நானாக நான் – 4 

பாரதியைப் போலவே பலருக்கும், எனக்கும் மிகப்பிடித்தமான பெயர் கண்ணம்மா. என் மகள்கள் வயதுப் பெண் குழந்தைகளில் பலரையும் கண்ணம்மா என்றழைப்பதில் எனக்கு அவ்வளவு அலாதிப் பிரியம். அப்படி கொண்டாடப்பட வேண்டிய பெண் குழந்தைகளின் இன்றைய அவல நிலையை, அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட இயலவில்லை. 

பாலியல் சீண்டல், வன்புணர்வு, பாலியல் சித்ரவதை, கூட்டு வன்புணர்வு என்று ஏதேதோ பெயர் சூட்டுகிறார்கள். பெண் பிள்ளைகள் வளர்ப்பு குறித்த அச்சத்தை இந்த சொற்களும் நடக்கும் பல சம்பவங்களும் அதிகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. 

இந்தக் குற்றங்களில் பதியப்பட்ட வழக்குகள் மட்டுமே இத்தனை. இன்னும் பதியப்படாத, வெளிவராத சம்பவங்கள் எத்தனை எத்தனையோ? மானத்துக்காக,  உயிருக்காக, ஊருக்காக, அதிகாரத்திற்காக என்று எதெதற்காகவோ பயந்து அழுதுகொண்டிருக்கும் கண்ணமாக்களையும் அவர்களின் குடும்பங்களையும் நினைத்தால் மனம் நடுங்குகிறது. 

கடவுள் நம்பிக்கை அற்றுப் போகும்போது, பற்றிக்கொள்ள ஏதுமற்றபோது நாத்திகனாக இருப்பது ஒருவனது அகங்காரத்தினாலல்ல.  அது ஒரு புரிந்துணர்வு என்பது பகத்சிங்கின் கருத்து. அதிகாரமற்ற தொனியிலேயே சொல்லத் தோன்றுகிறது, கடவுள் என்று ஒருவன் இருந்தால் ரத்தம் தோய்ந்த மானுடத்தில் சாமானியர்கள் மீதும், பெண் பிள்ளைகள் மீதும் நடத்தப்படும் அத்தனை வன்மங்களையும் பார்த்துக்கொண்டிருப்பானா? 

கி. பி 1776 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது என்பது நாம் அறிந்த உண்மை. அதே போன்ற மற்றொரு உண்மை, அந்நிகழ்விற்கு சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் கி. மு 1776ல் ஹமுராபி என்கிற மன்னனால் உருவாக்கப்பட்ட ‘ஹமுராபி சட்டக் கோட்பாடு’. இந்நூல் நீதித் தீர்ப்புகளின் தொகுப்பாக,  உலகின் மிகப்பெரிய பேரரசாக இருந்த பாபிலோனிய பேரரசால் கொண்டாடப்பட்டது. இன்றைய சிரியா, ஈரானின் சில பகுதிகள், மெசபடோமியாவில் பல பகுதிகளுக்கும் இச்சட்டக் கோட்பாடு பிரசித்தி பெற்றதாக இருந்தது. அதிலுள்ள சில குறிப்புகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன. 

ஹமுராபி சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் பாபிலோனியப் பேரரசின் மக்கள், மேட்டுக்குடி மக்கள் (அமெலு), சாதாரணர்கள் (முஷ்கெனு) மற்றும் அர்து (அடிமை) என மூன்று பிரிவினராக வாழ்ந்தார்கள்.

ஹம்முராபி சட்டம்- history.com

சட்டம் எண் 209 – உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவன் உயர்வகுப்பு பெண் ஒருத்தியை அடித்து அதனால் அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால் 10 ஷெக்கெல்கள் எடை கொண்ட வெள்ளியை அவன் அந்தக் கருவைக் கொன்றதற்காகக் கொடுக்க வேண்டும். 

சட்டம் எண் 210 – சம்பவத்தில் அப்பெண் இறந்து போனால் அக்குற்றவாளியின் மகன் கொல்லப்படுவான். 

சட்டம் எண் 211 –  ஒரு உயர் வர்க்க ஆண் ஒரு சாமானியப் பெண்ணை அடித்து அதன் விளைவாக அவளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், ஐந்து  ஷெக்கெல்கள்  எடை கொண்ட வெள்ளியை அவன் அவளுக்குக் கொடுக்க வேண்டும். 

