ஆண் இனப்பெருக்க உறுப்புகள், பெண் இனப்பெருக்க உறுப்புகள் இரண்டுமே ஒரே உடலில் இருந்தால் அவை இருபால் உயிரிகள் (Simulataneous hermaphrodites) என்று அழைக்கப்படுகின்றன. ஆண் – பெண் என்ற தனியான பால்பகுப்பு உள்ள இனத்தில் அவ்வப்போது பிறக்கும் இருபால் உயிரிகள் தற்செயலானவை. ஆனால், சில இனங்களில் எல்லா விலங்குகளுமே ஆண் – பெண் இரு வகை உறுப்புகளோடும் பிறக்கின்றன. பலவகை நத்தைகள், கடல் மெல்லுடலிகள், மண்புழுக்கள், கிலிஃபிஷ் என்ற ஒருவகை மீன் போன்ற பல உயிரினங்களில் இந்தப் பண்பு உண்டு.

ஒவ்வொரு விலங்கிலும் ஆண் – பெண் இருவகை உறுப்புகளும் உண்டு என்றாலும் இணைசேரும்போது முட்டைகளை உருவாக்க நிறைய ஆற்றல் தேவை என்பதால் உயிரணுக்களைத் தருகிற ஆணாக இருப்பதையே எல்லா விலங்குகளும் விரும்புகின்றன. சில வகை கடல் நத்தைகள் இணைசேரும்போது, இரு விலங்குகளும் ஆணாக இயங்க போட்டிபோடும், அது ஒரு சண்டையாக மாறும். சண்டையில் வெற்றிபெறும் விலங்குகளுக்கு ஆணாக இருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஹேம்லெட்

“உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம், நாம டீல் போட்டுக்கலாமா?” என்று ஓர் உடன்படிக்கைக்கு வரும் விலங்குகளும் உண்டு. ஹேம்லட் எனப்படும் ஒருவகை கலவா மீன் ஓர் இருபால் உயிரி. இந்த மீன்கள் இணைசேரும்போது, ஒரு சுழற்சி முறை பின்பற்றப்படுகிறது. முதலில் ஒரு மீன் ஆணாக இருக்கும், அடுத்த இணைசேரலில் அது பெண்ணாக இயங்கி முட்டைகளைத் தரும்.

சரி… ஒருவேளை ஆணாக இருந்து உயிரணுக்களைத் தரும் மீன், அடுத்த முறை முட்டைகளைத் தர விரும்பாமல் அந்த இடைவெளியில் வேறு இணையைத் தேடிப் போய்விட்டால்?

அதைத் தடுக்க இரு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

முதலாவது, பெண்ணாகச் செயல்படும் மீன், முதல்முறை இணைசேரும்போதே எல்லா முட்டைகளையும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. சில முட்டைகளை மட்டுமே இடுகிறது. ஆகவே ஆணாக இருக்கும் மீனால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே முட்டைகளை கருத்தரிக்கச் செய்ய முடியும். அது தன் கடமையிலிருந்து தவறாமல் அதே இணையோடு அடுத்த முறை பெண்ணாக இருந்து இணைசேர்ந்தால் மட்டுமே மூன்றாவது சுழற்சியில் மேலும் முட்டைகளைக் கருத்தரிக்க வைக்க முடியும்.

இரண்டாவது, இந்த மீன்கள் சூரியன் மறையும் நேரத்தில் மட்டுமே இணைசேர்கின்றன. இருள் கவியக் கவிய ஆபத்துகள் அதிகரிக்கும் என்பதால், ஒரு மீனுடன் ஆணாக இணைசேர்ந்துவிட்டு, சுயநலமாக வேறு இணையைத் தேடுவது நேரத்தை வீணடிக்கும். அடுத்த இணையைக் கண்டுபிடிப்பதற்குள் இருள் கவிந்துவிட்டால் இணைசேரும் வாய்ப்பும் போய்விடும். ஆகவே கிடைத்த ஒரு மீனுடன் ஒழுங்காக ஒப்பந்தத்தைக் கடைபிடிப்பதுதான் நல்லது!

இதுபோல சுழற்சி முறையில் இணைசேர்வது Egg trading என்று அழைக்கப்படுகிறது.

எல்லாம் சரிதான்… ஆண்/பெண் இருசெல்களும் உடலுக்குள்ளேயே இருந்தால் இத்தனை நிர்ப்பந்தகளுக்குக் கட்டுப்பட்டு ஏன் வேறு இணையைத் தேடிப் போக வேண்டும்? தன் உயிரணுவுடன் தன் முட்டையையே சேர்த்துவிட்டால் யார் உதவியும் இன்றித் தனியாகக் கருத்தரித்துவிடலாம் இல்லையா?

இதுபோல செய்யும்போது மரபணுப் பிழைகள் நடக்கலாம், மரபணுப் பல்வகைமை குறையும். காலப்போக்கில் மரபணுக்கள் வலுவிழந்து அந்த இனமே அழிந்துவிடும். ஆகவே, மிகவும் மோசமான சூழல் ஏற்பட்டு, எந்த இணையும் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே இவை இதுபோன்ற இனப்பெருக்க முறையில் (Self fertilization) ஈடுபடுகின்றன.

தன்னோடு தானே இணைசேருவதில் ஆபத்து என்றால், இருபால் உயிரியாக இருந்து வேறு இணையோடு இனப்பெருக்கம் செய்வதில் எதாவது ஆதாயம் உண்டா?

