ஆண் துணை இல்லாமல் தனித்து வாழும் பெண்களையும், ஒற்றைப் பெற்றோராக இருக்கும் பெண்களையும் இந்த சமுதாயம் நடத்தும் விதம் மிகக் கொடுமையானதாக இருக்கிறது. பொதுவெளியில் அவர்களுக்கு உரிய மதிப்பும், மரியாதையும் அளிக்கப்படுவதில்லை. குடும்ப விழாக்களில் இத்தகைய பெண்களை முன்னிறுத்தத் தயங்குவதும், இன்னும் ஒருபடி மேலே போய் சுற்றத்தாரே அவர்களை அவமரியாதை செய்வதும், ஒதுக்கி வைப்பதும் இன்றும் நடக்கிறது. பொதுப்புத்தியில், ஆண் துணையுடன் வாழும் பெண்தான் மங்கலகரமானவள், முன்னோடியாக இருக்க அனைத்து தகுதிகளும் பெற்றவள் என்று அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

“அவங்க தீர்க்க சுமங்கலி” “மஞ்சள் குங்குமத்தோடு வாழும் மகராசி” என்று கணவனுடன் வாழும் பெண்ணைப் போற்றுவதும், “அவளா… அத்துக்கிட்டு வந்தவதானே” என்று கணவனைப் பிரிந்து வாழும் பெண்ணையும், “புருசன் இல்லாம முண்டச்சியா நிக்கறா” என்று கணவனை இழந்த பெண்ணையும் தூற்றுகிறது.

கல்யாணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழும் பெண்ணுக்கும் இங்கு எந்த மரியாதையும் இல்லை.

ஆண் துணையில்லாத பெண்ணுக்கு வாழவே தகுதி இல்லை என்று தான் பெரும்பான்மை மதங்கள் சொல்கின்றன. சிறு வயதில் தந்தையும், இளம் வயதில் கணவனும், முதுமையில் மகனும் பெண்ணைக் காக்க வேண்டுமாம். ஆண் துணையில்லாமல் வாழும் பெண், இந்த ஆணாதிக்க சமுதாயத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறாள்.

இப்படியே அனைத்து பெண்களும் சுதந்திரமாக வாழத் துவங்கிவிட்டால் என்ன செய்வது ? ஆணுக்கு வாரிசு கிடைக்காதே, பெண்ணின் கருப்பை உதவியில்லாமல் ஜாதியையும், மதத்தையும் கட்டிக் காக்க முடியாதே என்று சமுதாயம் பயப்படுகிறது. அப்படிப்பட்ட பெண்கள் பெருகாமல் பார்த்துக் கொள்ள எல்லா உத்திகளையும் கடைபிடிக்கிறது. கல்யாணம் செய்து கொண்டு கணவனுடன் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை என்று போதிக்கிறது.

Photo by Avonne Stalling from Pexels

“நீ எவ்வளவு சாதிச்சாலும், கல்யாணம் செஞ்சுட்டு ஒருத்தன் கூட வாழலைன்னா வேஸ்ட்” என்று குடும்பம், சுற்றம் தொடங்கி ஊடகங்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் என்று அனைத்தும் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.  ஆண் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், அடித்தாலும், உதைத்தாலும் அவனை  சகித்துக் கொண்டு வாழ வேண்டுமேயன்றி, கல்யாண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்துவிடக் கூடாது என்று பெண்களுக்கு சமுதாயம் பலவகையில் எச்சரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த மூளைச்சலவைக்கு பலியாகி, வெளியே வர தயங்கிக் கொண்டு, விஸ்மயா போல பல பெண்கள் உயிரையே விட்டுவிடுகிறார்கள்.

ஆணாதிக்க சமுதாயத்தின் மிரட்டல்களையெல்லாம் கடந்து பல பெண்கள், ஆண் துணையில்லாமல் தனித்தும், குழந்தைகளுடனும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை இழிவாக நடத்தும் அதே சமுதாயம், இவர்களின் உழைப்பை சுரண்டிக் கொண்டிருக்கிறது.

