அப்பா என்றொரு அஸ்திவாரம்

இதை எழுதத் தொடங்கும் இரு நாட்கள் முன்புதான், பேசி நாளாயிற்றே என என் தோழிக்கு அழைத்தேன். அவள் பேச ஆரம்பித்ததும், ” அப்பா இறந்துட்டார்டி”, என அழுதாள். உருகி, உடைந்து, அமுங்கிய குரலில் இதைச் சொன்னாள்.

” உனக்கு தெரியும்ல என் அப்பாவை எவ்ளோ பிடிக்கும்னு. இனி யார்ட்ட நான் பேசுவேன். சரி தப்புன்னு பேச எனக்கு அவர் மட்டும்தான இருந்தார்”…என தேம்பித் தேம்பி அழுதாள். நான் ஏதும் சொல்ல இயலாத நிலையில் இருந்தேன். தன் அப்பாவை இறுதி காலத்தில் கூட பார்க்க இயலாதபடி ஒரு அயல் நாட்டில் இருக்கிறாள். என்ன சொன்னாலும் கோபப்பட்டாள். ” பைத்தியம் மாதிரி அவர்கிட்ட வாட்ஸப்ல பேசிட்டு இருக்கேன்.. அவர்கிட்ட பதிலே வரலைடி”, என வெடித்து அழுத போது நான் வார்த்தைகளின்றி அழுதேன். அவள் அப்படி அழுததற்கு பின் பெரிய கதை ஒன்று இருக்கிறது.

அவளுடைய ஊர் மிகச் சிறிய கிராமம் . அந்த கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லாருமே அவளுடைய உறவினர்கள்தான். பெரிதாக படிக்காதவர்கள். அவளை பத்தாவது முடித்தவுடன், பதினொன்றாவதில் கோவையில் ஒரு பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தார் அவளுடைய அப்பா.

அவள் ஊருக்கு வரும் போகும் போதெல்லாம், ஒரு உறவினர் பையன் ஒருவன் அவளை காதலிப்பதாகச் சொல்லியிருக்கிறான். அந்தப் பையன், இவள் குடும்பத்தின் பகையாளி குடும்பத்தைச் சேர்ந்தவன். நிலத்தகராறினால் தொடர்ந்த பகையால், இரு குடும்பங்களும் பேசிக் கொள்வதில்லை. ஆனால் அவள் வயது அதையெல்லாம் யோசிக்கவில்லை. இவளும் பிடித்துப் போய் காதலித்தாள். பள்ளிப்படிப்பு முடிந்து, கல்லூரி முதலாம் வருடம் முடியும் வரை அந்த காதல் தொடர்ந்தது.

ஒரு நாள் அந்த பையனும், அவனுடைய குடும்பத்தாரும் வந்து அவள் வீட்டின் முன் வந்து சண்டையிட்டனர். அவள் எழுதிய காதல் கடிதங்களை, எடுத்துக் கொண்ட போட்டோக்களை அங்கு கூடிய எல்லாரிடமும் காண்பித்திருக்கிறான். அவளை மோசமாக வேறு திட்டியிருக்கிறான். இவர்கள் குடும்பத்தை அவமானப்படுத்தவும் பழிவாங்கவும்தான், அவளை அவன் காதலித்தது போல் நடித்திருக்கிறான் என அவளுக்கு அதன்பின் தான் தெரிந்தது. அவள் எழுதிய கடிதங்கள், அவளுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை எல்லாம் சாட்சியாக வைத்து ஊரறிய அவமானப்படுத்தியிருக்கிறான்.

யோசித்துப் பாருங்கள்… 25 வருடங்களுக்கு முன் அதுவும் கிராமத்தில், இப்படி ஒரு பெண்ணை அவமானப்படுத்தினால், அந்த ஊரில் எப்படி பேசுவார்கள்? அவளுடைய எதிர்காலத்தையே சிதைத்திருப்பார்கள்.

