அது ஒரு ஆடம்பரமான மிகப் பெரிய அறை. அதனுள் உலகக் கல்வி அமைப்பின் பிரெசிடென்ட் சூசன் ஹாப்குட் , செக்ரட்டரி ஜெனரல் ப்ரெட் வேன் லீவன் இருவரும் ‘வாடி ராசாத்தி’ னு வரவேற்று வாழ்த்துக்களுடன் கையெழுத்திட்ட கடிதம், பூங்கொத்து மற்றும் பழக்கூடைகள் என்னை வரவேற்கக் காத்திருந்தன. அத்துடன் ஐநா பொது அவையில் நிகழக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் கொண்ட தொகுப்பு. ‘இத…இத…இதத் தான எதிர்பார்த்தேன்’ என நினைச்சிக்கிட்டே வேகவேகமாக கண்களால் மேய்ந்தேன்.

இந்த UNGA69 ன்னு சொல்லக்கூடிய ஐநா பொது அவையின் 69 வது அமர்வு, இரண்டு வாரங்கள் நடக்கிறது. முதல் வாரத்தில், ஐ.நா.விற்கான பட்ஜெட், தீர்மானங்கள், பரிந்துரைகள் இடம்பெறும். இரண்டாவது வாரத்தில் உயர்மட்டக்குழு அறிக்கைகள் ( panels) , விவாதங்கள், உச்சிமாநாடு, இதர நிகழ்வுகள் என முக்கியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும். இதுல விவாதங்கள் தான் நம்ம ஊரு சட்டசபை போல கூச்சல், கைகலப்பு , அடிதடி , சட்டை கிழிப்பு, குண்டுகட்டாய் தூக்குதல்னு செம்ம ஜாலியா காரசாரமாக(!!) இருக்குமாம்.

சரியாக நான் சென்ற செப்டம்பர் 24 தான் பொது விவாதம் தொடங்கும் நாள். அந்த வாரம் The busiest week of the year 2014 என அரசால் அறிவிக்கப் பட்டிருந்தது. உலக நாடுகளி்ன் பெரிய பெரிய ‘தல’, ‘தளபதி’ லாம் இந்த நாட்களில் தான் பேசப் போறாங்க. போடு தகிட தகிட.. ஆர்வக் கோளாறில, நம்ம பிரதமர் என்னிக்குப் பேசுகிறார்னு வேக வேகமா தேடறேன்.. என்னதான் நாம இங்க ‘மங்கி குளியலை’ கழுவி கழுவி ஊத்தினாலும், ஐநாவுல தல பேச்சைக் கேட்கணும்னு பாசம் பொங்கி, தானாடாட்டாலும் தசை ஆடினது உண்மைதான். ம்ஹூம், எனக்குக் கொடுப்பினை இல்லை. அவர் பேசுவது செப்டம்பர் 27.

ஏமாற்றத்துடன் அடுத்த பைலை பார்க்க எனக்கான ஆச்சர்யம் காத்திருந்தது. நான் கலந்து கொள்ளப் போகும் பேனல் பற்றி, எங்கள் ஏழு பேருக்காக , அழகான உயர்தர வடிவமைப்புடன் ஒரு சிறிய புத்தகமே வெளியிட்டிருந்தார்கள். அதில் என்னுடைய போட்டோவுடன் ( எனக்கே தெரியாத(!!) என்னைப் பற்றிய செய்திகளும் கூட . இந்த டிஜிட்டல் யுகத்தின் பிக்பாஸ் கண்களிலிருந்து நாம் ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ங்கறது இதுதான் போல. மற்றொரு பைலில் ஹோட்டலிலிருந்து மன்ஹட்டனின் முக்கிய இடங்களுக்கு செல்வதற்கான வரைபடம், மற்றும் வெதர் ரிப்போர்ட் – செப்டம்பர் 24 காலை 2.29 மணிக்கு ( என்னா ஒரு துல்லியம்???) அங்கு வெதர் சேஞ்ச் ஆகி இலையுதிர் காலம் ஆரம்பமாகுதாம். ம்ம்ம்.. ரமா வர்ற நாளில் தான் எத்தனை சிறப்புகள் நியூயார்க்கில்…

