சென்ற ஆண்டு சில தோழிகளுடன் ஷாப்பிங் சென்றபோது, அழகான குர்த்தாவைப் பார்த்து ஒரு தோழி வாங்க ஆசைப்பட்டார். “சூப்பரா இருக்கு, வாங்குங்க” என்று சொல்லிவிட்டு மற்ற உடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பின்னாடியே வந்து, ரகசியமாக, “நான் ஏடிஎம் கார்டு கொண்டு வரலை… எனக்கு நீங்க பணம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டார். நான் சரியென்று பணம் செலுத்திவிட்டேன்.

அடுத்த நாள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வந்தபோதுதான் உண்மை தெரிந்தது. நல்ல வேலையில் இருக்கும் அவரின் ஏடிஎம் கார்டை அவர் கணவர்தான் வைத்திருக்கிறாராம். அன்றாட ஆட்டோ செலவு, டீ செலவுக்கு மட்டும் தினமும் பணம் கொடுப்பாராம். வேறு எதாவது வாங்க வேண்டுமென்றால், பியூட்டி பார்லர் போகவேண்டுமென்றால், முன்கூட்டியே அவரிடம் விளக்கி, அனுமதி வாங்கி, கூடுதல் பணம் வாங்கி வருவாராம். “ஏன் இப்படி செய்றீங்க? உங்க சம்பளத்தை உங்க பேங்க் அக்கவுண்ட்லதானே போடுறாங்க… உங்க ஏடிஎம் கார்ட்டை நீங்க வச்சுக்க வேண்டியதுதானே ? ” என்று கேட்டேன். மவுனமாக இருந்தார்.

இவர் மட்டுமல்ல, வேலைக்குப் போகும் நிறைய பெண்கள் தங்கள் ஏடிஎம் கார்ட்டை கணவரிடம் கொடுத்து வைத்துள்ளனர். “எனக்கு பொறுப்பு பத்தாது; எங்கயாவது தொலைச்சுடுவேன்” – இப்படிச் சொன்னார் ஒரு தோழி; இவர் பல லட்சம் புழங்கும் அலுவலகத்தில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிகிறார்.

“பேங்க் ஸ்டேட்மெண்ட், இன்கம் டாக்ஸ் ரிடர்ன்ஸ்… இதெல்லாம் தொல்ல பிடிச்ச வேலை. எனக்கு வராது. அவரே பார்த்துகிடட்டும்னு ஏடிஎம் கார்டு, பாஸ்புக் எல்லாம் அவர்கிட்டயே குடுத்துட்டேன். டூவீலர் பெட்ரோல் செலவுக்கு, மத்த செலவுக்குன்னு, வாரத்துக்கு ஒரு தடவை அவர்கிட்டே வாங்கிப்பேன்” என்கிற ஒருவர் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதால் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றுவிட்டனர்; தற்சார்புடன் இருக்கிறார்கள் என்ற கூற்றை மறுஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

பெண்கள் வீட்டை விட்டு வெளியே போய் வேலை செய்வதென்பதே ஆணாதிக்க சமுதாயத்துக்கு ஒரு சவால்தான். குடும்பப் பெண்ணை வெளியே வேலைக்கு அனுப்பாதே, அவ கெட்டுப் போயிடுவா, வீட்டுல குங்குமம் தயார் செய்து வித்து சம்பாதிக்கச் சொல்லு’ என்றெல்லாம் அறிவுரை’ சொன்ன ‘பெரியவா’க்கள் இங்கிருந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் கடந்து, கணிசமான பெண்கள் இன்று வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டனர். வேகவேகமாக நடந்து, பஸ், ட்ரெயின், ஆட்டோ பிடித்து பணியிடத்துக்குப் போகிறார்கள். சைக்கிளில், டூவீலரில், காரில் பறக்கிறார்கள். இவர்களையெல்லாம் தன் கட்டுப்பாட்டில் வைக்க ஆணாதிக்கச் சமுதாயம் பயன்படுத்தும் ஆயுதம்தான் `உனக்குப் பணத்தை ஒழுங்கா கையாளத் தெரியாது’ என்பது.

