பொருள் 13

ஒரு சமூகம் ஆண்களை மையமாகக் கொண்டு இயங்கும்போது ஒரு மாதிரியாகவும் பெண்களை மையப்படுத்தி இயங்கும்போது இன்னொரு மாதிரியாகவும் திகழ்வதை மானுடவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இருவரில் யாருடைய செல்வாக்கு நீடிக்கிறது என்பதை வைத்து அந்தச் சமுகத்தின் மதிப்பீடுகள் மாற்றம் காண்கின்றன. பல அமெரிக்கப் பழங்குடி இனங்களும் ஆப்பிரிக்கப் பழங்குடிக்களும் இன்றளவும் பெண் மைய சமூகத்தில்தான் வாழ்ந்து வருகின்றன. மற்ற சமூகங்கள் அனைத்தும் ஆண்களையே மையப்படுத்தி இயங்கி வருகின்றன. எனவே இந்த இரு சமூக அமைப்புகளிலும் காணப்படும் வேறுபாடுகளை இப்போதும்கூட ஒரு மானுடவியலாளரால் நெருங்கிச் சென்று ஆராய முடியும்.

பெண் மைய சமூகத்தில் ஒரு குழந்தை பிறக்கும்போது அந்தக் குழந்தை தாயின் குழந்தையாகப் பார்க்கப்படுகிறது. அப்படித்தான் அந்தச் சமூகத்தால் என்றென்றும் அழைக்கப்படுகிறது. எந்தப் பெண்ணால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தை என்பதே அதன் அடையாளம். ஆண் மைய சமூகத்தில் இது அப்படியே தலைகீழ். தந்தையின் பெயர் அல்லது அடையாளமே இங்கு குழந்தையின் அடையாளம். அப்படியானால் ஓர் ஆண் எந்தக் குழந்தைக்கும் உரிமை கொண்டாட முடியாதா? முடியும். தன் சகோதரியின் குழந்தைகளை அவன் தன் குழந்தைகள் என்று சொல்லிக்கொள்ளலாம். தன் இணையின் குழந்தையை அவன் அப்படிச் சொல்லிக்கொள்ள முடியாது.

பெண் மைய சமூகம்

ஆனால், இந்த வழக்கம் ஆண் மைய சமூகம் (பாட்ரிலீனி) உருவானபோது உடைந்தது. தன் இணை பெற்ற குழந்தையை ஆண் தன் குழந்தை என்று அறிவித்துக்கொண்டான். இதுவே சமூக வழக்கமாகவும் மாறியது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்களே ஆண்கள்தாம் என்கிறார் மெரிலின் ஃபிரெஞ்ச். மாற்றம் என்பதைவிட போர் என்று இதனை அழைக்கலாம். சமூகத்தில் பெண்களுக்குக் கிடைத்து வந்த மதிப்பையும் மரியாதையையும் ஆண்கள் தட்டிப்பறித்திக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போரே இந்தச் சமூக மாற்றத்தைக் கொண்டுவந்தது என்றும் சொல்லலாம்.

பெண்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை மட்டுமே ஆண்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றிக்கொண்டார்களே ஒழிய, பெண்கள் அதுகாறும் செய்துவந்த பணிகளை ஆண்கள் தங்களுடையதாக மாற்றிக்கொள்ளவில்லை. அதாவது, குழந்தை இனி என்னுடையது என்று ஓர் ஆண் உரிமை கொண்டாடினானே தவிர, அந்தக் குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை, அந்தக் குழந்தையை வளர்த்தெடுக்கும் கடமைமையை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தப் பணிகளையெல்லாம் தன் இணையிடம் இருந்து அவன் பறித்துக்கொள்ளவில்லை. அவற்றை அவளே செய்துகொள்ளட்டும் என்று ‘பெருந்தன்மையுடன்’ இருந்துவிட்டான். மெரிலின் ஃபிரெஞ்சின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ஏவாள்களிடம் இருந்து ஆதாம்கள் குழந்தைகளைப் பறித்துக்கொண்டதற்குக் காரணம் ‘குழந்தைகள் மீது கொண்ட அன்பினால் அல்ல அதிகாரத்தின்மீது கொண்ட அன்பினால்தான்.’

பெண் மைய சமூகத்தில் திருமணம் முடிந்ததும் பெண் வீட்டுக்கு அருகில் குடிபெயர்ந்துவிடுவது வழக்கம். காரணம், நிலத்தின் உரிமையாளராக பெண்ணே இருப்பார். அம்மா, அவருக்குப் பிறகு மகள் என்று வழிவழியாக நிலம் கைமாற்றப்படும் முறை நிலவிவந்தது. நிலமே செல்வம் என்பதால் ஆண் தன் உறவுகளை விட்டுவிட்டு மனைவியின் ஊருக்குக் கிளம்பிச் சென்றுவிடுவான். மனைவியின் குடும்பம் அவனுடைய குடும்பமாக இருக்கும். ஆணுக்கு அதிகாரம் வந்ததும் நிலம் உள்ளிட்ட சொத்துகள் அவன் கரங்களில் குவிந்தன. அப்பா, பிறகு மகன் என்று சொத்து கைமாறியது. பெண், திருமணத்துக்குப் பிறகு தன் பெற்றோர் தரப்பு உறவுகளைக் கைவிட்டுவிட்டு கணவனின் வீட்டில் குடியேறினாள்.