அலுவலகங்களில் கூடுதல் வேலை வந்தாலோ, அலுவலக நேரம் தாண்டி பணி செய்ய வேண்டுமென்றாலோ, அங்கு பணிபுரியும், தனித்து வாழும் பெண்ணை அவர் அனுமதியைக் கேட்காமலே வேலையைத் திணிக்க பெரும்பாலானோர் தயங்குவதில்லை. “அவங்களுக்கு என்ன குடும்பமா, குட்டியா, இந்த வேலையை அந்த பொண்ணை செய்யச் சொல்லுங்க” என்று “குடும்பத்திற்குள்” இருக்கும் ஆணும், பெண்ணும், அதிகாரமாகச் சொல்வார்கள். தனித்து வாழ்வது என்பது அந்தப் பெண்ணின் தேர்வு, அதற்காக அவர் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது அப்பட்டமான உரிமை மீறல், நியாயமற்ற செயல். 

ஆணாதிக்க சமுதாயம், பொதுவெளிகளிலும் இவர்களை உளவியல் ரீதியாகத் தாக்கி, நுணுக்கமாக தனிமைப்படுத்துகின்றது. சக அலுவலர்களாக, தெரிந்தவர்களாக, ஏன் நண்பர்களாக இருக்கும் ஆண்கள் கூட, இந்தப் பெண்களை பாலியல் ரீதியாக அணுகத் தயங்குவதில்லை. தன் விருப்பத்தை தெரிவிப்பது வேறு, “உனக்கும் தேவை இருக்கும்தானே, நீ இணங்கித்தான் ஆகவேண்டும்”, என்று நிர்பந்திப்பது வேறு. தனித்து வாழும் பெண்களுக்கும் சுயமரியாதை உண்டு, உரிமைகள், விருப்பங்கள் உண்டு என்று உணர்வதேயில்லை. 

தனித்து வாழும் பெண்கள், “பொது ஒழுக்க” விழுமியங்களைப் பொருத்தவரை மிகவும் “vulnerable” ஆக இருக்கிறார்கள். இந்தத் தோழிகள் தமது so called “ஒழுக்கத்தை”  நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலையில்தான் சமுதாயம் அவர்களை வைத்திருக்கிறது.  தனி வீடெடுத்து வசிக்கும் தோழி சொல்வார், “நேத்தைக்கு நைட் லேட்டா வந்தே போலிருக்கே, ஆபீசுல ரொம்ப வேலையோ” என்று பக்கத்து வீட்டு ஆண்ட்டி கொக்கி போடுவாராம். “ஆமாம்னு சொல்லிட்டால் தப்பிச்சேன், இல்ல, ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு உண்மையைச் சொன்னாப் போச்சு, பேரு என்ன, அவங்க வீடு எங்க இருக்குன்னு தொளச்சு எடுத்துடுவாங்க. சுருக்கமா சொன்னா அந்த ஃப்ரெண்ட் ஆணா பொண்ணான்னு ஆண்ட்டிக்கு தெரியணும்”, என்று கசப்பான புன்னகையுடன் சொன்னார். ஒற்றைப் பெற்றோராக இருக்கும் தோழியும் இதே மாதிரி கதைகதையாகச் சொல்வார். பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அலுவலகம், சுற்றம் என்று பலவகைகளில் இவர்களை சமுதாயம் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.