அப்பாவிற்கு இப்படி ஒரு அவமானம் கொடுத்துவிட்டோமே என அவள் கூனிக் குறுகி அழுதபடி அறையில் அமர்ந்திருந்திருக்கிறாள். அவளுடைய அப்பா வந்து அவள் காலருகே அமர்ந்து கொண்டார். அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாகக் குலுங்கி அழுதிருக்கிறார். அழுதபின், ” நான் வளத்த புள்ள நீ. தப்பா போக மாட்ட.. இப்பவும் நான் உன்ன நம்பறேன் கண்ணு”, என மட்டும் சொன்னாரே தவிர, ஒரு வார்த்தை கோபமாகவோ, வெறுப்பாகவோ அவளிடம் பேசவில்லை. பல நாட்கள் அவள் அந்த அறையை விட்டு வெளியே வரவேயில்லை.

நம்பி மோசம் போய்விட்டோமே என்ற வலி ஒருபுறம், இவ்வளவு நல்ல மனிதரான தனது அப்பாவிற்கு அவமானம் கொடுத்துவிட்டோமே என்ற வேதனை மறுபுறம். அதிலிருந்து அவள் மீளவே நாள்களானது. அவளுடைய அந்த வருட கல்லூரி வாழ்க்கையும் வீணாகப் போனது. அவர்களுடைய சுற்றதார்கள் வந்து, “அவள் படித்தது போதும். ஏதாவது பையனைப் பார்த்து மணம் செய்து வைத்துவிடுங்கள்”, என அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் அவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவளிடம் வந்து அவளுடைய படிப்பை மீண்டும் தொடரும்படி அப்பா சொல்லியிருக்கிறார்.

நன்றாக படிக்கக் கூடிய அவள், மீண்டும் அதே கல்லூரியில் படிப்பை ஆரம்பத்திலிருந்து தொடங்கியிருக்கிறாள். பட்டப்படிப்பு முடித்தவுடன் வேறொரு கல்லூரியில் முதுநிலையில்தான் அவளை நான் சந்தித்தேன். அப்போது என்னுடன் இந்த விஷயத்தை பகிர்ந்தாள். எப்போதும் அவளுக்கு அப்பாதான். “என் அப்பா, என் அப்பா”, என எல்லாவற்றிற்கும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருப்பாள். ” எங்கம்மா கூட அந்த பிரச்சனையால என்னை திட்டிட்டே இருப்பாங்க. என் அப்பா ஒரு வார்த்தை கூட என்னைத் திட்டலைடி. அதுதான் எனக்கு பயங்கற குற்ற உணர்ச்சி தந்துச்சு…எங்கப்பா மட்டுமில்லைனா நான் இப்படி இங்க உக்காந்து படிச்சுட்டு இருக்க முடியாது”, என நெகிழ்வுடன் பல முறை சொல்லியிருக்கிறாள்.

அவ்வளவு தோழமையாக அவளிடம் பேசுவார். அவருக்கு தன் மகளைப் பார்த்து பெருமை, எம்.ஃபில் வரை படித்து, சிங்கப்பூரில் மணமாகிச் சென்று, அங்கும் படித்து, இப்போது கைநிறைய சம்பாதிக்கிறாள். அவள் மட்டுமல்ல, அவளுடைய தங்கையையும் அதே போல் படிக்க வைத்ததால், அவளும் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கிறாள். அவள் அப்பா காதலுக்கு எதிராகவும் இருந்ததில்லை என்பதன் சாட்சியாக என் தோழியின் தங்கை காதலித்தவனையே மணமும் செய்து வைத்திருக்கிறார்.

யோசித்துப் பாருங்கள் அவளுடைய அப்பா இடத்தில் ஒரு சாரசரி அப்பா இருந்திருந்தால், அதுவும் காதல் சகஜமாக இல்லாத காலக்கட்டத்தில், தன்னை ஊரார்முன் அவமானப்படுத்தியதற்காக, காதலித்ததற்காக அடித்திருக்கலாம், அவளைக் குறுக வைத்திருக்கலாம். அவள் வாழ்நாள் முழுவதும் மாறாத காயங்களைத் தந்திருக்கலாம், அவளே வேறு தவறான முடிவை எடுக்க வைத்திருக்கலாம், அல்லது ஊரார் சொன்னபடி சிறு வயதிலேயே மணம் செய்ய வைத்து அவள் வாழ்க்கையை திசைமாற்றியிருக்கலாம்.

