்திரிகையாளராகவும் ஆசை. எழுத்து மூலம் அனைத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன். எழுத்தின் மூலம் என் துயரங்கள் மறைவது போல, உலகத்தின் துயரத்தை என்னால் துடைக்க முடியும். இது சாத்தியமா?

ஐயோ… இந்த நாள் மிகவும் துயரமானது. யாரோ எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டனர். படையினர் வந்து எங்களை இழுத்துச் சென்றனர். ஆண்கள் ஒரு வண்டியிலும் பெண்கள் ஒரு வண்டியிலும் ஏற்றப்பட்டோம். யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. எங்களை இந்த நிலைக்குத் தள்ளியது யார்? மனிதர்களில் சிலர் உயர்ந்தவர்கள், சிலர் தாழ்ந்தவர்கள் என்று பிரித்தது யார்? யூதர்களின் பொறுமைதான் அவர்களின் பலவீனம். இந்தப் பலவீனத்தால் பலசாலிகள் எளிதில் வென்றுவிட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களை எட்டியிருந்து பார்த்த நான், இன்று பாதிக்கப்பட்டவளாக வதை முகாமுக்குச் செல்கிறேன். வதை முகாம் பற்றிச் சொல்ல எனக்கு இப்போது திடம் இல்லை. டைபஸ் என்ற நோய் முகாமில் பரவி வருகிறது. வரிசையாக மரணம் ஒவ்வொருவரையும் ஆட்கொள்கிறது. என் அக்கா இறந்த ஒரு மாதத்தில் நான் மடிந்து போனேன். என் அம்மாவும் இறந்து போனார். ஆண்கள் சிறையில் பீட்டரும் இறந்து போனான்…

ஆன் ஃப்ராங்க்கின் கல்லறை, PBS

என் அப்பா?

பல லட்சம் உயிர்களைக் குடித்த பிறகு, இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. தப்பிப் பிழைத்தவர்களில் என் அன்பு அப்பாவும் ஒருவர். வதை முகாமிலிருந்து வெளியே வந்தவர் எங்களைப் பற்றிய செய்திகளை அறிந்துகொண்டார். நாங்கள் வசித்த ரகசிய அறைக்கு வந்தார். மகிழ்ச்சியான குடும்பம் வசித்த அந்த இடத்தில் இப்போது வெறுமை குடிகொண்டிருந்தது.

மகளின் புகைப்படத்துடன் ஒட்டோ ஃப்ராங்க், NBC News

எங்கள் குடும்ப நண்பர் மையீப் கையிஸ் அப்பாவைச் சந்தித்தார். நாங்கள் வதை முகாம்களுக்குச் சென்ற பிறகு, எங்கள் அறைக்கு வந்து, என் டயரியை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். என் அப்பாவிடம் டயரியை ஒப்படைத்தார். என் டயரியைப் படித்த அப்பாவால், ஒரு தகப்பனாக தன் துயரத்தைத் தாங்கமுடியவில்லை. தன் மகளின் எழுத்தாற்றலும் நாஸிப் படைகள் நிகழ்த்திய கொடூரங்களும் வெளியுலகுக்குத் தெரிய வேண்டும் என்று விரும்பினார். புத்தகமாகக் கொண்டுவந்தார்.

1945, 15 வயதில் நான் இறந்து போனேன். ஆனால் இன்று உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட மொழிகளில் என்னுடைய புத்தகத்தின் மூலம் வாழ்ந்து வருகிறேன். உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட 10 புத்தகங்களில் என்னுடைய புத்தகமும் ஒன்று. நான் நினைத்தது போல சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்ற என் கனவு நிறைவேறிவிட்டது…

தோழிகளே ஒரு நிமிடம்… எழுத்தாளர் என்பது மட்டுமே என் கனவு அல்ல. நான் சொல்ல வந்த செய்தி, இனத்தின் பெயரால் எந்த ஒரு மனிதரும் இனி சாகக்கூடாது; எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் பூமியில் போர் நிகழக்கூடாது என்பதற்காகத்தான். இனத்தின் பெயரால் உயிரை இழந்த கடைசி மனிதர்கள் நாங்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இன்றும் இனத்தின் பெயரால் நடைபெறும் படுகொலைகளும் அழித்தொழிப்புகளும் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளன. என்னைப் போல் எத்தனையோ லட்சம் பேர் பலியாகிக்கொண்டுதான் இருக்கிறர்கள். சாத்தியமாகாத கனவா என்னுடையது? ஆம், ஹிட்லர்கள் ஒருபோதும் மரிப்பதில்லை!

கட்டுரையாளரின் பிற படைப்பு:

படைப்பு:

சஹானா

எழுத்தாளர், பத்திரிகையாளர்.