விலங்குகளும் பாலினமும் – 9

சிங்கங்கள் பற்றிய நமது புரிதலில் மனிதப் பண்பேற்றங்கள் நிறைய உண்டு என்றாலும் அவை சுவாரஸ்யமானவைதான். நாம் ஒரு விலங்கை எப்படி அணுகுகிறோம் என்று புரிந்துகொள்ள அது உதவும். சிங்கக் கூட்டம் என்பது ஆங்கிலத்தில் பெருமை என்ற பொருளில் Pride என்று அழைக்கப்படுகிறது. வீரத்தையும் கம்பீரத்தையும் பதவியையும் குறிப்பதற்காகப் பல சின்னங்களிலும் பட்டங்களிலும் உருவகங்களிலும் சிங்கம் பயன்படுத்தப்படுகிறது. “த லயன் கிங்” என்ற பெயரில் சிங்கராஜாவைக் கொண்டாடும் படங்கள் கூட வெளிவந்திருக்கின்றன.

“காட்டு ராஜா”  என்று  யார் முதலில் சிங்கத்தை அழைக்கத்தொடங்கினார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பெரும்பூனைகளிலேயே மிகப்பெரியது புலிதான். புலியை விட அளவில் சிறியதான சிங்கம் எப்படி ராஜாவானது?

Pride

அதற்கு முக்கியமான காரணம், சிங்கங்கள் கூட்டமாக வாழும் சமூக விலங்குகள். தனது குடும்பத்தைப் பாதுகாத்து ஒரு அரசனைப் போல ஆண் சிங்கங்கள் வழிநடத்துகின்றன. வேட்டையாடும் அந்தப் பகுதி நிலத்தில் வேறு சிங்கக் குடும்பங்கள் நுழைந்துவிடாமல் கண்காணிக்கின்றன. ஊடுருவும் சிங்கங்களோடு சண்டையிடுகின்றன. ஒருவேளை புதிய சிங்கம் வென்றுவிட்டால்,  ஒரு அரசன் போரில் தோற்றபின்னர் நடக்கும் நிகழ்வைப் போலவே பழைய சிங்கம் வெளியில் துரத்தப்படுகிறது! பிறகு அந்தக் குடும்பத்தை ஆளும் பொறுப்பு புதிய சிங்கத்துக்கு வருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி, ஆண் சிங்கத்தின் தோற்றத்தில் ராஜகம்பீரம் ஒன்று உண்டு என்பதும் ஒரு காரணம்.

சிங்கங்கள் பற்றிய பல ஆவணப்படங்களில் ஆண் சிங்கங்கள் நிழலில் அமர்ந்து ஓய்வெடுப்பதைப் பார்த்திருப்போம். பம்மல் கே. சம்பந்தம் திரைப்படத்தில்கூட ஆண் சிங்கம் வேட்டையாடுவதில்லை என்பதாக ஒரு வசனம் வந்தது பலருக்கு நினைவிருக்கலாம். ஆண் சிங்கங்கள் பொழுதெல்லாம் ஓய்வெடுப்பதைக்குறிப்பிடும் சில அறிவியலாளர்கள், “இந்த விலங்கை அரசன் என்று சொல்வது சரிதான். பொறுப்பைப் பிரித்துக் கொடுத்துவிட்டுக் கண்காணிக்கும் வேலையை மட்டும்தானே அரசர்கள் பார்க்கிறார்கள்” என்றுகூட நகைச்சுவையாக எழுதியிருக்கிறார்கள்!

இந்தக் கருத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? ஆண் சிங்கங்கள் வேட்டையாடாதா?

இந்தக் கேள்விக்கான பதில் கொஞ்சம் சிக்கலானது. ஆம்/இல்லை என்ற இருமைகளுக்குள் வைத்து இதை விளக்கிவிடமுடியாது. கேள்விக்கான பதிலுக்குப் போவதற்கு முன் சிங்கங்களின் சமூக அமைப்பைத் தெரிந்துகொள்ளலாம்.