ஹோட்டலிலிருந்த ஓசி இணையதள வசதியைப் பயன்படுத்தி ஊருக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு, அவசரகதியில் கிளம்பி ஓடினேன். அடுத்த நிகழ்வு அருகிலேயே அமைந்துள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுதல். நியூயார்க் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் அழைத்துச் சென்றனர். அது ஒரு பொதுப் பள்ளி, அதாவது அரசுப் பள்ளி. ஆனால் நம் பொதுப் புத்தியில் உறைந்திருக்கும் அரசுப் பள்ளிக்கான எந்த லட்சணங்களுமின்றி (!) ஸ்டார் ஹோட்டல் போல, இல்லயில்ல அதுக்கும் மேல சுத்தம், உள் கட்டமைப்பு வசதிகள், பெரிய வகுப்பறைகள், பிரமாண்டமான நூலகம் என கண்ணைக் கட்டியது. பிடிச்சா படிக்கலாமாம், இல்லாட்டி நூலகத்துக்குப் போகலாமாம், விளையாடப் போகலாமாம், (வாய்க்குள் நுழையாத) ஏகப்பட்ட விளையாட்டுக்களாம், இன்டோர் கேமாம், அவுட்டோர் கேமாம் , ஆடலாமாம், பாடலாமாம், இசைக்கலாமாம்…. மாம்,மாம், மாம் என சந்திரமுகி வடிவேலு போல அங்குள்ள ஆசிரியர்கள் நீட்டிமுழங்க ‘ஆ ஆ ஆ னு’ கேட்டுக்கிட்டோம்.

ஒண்ணாப்பூ பிள்ளக கூட ஆசிரியரை மிஸ் மேத்யூஸ், மிஸ்டர் ஜேம்ஸ் என்றே பேர் சொல்லும் பிள்ளைகளாய் கூப்பிடறதும் நல்லாதான் இருந்திச்சி . ரேஸில் ஓடவிட்ட குதிரை மாதிரி மார்க் போர்டை நோக்கி ஓடும் நம்ம ஊர் பசங்களை நினைச்சி ஒரே பீலிங்காயிடிச்சி. நாம இன்னும் பொம்பள பிள்ளைகளுக்கு பொம்பள டீச்சர் தான் பாடம் நடத்தணும், சுடிதார் போடணும், ஷால் போடணும்னு ரிவர்ஸ் கியர் போட்டு கற்காலத்தை நோக்கி வேகமாப் போயிட்டு இருக்கோம் . கிட்டத்தட்ட நான்கு மணிநேர பள்ளி ஆய்வுக்குப் பின் மீண்டும் ஹோட்டல் அபினா.

booking.com

அப்பப்போ ஐநா நிகழ்வு குறித்த செய்திகள் மெயிலில் வந்து கொண்டே இருந்தன. காலையில் விவாதத்தை தொடங்கி வைத்த ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன், பொது விவாதத்தில் கலந்து கொள்வதற்காக 140 உலகத் தலைவர்கள் இன்று வந்திருப்பதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தாராம். தொடர்ந்து யூ எஸ் பிரசிடென்ட் பாரக் ஹசைன் ஒபாமா உரை போயிட்டு இருக்காம். அடுத்த நிகழ்வுக்கு கிளம்ப ஹோட்டல் லாபியில், அம்மா கையைப் பிடித்து பேன்சி ட்ரெஸ் காம்படிஷனில் கலந்து கொள்ள வரும் பிள்ளைகள் போல அனைவருமே அவரவர் பாரம்பர்ய உடையில் இருந்தோம். ஆனால் பாவம், இந்த ஆம்பளங்களுக்கு உலகம் பூரா உடைக்குப் பஞ்சம்தான் போல, பேன்ட் சட்டயை விட்டா வேற ஒண்ணும் இல்ல.

என்னைப் பார்த்ததும் வண்டலூர் ஜூவைச் சுற்றிப் பார்ப்பது போல கண்கள் அகல உற்று உற்றுப்பார்த்து, சுற்றி சுற்றி வந்து ஒரே துணியா…ஒரே துணியா என திரும்பத் திரும்பக் கேட்ட ஆப்ரிக்க க்பசாகோ பல்செரிக்கு, ஒரு துணியை எப்படி இப்படி உடலைச் சுற்றி சுற்றி சேலையாக கட்ட முடியும் என்ற வியப்பு. எனக்கு அவரது பல வண்ண உடை மீது ஒரு அட்ராக்‌ஷன். திடீர் மாடலாகி ரெண்டுபேரும் , போட்டோ செசனுக்கு வெட்கத்துடன் (?)கேட்வாக்கி விட்டு மினி மீட்டிங்குக்கு அசெம்பிள் ஆனோம்.

