பெண், ஆண், பன்முகப் பால்பண்பு உடைய உயிரிகள்(Intersex) என்ற மூன்று பால் தன்மைகள் (Trioecious nature) பல விலங்குகளில் உண்டு. குறிப்பாக முதுகெலும்பற்ற உயிரிகளில் இது மிக சாதாரணம் எனலாம். ஆனால், அந்த விலங்குகளிலும் கூட பன்முகப் பால்பண்பு உயிரிகள், ஆண் அல்லது பெண்ணுடன் இனப்பெருக்கம் செய்தே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன. ஆனால் அந்த விதிக்கும் ஒரு விதிவிலக்காக வந்திருக்கிறது Auanema rhodensis என்கிற உருண்டைப்புழு. பரிணாம வளர்ச்சியில் இனப்பெருக்கக் கூறுகள் எப்படி இயங்குகின்றன என்பதைப் பற்றிய சில அறிவியல் அடிப்படைகளைக்கூடத் தகர்த்திருக்கிறது.
2001ல் முதல் மாதிரி கண்டெடுக்கப்பட்டு, 2004ம் ஆண்டு மேரி ஆன் ஃபெலிக்ஸ் என்பவரால் விவரிக்கப்பட்ட இந்த உருண்டைப்புழுவில் மூன்று பால் தன்மைகள் உண்டு. அவற்றின் மரபணுக்கூறுகளும், இனப்பெருக்க முறைகளும் சுவாரஸ்யமானவை.
மனிதர்களில், ஆண்களின் செக்ஸ் குரோமோசோம் XY எனவும் பெண்களின் செக்ஸ் குரோமோசோம் XX என்றும் இருப்பதை அறிவோம். பெண்களால் எப்படிப் பார்த்தாலும் எக்ஸ் குரோமோசோம்களையே தர முடியும். ஆண்களிடமிருந்து எக்ஸ் வருகிறதா அல்லது ஒய் குரோமோசோம் வருகிறதா என்பதைப் பொறுத்தே குழந்தையின் பாலினம் முடிவாகிறது.
உருண்டைப் புழுக்களின் செக்ஸ் குரோமோசோம் அமைப்பு சற்றே மாறுதலானது. ஆண் புழுக்கள் XO குரோமோசோம்கள் உடையவை. அதாவது, ஒரே ஒரு எக்ஸ் குரோமோசோம் மட்டுமே. பெண் புழுக்கள் XX வகை குரோமோசோம்களை உடையவை. Auanema rhodensis புழுவில் உள்ள பன்முகப் பால்பண்பு வகை புழுக்களில், ஆண் உயிரணுக்களை உருவாக்கும் உறுப்புகள், பெண் முட்டையை உருவாக்கும் உறுப்புகள் இரண்டுமே உண்டு. இவற்றின் குரோமோசோமும் பெண் புழுக்களைப் போலவே XX வகை உடையதாக இருக்கிறது.
இதுவரை படித்தாலே பொதுவாக இந்தப் புழுக்களின் கூட்டத்தில் XX பண்புள்ள விலங்குகள் அதிகம் என்று தோன்றுகிறது, இல்லையா? அது எப்படி வருகிறது என்று பார்க்கலாம்.
இந்த உருண்டைப் புழுக்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த பன்முகப் பால்பண்பு புழுக்கள், ஆண் புழு அல்லது பெண் புழுவோடு இணைசேருவது தவிர, தேவைப்பட்டால் தானாகவே இனப்பெருக்கம் செய்து அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றன! அந்த சூழலில் எந்தப் புழுவோடும் இவை இணைசேரத் தேவையில்லை! இது self fertilization என்று அழைக்கப்படுகிறது!
இந்த பன்முகப் பால்பண்பு உள்ள புழு, குரோமோசோம் இல்லாத பெண் முட்டைகளையும், XX உடைய ஆண் உயிரணுக்களையும் உருவாக்கி வைத்திருக்கும். ஆண் புழுக்களோடு இணை சேரும்போது, XO முட்டைகளுடன் ஆண் புழுக்களின் XO உயிரணுக்கள் இணையும். அதிலிருந்து உருவாகும் செல்கள் எல்லாமே XO செல்களாக இருக்கும் என்பதால், ஆண்களுடன் இணை சேரும்போது ஆண் புழுக்களே பிறக்கின்றன.
அதுவே பெண்ணுடன் இணைசேர்தல் நடந்தால், இதிலுள்ள XX உயிரணுக்களும், பெண் புழுக்களிடமிருந்து வரும் XX முட்டைகளும் இணையும். அதிலிருந்து வரும் செல்கள் எல்லாமே XX தன்மை கொண்டவை. அவை பெண் புழுக்களாகவோ, பன்முகப் பால்பண்பு கொண்ட புழுக்களாகவோ வளர்கின்றன.
தங்கள் உடலில் உள்ள முட்டைகளையும் உயிரணுக்களையுமே இவை நேரடியாக இணைக்கும்போது, XX தன்மை கொண்ட புழுக்களாகவோ பன்முகப் பால்பண்பு கொண்ட புழுக்களாகவோ வளர்கின்றன.
ஒரு கூட்டத்தில் ஏன் XX புழுக்கள் அதிகமாக இருக்கின்றன என்பது இப்போது புரிந்திருக்கும். பெரும்பான்மையான இனப்பெருக்க முறைகளின் இறுதி செல்கள் XX தன்மை கொண்டவையாகவே இருக்கின்றன. மனிதர்களைப் போல XX-XY குரோமோசோம் அமைப்பு இருந்தால், ஆண்களும் பெண்களும் 50:50 என்ற எண்ணிக்கை இருப்பதே இனம் தழைப்பதற்கு சரியாக இருக்கும். ஆனால் XX-XO மரபணு அமைப்பு கொண்ட விலங்குகளைப் பொறுத்தவரை, பெண் அல்லது பன்முகப்பால்பண்பு விலங்குகள் அதிகமாக இருப்பதே நல்லது.