அன்னா மானி, scroll.in

இதையெல்லாம் மீறி தனித்து வாழும் தோழியரின் சமூகப் பங்களிப்பு அளப்பரியது. பெண்கள் பல துறைகளில் இன்று சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பெரும்பாலும் அதற்கு விதை போட்டவர்,  தனித்து வாழும் ஒரு பெண்ணாகத்தான் இருப்பார். இந்திய வானியல் துறையை வடிவமைத்த “இந்தியாவின் வெதர்வுமன்” அன்னா மானியாக இருக்கட்டும், பொட்டானிகல் சர்வே ஆஃப் இந்தியாவை உருவாக்கிய தாவரவியல் விஞ்ஞானி ஜானகியம்மாளாகட்டும்… இவர்களும், தமது துறையில் கொடிகட்டிப் பறந்த பலரும், ஆண் துணையில்லாமல் தனித்து வாழ்ந்த பெண்களே !

ஒரு துறையில் உச்சத்தை அடையும் எந்தப் பெண்ணையும் எடுத்துக் கொள்ளுங்கள், ஒன்று கல்யாணம் செய்து கொள்ளாதவராக இருப்பார், இல்லை கல்யாணமாகி கணவனை இழந்தவராகவோ, பிரிந்தவராகவோ இருப்பார். அவர்களால் தான் சுதந்திரமாக உழைத்து சாதிக்க முடிந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. விதிவிலக்காக சிலரை, வலிந்தெடுத்துக் கொண்டு நீங்கள் சுட்டிக் காட்டலாம். ஆனால், ஆண் துணையும், இந்த குடும்ப அமைப்பும், ஒரு துறையில் பெண்ணை கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்ந்த நிலையை எட்ட முடியாதவாறு வைத்திருக்கின்றன என்பதுதான் யதார்த்தம். இந்த உண்மை பலருக்கு கசப்பாக இருக்கலாம்.

stylist

இதற்கு, பெண்கள் ஆண்களை வெறுக்கிறார்கள் என்றோ, ஆண்கள் இல்லாத வாழ்க்கையை விரும்புகிறார்கள் என்றோ பொருள் கொள்ள வேண்டாம். சக தோழர்களாக ஆண்களுடன் பயணிப்பதைதான் பெரும்பான்மையான பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால், அதற்கு சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், தான் தேர்ந்தெடுத்த துறைக்காக முனைப்புடன் உழைப்பதையும் விலையாகத் தருவதில் தான் சிக்கல் இருக்கிறது.

இன்னொரு பரிமாணத்தையும் நாம் பார்க்க வேண்டும். சில பெண்கள், ஆண் துணை இல்லாமல் தனித்து வாழ்வதை, தனது விருப்பமாகத் தேர்ந்தெடுத்து, மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையை இயல்பான ஒன்றாக சமுதாயம் ஏற்க வேண்டும். அதை ஏதோ குற்றமாகவோ, அவர்கள் ஆண் துணையில்லாமல் கஷ்டப்படுவார்கள் என்ற அனுதாபத்துடனோ, துணையை தேர்ந்தெடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துடனோ பார்க்கத் தேவையில்லை. அது அந்தப் பெண்ணின் தேர்வு என்றே பார்க்க வேண்டும்; மதிக்க வேண்டும்.

கல்யாணம் செய்து கொள்வதும் கொள்ளாததும் பெண்ணின் விருப்பம். அதை மதித்து தனித்து வாழ ஒரு பெண் முடிவெடுப்பதை இங்கு இயல்பாக்க வேண்டும்.

கல்யாண வாழ்க்கையிலிருந்து வெளிவந்து தனித்து வாழும் பெண்கள், ஒற்றைப் பெற்றொராக இருக்கும் பெண்கள், கணவனை இழந்த பெண்கள் இவர்கள் அனைவருக்கும் தமது விருப்பம் போல வாழ முழு உரிமை உண்டு. இவர்களை மனதார மதித்து மரியாதையுடன் நடத்த வேண்டும், அதற்குப் பழக வேண்டும், அடுத்த தலைமுறையைப் பழக்க வேண்டும். ஆண் துணையும், குடும்ப அமைப்பும் பெண்ணை சாதிக்க விடாமல் ஏதோ ஒருவகையில் தடை செய்கின்றன. அது எதனால் என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும் தோழர்களே !

கட்டுரைத் தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.