ஆனால், இந்த மாற்றத்தின் விளைவுகள் ஒன்றுபோல் இருக்கவில்லை. பெண் வீட்டில் ஆண் புகுந்தபோது ஆண் சுதந்தரமானவனாக இருந்தான். அவனால் சுயமாக முடிவெடுக்க முடிந்தது. அவனுடைய கருத்துகளுக்கு குடும்பத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதே நேரம், பெண் தன்னுடையை சுதந்தரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டாள். அவளுடைய உடல் அவளுடையதாக இருந்தது. அவள் சிந்தனைகள் கட்டுப்படுத்தப்படாதவையாக இருந்தன. குழந்தைகள், பெண்களை மதித்து வளர்ந்தார்கள்.

ஆண் வீட்டுக்குப் பெண் குடிபெயர்ந்தபோது இவையனைத்தும் தலைகீழ் மாற்றமடைந்தன. பெண் ஆணுக்குக் கட்டுப்பட்டவளாக மாறினாள். பெண்ணின் சுதந்தரம் பறிக்கப்பட்டது. அவளுடைய சிந்தனைகள் கட்டுப்படுத்தப்பட்டன. தன் இயல்புகளை அவள் மாற்றிக்கொள்ள வேண்டிவந்தது. குடும்பத்தின் முடிவுகளை அவள் எடுப்பதில்லை என்பதோடு அவளுடைய கருத்து கோரப்படுவதும் இல்லை என்றானது. அவளுடைய உடல் அவளுடைய கணவனுக்கு உரியதாக மாற்றப்பட்டது. குழந்தை அவனுடையதாக மாறியது. ஆணே உயர்ந்தவன் என்று அந்தக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தது. குடும்பமும் சமூகமும் ஆண்களை உயர்வாகக் கருதி போற்றியதையும் பெண்களை இழிவாகக் கருதி அலட்சியப்படுத்தியதையும் அந்தக் குழந்தைகள் வளரும்போது கண்டுகொண்டனர். இதுவே சமூகத்தின் நியதி என்று அவர்கள் அர்த்தப்படுத்திக்கொண்டார்கள்.

குழந்தைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது அந்தக் குழந்தைகளை வழங்கிய உடல்களையும் ஆண்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்கள் என்கிறார் மெரிலின் ஃபிரெஞ்சு. பெண் உடலைக் கட்டுப்படுத்துவதன் மூலமே அதிகாரத்தை ஆண் கைப்பற்றினான். சமூக மதிப்பையும் ஈட்டினான். இந்த அதிகாரத்தை வென்றெடுக்க அவனுக்கு வன்முறை தேவைப்பட்டது. இந்த வன்முறையை அவன் பெண்ணின்மீதும் பிரயோகித்தான்.

ஏவாளின் சமூகமும் ஆதாமின் சமூகமும் நேர் எதிரானவையாக இருந்தன. ஆதாமின் மனைவி உரிமையற்றவளாக இருக்க வேண்டியிருந்தது. அவளுக்குக் குரல் கொடுக்க ஆதாமின் குடும்பம் முன்வரவில்லை. எனவே அந்நியர்களின் சமூகத்தில் தன்னந்தனியாக அவள் போராட வேண்டியிருந்தது. அவளுக்கென்று உடைமைகள் இருக்கவில்லை. உரிமைகள் மறுக்கப்பட்டன. சில சமூகங்களில் பெண் தன் கணவனின் குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி இருந்தது. ஆனால், அப்படி வெளியேறும்போது அவள் தன் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாது என்றொரு விதி இருந்தது. எனவே அவர்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டு தங்கியிருந்தார்கள்.

ஆண்களை மையப்படுத்தி, ஆண்களால் நிர்வகிக்கப்பட்ட சமூகங்களில் பெண்களின் உழைப்பும் உடலும் ஒருசேர சுரண்டப்பட்டன. ஆணும் பெண்ணும் சமமான உயிர்கள் என்னும் நம்பிக்கை தகர்க்கப்பட்டது. பெண்ணை நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்னும் விழுமியங்கள் கைவிடப்பட்டன. ஓர் ஆணால் வெற்றிகொள்ளப்பட்ட உடைமையாகப் பெண் பாவிக்கப்பட்டாள். ஒரு பெண் தன் பெற்றோருடன் கொண்டிருந்த உறவு அறுக்கப்பட்டது. அதன்மூலம் அவளுடைய பாரம்பரிய வேரும் அழிக்கப்பட்டது. பளபளப்பான நாகரிக நகரங்களாக அறியப்படும் ஏதெனும் ரோமும் பெண்களை அடிமைப்படுத்திய சமூக அமைப்பைக் கொண்டிருந்தன.

ஆஸ்திரேலியப் பழங்குடிகள் இதனை இப்படி நினைகூர்கிறார்கள். ‘நாங்கள் ஒரு காலத்தில் பல புனிதப் பாடல்களை வைத்திருந்தோம். பல பொருள்களைச் சேகரித்து வைத்திருந்தோம். பல பழக்கவழக்கங்களைக் கடைபிடித்து வந்தோம். ஆனால், ஆண்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டுவிட்டார்கள்.’ உயர்ந்த இடத்தை வகித்துவந்த பெண் கடவுள்கள் சுருங்கிப்போனார்கள். ஓர் உதாரணம், சிதூரி. கில்மேஷ் காவியத்தில் இடம்பெற்ற இந்தத் தெய்வீகப் பெண் பிற்காலத்தில் ஒரு வேலைக்காரியாக மாற்றப்பட்டார். ஆண்களின் அதிகாரத்தைக் கொண்டாடும் கடவுள்கள் உருவாக்கப்பட்டன.

ஆதாமின் குழந்தைகளை இன்று காணும் சிம்பன்ஸி குழந்தைகள் என்ன நினைத்துக்கொள்ளும்?

(தொடரும்)

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.