People vector created by pch.vector – www.freepik.com

”என்னது?! காலங்காலமா, என் பாட்டி சுருக்குப்பையிலும், அம்மா பர்ஸிலும் பணத்தை வைச்சுக்கிட்டு, கீரைக்கட்டுக்குக்கூட பேரம் பேசி, ஒரு பவுடர் டப்பா வாங்கறதுக்கு ஆயிரம்முறை யோசிச்சு, சில்லறையை எண்ணி எண்ணி செலவு பண்ணுனாங்களே… சேத்து வச்சு என்னையும் தம்பியையும் படிக்க வச்சாங்களே. அவங்களுக்கா பணத்தை சரியா வச்சுக்கத் தெரியல, சேமிக்கத் தெரியல?” என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். ஆணாதிக்கம் நிறைந்த பொதுப்புத்தியின் இன்றைய பதில் “அது வேற காலம். இப்ப நீ பேங்க் ட்ரான்ஸ்சாக்சன்ஸ் – நாமினி, நெட்பாங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்ஸ்சூரன்ஸ் பாலிஸி, மியூச்சுவல் ஃபண்ட், ஷேர்ஸ், இன்கம் டாக்ஸ் ரிடன்ஸ், ஃபிக்ஸ்ட் டெபாஸிட்… இதெல்லாம் டீல் பண்ணனும். அதுக்கு உனக்கு அறிவு பத்தாது” என்பதுதான். இது வெளியே சொல்லும் கூற்றாக இருந்தாலும், பொதுபுத்தியின் அடியாளத்தில் இருப்பதென்னவோ, ‘எங்க போய், எவ்வளவு சம்பாதிச்சாலும் பணத்துக்கு எங்கிட்டதான் கையேந்தணும்’ என்பதுதான்.

தன் சம்பளத்தை தன் அக்கவுண்ட்டில் வைத்துக் கொண்டு, வீட்டுக்கு இவ்வளவு என்று கொடுத்து விட்டு, தனக்குத் தேவையானவற்றுக்கு சுதந்திரமாக பணத்தைச் செலவு செய்யும் பல பெண்கள் இருக்கிறார்கள். கணவர் சம்பளத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, குடும்பச் செலவுகளை பொறுப்புடன் நிர்வகிக்கும் தோழியர் பலர் இருக்கிறார்கள். ஆனால், இங்கு பெரும்பான்மையான பெண்களைப் பற்றிதான் பேசுகிறேன்.

Abstract vector created by pch.vector – www.freepik.com

பெரும்பாலான பெண்களுக்கு, படித்த பெண்களுக்குக்கூட, ‘இதெல்லாம் நமக்குத் தெரியாது’ என்கிற எண்ணம் இருக்கிறது. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். அதில் ஆணும் பெண்ணும் வட்டமாக நின்று கொண்டு, ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். கேள்விகள் கேட்கப்படும், விடை தெரிந்திருந்தால் முன்னாடி ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும், தெரியவில்லையென்றால் பின்னோக்கி ஒரு அடி செல்ல வேண்டும். வீடு, பொது ஆறிவு தொடர்பான பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆரம்பத்தில் பல கேள்விகளுக்குப் பெண்கள் மகிழ்ச்சியாக முன்னோக்கி வருகிறார்கள். நிதி தொடர்பான கேள்விகள் வரவர அவர்கள் பின்னோக்கி செல்கிறார்கள். முடிவில் எல்லோரும் பின்னோக்கி நகர்ந்து சுவர் அருகில் நின்றுவிடுகிறார்கள். “ஆம், வங்கி, வீட்டு இன்ஸுரன்ஸ், ஹோம் லோன், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தொடர்பான கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று ஆங்கிலத்தில் கூறி வருத்தத்துடன் முடிக்கிறார்கள்.

இத்தகைய சமூகத்தில்தான் வங்கிகளின், காப்பீட்டு நிறுவனங்களின் தலைவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். ஏன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகப் பெண்கள் இருந்திருக்கிறார்கள். இன்றும், ஃபினான்ஸியல் அனலிஸ்டாக, கன்சல்டன்ட்டாகப் பலர் பணிபுரிகிறார்கள்.