சிங்கங்கள் கூட்டமாக வாழும் இயல்புடையவை. கூட்டத்தில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை சிங்க இனத்தைப் பொறுத்து மாறுபடும் என்றாலும், பொதுவாக ஒரு கூட்டத்தில் இரண்டு அல்லது மூன்று ஆண் சிங்கங்கள், ஐந்து முதல் பத்து பெண் சிங்கங்கள், சில சிங்கக்குட்டிகள் இருக்கும். ஆண் குட்டிகளுக்கு மூன்று வயதாகும்போது அவை கூட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்படும். பிறகு அவை தனியான நாடோடி சிங்கங்களாகவோ, பேச்சிலர் சிங்கங்கள் மட்டும் இருக்கும் ஒரு ஆண் குழுவிலோ சில வருடங்கள் கழிக்கும். ஐந்து வயதாகும்போது அவை பெண் சிங்கங்களோடு இணைந்து புதிய கூட்டத்தை உருவாக்க முயற்சி செய்யும். சில ஆண் சிங்கங்கள், ஏற்கனவே இருக்கும் சிங்கக் கூட்டத்தின் தலைமை ஆணோடு சண்டை போட்டு, அந்தப் பதவியையும் பறிக்க முயற்சி செய்யலாம்!

கூட்டத்துக்கு ஒரு சிங்கம் தலைமை ஏற்றபிறகு, அது ஐந்து ஆண்டுகள் வரை தலைவர் பதவியில் இருக்கும். ஆண் சிங்கங்கள் ஐந்து முதல் பத்து வயது வரைதான் இனப்பெருக்கம் செய்வதற்குத் தகுதியானவை. இனப்பெருக்க தகுதியை இழந்தபிறகு, அந்தக் கூட்டத்தில் இருக்கும் மற்ற சிங்கங்கள் அதை வெளியில் துரத்திவிடும்! சில நேரங்களில், தலைமை செயலிழந்துவிட்டது என்பதை கவனிக்கும் தனி ஆண் சிங்கங்கள், சரியாக அந்த நேரம் பார்த்து சண்டை போட்டு தலைவர் பதவியைப் பறித்துவிடுகின்றன!

சண்டையிடும் ஆண் சிங்கங்கள், Calers News Agency

காலத்துக்கும் நாடோடியாக மட்டுமே திரியும் ஆண் சிங்கங்கள் உண்டு. இவற்றுக்குப் பெரும்பாலும் பெண் சிங்கங்களோடு இணைசேரும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

பேச்சிலர் சிங்கங்கள் குழு

ஆக, சிங்கங்களின் சமூக அமைப்பில் மூன்று வகைமைகள் உண்டு: சிங்கக் குடும்பம், தனியாகத் திரியும் நாடோடி சிங்கங்கள், பேச்சிலர் சிங்கங்களின் குழு. இவற்றில் ஒரு ஆண் சிங்கம் எந்த அமைப்பில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அதன் வேட்டைத் திறன் மாறுபடும். தனியாகத் திரியும் சிங்கங்கள் தொடர்ந்து வேட்டையாடவேண்டிய கட்டாயத்தில் இருப்பவை. அவை அளவில் சிறியதான (100 கிலோவுக்கும் குறைவான எடை உள்ள), வேகமாக ஓடக்கூடிய விலங்குகளை வேட்டையாடுகின்றன. உண்மையில், ஆண் சிங்கங்களிலேயே மிகத் திறமையான வேட்டையாடிகள் இவைதான். இவற்றால் தனியாகவே வேகமாக வேட்டையாடி இரை விலங்குகளை வீழ்த்த முடியும். பேச்சிலர் குழுக்களில் உள்ள சிங்கங்கள் குழுவாக இணைந்து வேட்டையாடுகின்றன.

குடும்பத்தில் இணைந்தபிறகு ஆண்சிங்கங்கள் வேட்டையாடுமா?

இந்தக் கேள்விக்கான பதில் சுவாரஸ்யமானது. எந்தப் பிடரி ஆண் சிங்கத்துக்கு கம்பீரத்தைத் தருகிறதோ, அதே பிடரி வேட்டையின்போது பிரச்சனையாகவும் இருக்கிறது. பெண் சிங்கங்களின் வேட்டைமுறையும் ஆண் சிங்கங்களின் வேட்டை முறையும் வேறு வேறானவை. சத்தமில்லாமல் இரையை நெருங்கி பெண் சிங்கங்கள் ரகசியமாக வேட்டையாடுகின்றன. ஆண் சிங்கங்களோ தடாலடியாக இரையைத் தாக்கும் பண்புள்ளவை. பெண் சிங்கங்களைப் போல இரையை சத்தமில்லாமல் நெருங்க வேண்டுமென்றால், மஞ்சள் நிறப் புற்களின் நடுவே மறைந்து முன்னோக்கி நகரவேண்டும். ஆண் சிங்கங்களின் பிடரி அதற்குப் பெரிய இடைஞ்சலாக இருக்கும். அவற்றால் சரியாக மறையவே முடியாது!

