கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

4

இப்போது நாதிராவுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. தன் கணவனுடன் தந்தை சண்டைபோட்டுக்கொண்டு அந்தக் கோபத்துடனே தன் வீட்டுக்கு வந்து, தன்னை அழைத்து வந்திருக்கிறார். தான் எப்படிப்பட்ட பைத்தியம். தந்தை அழைத்ததே போதும் முன்பின் எண்ணிப் பாராமல் அவரோடு வந்துவிட்டேனே? தன் கணவனைக் கேட்டுக்கொண்டுதான் வரமுடியும் என்று சொல்லியிருந்தால் தன் தந்தை ஏதும் செய்திருக்க முடியாது.

போம்மா, போய்ப் படு. காலையில் யோசனை பண்ணி ஏதாவது பண்ணலாம். உங்கப்பா முன்கோவந்தான் உனக்குத் தெரியுமே. கோவம் தணிஞ்ச பின்னால அவரை எப்படியாவது சமாதானம் பண்ணலாம். நீ எதுக்கும் கவலைப்படாம சமாதானமா படுத்துத் தூங்கு. ”
ஃபாத்திமா நயமாகச் சொன்னதும் நாதிராவின் அடக்கி வைத்திருந்த அழுகை கரையுடைந்து வெளியேறியது. உட்கார்ந்த இடத்திலேயே தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்.

ஸ்உங்கப்பாவுக்குக் கேக்கப் போவுதுஅவரு கோவம் உனக்குத் தெரியாதா? சீக்கிரம் போய்ப் படு.” தாய் ஆறுதலாகச் சொன்னார். அவரது நடுக்கம் குரலில் வெளிப்பட்டது.

தந்தையின் முன்கோபம் தாய்க்கும் பிள்ளைகளுக்கும் தலைகீழ்ப்பாடம். தந்தைக்குக் கோபம் வந்துவிட்டால் அவர்கள் யாரும் வாயே திறக்க மாட்டார்கள். ஒருமுறை ஃபாத்திமா கணவன் பேச்சுக்கு எதிராக எதுவோ சொல்லப்போக, அவர் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட் டார். காதிலிருந்த தங்கக் கம்மல் அப்படியே நசுங்கிப் போய்விட்டது. ஃபாத்திமா தலைசுற்றி நினைவிழந்து தரையில் விழுந்தார். பெண் குழந்தைகளிருவரும் அப்போது சின்னஞ்சிறுசுகள். தொலைவில் நின்று இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பயத்தால் நடுநடுங்கினர். அதன் பிறகு, தந்தைக்குக் கோபம் வந்திருப்பது தெரிந்தால், இந்தக் குழந்தைகள் தந்தையின் பார்வையிலிருந்து தப்பி ஓடிப்போய் ஆற்றங்கரையில் எங்காவது மறைந்து உட்கார்ந்து கொள்வார்கள். தந்தையின் எதிரில் நின்று பேசும், அவரை எதிர்த்து நிற்கும் எண்ணத்தை இவர்கள் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதவர்களாயிருந்தனர்.

நாதிரா சேலைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டே தன் அறைக்குப் போய் படுக்கையில் விழுந்தாள். குழந்தை அசையாமல் உறங்கிக் கொண்டிருந்தது. குழந்தையைப் பார்த்தவுடன் மீண்டும் கண்ணீர் பெருகிற்று. நினைவுகள் காவள்ளியில் தன் வீட்டைச் சுற்றி அலைந்தன.