“2.30 க்கு ஐநா என்ட்ரன்ஸ்ல இருக்கணும், பீச்சாங்கை பக்கம் நூறடி நடந்தா செக்கிங் நடக்கும். அங்கயிருந்து ரைட் எடுத்தா கொடிக்கம்பம் வரும். அத்த ரசிச்சிக்கிட்டே , மிகச் சரியாக 3 மணிக்கு , UN TRUSTEESHIP COUNCIL CHAMBERக்குள்ள நுழையணும். உள்ள கம்முனு உட்கார்ந்து , அப்பப்ப கை தட்டிட்டு, ( எங்க ஊர்லலாம் சட்டசபைல யார் எது பேசினாலும் தூங்கிக்கிட்டே மேசையத் தானுங்க தட்டுவோம்) சரியா 5 மணிக்கு மற்றொரு வாசல் வழியாக வெளியேறி, ஐ.நா வின் தலைமைச் செயலகம் இயங்கக் கூடிய மிகப் பெரிய பில்டிங் அருகே வந்து நிற்கணும்”னு ஐநா கட்டிட வரைபடத்த வைச்சி ஒரு ‘பீம்பாய்’ மிலிட்டரி ஆபிசர் கத்தி பட விஜய் போல, மாஸ்டர் பிளான் போட்டு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்க, நாங்கள் சுற்றிலும் அய்யோ பாவம் விவசாயிகள் போல நின்னுட்டு இருந்தோம்.

இந்த செசன்ல , ஆசிரியர்களின் சார்பாக உலகக் கல்வி அமைப்பின் தலைவர் சூசன் ஹாப்குட் தான் பேசப் போகிறாங்க. நாங்க அப்சர்வர்ஸ் தான், அதுக்கே இம்மாம் அலப்பற. ஹோட்டலுக்கு ரெண்டாவது தெருவில ஐநா கட்டிடம் இருக்கு . நடந்தே போயிடலாமேன்னு நான் அப்பாவியாய் கேட்க, தீவிரவாதியை பார்ப்பது போல வெறித்துப் பார்த்தார். நாட் அலௌடாம். ( நாங்க இப்ப கைதிகளா??…ஒரே கொழப்பமா இருக்கே!!!) நடந்தால் மூன்று நிமிடத்தில் போகக்கூடிய இடத்திற்கு ட்ராபிக் புண்ணியத்தில் 21 நிமிடத்தில் போய்ச் சேர்ந்தோம். இறங்கியதும் தூரத்தில் தெரிந்தது அந்த கட்டிடம். அதுவரை பாடப் புத்தகத்திலும் செல் போனிலும் மட்டுமே பார்த்திருந்த அதிசயம் கண் முன்னால்.

இதயம் பட்டென்று ஒரு நிமிசம். …………………… ( பயப்படாதீங்க) நிற்கவெல்லாம் இல்லை. நார்மலாத்தான் இருந்தது. மிக மிக அகலமான ரோடு. ரோடெங்கும் வரிசை வரிசையாக பழைய சத்தியராஜ் படத்தில் பார்ப்பது போல நீளநீளமான ஏ.கே 47 போன்ற ஒரு வஸ்துவுடன் , ஏழு ஏழு அடி உயரத்தில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் ( பெத்தாய்ங்களா…இல்ல மிஷினில் கொடுத்து செய்ஞ்சாய்ங்களா தெர்ல ?) அவர்கள் கண்கள் ஒரு இடத்தில் இல்லாமல் சுற்றிச் சுழன்று கொண்டேயிருந்தது. லேசா அசைஞ்சாக்கூட டப்பு டப்பு னு சுட்ருவாய்ங்க போல. ஐநா தலைமையகத்தின் முன்பகுதியில் திருவிழா போலக் கூட்டம் , என்னனு பார்த்தா, நவீன கேமராக்களுடன் உலக நாடுகளின் மீடியாக்கள் வரிசை கட்டியிருந்த காட்சியே மிக அழகாக இருந்தது. அதுக்குப் பேரு “ stakeout area”வாம். அங்கிருந்து நகர்ந்தால், கிட்டத்தட்ட அரை மணிநேரம் நீட் எக்ஸாம் பரிதாபங்கள் போல செக்கிங் செக்கிங் செக்கிங்…..

