ஹெர் ஸ்டோரிஸ் குழுவில் பெண்களுக்கான இரவு உலா ஏற்பாடு செய்வதாகச் சொன்னதும், நான் என்ன ஏதென்று எல்லாம் யோசிக்கவில்லை. சென்று ஆக வேண்டுமென்று முடிவெடுத்து கணவரிடம் பேசிவிட்டு பெயரைத் தந்துவிட்டேன்.

இருப்பினும் இந்த இரவு உலாவிற்குச் செல்ல ஏதாவது தடங்கல் வந்துவிடுமோ என்று கடைசி நிமிடம் வரை பக் பக்கென்றுதான் இருந்தது. ஆனால் நான் பயந்தது போல எந்தச் சிக்கலும் வராவிட்டாலும் வேறு சில கேள்விகள் என்னை நோக்கி வந்தன.

“ஊரை சுத்தறவங்க பகலில் சுற்ற வேண்டியதுதானே..? அது ஏன் மிட்நைட்லதான் சுத்தணுமா?”

எனக்குச் சிரிப்புதான் வந்தது. இரவில் பார்க்க வேண்டியதை இரவில்தானே பார்க்க முடியும்? “இது உனக்கு ரொம்ப தேவையா?” என்றும் கேட்டார்கள். நான் என்ன விளக்கம் கொடுத்தாலும், அவர்களைப் பொறுத்தவரை இது தேவை இல்லாத ஆணிதான். இருப்பினும் இந்தக் கேள்விக்கான பதிலை நான் இந்தக் கட்டுரையில் எழுத நினைத்தேன். ஆனால் இந்த இரவு உலாவைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக, எனக்கும் சென்னைக்குமான முன்கதை சுருக்கத்தை உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். அப்போதுதான் இந்த இரவு உலாவின் தேவை குறித்து உங்களுக்குக் கொஞ்சமாவது புரியும்.

நான் மோனிஷா. நான் ஒரு சென்னை வாசி. பலரையும் போல இந்த நகருக்குப் படிக்கவோ அல்லது வேலைக்கோ வந்தவள் அல்ல. இதுதான் நான் பிறந்து வளர்ந்த ஊர். ஏன் ‘வாக்கப்பட்டதும்’ இதே பெருநகரத்தின் ஒரு மூலையில்தான். அப்படிப்பட்ட எனக்கும் சென்னைக்குள் பயணமெல்லாம் கடிவாளமிட்ட குதிரை போல்தான். கல்லூரி விட்டால் வீடு. வீடு விட்டால் கல்லூரி. பணியிடங்களுக்குச் சென்ற போதும் இதே நிலைதான். உறவினர் வீடுகளுக்குக்கூட தனியாகப் போனதில்லை. அதேநேரம் மாலை இருட்டுவதற்கு முன்பு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். இல்லை எனில், வீடே களேபரமாகிவிடும். பதினெட்டு வயதுவரை ஆறு மணிக்குமேல் தனிமையில் இந்தப் பெருநகரத்தில் நான் உலாவியது இல்லை.

கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும்போது முதல் முறையாக நந்தனத்தில் உள்ள ஒரு கல்லூரிக்குக் குழு நடனப் போட்டியில் தோழிகளுடன் கலந்து கொள்ள வீட்டில் அனுமதி கேட்டேன். அவ்வளவுதான். வீடே அதிரிபுதிரியானது. பிரச்னை போட்டியில் கலந்து கொள்வது அல்ல. போட்டியின் நேரமும் தூரமும்தான்.

அம்மா கண்டிப்புடன் போக வேண்டாமென்று சொன்ன பிறகும், நான் போய் தீர்வேன் என்று உறுதியாக நின்றேன். அதுவும் குழு நடனத்தில் கடைசி நிமிடத்தில் ஒருவர் பின்வாங்கினால், அந்த மொத்த ஆட்டமும் நிலைகுலைந்துவிடும். ஆதலால் அம்மாவிடம் சண்டை பிடித்து, பிடிவாதமாகச் சென்று விட்டேன். ஒரு வழியாகப் போட்டியில் ஆடியும் முடித்துவிட்டேன். ஆனால் இருட்டத் தொடங்கவும்தான் எனக்கு உதறலெடுக்க ஆரம்பித்தது. மணி எட்டைத் தாண்டிய பிறகும், வெற்றி பெற்றவர்கள் பெயரை அறிவிக்கவில்லை.