ரஷீத் கடையிலிருந்து வந்தவுடன் முதலில் பார்ப்பது குழந்தையின் முகத்தைத்தான். ‘பாப்பு’ என்று அவன் அழைத்தவுடன் குழந்தை உறக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளும். அதன் பிறகு சற்றுநேரம் தந்தை மகனின் கொஞ்சல்கள், குலாவல்கள். சில வேளைகளில் நாதிராவும் அங்கேயே நின்று இந்த ஆட்டங்களைப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஒரு கையில் குழந்தையை எடுத்துக்கொண்டு இன்னொரு கையில் தன்னை இழுத்து அணைத்துக்கொண்டு அவன் நின்றால், அந்த மார்பில் சாய்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அவள் தன்னையே மறந்து நிற்பாள். அவளுக்கு வேறெதுவும் வேண்டியிருக்கவில்லை. தன்னுடைய சொர்க்கம் இதுதான் என்று அவள் திடமாக நம்பியிருந்தாள். தொழுகை செய்து எல்லாம் வல்லவனை அவள் வேண்டி வந்ததும் அதையேதான், ‘என்னிடமிருந்து இந்தச் சுகத்தை என்றைக்கும் பறித்துக்கொள்ள வேண்டாம்.’

இப்போது ரஷீத் என்ன செய்துகொண்டிருப்பான்? வீட்டுக்கு வந்து தானும் பாப்புவும் வீட்டிலில்லாததைப் பார்த்து என்ன எண்ணிக்கொள்வான் ? முன்னாள் இரவு சொல்லிக் கொண்டிருந்தான், ”உனக்கொரு சேலை வாங்கி வச்சிருக்கேன் நாதிரா. கடையிலேயே மறந்து வச்சுட்டேன். நாளைக்கு வரும்போது கொண்டார்றேன்.”

என்ன நெறத்துலேங்க?” என்று உற்சாகத்தோடு அவள் கேட்டாள்.

அதுதான், உனக்குப் புடிச்ச வெளிர் செகப்பு நிறந்தான்.”

அய்யோ, ஏன் மறந்துட்டு வந்தீங்க?” படுக்கையில் அவன் பக்கத்தில் படுத்துக்கொண்டு ஆசையோடு கொஞ்சலாக அவள் கேட்டதும் அவனிடமிருந்து அவள் இதழின் மீதொரு முத்தம்தான் பதிலாகக் கிடைத்தது.

Illustration of a muslim girl praying

ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக்கொண்டே போனபோது அவள் தன்னையே மறந்து போனாள். கூடவே தந்தையின் கடூரமான கர்ஜனையும் காதில் முழங்கிற்று. அரைவிழிப்பு; அரைத்தூக்கம், குழந்தை எழுந்து அழுததும் அவனைத் தன் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு பாலூட்டத் தொடங்கினாள். காலைத் தொழுகையின் அழைப்பு பள்ளிவாசலிலிருந்து கேட்கத் துவங்கியும் அவள் கண்விழித்தபடி படுத்துக்கொண்டேயிருந்தாள்.

எது எப்படியானாலும் சூரியன் உதிப்பதும் நிற்காது. மறைவதும் தப்பாது. எவ்வளவுதான் மெல்லப் போனாலும் இரவு பகலாகிக் கொண்டிருந்தது. பகல் இரவாகிக் கொண்டிருந்தது. நாதிராவைப் பொருத்தவரை அவளுக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கைச் சுடர் அவளது கணவன். தன் கணவன் தன்னைக் கைவிட மாட்டான். இன்று இல்லாவிட்டாலும் நாளை, என்றோ ஒரு நாள் அவன் தன்னை இங்கிருந்து அழைத்துக்கொண்டு போவான். தன்னையும் குழந்தையையும் விட்டு அவனால் ஒருநாளும் தனித்து இருக்க முடியாது. மாமியார் தன் மகனைக் கட்டாயப்படுத்தியாவது அனுப்பிவைப்பார் என்று நம்பினாள்.

நாதிரா இரவு பகலாகத் தன் கணவனின் வருகைக்காக, மாமியாரின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள். நேரத்தை மணி, நாள் என்று கணக்கிட்டுக் கொண்டு தன் காலத்தைக் கழித்து வந்தாள். பொழுது போவதற்காகத் தங்கையோடு உட்கார்ந்து கொண்டு பீடி சுற்றக் கற்றுக்கொண்டாள். தானும் பீடி சுற்றத் தொடங்கினாள். இவளால் வீட்டுக்கு வருவாய் சற்றுக் கூடியது. மஹமத்கான் உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டார், பீடிசுற்றிக் கொண்டிருந்தாலும் அவள் நினைவுகள் மட்டும் காவள்ளி வீட்டையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தன.

