உறவுகளை வளர்க்கின்ற காரணிகளில் பெரும்பங்கு கூட்டுக்குடும்ப அமைப்பிற்கு உண்டு. இன்று அப்படி ஒரு அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டு, நல்லதையும் கெட்டதையும் சமமாகப் பாவித்து, உதிர உறவுகளில் இருந்து பிரிந்து உறவினர்களிடமிருந்து விலகி குடும்ப கூட்டுக்குடும்ப அமைப்பிலிருந்து உதிர்ந்துவிடாமல் அனுசரித்து சகித்து வாழப் பழகிக்கொண்டவர்கள் அரிது.

முன்பெல்லாம் செங்கல் வைத்து எழுப்பிய மாடி வீடோ, ஓடுகள் வேயப்பட்ட வீடோ , தென்னை ஓலையாலோ, பனை ஓலையாலோ போர்த்தப்பட்ட கூரை வீடோ, எந்த வகையான வீடாக இருந்தாலும், வீட்டின் முன் வாசலில் இரு பக்கங்களிலும் திண்ணை வைத்துக் கட்டியிருப்பார்கள். அந்த வீட்டை ஆளும் ராஜாவோ அல்லது ராணியோ, அவர்களின் அந்தப்புரம் அந்தத் திண்ணை தான். நல்ல நாள் எது, அன்றைய உணவாக எதை சமைப்பது, அளவு எவ்வளவு என்பது முதற்கொண்டு வீட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு அந்த வீட்டு ராஜாவுக்கும், ராணிக்கும் தான். இவர்கள் எந்த லஞ்சமும் கொடுக்காமல், எந்தப் பிரச்சாரமும் செய்யாமல் அப்படியே போட்டியின்றி தேர்வானவர்கள். அவர்களின் தகுதி ஒன்றே ஒன்று தான். அந்த வீட்டின் மூத்த குடிமக்கள் என்பது தான்!

அன்றைய காலத்து கூகுள், அந்தத் திண்ணையை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருந்த தாத்தா, பாட்டி இருவரும் தான். எந்தவகையான சந்தேகமானாலும் அங்கு வந்து அமர்ந்தால், தீர்த்து வைக்கப்படும். நல்ல நேரம் எப்போது என்பதில் துவங்கி, நாட்டு நடப்பு வரை தகவல்கள் அங்கே இலவசமாகக் கிடைக்கும். அந்த வீட்டின் விசேஷமானாலும் சரி, பண்டிகை போன்ற வேறெந்த நிகழ்வானாலும், முடிவெடுக்கிற அல்லது தீர்மானத்தை நிறைவேற்றுகின்ற நிலையில் இருந்தவர்கள் அந்த வீட்டின் பெரியவர்கள் தான். அந்த வீட்டின் இதர ஆண் மகன்களோ, பெண்பிள்ளைகளோ அல்லது பேரன், பேத்தி போன்ற இதர அங்கத்தினர்களின் மூலமாகவோ, வேளா வேளைக்கு அவர்களுக்கு உணவு பரிமாறப்படும். “இந்தா, குழம்பு தீர்ந்துடுச்சி உள்ளிருந்து கொண்டா’’, என்று அந்தப் பெருசின் குரல் கேட்டதும் அந்த வீட்டின் பொண்டு, பொடுசுகள் கூட உபசரிக்க ஓடிவரும்.