நேரமாகிவிட்டதால், என்னை அழைத்துப் போக அப்பாவே வந்துவிட்டார். ஆனால் நான் கிளம்பிய சில நிமிடங்களில் அந்தப் போட்டியில் எங்கள் குழுவிற்கு முதல் பரிசு கிடைத்ததாக அறிவிப்பு வந்தது. முதல் முறையாக ஒரு போட்டியில் கலந்து கொண்டு நான் பரிசு பெறுகிறேன். ஆனால் அந்தப் பரிசை நான் மேடையேறி வாங்க முடியாமல் போனது. அதற்குக் காரணம் நான் முன்பே குறிப்பிட்ட இந்த நேரமும் தூரமும்தான்.

அன்றிலிருந்து எனக்கு நானே சில சவால்களை உருவாக்கிக் கொண்டேன். அதில் ஒன்று, சென்னையில் எங்கே போட்டி நடந்தாலும் கலந்து கொள்வது என்பது. அப்படியாக நான் சென்னையில் தூரங்களைக் கடந்தாலும், நேரத்தைக் கடக்கும் தைரியம் அப்போதுமே எனக்கு வந்ததில்லை. அது மட்டுமல்லாது என் இரவு பயணங்கள்  எப்போதும் மிரட்டலாகவும் அல்லது படபடப்பும் பதட்டமும் நிறைந்ததாகவும் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தாமதமாகி இருட்டத் தொடங்கிவிட்டாலும், இதயம் அதிவேகமாக அடித்துக் கொள்ளும்.

தனிமையான இரவு பயணங்களில் பத்திரமாகப் போகும் இடத்தைச் சென்றடைய வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எதையும் சிந்தித்தது இல்லை. சிந்திக்க முடிந்ததில்லை.  

அப்படியான நான், இந்த இரவு உலாவில்தான் முதல் முறையாக இரவை உள்ளார்ந்து ரசிக்கவும் நேசிக்கவும் செய்தேன்.

அதிலும் காசிமேடு மீன் வாசனையும் கோயம்பேடு பூ வாசனையும் இருவேறு துருவங்களாகக் காட்சி தந்தாலும், அங்கே பரபரப்பாக வியாபாரம் செய்யும் உழைக்கும் வர்க்க மக்களிடம் எந்தப் பேதமும் எனக்குத் தெரியவில்லை.

இரவு இரண்டு மணிக்கே அவர்களின் ஒவ்வொரு நாளும் பரபரப்புடன் தொடங்கிவிடுகிறது. இப்பெருநகரமே இரவில் மூழ்கி இருக்கும்போது படுமும்முரமாகத் தங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த எளிய மக்கள். ஒரு பக்கம் இப்படி வாழ்வாதாரத்திற்காக விழித்திருக்கும் கூட்டம் என்றால், மறுபக்கம் இரவு ஒரு மணிக்கும் கூட ஓயாமல் கொண்டாட்டத்துடன் குதுகலமாகப் பணம் செலவழித்துக் கொண்டிருக்கும் மற்றொரு கூட்டம் (Urban square) அர்பன் ஸ்கொயரில் திரண்டிருந்தது.

முப்பது வருடங்களுக்கும் மேலாக நான் வசிக்கும் சென்னையின் இரவுக்கு, பயத்தையும் பதட்டத்தையும் தாண்டிய இப்படியொரு முகம் இருப்பதை நான் வியந்து பார்த்தேன்.