தனித்து வேட்டையாடும் ஆண் சிங்கம்

அதற்காக ஆண் சிங்கங்கள் பெண் சிங்கங்களோடு இணைந்து வேட்டையாடுவதே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. சில பெரிய வகை இரை விலங்குகளை வீழ்த்த வேண்டுமென்றால் ஆண் சிங்கங்களின் தடாலடி முறை தேவைப்படும். அப்போது கூட்டத்தோடு இணையும் ஆண் சிங்கங்கள், தங்கள் உடல் வலிமையைப் பயன்படுத்தி வேட்டையாடுகின்றன.

ஆகவே, தனியாக சில வருடங்கள் இருக்கும்போதும், பெண் விலங்குகளுக்கு உதவி தேவைப்படும்போதும் மட்டும் ஆண் சிங்கங்கள் வேட்டையில் பங்கு பெறுகின்றன. மற்ற நேரங்களில் குழுவின் எல்லைகளுக்குள் எதிரிகள் நுழைந்துவிடாமல் காப்பதும் அவற்றின் முக்கியப் பணி. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், பெண் சிங்கங்கள் திறமையான வேட்டையாடிகள், ஆண் சிங்கங்கள் திறமையான சண்டைக்காரர்கள்.

பெண் சிங்கங்கள் வேட்டையாடிக் கொண்டு வரும் உணவைப் பகிர்ந்துகொள்வதில் ஒரு படிநிலை (pecking order) உண்டு. ஆண் சிங்கம்தான் முதலில் இரையை உண்ணும், அதன்பிறகு பெண் சிங்கங்களும் குட்டிகளும் மீதமிருக்கிற உணவை உண்கின்றன. வெளிப்பார்வைக்கு இது ஆண்மையப் போக்கு போலத் தெரிந்தாலும் மற்ற அம்சங்களில் சிங்கக்கூட்டம் தாய்வழி சமூகமாகத்தான் இருக்கிறது. குட்டிகள் உட்பட கூட்டத்தில் உள்ள எல்லா ஆண் சிங்கங்களும் தற்காலிகமானவையே. பெண் சிங்கங்களே கூட்டத்தின் நிரந்தர உறுப்பினர்கள்.

சேர்ந்து வேட்டையாஅடும் ஆண் சிங்கங்கள், Barcroft Media

ஆண் சிங்கங்களின் வேட்டை முறை பற்றி நாம் மிக சமீபத்தில்தான் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். 2013ல் இதுபற்றிய விரிவான ஆய்வுகள் வந்தன. ஒரு கூட்டத்தில் பெண் சிங்கங்கள் அதிகம் இருப்பதாலும், பெரும்பாலான வேட்டைகளில் அவை மட்டுமே பங்கெடுப்பதாலும் ஆண் சிங்கங்கள் சும்மா உட்கார்ந்திருக்கின்றன  என்ற பிம்பம் வந்துவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.

பெண் சிங்கங்கள் குழுவேட்டை!

இத்தனை பேசிவிட்டு “சிங்கிள் சிங்கம்” பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? – சிங்கங்கள் கூட்டமாக வசிக்கும் சமூக விலங்குகள் என்பதால் வேட்டையாடும்போதும் அவை கூட்டமாகவே இணைந்து செயல்படுகின்றன. ஆனால் பெரும்பாலும் சண்டை என்று வந்துவிட்டால் அங்கு மோதிக்கொள்வது இரண்டு ஆண் சிங்கங்கள்தான். ஆகவே நீங்கள் இரையா எதிரியா என்பதைப் பொறுத்து சிங்கம் கூட்டமாகவோ சிங்கிளாகவோ வரும்!

விலங்குகளின் உலகில் குழந்தை வளர்ப்பு என்பது ஆண்-பெண் இரு பாலினத்துக்கும் பொதுவானது. குழந்தை வளர்ப்பின் பொறுப்புகளை மிகச் சரியாகப் பங்கிட்டுக்கொள்ளும் இனங்கள் உண்டு. அவை எந்த விலங்குகள்?

பேசுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.