சிஸ்டம் ரொம்பக் கஷ்டம்

ஐயோ… இந்த சிஸ்டம் நமக்கு ரொம்பக் கஷ்டம்… எல்லாம் டெக்னாலஜி வளர்ச்சியால் வந்த வினை. அதற்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. நம் ஊரிலும் கால் டாக்ஸிகள் மொபைல் ஆப்பிற்கு மாறியபோது நமக்கு வந்த அதே டென்ஷன்தான்.

இங்கே பெரும்பாலும் கால் செய்ய மாட்டார்கள். வண்டி வந்து சேர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் நாம் ஏறவில்லையென்றால், வெயிட்டிங்கிற்கும் அதற்குப் பிறகு கேன்ஸல் ஆவதற்கும் தண்டம் கொடுக்க வேண்டும். ஆம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் பெரும்பாலான ஆப் வேலை செய்வதில்லை. அதனால் வண்டியை விட்டு இறங்குமுன் டொக் என்று விழுந்துவிடும். அதற்குப் பின் ஏன், எதற்கு என்று யாரிடம் கேட்பது? கேன்ஸல் ஆன பயணத்திற்கோ நம் தவறில்லாமல் அல்லது பயணம் செய்யாமல் பணம் எடுக்கப்பட்டிருந்தால் ஆப்பில் புகார் அளிக்கலாம். அதில் அவர்கள் காட்டும் காரணங்களில் ஒன்றைத் தொட வேண்டும். புகாரை அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும்.

pinterest

ஒரு பிரபலமான கால் டாக்ஸியில் இந்த அனுபவம் ஏற்பட்டது. என் பிரச்னையை விவரமாக மெயிலில் அனுப்பிவிட்டு, ஆர்வமாகக் காத்திருந்தேன். சம்பந்தமே இல்லாமல் ஒரு பதில். மீண்டும் விளக்கமாகப் பதில் அனுப்பினேன். இப்படியே 2, 3 ரவுண்ட் போன பிறகுதான் கவனித்தேன், இரண்டு விதமான பதிலே மீண்டும் மீண்டும் வந்தது. ஆட்டோமேடிக் ரிப்ளை கேள்விப்பட்டிருக்கிறேன். இரண்டு, மூன்று பதில்களை மட்டுமே வைத்துக்கொண்டு எப்படி மாற்றிக் கேட்டாலும் அதையே சொல்கிறார்கள்.

CTV News Toronto

ஒருமுறை வாடகை கார் எடுத்து வெளியே செல்லும்போது, பனியால் பிரேக் பிடிக்காமல் சாலையின் சரிவில் இறங்கிவிட்டது. கூப்பிடும் முன்பே போலீஸ் வந்துவிட்டது. இன்சூரன்ஸ் இல்லாவிட்டால் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தொகை செலவாகும் என்றார்கள். இன்சூரன்ஸ் கிடைக்க வேண்டுமானால் போலீஸ் ரிப்போர்ட் வேண்டும். இன்சூரன்ஸ் பணம் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

நேரில் பார்த்து எந்த வேலையும் முடிக்க முடியாது. குறுக்கு வழி கிடையாது. இருப்பது ஒரே ஒரு வழிதான். அது முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்கும். அந்த வேலை முடிந்த பிறகும் நமக்குப் புரியாது, எப்படி முடிந்தது என்று. எல்லா இடங்களிலும் கால் சென்டர் என்பது குறைந்த சம்பளத்தில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய மட்டுமே ஆட்களை வைத்திருப்பார்கள். எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம், ஆனால், பதில் அவர்களுக்குத் தெரிந்ததில் ஒன்றாக இருக்குமே தவிர, நமக்குத் தேவையான ஒன்றாக இருப்பது நம் அதிர்ஷ்டம். ஏனென்றால் வேலையைச் செய்பவர் நம்மிடம் பேச மாட்டார், நமக்குப் பதில் சொல்கிறவருக்கு அந்த வேலையைப் பற்றியோ, அந்த அலுவலகம் எங்கிருக்கிறது, எப்படி இயங்குகிறது என்பது பற்றியோ ஒன்றுமே தெரியாது.

போலீஸ், அரசு அலுவலகங்களைத் தொடர்புகொள்ளும்போதுதான் என்றில்லை, பொதுவாகவே இங்கே இதுதான் நடைமுறை. நாங்கள் வீடு மாறுவதற்கு இந்திய ரியல் எஸ்டேட் ஏஜெண்டைத் தேடாமல், முந்தைய வீட்டு ஓனரின் ஏஜெண்டை அணுகினோம். அப்பொழுதும் இப்படித்தான், அவர் குறிப்பிட்ட நேரத்தில், இடத்தில் நாம் இல்லையென்றால், கால் செய்ய மாட்டார். அவர் வந்து சேர்வதற்கு முன்னால் குருஞ்செய்தி மட்டுமே வரும். நாம் பார்க்கவில்லையென்றால், அப்பாயிண்ட்மென்ட் கேன்ஸல் பண்ணிவிட்டுப் போய்விடுவார். என்ன இருக்கிறது, இல்லை என்று மட்டுமே சொல்வார்கள். அறிவுரை, கருத்து கேட்டாலும் கிடைக்காது. நம் முடிவு நம்முடையது. அதில் வரும் கஷ்டமும் நஷ்டமும் நம்மைச் சேர்ந்தது.

