ஜென்னி மார்க்ஸ் கடிதங்கள் – 4

என் அன்பே, தூய இனிய ஒரே இதயமே…

இதுபோல நீ எப்போதுமே அளவிற்கு அதிகமாகக் காதலிக்கப்படுபவனாகவும் இனிமையாகவும் அழகுடனும் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். மறுபடியும் எப்போது வருவாய்? உன்னிடம் மீண்டும் என் காதல் எவ்வளவு ஆழமானது, முழுமையானது என்பதைச் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. உனக்கே தெரியாது நீ எவ்வளவு காதலோடு என் இதயத்தின் ஆழத்தில் வீற்றிருக்கிறாய் என்று! உன் உடலை, உன் பிம்பத்தைப் பார்க்காத நாட்களில் சொல்ல இயலாத தவிப்புடனும் மீண்டும் உன்னைச் சந்திக்கும் அந்த நேரத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்காகவும் காத்திருப்பேன்.

என் பிரியமுள்ள கார்ல்,

நீ இப்போது இங்கு இருந்திருந்தால் என் எல்லையில்லா மகிழ்ச்சியை இந்தச் சின்னப் பெண்ணிடம் நீ காண முடியும். நீ இதுவரை இல்லாத மோசமான குறுகிய, தீய எண்ணத்துடன் வந்தாலும் நான் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டேன். மெளனமாகத் தலைகுனிந்து, உன் போக்கிரி எண்ணத்திற்குச் சரணாகதியாகிவிடுவேன். எனக்கு ஏன் இவ்வளவு மென்மை? அந்தி வெளிச்சத்தில் நாம் கலந்துரையாடியது உனக்கு நினைவிருக்கிறதா? நம் கற்பனை விளையாட்டு, நீண்ட நேர உறக்கம் எல்லாம் நினைவிருக்கிறதா?, இதயத்தால் காதலிக்கப்படுபவனே, எவ்வளவு நன்றாக, எவ்வளவு நேசமாக, எவ்வளவு கவனிக்கத்தக்கதாக, எவ்வளவு மகிழ்ச்சியாக அப்போது நீ இருந்தாய் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது!

உன்னைப் பெரிய மேதையாகவும் வெற்றிகரமானவனாகவும் காண்கிறேன். நீ என்னுடனே நிரந்தரமாக இருக்க மனம் ஏங்குகிறது. மகிழ்ச்சியில் உனக்காகத் துள்ளிக் குதிக்கிறது. மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் ஆவலுடன் நீ போகும் பாதையெல்லாம் தொடர்ந்தேன். பாப்ஸ்கிரிட்டியர், மெர்டன் இன் கோல்டு, பாபா ரூக், பன்சா போன்ற இடங்களுக்கு உன் துணையாக முன்னாலோ பின்தொடர்ந்தோ வந்திருக்கிறேன். என்னால் உன் வழியெல்லாம் மென்மையாகவும் சீராகவும் உனக்குத் தடையாக உள்ளதையெல்லாம் அகற்றியும் வரமுடிந்தது. ஆனால், அப்போது நாமும் நமது எதிர்காலத்திற்காக வருமானம் ஈட்ட வேண்டும் என்று பெரிதாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேன்மை தாங்கிய ’ஏவாலின்’ பாவத்தால் ஆண் வீழ்ந்ததைக் கண்டுகொள்ளாததற்காக நாம் கண்டனத்திற்கு உள்ளானோம். நமக்கு எல்லாமே நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் கஷ்டத்துடனும் வருத்திப் பெற வேண்டியிருக்கிறது.

நம் முன் உள்ள ஒரே கேள்வி ‘டியூட்ஸ்சி ஜார்பூச்சர்’ பத்திரிகையை எங்கு அச்சடிக்க வேண்டும்? இன்று மாலையில் எனக்கு ‘ஸ்ட்ராஸ் பர்க்’ பற்றி ஒரு சிறிய யோசனை தோன்றியது. சொந்த நாட்டுக்கு நீ திரும்புவதற்குத் தடையிருப்பதால், ஜெர்மனிக்கும் பிரான்ஸுக்கும் இந்த வழியாகப் போவது உனக்குச் சிரமமானதாக இருக்கும். மேலும் விடுதலையடைந்த அதிகாரவர்க்கம் நிச்சயமாக உன்னிடம், ”எங்கள் நாட்டில் இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் வெளியேறு. அல்லது வேறு எங்காவது தங்கிக்கொள்” என்று சொல்லிவிடும்.

எல்லாவற்றையும்விட நான் சொல்வது வெறும் ஆலோசனைதான். மேலும் என்ன செய்யலாம் என்பது, அதுவும் இது போன்ற பின்னணியில் சிறிய கோழிக்குஞ்சு எப்படிப் பதுங்க வேண்டும் என்பது பற்றி நம் பழைய நண்பன் ரூகிற்கு நிச்சயமாகத் தெரியும், அதற்கான தனி மனுவுடனும் வருவான்.