ஆனால் என்ன இருந்தும் இரவில் பெண்களுக்கு இது போன்ற பெருநகரத்தில் பாதுகாப்பு இருக்கிறதா? பெருநகரம், கிராமம் என்று எந்த வித்தியாசமும் இல்லை. எப்போதுமே இரவுகள் பெண்களுக்கு அமானுஷ்யமானதாகவே இருக்கின்றன. அப்படிதான் காலம் காலமாக நாம் நம்ப வைக்கப்பட்டும் இருக்கிறோம். படங்களில் எல்லாம் காட்டுவார்களே! இரவில் தனியாக நடந்து போகும் பெண்ணை மறித்து ஆண்கள் கூட்டம் கலாட்டா செய்யும். பின்தொடரும். பாலியல் சீண்டல்கள் தொடங்கி இந்த பின்தொடரல் வன்புணர்வுகளில்கூட முடியும்.

ஒரு பக்கம் அடித்தட்டு உழைக்கும் பெண்களுக்கு நடுநிசி என்பது ஒரு பொருட்டாகவே இல்லை என்ற போதும், மற்ற பெண்களின் மனதில் ஒன்பது மணி இரவு வெளிகூட ஆபத்தானதாகவே இன்னும் இருக்கிறது. அப்படியான பயத்தைக் கடந்து பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வெளியே வரும்போதெல்லாம், ஏதோ ஓர் ஊரில் ஏதோ ஒரு நிர்பயா பாதிக்கப்படுகிறாள். கொடூரமாக வன்புணர்வு செய்யப்படுகிறாள். கேட்டால் ‘அவள் தனியாக இரவில் பயணித்தாள்’ என்று பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் மீதே பழியைத் தூக்கிப் போடுவார்கள். இதனாலேயே என்னைப் போன்ற பெண்களுக்கு இரவும் ஓர் எல்லைக்குள் சுருங்கிவிடுகின்றது. இங்கே ஆபத்தை விளைவிக்கும் ஆண்களுக்கு எந்தவிதத் தடையும் இல்லை. அவர்கள் மிக சகஜமாக இரவில் பயணிக்கிறார்கள்.

‘இரவில் வெளியே செல்லாதே’ என்று பெண்ணிடம் சொல்கிற அதே சமூகம், அதை ஆண்கள் கூட்டத்திடம் சொல்வதும் இல்லை. அவர்களை நம்மால் நிறுத்த முடியாதபோது, நாம் ஏன் நமக்கு மட்டும் வேலிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும்? எந்த லட்சுமணக் கோடும் எந்த இராவணனிடமிருந்தும் பெண்களைக் காப்பாற்றப் போவதில்லை.

பிறகு என்னதான் இதற்கு எல்லாம் தீர்வு?

நான்கு ஆண்கள் சுதந்திரமாக உலாவும்போது, அதே இடத்தில் பத்துப் பெண்கள் உலாவினால் இது போன்ற குற்றச்செயல்கள் நிகழுமா? நிர்பயா பயணித்த அதே இரவில், அதே பேருந்தில் இன்னும் நிறையப் பெண்கள் ஏறி இருந்தால் இத்தகைய வன்கொடுமை அப்பெண்ணிற்கு நேர்ந்திருக்குமா?  

நாமெல்லாம் இரவைப் பார்த்து விலகி ஓட ஓட, அது நம்மை உக்கிரமாகத் துரத்தி வருகிறது. நாம் ஓடுவதை நிறுத்துவோம். தானாக இந்த இரவுகள் நம்மை துரத்துவதையும் மிரட்டுவதையும் நிறுத்திவிடும். எங்களின் இந்த இரவு உலாவின் நோக்கமும் இதுதான். பெண்களாகிய நாம் இரவை கைக்கொள்ள வேண்டும்.

நடு இரவில் மெரீனா பீச்சில் முப்பத்தைந்து பெண்கள் ஒன்றாகக் கை கோத்து வட்டமிட்டு நின்ற அந்தத் தருணம் என் வாழ்வில் மறக்கவே முடியாத தருணம். அந்தச் சங்கிலி பிடிகளில் இரவின்  மிரட்சியை உடைக்கும் ஓர் அசாத்தியத் துணிச்சல் இருந்தது.