ஆனால் அவர் அப்படியெல்லாம் செய்யாமல், அவள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் படி என்று சொல்லியிருக்கிறார்.

ஊராரை விட தன் மகள், அவள் வாழ்வு முக்கியம் என சொல்லாமல் வாழ்ந்து காட்டி, இரு பெண் குழந்தைகளையும் ஜம்மெனப் படிக்க வைத்து, அவர்களைத் தலை நிமிர்ந்து வாழ வைத்திருக்கிறார். அவள் மீது வைத்த நம்பிக்கை…. அதை எப்படி அவள் உதாசீனப்படுத்த முடியும்?

இப்படிப்பட்டவரை கொரோனா கொண்டு போய்விட்டது என்பதை அவளால் எப்படித் தாங்க இயலும்?

இவளைப் போலவே, இது போல் கரை சேர்ந்த பல பெண்கள் தங்கள் அப்பாக்களைத்தான் ஹீரோக்களாகச் சொல்வார்கள். கல்லூரியில் நான் வகுப்பெடுக்கும் போது, மாணவர்களுக்கு போரடிப்பதாக நினைத்தால், உடனே அவர்களைக் கலகலப்பாக்க ஏதாவது கேள்வி கேட்பேன்.

” இப்போ இந்த சமயத்தில் எதை, அல்லது யாரை மிஸ் பண்றீங்க?”, என ஒவ்வொருவரையாக கேட்டுக்கொண்டு வந்தேன். அந்த வகுப்பில் காஷ்மீரிலிருந்து 3 பெண்கள் படித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடமும் இந்த கேள்வி கேட்ட போது 3 பேருமே சொல்லி வைத்தாற் போல், ” எங்கள் அப்பா தான்”, என்றனர். “என் அப்பா இல்லையென்றால் இந்தியாவின் எல்லையிலிருக்கும் எங்கோ ஒரு கிராமத்திலிருந்து என்னால் இங்கு படிக்க வந்திருக்க முடியாது. எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பார்”, என ஒரு பெண் சொன்னாள்.

பெண்களின் மனதில் அப்பாக்கள் இடம் பிடிப்பது அத்தனை எளிதல்ல. அந்த நம்பிக்கையை பெற அவர்கள் வெறும் அறிவுரைகளை உதிர்த்துக் கொண்டிருந்தால் நடந்திருக்காது. வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.

எத்தனை எளிமையாக இருந்தாலும் அவளது அப்பாதான் அவள் உலகத்தின் ராஜா. அசைக்க முடியாத கோட்டையை அவருக்காகக் கட்டிவைத்திருப்பார்கள்.

என் தோழியின் வாழ்விலும் அதுதான் நடந்தது. அவளுடைய கணவர் எத்தனை பெரிய இடத்தில் வேலை பார்த்தாலும், வசதியாக இருந்தாலும், கிராமத்தில் கம்மாடு கட்டி வயல் வெளியில் வேலை பார்த்த அவளுடைய அப்பாவிற்குதான் அவள் மனதில் அரியாசனம். . அப்பேர்ப்பட்ட அப்பாவை இழந்த வலி அவளுக்கு ஈடுசெய்ய முடியாததுதான்.

அப்பா நல்ல வழிகாட்டியாக இருந்தால், எப்பேர்ப்பட்ட பிள்ளையையும் நல்வழிப்படுத்தலாம். பிள்ளைகள் மேல் வைக்கும் நம்பிக்கை அவர்களுக்கு கரை சேர்க்கும் ஒரு தக்கைப் போல். எப்படியும் நீந்திக் கரை சேர்வார்கள்.

இதே மோசமான அப்பா, அம்மா இருந்தால்? நான் கண் கூடாய்ப் பார்த்த மோசமான அப்பா மற்றும் அம்மாக்களால் நேர்ந்த பிள்ளைகளின் கதிகளையும் சொல்ல விரும்புகிறேன்.

அடுத்த வாரம் பார்க்கலாம்...

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ஹேமி கிருஷ்

பெருந்துறையைச் சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய  'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில், இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.