தன் கணவன் இப்போ என்ன செய்து கொண்டிருப்பான்? அவன் வராமல் போனாலும் யாரிடமாவது எதையாவது சொல்லியனுப்பியிருக்கலாமே? எவ்வளவு தான் இருந்தாலும் ஆண்களின் புத்தியே அவ்வளவுதான். எதிரில் இருக்கும்போது தலைமேல் வைத்துக்கொண்டு கூத்தாடுவார்கள். சற்றுக் கண்ணெதிரிலிருந்து மறைந்தால் போதும் ஒரேயடியாக மறந்தே போய்விடுவார்கள். இல்லையென்றால் ஒருநாள்கூடப் பிரிந்திருக்க முடியாதவர் எப்படியிருக்கின்றோம் என்றுகூட விசாரிக்காமல் எப்படிச் சும்மாயிருக்க முடிகிறது? ‘ என்று ஒரு விநாடி கணவன் மீது கோபப்படுவாள். மறுவிநாடியே, ‘ என்னோடு குழந்தையாவது இருக்கிறது. அதன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நான் எல்லாவற்றையும் மறந்திருக்கலாம். பாவம், அவர் என்ன செய்வார்? வீட்டுக்கு வரும்போது நானும் பாப்புவும் இல்லாமல் எவ்வளவு வேதனைப்படுகிறாரோ என்னவோ என்று தனக்குள்ளாகவே மருகுவாள். தன் தந்தைக்குக் கடவுள் ஏன் இப்படிப்பட்ட புத்தியைக் கொடுத்தான் என்று தந்தையின்மீது வந்த கோபத்தைப் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்வாள்.

யோசித்து யோசித்து தலை குழம்பிப்போன நாதிரா ஒருமுறை வீட்டில் தனது தந்தை இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தாயிடம், ”உம்மா, என்னெ எப்பிடியாவது காவள்ளிக்கு அனுப்பிடு. இங்கேயிருந்தா எனக்குப் பயித்தியம் புடிச்சிடும்” என்று வேதனையோடு கண்ணீர்விட்டு விநயமாகத் தாயை வேண்டினாள்.

ஃபாத்திமாவுக்கு என்ன சொல்வதென்றே தோன்றவில்லை. எத்தகைய பிடிவாதம் தன் கணவனுடையது? மகள் கணவன் வீட்டில் சுகமாக இருப்பதுதானே முக்கியம்? மருமகனிடம் பணம் கேட்டதே தப்பு. இல்லையென்று சொல்லிவிட்ட பின்பு பேசாமல் வாயை மூடிக்கொண்டு திரும்பி வந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கணவன் வீட்டில் நிம்மதியாக இருந்த மகளை அழைத்துவந்து இந்த நரகத்தில் வைத்துக்கொண்டு எதற்காக கொடுமைப்படுத்த வேண்டும்? ஆனால், இதையெல்லாம் மஹமத்கானிடம் யாரும் வாய்விட்டு உரக்க சொல்லிவிட முடியாதே!

பாரு நாதிரா, கொஞ்ச நாளைக்கு மனசை கெட்டிப்படுத்திக்கோ. எப்பிடியும் ஜமீலாவோட கல்யாணத் துக்கு உங்க அப்பா, உன் வீட்டுக்காரனையும் மாமியாரையும் கூப்பிடாம இருக்கமாட்டாரு. அவங்க வந்தா, திரும்பிப்போகும்போது நீயும் அவங்களோட போயிடு. அது வரைக்கும் எப்படியாவது சகிச்சிக்கம்மாஎன்று மகளை சமாதானப்படுத்தினார், வேறொன்றும் செய்யத் தோன்றாத ஃபாத்திமா. அதைக்கேட்டு பெருமூச்சுவிட்டு கண்ணீரைத் துடைத்துக்கொள்வதைத் தவிர நாதிராவும் வேறெதையும் செய்ய இயலாதவளாக இருந்தாள்.

