உறவுகள் – 5

கூட்டுக்குடும்ப வீடுகளின் சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டவையல்ல; அந்தக் குடும்ப நபர்களால் எழுப்பப்பட்டவை. அங்கு குடும்ப வேலைகளைப் பகிர்ந்துக்கொள்ள ஆள்கள் இருப்பார்கள்; சமையல் வேலையில் தொடங்கி உறவுக்காரர்களின் விசேசங்களுக்கு சென்று வருவது வரை, எல்லா வேலைகளும் பகிர்ந்தளிக்கப்படும். சம்பாதித்துவரும் ஆண்களின் வேலையும் அப்படியே.

ஒரு அண்ணன் தொழில் செய்வார், இன்னொரு அண்ணன் வேலைக்குச் செல்வார், மூன்றாவதாக ஒருவர்- அண்ணனோ தம்பியோ சும்மா இருப்பதை ஒரு வேலையாக சுகமாக செய்துக்கொண்டு இருப்பார். சம்பாத்தியம் ஈட்டாத அவரின் மனைவி, குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு வேலைக்கு போகின்ற மற்ற இரண்டு அண்ணன்கள் தலையில் கூடுதலாக ஏற்றி வைக்கப்படும்.

” நாங்க சம்பாதித்து அவன் மனைவி பிள்ளையை ஏன் காப்பாற்ற வேண்டும்?”, என்று வினாக்கள் அங்கு எழும்பியதில்லை. வாழவந்த மருமகள்கள் அக்காள் தங்கைகளாகத்தான் சீராட்டப்பட்டார்கள். வீட்டுவேலைகளில் கெட்டிக்காரியாக விளங்கும் ஒருத்தி தலையில் மொத்த கனத்தையும் ஏற்றி வைத்துவிட்டு, மற்றவர்கள் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பொறுப்பை தட்டிக்கழிப்பார்கள். இங்கு வசிக்கும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எதிர்ப்பார்ப்பு இருக்கும், ஏமாற்றம் அதைவிட அதிகமாக இருக்கும்.

யாரோ ஒருவரின் அதிகாரம் ஓங்கி ஒலிக்கும்; தனிமை கிடைக்காது; வீட்டை விட்டு எப்போது செல்லவேண்டும், எப்போது வரவேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படும் . உறவினர்கள் வீட்டுத் திருமணம் என்றால் அதற்கு தான் போக வேண்டும் என்ற ஆசை இளையவன் மனைவிக்கு இருக்கும்; ஆனால் வீட்டுக்கு ஒருவர் என்று மூத்த மருமகளை அனுப்பி வைப்பார்கள். சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் தவிடுபொடியாகிவிடும்.

Living In A Joint Family Could Be A Boon For Educated Working Women In India
iDiva

யானைக் காலில் மிதிப்பட்ட எறும்பைப் போல அங்கு ஆசைகளும் கனவுகளும் அடிபட்டுப் போகின்றன என்ற பெரும் குறைபாடு கூட்டுக் குடும்பங்களில் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.

கணவன் மனைவி என்ற இரண்டு பேர் ஒரு வீட்டில் வசிக்கின்றபோது கணவனுக்கு சட்னி நீர்த்து இருக்க வேண்டும் மனைவிக்கு கெட்டியாக; மனைவி வெண்டைக்காய் சாப்பிட மாட்டாள் கணவனுக்கு வெண்டைக்காய் பொறியல் இல்லாமல் சாப்பிட முடியாது என, உடுத்துகிற உடையில் இருந்து சாப்பிடுகிற உணவுவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசையுண்டு.

ஈருடலும் ஓருயிரும் என்ற பந்தத்திலேயே இத்தனை எதிர்வினைகள் இருக்கும்போது, கூட்டுக்குடும்பத்தில் வசிப்பவர்களில் எத்தனை எத்தனை வகையான உறவுகள், வயது வித்தியாசம், பாலின வேறுபாடு, இன்னொரு குடும்பத்தில் இருந்து வாழ வந்தவர்கள்…எல்லோரையும் பிடித்து இழுத்து வைத்து நெறிப்படுத்தி, கதம்பமாக மாற்றும் பொறுப்பும் கடமையும் அந்த வீட்டை இயக்கும் அனுபவசாலிப் பெண்களுக்கு இருந்தது.