சட்டம் எண் 212 –  அந்த சாமானியப் பெண் அவ்வுயர் வர்க்க ஆணின் தாக்குதலால் இறந்து போனால், 30 ஷெக்கெல்கள் எடை கொண்ட வெள்ளியை அவன் கொடுக்க வேண்டும். 

மனித குலம் இந்த அளவிற்கு முன்னேறாத ஒரு காலகட்டத்தில் அதாவது கி.  மு 1776 ல் உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் துன்புறுத்தப்பட்டு கருச்சிதைவு ஏற்பட்டால், அப்படி செய்த குற்றவாளியின் மகனுக்கு தண்டனை. அதுவே சாமானியப் பெண் துன்புறுத்தப்பட்டு கருச்சிதைவு  ஏற்பட்டால் அந்த குற்றவாளிக்கு (அவன் உயர்வகுப்பை சார்ந்தவனாக இருக்கும் போது)  வெறும் முப்பது ஷெக்கெல்கள் அதாவது பணம் செலுத்துவது மட்டுமே தண்டனை. சாமானியப் பெண்ணுக்கு அநீதி நடந்தால் குற்றவாளிக்கு வெறும் பணம் மட்டுமே தண்டனை. குற்றவாளியின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதுவே நீதி என்று கொண்டாடிய பாபிலோனியர்களைப் போல நம்மிடமும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஹத்ராஸ் போன்ற எத்தனை வழக்குகளை மனிதர்களின் மனோபாவங்ளை  இதற்கு சாட்சியாக நம்மால் கூற இயலும்.

கி. பி 2020 வரை அரசும் பல சட்டங்களை இயற்றியாயிற்று. எல்லாம் காகிதத்தில் மட்டுமே இருக்கிறதா என்று கேட்கும்படியாக பெண் பிள்ளைகளுக்கு தொடர் பிரச்னைகளும் இருந்துகொண்டே இருக்கிறது. நடைமுறைப்படுத்தப்படாதவரை எப்படி, எங்ஙனம் காப்பது நம் கண்ணமாக்களை?  இன்னும் எத்தனை கண்ணம்மாக்கள்????

ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் ஒரே மாதிரியாகத்தான் வளர்க்கப்படுகிறார்களா இல்லை வளர்கிறார்களா என்று கேள்வி எனக்குள் எப்போதுமே தோன்றும். நான் பள்ளியில் படிக்கும்போது பொதுவாக ஆண் பிள்ளைகள் விளையாடும் எல்லா விளையாட்டுகளும் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது என்றே கருதியிருந்தேன். 

என் ஆறாம் வகுப்பு படிக்கும் மகளின் பள்ளிக்கூடத்தில் கால்பந்து ஆண்களுக்கானதாக இருந்திருக்கிறது. என் மகளுக்கும் அவள் வயதை ஒத்த பெண் குழந்தைகளுக்கும் கால்பந்து விளையாட வேண்டும் என்ற ஆவல் முளைத்திருக்கிறது. அவர்களுடைய விளையாட்டு ஆசிரியரிடம் சென்று, ‘நாங்களும் கால்பந்து விளையாட வேண்டும்’ என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அந்த ஆசிரியர், ‘உங்களுக்கு கால்பந்து விளையாடத் தெரியாது.  கால்பந்தெல்லாம் தர முடியாது. வேறு ஏதாவது விளையாடுங்கள்’, என்று சொல்லியிருக்கிறார். 

‘இல்லை நாங்களும் கால்பந்து விளையாட வேண்டும்’, என்று அப்பெண் குழந்தைகள் விடாப்பிடியாகக் கேட்டதற்கு, ‘அப்படியானால் ஆண் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் பந்தயம் வைத்துக் கொள்ளலாமா?’ என்று கேட்டிருக்கிறார்.

PC: playo

பெண் பிள்ளைகளும் சரி என்று ஒத்துக்கொள்ள, பல ஆண்டுகளாக கால்பந்து விளையாடிப் பழகிய ஆண் பிள்ளைகளுக்கும், முதன்முறையாக மைதானத்தில் கால்பந்து விளையாடப் போகும் பெண் பிள்ளைகளுக்கும் போட்டி வைத்து 5 – 0 என்ற முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆமை முயல் கதையை விட மோசமான அடிப்படையில் நடத்தப்பட்டிருக்கிறது இப்போட்டி.

ஒரு விளையாட்டின் ஊடாகக் கூட தன் அதிகாரத்தை, பலத்தை நிறுவ நினைக்கும் இது போன்ற ஆசிரியர்களை என்ன செய்வது? 