ஊரில் உள்ளவர்களோ, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களோ, மூத்த குடிமக்களைச் சந்தித்து உரையாட வந்து திண்ணையில் அமர்ந்திருந்தால், அவர்களுக்கும் உபசரணை உண்டு. காலை வேளையில் வேலை நிமித்தமாக வீட்டைவிட்டுக் கிளம்பும் ஆண்கள், அவர்களின் பிளானரை முற்றத்து மன்னர் கையில் ஒப்புவித்து விட்டுத்தான் கிளம்புவார்கள். அந்தத் திண்ணை தான் அன்றைய வாட்ஸ்ஆப். ரிசிவ்ட் மெசேஜும், பார்வர்ட் மெசேஜும் அங்கிருந்து தான் பரிவர்த்தனையாகும். வீட்டில் செல்வத்துக்குப் பஞ்சம் இருந்தால் கூட கூழோ கஞ்சியோ, நீராகாரமோ அந்த வீட்டின் வயதானவர்களின் வயிறை நிரப்பியிருக்கும். அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டாலும், பங்காளி குடும்பத்து விவகாரமானாலும், வேறு வீட்டுக்கு வாழச் சென்ற அந்த வீட்டுப் பெண்கள் முந்தானையில் முடிந்து வரும் விவகாரமானாலும், முன்னிலையில் நின்று கூகுள் மேப்பாக வழிக்காட்டுவது, வழிநடத்துவது தாத்தாவும், பாட்டியும் தான்.

விசேசத்துக்குத் தாய்வீட்டுக்கு வரும் அந்த வீட்டு மகள்களின் சுக துக்கங்களில் தோள்கொடுக்கும் தூணாக நின்றது பிறந்தகம். அண்ணிகள் ஆராதிக்கப்பட்டார்கள், நாத்தனார்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அக்கா தங்கைகளின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க மாமன்கள் வரிசையில் நின்றார்கள். வங்கியில் கணக்கு வைத்திராத மாமன்கள்கூட, வஞ்சனையின்றி செலவழித்தார்கள்.

சொந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கச் சென்றார்கள்; இரவு உறங்க வீட்டைத் தேடி வந்தார்கள். எட்டுமணிக்குள் உறங்கினார்கள்; விடியற்காலை ஐந்து மணிக்குள் எழுந்தார்கள். வாரத்தில் ஒருநாள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கட்டாயப்படுத்தினார்கள். கேப்பைக் களி கிண்டினார்கள்; கம்மங் கூழைக் குடிக்க வைத்தார்கள். பனம்பழத்தை சுட்டு மாலை சிற்றுண்டியாகக் கொடுப்பார் பாட்டி, இளநீரை வெட்டி வருவார் சித்தப்பா, கைக்கெட்டும் உயரத்திலுள்ள கொய்யாவும் மாங்காயும் அண்ணனே பறித்துக்கொடுத்து விடுவான்.

இயற்கை விதியால் இளம் வயதில் மாண்ட உடன் பிறப்புகளின் குழந்தைகளைத் தங்கள் பிள்ளைகளாக வளர்த்தெடுத்தார்கள். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் விளம்பரமாகாத காலம் அது. நோயில் விழுந்து படுத்த படுக்கையாகக் கிடந்த உறவுகளை அந்தக் குடும்பத்தில் வசித்த யாரோ ஒரு புண்ணிய ஜீவன், நோயாளி வருடக்கணக்கில் முடங்கிக் கிடந்தாலும், அவர்களுக்கு உணவு கொடுத்தார்கள், கழிவுகளைச் சுத்தப்படுத்தினார்கள், அந்த உறவால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என்ற நிலை வந்தாலும், படுக்கையில் கிடந்தவரைப் பராமரித்தார்கள். மனசாட்சியை மதித்தார்கள்; உணர்வுகளுக்கு கட்டுண்டார்கள். அது இல்லாதவர்கள் ஊருக்கு பயந்தாவது பெற்றவர்களைக் கவனித்தார்கள்.

பெண்குழந்தைகளைக் கருணைக்கொலை செய்தார்கள், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார்கள், சாதி வெறிபிடித்துத் திரிந்தார்கள்,பெண் கல்வியை மறுத்தார்கள், கணவனை இழந்த கைம்பெண்களை வஞ்சித்தார்கள் என்ற மோசமான மறுபக்கமும் அந்த காலத்தில் உண்டு என்றாலும், அவற்றைவிட உறவுகளே முதலாக விஞ்சி நின்றது என்பதை நாம் மறுக்க முடியாது . குடும்பத்தில் எந்த முடிவானாலும் அப்பா தான் எடுப்பார் என்று நம்பிக்கொண்டிருந்த தலைமுறை வாழ்ந்த காலம் அது. கதவோரம் தலை மட்டுமே வெளியே தெரியும்படி நின்றுகொண்டிருக்கும் அம்மாவின் முகபாவனைகளின் மொழிப்பெயர்ப்பு தான் அப்பாவின் அதிகாரம் என்பதைத் தெரிந்துகொள்ள யூட்யூப் இல்லாத காலம் அது.