போட்டோஸ் எடுத்து , பேக், கேமரா எல்லாம் பிடுங்கி வைத்து விட்டு, மீண்டும் செக்கிங், இந்த ஸ்கேனர் வேற பீங் பீங் னு என்னிடம் மட்டும் கத்த… கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து கழுத்தில் இருந்த அத்தனை நகையையும் கழற்றச் சொல்ல , நான் தாலிச் செயினை மட்டும் கழற்றாமல், “ எங்க கலாச்சாரம் டா எங்க பண்பாடு டா” னு பொங்கி எழுந்து பாடம் எடுக்க , ( ஏன்னா…அது மட்டும் தான தங்கம் !!!) “நகையை கழட்டினா இப்படிக்கா போ…..இல்லியா அப்படிக்கா போ, பேஜாரு பண்ணாம” என கவுண்டரிலிருந்த அந்த பெண் நாட்டாமை தீர்ப்பு சொல்லிவிட, சசி மேம் என்னை பரிதாபமாக பார்க்க, பக்கத்தில் ஏழடி, 140 கிலோவில் “ பீம்பாய், பீம்பாய், அழிச்சாட்டியம் பண்ற இந்த பொண்ணத் தூக்கி வெளியே போடு “ என்ற உத்தரவிற்காக காத்திருந்த அந்த ஜெயன்ட் சைஸ் செக்யூரிட்டியைப் பார்த்துக்கொண்டே, “இதுதான் உங்க தமிழ்ப்பெண் கெட்டப்பாடா” என மனதிற்குள் எனக்கு போன் பண்ணிய அந்த அமெரிக்க கான்சுலேட் காரனை திட்டியபடியே சத்தமில்லாமல் தாலிச் செயினையும் கழற்றி கொடுத்து விட்டு ( ஏழு பவுன் செயின் திரும்பக் கிடைக்குமா என்ற கலக்கத்துடன்!!!) நகர்ந்தேன்.

Flags Outside the United Nations Headquarters, New York - CDA UN Exploration

இதெல்லாம் கால் கிலோ மீட்டர் முன்னாடியே நடந்திடுச்சி. பல அடுக்கு சோதனைகளின் விளைவாக இப்போது கையில் ஒரு நோட், பென் கூட கிடையாது. அடுத்து வரிசையாக 193 நாட்டுக் கொடிகளும் ஆல்பபெட்டிகல் ஆர்டர் படி வரிசையாக பறந்து கொண்டிருக்கும் காட்சி வாவ்…..கண்களுக்கு செம்ம விருந்து. ஏழு பேரும் “அய்ய் அந்தா அந்தா, எங்க கொடி, ஏய்ய்ய். இந்தா இந்தா எங்க கொடி” என ஸ்கூல் பிள்ளைகளாகவே மாறி கத்திக் கொண்டிருக்க, அய்யோ நம்ம இந்தியக் கொடி எங்க எங்க எங்க…கண்கள் பரபரக்க தேடி, கண்டு பிடித்ததும் ‘ஸாரே ஜஹா சே அச்சா’ பேக்கிரவுண்ட ம்யூசிக் இசைக்க , நவீன கொடி காத்த குமரன்கள் விஜயகாந்தும், அர்ஜுனும், அரவிந்தசாமியும் மின்னலென மனசுக்குள் வந்து போக, தலைக்கு மேல பல்ப் எரிய, மணி அடிக்க…..தாயின்மணிக்கொடி, தாயின்மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் என ( பாட்டெல்லாம் நமக்கு பாடத் தெரியாதலால்) வாசித்துக்கொண்டே அதைக் கடந்து செல்கிறோம்.

நுழைவுச்சீட்டுடன் TRUSTEESHIP COUNCIL CHAMBER எனப் பொறிக்கப்பட்ட அவையின் வாயிலில் வரிசையில் நிற்க, “ரெமாதெவி ரத்..ரத்..ரத்னாசமி்” வழக்கம் போல கடித்துக் குதறி சத்தமாக அறிவிக்கப் படுகிறது. என்ன தவம் செய்தனை ?

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!