ஜெயசிங்காரம் ஹரிபாலா

தாயில்லாமல் வளர்ந்த என் அம்மா ஜெயா, திருமணம் ஆன சில நாட்களிலேயே என் பெரியப்பா பிள்ளைகளுக்குத் தாயாக மாறினார். என் பெரியம்மா இறந்த போது மூத்த அண்ணனுக்கு 9 வயது, கடைசி அண்ணனுக்கு 3 வயது. அம்மா இறந்தது தெரியாமல் அம்மாவைக் கேட்டு அழும் குழந்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? இரவு 12 மணிக்கு எழுந்து எனக்கு கேசரி வேண்டும் என்று கேட்பாராம் அப்பு அண்ணன். அம்மாவும் செய்து தருவாராம். பெரியப்பா பிள்ளைகள், சித்தப்பா பிள்ளைகள் என இப்போதுகூடப் பிரித்துப் பேச மாட்டோம்.

நாங்கள் விவசாயக் குடும்பம். முப்போகம் விளையக்கூடியது. அப்பாவும் சித்தப்பாவும் அரசாங்க வேலையில் இருந்தனர். அம்மா சைவம். ஆனால், எல்லா வகையான அசைவ உணவுகளையும் அருமையாகச் சமைப்பார்.

முதல் பிரசவத்தில் 9 மாதக் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டு, நெல் அவித்து, மாடியில் ஒற்றை ஆளாகக் கொட்டிக் காய வைத்திருக்கிறார்! மறுநாள் சுகப்பிரசவம் நடந்துள்ளது.

ஊறுகாய், பலகாரங்கள் செய்வதிலும் வல்லவர். யாருக்கு வேண்டும் என்றாலும் செய்து கொடுப்பார். அம்மா செய்யும் சீடை ரொம்பப் பிரபலம். சின்னப் பாராட்டில் மனம் மகிழ்ந்து போவார்.

எங்கள் வீட்டுக்கு அருகில் வாய்க்கால் ஓடுகிறது. அதில் கன்றுக்குட்டியை ஓட்டிச் சென்று தவறி விழுந்துவிட்டார் ஆனந்தன் அண்ணன். அவர் இறந்து 43 வருடங்களாகிறது. இன்றும் அவரைப் பற்றிப் பேசாத நாளே இல்லை.

அம்மா நிறைய புத்தகங்கள் படிப்பார். குமுதம், ஆனந்த விகடன், மங்கையர்மலர், ராணி, கண்மணி என்று வீடு முழுவதும் புத்தகங்கள் நிரம்பியிருக்கும். பக்கத்து வீட்டுப் பாட்டியுடன் தாயம் விளையாடுவார். புது சினிமா ஒன்றையும்விட மாட்டார்.

’பொம்பள பிள்ளைகளுக்குப் படிப்புதான் முக்கியம்’ என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தார். ’அம்மா என்பது சொல் அல்ல; அது ஓர் உணர்வு.’

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அம்மாவிடம் சொன்னால் பாரம் குறைந்ததுவிடும். பள்ளி விட்டு வந்ததும் ஒன்றுவிடாமல் சொன்னால் தான் எனக்குத் தூக்கம் வரும்.

எங்கள் படிப்பிற்காகவே சொந்த கிராமத்திலிருந்து பக்கத்து ஊருக்கு வந்தோம். அண்ணன்களும் எங்க வீட்டிலேயே தங்கிப் படித்தார்கள். நாங்கள் எல்லோரும் சாப்பிட்ட பின்னரும் இன்னும் 2 பேர் சாப்பிடக்கூடிய அளவிலேயே உணவு செய்து வைத்திருப்பார் அம்மா.

அம்மாவும் அப்பாவும் (ஜெயா – சிங்காரவேலு)

எங்கள் ஊர்க்காரர்கள் யார் மருத்துவமனையில் இருந்தாலும் உணவு, எங்கள் வீட்டிலிருந்துதான் போகும். கொஞ்சம் வளர்ந்த பிறகு, “ஏம்மா, இப்படிக் கஷ்டப்படற? முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” என்று கேட்டாலும் ”என்னால் முடிந்த வரை செய்யறேன்” என்பது தான் பதிலாக இருக்கும்.

அம்மாவைப் போலவே என் குழந்தைகளுக்குச் சிறந்த அம்மாவாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்!