இதில் பல சுவாரஸ்யமான கேள்விகளை விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்…. அதற்கான பதிலைத் தேடும் ஆராய்ச்சிகளும் நடந்துவருகின்றன.
பொதுவாக, எந்த அளவுக்கு மரபணு அயல் மரபணுக்களுடன் கலக்கிறதோ அந்த அளவுக்கு அந்த இனத்தின் மரபணு வலுவானதாக (Gene strength) இருக்கும். ஒரு சிறு குழுவுக்குள்ளேயே தொடர்ந்து இனப்பெருக்கம் நடந்தால் (Inbreeding), அதனால் மரபணுக்கள் பலவீனமாகி, அது அடுத்தடுத்த தலைமுறையினரின் வலுவை பாதிக்கிறது என்பதைப் பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. சக விலங்குகளிடமிருந்து பிரிந்து ஒரு தீவுக்குள்ளேயோ அணுக முடியாத காட்டுக்குள்ளேயோ சுருங்கிவிடும் விலங்குக் கூட்டங்கள் சில தலைமுறைகளுக்குள் அழிந்துவிடுகின்றன.
ஓரளவு மரபணு கலந்தாலே சில தலைமுறைகள் மட்டுமே ஒரு இனம் நீடிக்கும் எனும்போது, ஒரே உடலுக்குள்ளிருக்கும் உயிரணுவும் முட்டையும் இணைந்து பிறக்கும் புழுக்கள் எப்படி இத்தனை தலைமுறைகளாகத் தன்னைக் காத்துக்கொள்கின்றன? அது பொதுவான இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறதே என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகிறார்கள்.
சில விலங்குகள் இனப்பெருக்கம் இன்றி, தன் உடலில் இருக்கும் செல்கள் மூலமாகவே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றன (Self fertilization). வேறு சில விலங்குகளோ, ஆண்-பெண் இருமைக்கு உட்பட்டு, மரபணுக்களைக் கலந்து இனப்பெருக்கம் செய்கின்றன (Crossing). ஆனால், இரண்டு பண்புகளுமே இருக்கிற விலங்கினங்கள் மிகவும் அரிது. அதை Mixed mating strategy என்பார்கள். இப்படி ஒரு தன்மை வந்தாலும்கூட, அது தற்காலிகமானதாக, ஒரு பரிணாம வளர்ச்சியின் படிநிலையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. விலங்கு பரிணாம வளர்ச்சி அடைந்த உடன் எதாவது ஒரு இனப்பெருக்கக் கூறு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் இந்தத் தட்டைப்புழுவிலோ பல தலைமுறைகளாக இரண்டு வகை இனப்பெருக்கங்களுமே தடையின்றித் தொடர்கின்றன. இது எதனால் ஏற்படுகிறது? பரிணாம அடிப்படையில் இதில் ஏதும் ஆதாயங்கள் உண்டா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
இந்த கேள்விக்கு ஒரு ஆரம்பகட்ட பதில் கிடைத்திருக்கிறது எனலாம். ஆராய்ச்சிக்கூடங்களில் இவற்றை வளர்த்துப் பார்த்தால், சூழல் நன்றாக இருக்கும்போது ஆண்/பெண் இருமை கொண்ட புழுக்களின் எண்ணிக்கை அதிகமானதாகவும், உணவு கிடைக்காத மோசமான சூழல் வரும்போது இனப்பெருக்கம் நடந்தால் பன்முகப் பால்பண்பு கொண்ட புழுக்கள் அதிகமாகவும் பிறந்தன.
இந்தப் புழுக்கள் பூச்சிகளின்மீது ஏறி பிற இடங்களுக்குப் பயணிக்கும் இயல்பு உடையவை. புதிய இடம் சாதகமானதாகவோ அல்லது வாழ்வதற்குத் தகுதியற்றதாகவோ இருக்கலாம். பயணத்தின்போது சில புழுக்கள் இறக்கவும் வாய்ப்பு உண்டு. புதிய இடத்தில் ஒரே ஒரு பன்முக பால்பண்பு புழு இருந்தால்கூட, அது அடுத்த தலைமுறையை உருவாக்கி எப்படியாவது பிழைத்துக்கொள்ளும். சூழல் சரியானபின்பு நடக்கும் இனப்பெருக்கத்தின்போது ஆண்/பெண் புழுக்கள் பிறக்கும். இவை வாழும் சூழல் மாறிக்கொண்டே இருப்பதால், இரண்டு வகையான இனப்பெருக்கமும் தேவைப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
கண்ணுக்கே தெரியாத, 1 மில்லிமீட்டர் நீளம் உள்ள புழு விஞ்ஞானிகளை இப்படித் தேடித் தேடி ஆராய்ச்சி செய்ய வைக்கிறது என்பதே சுவாரஸ்யம்தான்.
எந்த சூழலிலும் இனப்பெருக்கம் செய்யத்தக்க விலங்குகள் இருக்கும் இதே பூமியில், இனப்பெருக்கத்துக்காக உயிரையே இழக்கும் பல விலங்குகள் உண்டு. அவற்றில் சிலவற்றை சந்திக்கலாமா?
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதி:
படைப்பு:
நாராயணி சுப்ரமணியன்
கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.