Welcome to theni City | Local News| Political News | Breaking News

வரப்புத் தகராறில் சொந்தங்களின் கைகால்களை வெட்டி எறிந்திருக்கிறார்கள், காணி நிலத்தை ஏமாற்றிவிட்டார் என்று நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்து, தலைமுறைகள் கடந்தும் வாய்தாவுக்காக நடப்பார்கள். அக்கா மகளை தம்பி மணமுடிக்கவில்லை என்பதற்காக தாய்வீட்டு உறவுக்கே முழுக்குப் போட்டவர்களும் உண்டு. இதெல்லாம் உறவுக்கு அழகா என்று கேட்கத்தோன்றும். இவிங்க இப்படித்தாங்க!

இவர்களுக்கு இன்னொரு முகமும் உண்டு. ஜென்ம விரோதியான சொந்தக்காரனுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால்- உதாரணமாக அவர்கள் வீட்டு மகன் பூச்சிமருந்தைக் குடித்துவிட்டான், கட்டிகொடுத்த வீட்டில் அவர்கள் மகளை அடித்து அனுப்பிவிட்டார்கள், அவர்கள் வீட்டுப் பாட்டி தவறிவிட்டார் என்றால் நீ செத்தால் ஆகாது, நான் செய்தால் ஆகாது என்ற சிங்கங்கள் தான் எதிரியாக பாவித்தவரின் வீட்டின் முற்றத்தில் முதல் ஆளாக உட்கார்ந்திருக்கும். உலக அரங்கத்தில் இந்தியாவை வியப்போடு பார்த்த ஒன்றில் உறவுகளும் ஒன்று.

இன்று அந்த உறவுகள் நம்மிடம் வலுவாக இல்லை. உறவுகளை உணர்வுகளாக்கிக் கட்டிக்காத்தவர்கள் எங்கே காணாமல் போனார்கள்? பிறந்த மண்ணிலிருந்துகொண்டு வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி, அக்கம் பக்கத்து ஊர்களில் எல்லாம் சொந்தக்காரர்களோடு சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்ட போது உறவு வளையத்துக்குள் கட்டுப்படாமல் திமிறிக்கொண்டு சென்றவர்களையும் பிடித்திழுத்து ஒரு கட்டுக்குள் உறவாடத் தெரிந்தவர்கள், நகர வாழ்க்கையில் உறவுகளை கைகழுவி விட்டார்கள். வேலை வாய்ப்பைத் தேடி சொந்தங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் புறப்பட்டபோது உறவுச் சங்கிலிகளின் புள்ளிகள் அறுபடத் தொடங்கிவிட்டன.

விடுமுறை இல்லை, வேலைப்பழு, போக்குவரத்துக்கு அதிக செலவு போன்ற ஏதேதோ காரணங்களுக்காகவும், பணம் சேமிக்க, தன்னுடைய மனைவி, அவளின் தனிப்பட்ட விருப்பம், தன் குழந்தை, அதனுடைய கல்வி, விரைவாக முன்னேற வேண்டும் என்ற ஆசை இவையெல்லாம் நாம் சொந்த ஊர்ப்பக்கம் போவதைக் குறைக்க வழி வகுத்துவிட்டது. வேலை நிமித்தமாகக் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தவர்கள் சொந்த ஊர் மக்கள், சொந்தக்காரர்களைப் பார்த்து நலம் விசாரித்து வருவதற்கு மாதம் ஒருமுறையாவது சென்று வந்தவர்கள், பொங்கல் தீபாவளி சமயத்தில் வருடம் ஒரு தடவை கூட சொந்தங்களைக் காண்பதற்கு, நலம் விசாரிப்பதற்கு, பந்தத்தைத் தொடர்வதற்கு இயலாதவர்களாகக் கையறு நிலையில் உள்ளனர். காலப்போக்கிற்கு ஏற்ப வாழ்க்கை முறையை உள்வாங்கிக்கொண்டார்கள்.