அடுத்து மிக முக்கியமான விஷயம் டாக்டர். குடிமக்களுக்கும் வருமானவரி செலுத்தும் குடிபெயர்ந்தவர்களுக்கும் மருத்துவம் பொதுவாக இலவசம். மருந்து மாத்திரைகளுக்கும் மற்ற உபகரணங்களுக்கும் இன்சூரன்ஸ் பயன்படும். தரத்திலும் குறைவிருக்காது. ஹெல்த் கார்டு இருப்பவர்கள் அருகே இருக்கும் ஹெல்த் சென்டரில் ஃபேமிலி டாக்டர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்துகொள்ளலாம். ஹெல்த் கார்டு எங்கு கொண்டு சென்றாலும், நம் மருத்துவ வரலாறு அதில் பார்த்துக்கொள்வார்கள். அப்பாயின்ட்மெண்ட் இல்லாமல் எந்த ஒரு டாக்டரையும் பார்க்க முடியாது. பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் எந்த மருந்தும் வாங்க முடியாது. ஹெல்த் கார்டில் எப்போது எந்த டெஸ்ட் பண்ணினோம், எந்த மருந்து கொடுக்கப்பட்டது, என்ன வியாதி எல்லாமும் இருக்கும், மருத்துவர்கள் பார்வைக்கு.

ஹெல்த் கார்டு, quora

பிரச்னையைச் சொன்னால் போதாது. அது எதனால் வந்திருக்கும் என்று நினைக்கிறோம், என்ன செய்த பிறகு வந்தது, இதற்கு முன்னாடி இப்படி வந்திருக்கிறதா, அப்போது என்ன மருந்துவம் செய்தோம் என்றெல்லாம் நம்மையே டாக்டர் கேட்பார். இதில் ஒன்றும் புலப்படவில்லையென்றால், நிலைமை சீரியஸாக இல்லாததாகத் தோன்றும் பட்சத்தில், வெயிட் பண்ணி பார்க்கலாம் என்று சொல்லிவிடுவார். நாமே டெஸ்ட் எடுக்கலாமா என்று கேட்டால் எழுதிக் கொடுத்து, அதற்கு ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் அப்பாயிண்ட்மென்ட் ஒரு மாதமோ, இரண்டு மாதமோ கழித்துப் போட்டுக் கொடுப்பார்.

எமர்ஜென்ஸி, அது தனிக்கதை. டாக்டர் சொல்லாவிட்டாலும் நீங்களே சீரியஸ் தான் என்று முடிவு செய்தால் எமர்ஜென்ஸிக்கு நேரடியாகச் செல்லலாம். ஆனால், அங்கேயும் நீண்ட வரிசை இருக்கும். பொறுமையாக எல்லா விவரங்களையும் நோயாளியிடமே கேட்டு, பிறகு டாக்டர் பார்த்து, அவர் ஒரு முடிவுக்கு வர, டெஸ்ட் தேவைப்படும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு நீண்ட வரிசை இருக்கும். அதனால் குறைந்தபட்சம் ஒரு நாள் முழுவதும் அங்கே உண்ணாமல் உட்கார வைத்துவிடுவார்கள். மிகவும் சீரியஸ் என்றால், அதற்குப் பிரத்யேக ஆம்புலன்ஸ் எண் உண்டு. அதைத் தொடர்புகொண்டால், நோயாளியை மட்டும் அவர்கள் வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களின் நிலைக்கு ஏற்ப அவசர சிகிச்சை அளிக்கப்படும்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

பிருந்தா செந்தில்குமார்

பிருந்தா தமிழ்நாட்டில் பிறந்து, சென்னையில் படித்த இளங்கலை வணிகவியல் பட்டதாரி. ஐடி துறையில் சுமார் 20 வருட காலமாக பணிபுரிந்து வருகிறார். தற்போது வேலை நிமித்தமாக இரண்டரை வருடங்களாக கனடா மிசிசாகா என்னும் நகரத்தில் வசித்து வருகிறார்.

படிக்கும்போதும், வேலை செய்யும் இடத்திலும் தெளிவாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கிடைத்த பாராட்டுகள் மற்றும் கோவிட் காலத்தில் உறவினர்கள் அளித்த ஊக்கத்தில், முதன்முதலாகத் தன் கனடா அனுபவத்தை எழுத்தில் பதிவிட்டிருக்கிறார்.