விட்டுக்கொடுத்து, சுமைதாங்கிகளைத் தட்டிக்கொடுத்து, வசைகளை வாங்கிக்கொண்டு, எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு கூட்டுக்குடும்ப சங்கிலியைத் துருப்பிடிக்காமல் பழுது பார்த்த அவர்கள், அந்தத் தியாகிகள் இந்த யுகத்தில் சுவற்றில் மாட்டப்பட்ட புகைப்படங்களாக மாறிவிட்டனர். இனி வரும் சமுதாயம் இப்படி ஒரு குடும்பத்தை அமைப்பது என்பது கற்பனையாக மட்டுமே இருக்கும். கூட்டுக்குடும்பம் என்பது கதம்பம், தனியாக வாழ்பவர்கள் உதிரிப்பூக்கள், காற்றடித்தாலும் காய்ந்து போய்விடும், வெயில்பட்டாலும் பொசுங்கிப் போய்விடும்.

தனித்து வாழ்பவர்கள் வீட்டில் சமையல் பொருட்கள் இருக்கும், காய்கறிகள் இருக்கும், பண்ட பாத்திரங்கள் இருக்கும், வங்கியிருப்பில் தேவைக்கு அதிகமாகவே பணமிருக்கும், வீட்டில் ஆளிருக்கும்… ஆனாலும் ஓட்டலில் இருந்து தான் சாப்பாடு தருவிக்கப்படும் என்றால், குடும்பம் என்ற போர்வையில் வீட்டில் வசிப்பதும், மாசமானால் பீஸ் கட்டி ஆஸ்டலில் தங்கி இருப்பதும் ஒன்று தான்.

கூட்டுக்குடும்பத்தில் இருப்பவர்கள் நான்கு- ஐந்து பேரோடு சேர்ந்து இருப்பதால் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடிவதில்லை என்கிறார்கள். அந்த நான்கு பேர் தான் இரண்டு பேருக்குள் எழும் பனிப்போரை பெரும் போராக உருமாறவிடாமல் காப்பாற்றி வந்தார்கள். கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை என்றால் சமாதானப்படுத்துபவர்கள்.

அப்படியே சண்டைகள் சம்பந்தி வீடு வரை சென்றுவிட்டாலும் ஈகோவைத் தள்ளி வைத்து சமரசம் செய்வார்கள். பேரனோ பேத்தியோ பாடம் படிக்கிறார்களா, விளையாடுகிறார்களா? எப்படியான சிநேகிதர்களுடன் பழகுகிறார்கள், வீட்டுக்கு நேரத்துக்கு வந்தார்களா என அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பார்கள். அவர்கள் வீட்டில் இல்லாததால்தான் வாசலில் கேமிராக்கள் கண்காணிப்புக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளன. வேலைக்குச் சென்றுவிட்ட பெற்றோர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு செல்போன்களில் மூழ்கி, அதிலிருந்து எதை எதையோ உள்வாங்கி, வக்கிரத்தின் பிடியில் இளைய சமுதாயம் சிக்கியிருப்பதை தாத்தா- பாட்டி உடனிருந்தால், ஒருவேளை தடுக்கப்பட்டிருக்குமோ?

Happily ever after in a joint family | TheHealthSite.com
TheHealthSite.com

அன்புக்காகவும் அக்கறைக்காகவும் குழந்தைகள் காப்பகத்தில் ஏங்கி ஏங்கி தனிமையை, வெறுமையை சுவீகாரம் செய்துகொண்ட பிஞ்சுகள் இளம் பிராயத்திலேயே பொசுங்கி இருக்காதோ என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் இருக்கத்தான் செய்கிறது. ஆலமர விருட்சமாக படர்ந்து விரிந்து காட்சியளித்த உறவுகள் ‘வேலை’ என்று பெட்டியைத் தூக்கிக்கொண்டு வெளியூருக்குக் கிளம்பியதும், ‘ என் மனைவிக்கும் அம்மாவுக்கும் ஒத்துவரவில்லை, அதனால் தனிக்குடித்தனம் போகிறோம்’, என்றும், ‘ நாங்க தனியாக தொழில் செய்துக்கொள்கிறோம், சொத்தைப் பிரித்து கொடுங்கள்’, என்று ஒருபுறமும் என ஆல மரத்தின் இலைகள் ஒவ்வொன்றாக காலப்போக்கில் உதிர தொடங்கின. மண்ணுக்குள் புதைந்து மரத்தை வளர்த்து இலைகளை உருவாக்கிய வேர்கள் கையறு நிலையில் கருகிப்போயின. வேர்களின் கண்ணீர் வெளி உலகத்தின் கண்ணில் தென்படாமலே போய்விட்டது.