இதற்கிடையில், ஜமீலர்வின் திருமணத்திற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கி இருந்தன. தங்களின் பிழைப்பிற்கே உயிர்நாடியாக இருந்த தென்னந்தோப்பின் ஒரு பகுதியை விற்று, வரதட்சிணை கொடுக்க வேண்டிய பணத்திற்கு மஹமத்கான் வழி செய்துகொண்டார். திருமண நாளுக்கான செலவுக்கு மட்டும் தான் பணம் தேவையாக இருந்தது. எப்படியும் நாதிரா வீட்டில் இருக்கின்றாள். அவளது நகைகளை எங்காவது அடகுவைத்து பணம் வாங்கி வந்தால் சரியாயிற்று என்று எண்ணி அதையே ஃபாத்திமாவிடம் சொன்னார்.

நீங்க பேசறது நல்லாயிருக்குதே? அவ ஊட்டுக்காரனுக்குத் தெரியாம அவளோட நகைங்களை அடகு வச்சுட்டா, அப்புறம் அவங்க பேசமாட்டாங்களா? கல்யாணங் கழிஞ்சதும் ஓடனடியா மாமியார் ஊட்டுக்கு போகணும்னு அவ நெனச்சிகிட்டிருக்கிறா.” எதுவுமே நடக்காததைப் போல ஃபாத்திமா மெதுவாக கணவனிடம் சொன்னார். கணவன் இதற்குள் மருமகனுடன் போட்ட சண்டையை மறந்துவிட்டிருப்பான் என எண்ணிக்கொண்டிருந்தர்ள். ”எப்படியும் கல்யாணத்துக்கு அவங்கல்லாம்…” என்றும் இழுத்தார்.

என்ன சொன்னே? கல்யாணத்துக்கு அவங்கல்லாம் வர்றாங்களா? அவங்களைக் கல்யாணத்துக்கு வாங்கன்னு கூப்பிடறவங்க யாரு? இன்னொரு தடவ இந்தப் பேச்சை எடுத்தேஉன்னெ சும்மா உடமாட்டேன் தெரிஞ்சுக்க…” கான் கர்ஜித்தார்.

கர்ஜனை வீடெல்லாம் எதிரொலித்தது. திண்ணையில் உட்கார்ந்து பீடி சுற்றிக் கொண்டிருந்த பெண்களின் காதுகளிலும் விழுந்தது. நாதிரா மடியிலிருந்த பீடித் தட்டை கீழே வைத்துவிட்டு, அங்கேயே முழங்காலிட முயற்சித்துக் கொண்டிருந்த பாப்புவை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு ஓடி கட்டிலில் விழுந்தாள்.

இருந்த ஒரே நம்பிக்கையும் சிதைந்தது. தலையைச் சுவரில் முட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. என்னை எதற்காகப் பெற்றீர்கள், எனக்கு ஏன் திருமணம் செய்தீர்களென்று கூக்குரலிட்டு தந்தையிடம் கேட்க வேண்டுமென்று தோன்றியது உஹூம்… தொண்டையிலிருந்து குரல் வெளிவரவே இல்லை. அழுதழுது சோர்ந்து போய் கட்டிலில் எழுந்து உட்கார்ந்து எதிரில் தெரிந்த ஆற்றையே இலக்கில்லாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

மேற்குவானில் படர்ந்திருந்த மாலைநேர செவ்வொளி ஆற்றுநீரை எதிரொளித்து அதற்கோர் அபூர்வமான எழிலைக் கூட்டியிருந்தது. இத்தகைய காட்சியை எப்போதும் நாதிரா தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருப்பாள். அந்தக் காட்சியில் அவளுக்கு என்றும் சலிப்பு ஏற்பட்டதில்லை. ஆனால், இன்றுமட்டும் இந்த சந்திரகிரி ஆற்றை அவள் வெறுத்தாள். இடையில் இந்த ஆறு இல்லாமல் போயிருந்தால் தான் எப்படியாவது காவள்ளிக்குப் போயிருப்பேன். இந்த ஆற்றைத் தான் ஒருத்தியே தனியாக என்றைக்கும் தாண்டிப் போகமுடியாதோ! தோணியில் அமர்ந்து எங்கேயும் எப்போதும் போனதில்லை. இப்போது தான் மட்டும் குழந்தையை எடுத்துக்கொண்டு தந்தைக்குத் தெரியாமல் தோணியில் போய் உட்கார்ந்து கொள்ளவே முடியாது. . அப்படி ஒருவேளை போய் உட்கார்ந்தாலும் அதிலிருப்பவர்கள் எல்லோரும் தனக்குத் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள். ”என்னது! மஹமத் கானோட மகள் தனியாக எங்கே பொறப்பட்டே? அப்பா இல்லையா?” என்று எல்லோரும் கேள்வி கேட்பார்கள்.