ஓர் இணையைத் தேட முடியாத இக்கட்டான சூழலில் இருபால் உயிரியாக இருப்பது உச்சகட்ட பயனைத் தருகிறது. ஒரு கூட்டத்தில் பத்து விலங்குகள் மட்டுமே இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். 8 ஆண்களும் 2 பெண்களும் இருந்தால் அங்கு 2 பெண் விலங்குகளால் மட்டுமே அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும். ஆனால், அவை எல்லாமே இருபால் உயிரிகள் எனும்போது, பத்து விலங்குகளுமே ஒன்றோடொன்று இணைசேர்ந்து கருத்தரிக்கத் தகுதி உள்ளவையாக மாறிவிடுகின்றன. ஆகவே இனப்பெருக்க வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது. பெரிய அளவில் நகர்வுத்தன்மை இல்லாத விலங்குகளுக்கு இது ஒரு நல்ல பண்புதான்.

இன்னும் சொல்லப்போனால் இருபால் உயிரியாக இருப்பதுதான் ஆதிப்பண்பு என்கிறார்கள் பரிணாமவியல் அறிஞர்கள். முதலில் இருபால் பண்புதான் பரவலாக இருந்திருக்கிறது. காலப்போக்கில் ஆண்-பெண் என்ற தனித்தனிப் பால் பண்புகள் உருவாயின. முதுகெலும்புள்ள உயிரிகளில் இருபால் தன்மை கொண்ட இனங்கள் குறைவு என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால், பரிணாமப் படிநிலையில் இருபால்பண்பு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்திருப்பதை உணரலாம்.

ஏன் இது அழிந்துபோனது?

இருபால் உயிரிகளாக இருப்பதில் பல முக்கியமான சிக்கல்கள் உண்டு. ஒரே உயிரினத்தில் இரண்டு உறுப்புகளும் இருக்க வேண்டும், அதற்கான ஆற்றல் வேண்டும். சில விலங்குகள் தன்னைத் தானே கருத்தரித்துக்கொள்ளும் போக்கில் தற்செயலாக இறங்கிவிடும்போது அந்த இனம் அழிந்துவிடும் ஆபத்து இருக்கிறது. ஆண் – பெண் என்ற பகுப்பால் வரும் பால்பண்புகளும் அதனால் கிடைக்கும் பயன்களும் இருக்காது. உதாரணமாக, பாலூட்டிகளில், பெண் விலங்குக்கு மட்டுமே பாலூட்டும் உறுப்புகள் உண்டு. பாலூட்டிகளில் இருபால் பண்பு இருந்தால், ஆண்-பெண் இருவகை விலங்குக்கும் பாலூட்டும் உறுப்புகள் தேவைப்படும். பாலை உருவாக்குவதற்கான ஆற்றலை எல்லா விலங்குகளும் பெறவேண்டியிருக்கும்.

இன்னொரு முக்கியமான பிரச்னை குழந்தை வளர்க்கும் வேலை. குழந்தை வளர்ப்பதில் ஆண் விலங்குகளுக்கும் பெண் விலங்குகளுக்கும் தனித்தனியான பொறுப்புகள் உண்டு, அப்படிப் பங்கிடப்பட்டால்தான் வேலைப்பளு குறையும். இரண்டு பால்பண்புகளையும் கொண்ட உயிரிகளில் இந்தப் பங்கிடல் எப்படி இயங்கும் என்பது புரியவில்லை. ஆகவே குழந்தை வளர்ப்பு தேவைப்படும் இனங்களில் இருபால் பண்பு இருந்தால் அங்கு வேலை நடக்குமா என்பது சந்தேகம்தான்.

க்ரோமோடோரிஸ்

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இருபால் பண்பு என்பது ஒரு சில சூழ்நிலைகளில் நன்மை தருவதாக இருக்கிறது. மற்ற நேரத்தில் அதன் நன்மைகள் குறைவுதான். பாலினம் சார்ந்த அறிவியலில் இருபால் உயிரிகள் பற்றிய ஆராய்ச்சிகள் புதிய படிப்பினைகளைத் தந்தபடி இருக்கின்றன. இரண்டு பால் பண்புகளையும் கொண்ட விலங்குகள் இணைசேரும்போது அங்கு பல்வேறு புதிய நடைமுறைகள் (Courtship rituals) கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் பல விஷயங்களுக்குக் காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக, நியூடிப்ராஞ்ச் என்ற ஒரு வகை கடல் நத்தை உண்டு. இது இருபால் பண்பு கொண்டது. இதில் க்ரோமோடோரிஸ் என்ற நியூடிப்ராஞ்சில், இணைசேர்ந்த பின்பு ஆணுறுப்பு கழன்று விழுந்துவிடுகிறது! 24 மணிநேரத்தில் அது மீண்டும் புதிதாக உருவாகிறது. இது ஏன் என்பது இன்றுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருபால் உயிரிகளின் விஷயத்தில் நாம் கண்டுபிடிக்கும் எல்லாமே அறிவியல் அறியாத புதிய தகவல்களாகவே இருக்கின்றன.

இருபால் உயிரிகளாகவே எல்லா உயிர்களும் இருந்தால், குழந்தை வளர்ப்பு சரியாக இருக்காது என்று பார்த்தோம். குழந்தை வளர்ப்பு என்பது விலங்குகளின் உலகில் எப்படி இயங்குகிறது?

பார்ப்போம்!

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.