அந்த வேர்களின் வெப்பத்தைத் தணிக்க உருவானது தான் முதியோர் இல்லங்கள். சொத்தை பாகம் பிரிக்காதவரை தான் அப்பா, அம்மா பந்தம். சொத்து கைமாறியதும் அவர்கள் தூரத்து சொந்தம். மகனுக்கு வரன் தேடும் கோடீஸ்வர தந்தை ஒருவர், “என் மகனுக்கு பெண் பார்க்கிறோம். ஏழை வீட்டு பெண்ணாக இருந்தால் நல்லது. அந்தப் பெண் தான் கஷ்டநஷ்டம் தெரிந்து வளர்ந்தவளாக இருப்பாள், கர்வம் இல்லாமல் குடும்பத்தை அனுசரித்துச் செல்வாள்”, என்றார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவளை பெண் பார்க்கவும் சென்றார்கள். பெண்ணின் அம்மா வாசலில் அமர்ந்து ஏதோ வேலை செய்துக்கொண்டு இருந்துள்ளார். இவர்கள் யாரென்ற விவரத்தை தெரிவித்த பின்பும், அந்த வீட்டம்மா அவர்களை வரவேற்கக்கூட செய்யவில்லையாம். பாதியில் விட்ட வேலையை செய்யத் தொடங்கிவிட்டாராம்.

pinterest

‘ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’, என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை. நூலைப் போலத்தானே சேலை இருக்கும்? அதற்கு மட்டும் மாற்று குணமா இருந்துவிடப்போகிறது? வசதி வாய்ப்பு இல்லாத குடும்பத்தில் பிறந்த பெண், பணக்கார சம்பந்தம் கிடைத்த உடன் காணாததைக் கண்டதைப் போல தலைகால் புரியாமல் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்தாள். கார்னீகி மெலன் பல்கலைகழகத்தில் படித்து முடித்துவிட்டு, அங்கிருந்து நேராகக் காரில் பயணித்து இந்தியாவில் வந்து தான் தரையில் கால் வைத்ததை போன்ற மிதப்பில் அந்தப் புது மருமகளின் பாவனை இருந்தது. தொலைதூரக்கல்வியில் டிகிரி படித்துவிட்டு தமிழே பேசத்தெரியாததைப் போல தத்தளிப்பாள். வீட்டுக்கு வரும் உறவினர்களை தவறிக் கூட உபசரித்ததில்லை.

வராந்தாவில் அமர்ந்து சாப்பிடுக்கொண்டிருக்கும் உறவினர்களை அப்படியே கடந்து செல்லுவாள், அந்த வீட்டுக்கும் அங்கு அமர்ந்திருப்பவர்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லாதது போல கடந்து செல்வாள். ” என்னம்மா சௌக்கியமா?”, என்று விருந்தாளி விசாரித்தால், ” நல்லா இருக்கேன்”, என்று பதிலளித்துவிட்டு நகர்ந்து விடுவாள். இது போன்ற குணமுடைய பெண்கள் நல்ல தோட்டத்தில் ஊடுருவிய கள்ளிச் செடிகள். வீட்டுக்கு வந்தவர்களை ‘வாங்க’ என்று உபசரிக்கத் தெரியாத நாகரீகமற்ற ஜந்துகள். ஏழை வீட்டுப் பெண்கள் குணவதிகள் என்ற தப்புக்கணக்கை யாரும் போட்டுவிட வேண்டாம். பட்லர் இங்கிலீசும், பகட்டு உடையும், ஆடம்பரமும், பணத்தை வாரி இரைத்து செலவு செய்யும் விதமும் குடும்பத்தையேப் பதம்பார்க்கும்.