ஆனால், யதார்த்தத்தில், ‘நிதி நிர்வாகம் பெண்ணுக்கு வராது’ என்ற ஆணாதிக்கத்தின் மூளைச்சலவைக்கு ஆட்பட்டு, பெண்கள், தனது ஊதியம் தொடர்பான அனைத்தையும் ஏடிஎம் கார்டு உட்பட குடும்பத்து ஆண்களிடம் – கணவன், அப்பா, சகோதரன், மகன் – ஒப்படைத்து விடுகிறார்கள்.

இதில் இன்னொரு வகை பெண்கள்… ஐடி போன்ற நவீன பணிகளில் இருப்பார்கள், கல்யாணத்திற்கு முன்பு ஏடிஎம் கார்டு, வங்கிப்பணிகள் உட்பட அனைத்தையும் திறமையாகக் கையாள்வார்கள், கல்யாணத்துக்குப் பிறகு அனைத்தையும் கணவனிடம் ஒப்படைப்பார்கள். ஏனாம்? காதலாம், நம்பிக்கையாம். இதற்கும் காதலுக்கும் நம்பிக்கைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை செல்லமே! உன் சம்பாத்தியம், உன் உரிமை, உன் சுயமரியாதை.

கல்யாணத்துக்குப் பிறகு, இருவரும் உட்கார்ந்து பேசுங்கள். அவரவர் சம்பளத்தை அவரவர் அக்கவுண்ட்டில் வைத்து, நிர்வகித்துக் கொள்ளுங்கள். வீட்டுச் செலவுகளை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்று ஒன்றாக முடிவெடுங்கள், செலவு செய்யுங்கள். ஆரம்பத்திலேயே பேசி, செயல்படுத்திவிட்டால் பின்னால் பிரச்னை வராது. இன்னும் சொல்லப் போனால், கல்யாணத்துக்கு முன்பே நிதி நிர்வாகம்பற்றி ஆணும் பெண்ணும் பேசி முடிவெடுக்க வேண்டும்.

சுயமரியாதையுள்ள பெண்ணுக்கு உண்மையான பொருளாதார சுதந்திரம் என்பது தன் ஊதியத்தை தானே கையாள்வது என்பதுதான். ஆனால், அவள் ஊதியம் என்பது குடும்பத்துக்கானதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆணும் தன் ஊதியத்தை குடும்பத்துக்குச் செலவு செய்கிறான்தான். ஆனால், தனக்கான செலவுகளுக்கு பணம் எடுத்துக்கொள்ள அவனுக்கு எந்த குற்றவுணர்வும் இல்லை. அதற்காக மனைவியிடம் அனுமதி கோர வேண்டிய நிலையும் இல்லை (இது ஜோக்குகளில்தான் உள்ளது, யதார்த்த நிலை வேறு). விதிவிலக்காக சிலர் இருக்கக்கூடும். பெரும்பான்மையினரைத்தான் இங்கே பேசுகிறேன்.

வேலைக்குப் போய் சம்பளம் வாங்கும் அன்பான தோழியரே… உங்கள் ஏடிஎம் கார்ட்டை முதலில் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பச் செலவுகளுக்காகப் பணம் செலவழிப்பது வேறு; உங்கள் தனிப்பட்ட செலவுகளுக்காகப் பணம் செலவழிப்பது வேறு. இரண்டையும் பிரித்துப் பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள் டியர்ஸ்!

அப்புறம், பாங்க் அக்கவுண்ட்டை நிர்வகிப்பதோ, இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்ஸோ, நெட்பாங்கிங்கோ, இன்ஸூரன்ஸ் பாலிஸியோ, மியூச்சுவல் பண்டோ, ஃபிக்ஸட் டெபாசிட்டோ… புரியாத பெரிய விஷயங்கள் இல்லை. பொறுமையாக வாசித்தால், தெரிந்தவர்களிடம் கேட்டால் கற்றுக் கொள்ளலாம், தடையில்லா திறந்த மனம்தான் தேவை.

நிறைய அன்பு!

கீதா பக்கங்களின் முந்தைய பகுதி

படைப்பாளர்

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளைத் தொடர்ந்து விதைத்து வருகிறார்.
மேலும் படிக்க…