அந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கையும், வாழ்க்கை முறையும் தொலைந்து போனவை, எங்கு தேடினாலும் கண்டெடுக்க முடியாதவை. அடுக்குமாடி குடியிருப்பு, அர்த்தராத்திரியில் வேலை, இரவில் பணி, பகலில் தூக்கம், ஒண்டுக்குடித்தனம் என்ற நவீன யுகத்தில் பொருத்திக்கொண்ட மக்களிலும் உறவுகளின் கரங்களை பற்றிக்கொண்டு அவர்களின் நேசத்தை சுவாசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் உணவுப் பழக்கத்தில் அனைவரும் அதிக அக்கறை எடுத்து வருகிறார்கள். ஹைபிரிட் காய்கறிகள், துரித உணவுகள் சாப்பிட்டு உடல்நலனை கெடுத்துக்கொண்டோம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு, பழைய இயற்கையான உணவு முறைக்கு பலர் மாறிவருவதை சமீபகாலமாகக் காணமுடிகிறது. இது போன்ற மாற்றம் உறவுகளைப் பராமரிப்பதிலும் வர வேண்டும். மாநகரங்களில் கொரோனா வைரஸ் வந்தபோது, நகரத்தில் உள்ள வீடுகளை காலி செய்துக்கொண்டு கிராமங்களை நோக்கி, சொந்த ஊர்களை நோக்கித்தான் சென்றார்கள். வீட்டில் இருந்தே வேலையை (Work from home) இப்போது சொந்த ஊர்களில், சொந்தங்களோடு இருந்துகொண்டு தான் செய்கிறார்கள்.

வர்தா புயல், கொரோனா வைரஸ், மழை வெள்ளம் போன்ற இயற்கை ஏற்படுத்தும் பேரிடர் காலங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக மட்டும் சொந்தங்களை நாடிச்செல்லாதீர்கள். சுயநலம் தப்பில்லை, ஆனால் சுயநலத்தை மட்டுமே கவசமாக்கிக்கொண்டு உறவுகளை அணுகாதீர்கள். அந்த உறவு கசக்கி எரியப்பட்ட மலராகத்தான் கிடக்கும். அங்கிருந்து எந்த நறுமணமும் உங்களுக்குக் கிடைக்காது. சொந்தக்காரர்களைக் கண்டதும் எரிகின்ற எண்ணெயில் ஊற்றிய நெருப்பாக மாறிவிடக் கூடாது. மழைத்துளி தன் வாசல் வந்ததும் பூரித்து, வாசனையைக் கிளப்புகின்ற பூமியைப் போல இருக்க வேண்டும் சொந்தங்கள்.

உறவுகள் தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

வைதேகி பாலாஜி

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வைதேகி பாலாஜி பணியாற்றி வருகிறார். ஹெச்.டி.எஃப்.சி.குழுமத்தில் பேனல் அட்வகேட் பொறுப்பு வகிப்பவர். குடும்பநல சட்ட ஆலோசகரும் கூட. கடந்த 12 ஆண்டுகளாக திருப்பத்தூர், அகமதாபாத், சென்னை ஆகிய நீதிமன்றங்களில் வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல தமிழ் இதழ்களில் சட்ட விழிப்புணர்வுத் தொடர்கள் எழுதிவருகிறார். பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய சட்டப்பிரிவுகள் பற்றிய பல கருத்தரங்குகளில் பங்கேற்றுவருகிறார். கவியரங்கம், பட்டிமன்றங்களிலும் தன் சொல்வன்மையால் சொக்கவைப்பவர்.