இப்படியான ஆதிக்க மனநிலையில் உள்ள ஆசிரியர்களின் பிள்ளைகள் எப்படி வளர்ந்து வருவார்கள் என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. முதல் பெண் விமான ஓட்டுனர், முதல் பெண் லாரி ஓட்டுநர், முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர், முதல் பெண் ஆசிரியை, முதல் பெண் மருத்துவர்… இப்படி எல்லாத் துறைகளிலும் எவ்வளவு சவால்களையும் போராட்டங்களையும் கடந்து வந்திருப்பார்கள் பெண்கள்?

பெண் பிள்ளைகளை வளர்ப்பதைவிடவும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பவர்களுக்குக் கூடுதல் பொறுப்பிருக்கிறது என்று நான் நம்புவதுண்டு. வீட்டு வேலைகளை ஆண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுப்பதிலிருந்து தொடங்குகிறது ஆண் பெண் சம உரிமை. அப்படி சரியாக வளர்க்கப்படும் ஆண் குழந்தைகள் பின்னாளில் சமையலறை பெண்ணுக்கானது என்ற தீர்மானத்திற்கு வரமாட்டார்கள்.

என் உறவுக்காரர் ஒருவருக்கு அவர் மனைவி சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தார். சாப்பாடு சற்று குழைந்திருந்தது. இதைக் கண்டு ஆத்திரமடைந்த அந்த ஆண், தன் சாப்பாட்டுத் தட்டை வீசி எறிந்தார். மனைவி கீழே விழுந்த சாப்பாட்டை சுத்தம் செய்துவிட்டு வேறு சாப்பாடு செய்து அவருக்கு மீண்டும் பரிமாறினார். இது ஏதோ கற்பனைக் கதையோ அல்லது சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த கதையோ அல்ல. என் பால்யத்தில் நான் நேரில் பார்த்த விஷயம்.

ஒரு ஆண்பிள்ளை தனது இருபது வயது வரை சரியாக வளர்க்கப்பட்டிருந்தால், அவனுடைய எஞ்சிய வாழ்க்கை முழுவதும் அவன் பெண்ணை கண்ணியமாக நடத்தபவனாக இருப்பான் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆண் குழந்தை அழக் கூடாது என்கின்ற தவறான சித்தாந்தத்தை எல்லோர் மனதிலும் விதைத்த இதே சமூகம்தான், ஆணுக்கும் பெண்ணுக்கும் எழுதப்படாத சட்டங்கள் இருப்பதாகக் கூறுகிறது. 

ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் நிலை எப்படி இருக்கும்? அம்மாவை அடிக்கும் அப்பாக்களை பார்த்து வளர்ந்த ஆண் குழந்தைகள் எப்படி வளர்வார்கள்?

ஆரிய சிந்தனையில் தந்தையர் தேசம் என்று முரசு கொட்டி வாழும் ஆண்களுக்கும், வேதத்தின்படி பெண்கள் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் என்று நம்பும் ஆண்களுக்கும் சம உரிமையை எங்ஙனம் சொல்லித் தர இயலும்?

 என் தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது தன் பத்தாம் வகுப்பு மகனிடம், ‘த வெசல்ஸ் ஆர் வெயிட்டிங் ஃபார் யூ’, என்றார் என் தோழி. புரியாமல் நானும் என் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போது, ‘தினமும் பாத்திரம் கழுவுவது என் மகனின் வேலை… இன்னும் அவன் செய்யவில்லை அதனால்தான் கூறினேன்’, என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ‘அப்போது மகளுக்கு என்ன வேலை?’ என்று கேட்டதற்கு ‘கழுவிய பாத்திரங்களைத் துடைத்து அலமாரியில் எடுத்து வைக்க வேண்டும்’, என்றார். பார்ப்பதற்கு எளிய விஷயம் போல தெரிந்தாலும் பாலினம் மீறிய சமநிலையை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் நல்ல தாயாக என் தோழி எனக்குத் தெரிந்தார். குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. ஆண் குழந்தைகளை பெண் குழந்தைகளுக்கு சமமாக வளர்க்கும் நல்ல அம்மாக்களுக்கு எனதன்பு சமர்ப்பணம். 

தொடர்ந்து உரையாடுவோம் நம் கண்ணமாக்களிடமும் நம் சமூகத்திடமும். 

கதைப்போமா?

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.