குடிக்க கூழ் இல்லாத வீட்டில் வளர்ந்திருந்தாலும், நாங்கள் பன்னீரில் வாய்கொப்பளிப்பவர்கள் என்று பிறந்த வீட்டு பெருமை பேசிக்கொண்டு, கணவன் வீட்டு வியர்வையை அள்ளிக்கொண்டு, பிறந்த வீட்டு அடுப்பை நிரப்பும் இந்த வகைப் பெண்களை இனம் காண்பது வெகு சுலபம். குப்பையைக் கூட்டி ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டு முகநூலில் ஸ்டேடஸ் போட ஓடும் அந்த முந்திரிக் கொட்டைகளை அடையாளப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, அவர்களே தனித்து பளிச்சிடுவார்கள் . குடும்பத்து மூத்தவர்களின் மன எரிச்சலை வாரி தங்கள் வயிறு நிரப்புபர்கள். தான் சாப்பிட்டோமா, தான் தூங்கினோமா, தான் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்பினோமா, தன் பிள்ளைக்கு சோறு ஊட்டினோமா, யாரு சாப்பிட்டால் என்ன யாரு பட்டினி கிடந்தால் எனக்கென்ன? அவர்கள் யாரோ, நான் யாரோ என்று இருக்கும் இந்த ரகப் பெண்கள் தண்ணீர் மேல் மிதக்கும் எண்ணெய்த் துளிகள்.

மொத்தக் குடும்பத்தில் இவர்களின் பங்கு ஒரு சொட்டு என்றாலும், தண்ணீருக்குள் கலந்தது ஒரு துளி எண்ணெய் என்றாலும் பயன்பாட்டுக்கு உதவாமல் தான் போகும். பெண் எடுப்பதற்கு முன்பு தீர விசாரித்து, இவர்களை அடையாளம் கண்டு ஆரம்பத்திலேயே தவிர்த்துவிட்டால் குடும்பம் தப்பித்தது. தேனீ கூட்டுக்குள் வீசப்படும் கற்கள் இவர்கள். இவர்கள் என்றைக்கும் மாறாதவர்கள், தொட்டிலில் குழந்தைகள் அழுதுக்கொண்டிருக்கும்போது அது என் பிள்ளையின் அழுகுரல் இல்லை என்று பாயாசம் வைத்துக் குடிக்கும் நெஞ்சம் கொண்டவர்கள். இவர்களா குடும்பத்துடன் ஒட்டி வாழ்வார்கள்?

வசதி இல்லாத வீட்டில் இருந்து பணக்கார வீட்டுக்கு மருமகளாக சென்ற பெண்கள் எல்லோருமே இப்படியான குணம் கொண்டவர்கள் என்ற முத்திரையை இங்கு நான் பதிவிடவில்லை; இப்படியும் கூட இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறேன்.

ஒரு பெண்ணின் குணத்திற்கு ஐம்பது சதவீத பொறுப்பு அவளின் பெற்றோர்; இருபத்தி ஐந்து சதவீதம் அவள் வளர்த்துக்கொண்டது, இருபத்தி ஐந்து சதவீதம் அவள் சார்ந்திருக்கும் சூழ்நிலையால் அவள் உருமாறுவது. பணக்கார வீட்டு பெண், வசதி இல்லாத வீட்டு பெண், படித்த பெண், படிக்காத பெண், நல்ல குடும்பத்தில் பிறந்தவள் இந்த பின்புலங்கள் எல்லாம் பெண்களின் குணத்தை தீர்மானிப்பது இல்லை. அவள் நற்பண்புகளுக்கு அவள் மட்டுமே காரணமாகிறாள். இங்கே நூறு சதவீத பர்ஃபெக்ஷனோடு இருப்பவர்கள் எவரும் இல்லை. எனக்கு நானே மதிப்பெண் இட்டுக்கொண்டால் இருபத்தைந்து கூட தேறாது.

நம்மைச் சார்ந்த நவமணிகள் பலபேர் இருக்கிறார்கள். குடும்பம் என்ற பல்லக்கில் கோலோச்சும் ராணிகள் அவர்கள். அவர்களின் ஆட்சிகள் அடுத்த வாரம்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

வைதேகி பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வைதேகி பாலாஜி பணியாற்றி வருகிறார். ஹெச்.டி.எஃப்.சி.குழுமத்தில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநல சட்ட ஆலோசகரும் கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்புணர்வுத் தொடர்கள் எழுதிவருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்குகளில் பங்கேற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல்வன்மையால் சொக்கவைப்பவர்.