யோசித்து யோசித்து தலை வலிக்கத் தொடங்கியதே தவிர அதனால் வேறு எந்தப் பயனும் ஏற்படவில்லை . தாய் சாப்பிட அழைத்ததும், இரண்டு கவளம் வாயில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டதாகப் போக்குக் காட்டி விட்டுப்போய் படுத்துவிட்டாள்.

ஜமீலாவின் திருமணம் முடிந்தது. அவள் கணவன் வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தாள். மஹமத்கான் கடைசிவரை தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மருமகனையாகட்டும் அவனது தாயையாகட்டும் திருமணத்திற்கு அழைக்கவேயில்லை. ஃபாத்திமா தனக்குத் தெரிந்தவரை கணவனுக்கு அறிவுரை சொல்லப்போய், அவரிடமிருந்து இரண்டு மூன்று முறை திட்டுவாங்கிக் கட்டிக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார். மகளின் முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அடிவயிற்றில் நெருப்பு விழுந்ததைப்போல் ஆகும். மகள் நாளுக்கு நாள் உள்ளுக்குள்ளேயே மருகிக் கொண்டிருப்பதைப் பார்த்து தாயின் இதயம் நெருப்புப் பட்டதைப் போல் துடிக்கும்.

தங்கையின் திருமணத்தில் உற்சாகத்தோடு ஓடியாடி வேலை செய்யவேண்டியிருந்த அக்காள் மந்தம் பிடித்தவளைப்போல் ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருந்தாள். தாய்க்கு ஏதாவது உதவி செய்ய வேண்டு மென்றுகூட அவளுக்குத் தோன்றவில்லை. தந்தையைக் கண்டால் அவர் எதிரில் நில்லாமல் வேறுபக்கம் போய் விடுவாள்.

ஜமீலாவின் வீட்டு விருந்துக்குத் தாயும் தந்தையும் புறப்படும்போது நாதிராவையும் அழைத்துக்கொண்டு போக ஃபாத்திமா முயற்சித்தார். ஆனால், நாதிரா தாயிடம், ”உம்மா, உங்க மருமகனுக்கில்லாத அழைப்பு எனக்கெதற்கு? அவங்ககிட்ட கேக்காம நான் இங்கெ வந்ததே தப்பு. நீங்களே போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கிறேன்என்றாள்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று ஃபாத்திமாவிற்குத் தோன்றவில்லை. பக்கத்து வீட்டுப் பெண்ணை நாதிராவோடு இருக்கச் செய்துவிட்டு, ஃபாத்திமா கனத்துப்போன இதயத்தோடு தன் கணவனைப் பின்தொடர்ந்தார். தாயும் தந்தையும் மற்ற உறவினர் சிலரோடு ஜமீலாவின் வீட்டுக்குப் போய் விருந்தை முடித்துக்கொண்டு, ஜமீலாவை இரண்டு தினங்களுக்கு அழைத்துக் கொண்டு வந்தனர். தங்கையின் மின்னும் கண்களையும் சிவப்பேறிய கன்னங்களையும் பார்த்து நாதிரா எண்ணிக்கொண்டாள். ”யா அல்லா, என் தங்கையின் முகத்திலிருந்து இந்த நிறமும் இந்தக் களையும் என்றைக்கும் நீங்காம பாத்துக்கோ.”

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.