வயது, வேலை, சூழ்நிலை என்று எவ்விதத்திலும் எங்கள் யாருக்கு இடையிலும் ஒற்றுமைகள் இல்லாவிட்டாலும், நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க, ‘பெண்கள்’ என்பதே போதுமான காரணமாக இருந்தது.

அதுவும் இந்த இரவு உலாவை மேலும் மேலும் சிறப்பாக்கிய மூன்று விஷயங்கள் என்றால், வயது வரம்பற்ற கிடைத்த பல பெண் தோழமைகள், வழிநெடுக சென்னையைக் குறித்து நிவேதிதா அக்கா அவர்கள் பகிர்ந்த சுவாரசியமான வரலாறுகள், இறுதியாகச் சாலைகளை ஒளியூட்டும் விளக்குகளைப் போல ஜகஜோதியாக மின்னிய உழைக்கும் வர்க்கப் பெண்கள்.

அதுவும் முப்பத்தைந்து பெண்களை நட்டுநடு நிசியில் அழைத்துச் செல்வதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருந்தபோதும், அதனை எல்லாம் கடந்து நிவேதிதா அக்கா இப்பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

முக்கியமாக மிரட்சியும் பதட்டமும் இல்லா ஓர் ஆனந்தமான இரவு அனுபவத்தை எங்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுத்தார்.

இந்த இரவு உலாவிற்காக ஹெர் ஸ்டோரிஸ் நிவேதித்தா அக்காவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். முக்கியமாக அவர் வழி நெடுக பதிவு செய்து வந்த அரிய வரலாற்றுத் தகவல்களுக்கு. அதுவும் வசதியாக நமது சமூகம் பெண்களின் வரலாற்றைத் துப்புரவாக அழித்து விட்டு ஆண்களை மட்டும் வரலாற்றுத் தலைவர்களாகக் கிடைக்கும் இடத்தில் எல்லாம் சிலையாக வைத்துக் கொண்டாடுவதை எல்லாம் கேட்கும்போது, அதிர்ச்சியாகவும் கோபமாகவும் வந்தது.

இனியாவது இதெல்லாம் மாற வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த தலைமுறைக்கு இந்தப் பெண்களின் வரலாறைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். இந்தப் பயணம், கொண்டாட்டம் எல்லாம் தாண்டி இந்த வரலாற்றுத் தகவல்கள் எங்கள் பயணத்தின் நோக்கத்தை இன்னும் சிறப்பித்தது.

அத்துடன் அந்த இரவு உலாவை இன்னும் இன்னும் ஒளியூட்டியது கீதா இளங்கோவன் தோழரின் நேர்மறையான சிந்தனைகள்தாம். மேலும் பயணித்த அத்தனை பெண்களும் முழு இரவில் ஒரு நொடிகூட ஓய்ந்தோ அல்லது தளர்ந்தோ, நான் பார்க்கவில்லை. இன்னும் கேட்டால், ஓயாது துரத்தும் இந்தக் குடும்ப கடமைகளிலிருந்து இந்தத் தூக்கமில்லாத இரவு விடுதலையைத் தந்ததாகவே தோன்றியது.

ஏன், குடும்பம் குழந்தைகளுடன் பயணித்தாலும் நமக்கான சில பணிகள் எப்போதுமே இருக்கும். ஆனால் இந்தப் பயணம் முழுக்க முழுக்க எங்களுக்கானதாக இருந்தது. புது உத்வேகத்தைத் தந்தது.

வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு சிறப்பான அனுபவம் இந்த இரவு உலா!

படங்கள் நன்றி: கோகிலா

படைப்பாளர்

மோனிஷா

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர். இணையத்தில் 27 நாவல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் இருபது நாவல்கள், புத்தகங்களாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பெண்ணியம், சூழலியல் விழிப்புணர்வு இரண்டும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.