இன்று காலை நான் எல்லாவற்றையும் சரி செய்துகொண்டு, வரைபடக்காரர்களை அவர்கள் இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டு, சிகரெட் துண்டுகளைப் பொறுக்கி, அதன் சாம்பலைச் சுத்தம் செய்துகொண்டிருக்கையில், ”அல்த்தாஸ்சென்” பேப்பர்களை இத்துடன் இணைத்திருக்கும் பக்கத்தைப் பார்க்க நேர்ந்தது. நண்பர் லூத்விக்கை உறுப்பினரிலிருந்து நீக்கும்போது இந்த முக்கியமான பக்கத்தை இங்கே விட்டுவிட்டாய். தகுதியான புத்தகமாகக் கொண்டுவரும்போது இதையும் சேர்க்க வேண்டியதாக இருக்கலாம். ஒருவேளை சேர்க்காவிட்டால் மொத்த வேலையும் சீர்குலைந்துவிடலாம். நீ மேலும் பல பக்கங்களை வீசி எறிந்திருக்கலாம். இது தொந்தரவான, இரக்கப்படக்கூடிய வேலைதான். தனித்தனியான பக்கங்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும்.

நீ இங்கு வந்து சென்றபின் எனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட சோர்வையும் குறித்து அவசியம் சொல்லியாக வேண்டும். உன் அருமை மூக்கைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், குளிர் காற்று, பருவநிலை போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டால், ஒரு கைகுட்டையைக்கூட நீ எடுத்துச் செல்லவில்லை என்பது எனக்குப் பிரதான கவலையாக இருந்தது.

இரண்டாவது விஷயம் முடிதிருத்துபவர் இங்கு வந்தார். எவ்வளவு தர வேண்டியிருக்கிறது என்று கேட்டேன். 7½ வெள்ளி நாணயம் என்றார். என்னிடம் சில்லறை இல்லாததால் 8 வெள்ளிக் காசுகளை, மீதி கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் கொடுத்தேன். ஆனால், அவரோ எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு என் ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய்விட்டார். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அவரைத் திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் என்னைக் கண்டுகொண்டதாகவோ என் பேதலிப்பை உணர்ந்தவராகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் நல்ல பொருள்கள் எல்லாம் போனது மாதிரி, இந்த ஆறு பென்னியும் போய்விட்டது.

நான் இப்போது உடைகள் விஷயத்திற்கு வருகிறேன். இன்று காலை வெளியே போனபோது, ‘ஒல்ப்ஸ்’ கடையில் புதிய பின்னலாடைகளைப் பார்த்தேன். அதை உன்னால் குறைந்த விலையில் வாங்க முடியாவிட்டாலும், அல்லது வேறு யார் மூலமாவது தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும் விட்டுவிடு. என் அன்பு இதயமே, இப்போதைக்கு நீ எதையும் வாங்காமல், அந்தப் பணத்தைச் சேமித்து உன் பிரயாணங்களுக்காக வைத்துக்கொள். பிறகு உன்னுடன் இருக்கும்போது இருவரும் சேர்ந்து வாங்குவோம். அப்போது நம்மை ஏமாற்ற முயன்றாலும் அந்த ஏமாற்றம் நம் இருவருக்குமாகிவிடும்.

எனவே என் அன்பே,

இப்போது எதுவும் வாங்க வேண்டாம். அது மலர் வளையத்திற்கும் பொருந்தும். நான் கவலைகொள்வது, நீ அதிக விலை கொடுக்க வேண்டுமே என்பாதால்தான். உன்னால் மலர்கள் வாங்காமல் இருக்க முடியாது என்றால், அது இளஞ்சிவப்பு நிறத்திலாவது இருக்கட்டும். அது என் பச்சை வண்ண ஆடைக்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால், நீ எல்லாவற்றையும் மொத்தமாகக் கைவிடுவதையே நான் விரும்புகிறேன். உண்மையிலேயே என் இனிய இதயமே அதுவே சிறந்தது.

சட்டப்பூர்வமான தேவாலயத் திருமணம் முடிந்து, கணவனான பின்பு அதை வாங்கிக்கொள்ளலாம். மறந்துவிடுவதற்குள் மேலும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். என் கடிதங்கள் வேறு யார் கைக்குப் போனாலும் நான் மிகக் கோபமாகிவிடுவேன். இதுவே என் இறுதிக் கடிதமாகிவிடும் பார்த்துக்கொள்ளவும். இதன் தன்மை வெளிப்படையான அர்த்தத்தைக் கொடுக்காமல் இருக்கலாம். ஆனால், ஆழமான விவரிக்க முடியாத உணர்வுகளைக் கிளறிவிட்டுவிடும். அந்தச் சோகமான கடிதச் செய்தியை ’ஈ’யிடம் சேர்த்துவிட்டாயா? அந்த பாஸ்போர்ட் நபர்கள் தேடுகிறார்களா?

இனிப்பான இதயமே,

மேலே உள்ளதெல்லாம் தற்காலிகமான பிரச்னைகள். நான் இப்போது பிரச்சனையின் முக்கியமான பகுதிக்கு வருகிறேன். நீ அந்த ஸ்டீம் படகில் சரியாக நடந்துகொண்டாயா? அல்லது மறுபடியும் அந்தச் சீமாட்டி ஹெர்மானும் படகில் இருந்தாரா? உன்னிடமிருந்து விபரத்தை வெளிக்கொண்டு வந்துவிடுவேன். இப்படி அலைந்துகொண்டிருப்பதால் எனக்குச் சில நிபந்தனைகளை, நமது சமூகத் திருமண ஒப்பந்தத்தில் சேர்த்தாக வேண்டுமென்று தோன்றுகிறது. நான் எல்லா விதமான பிரச்னைகளையும் அந்த ஒப்பந்தத்தில் எழுதி, அதற்கான தண்டனையையும் குறிப்பிட்டு, இரண்டாவது திருமணத்திற்கான உரிமையையும் சட்டபூர்வமாக்கி விடுவேன். நான் உன்னிடம் காண்பிக்கிறேன்.

நேற்று மாலை எனக்கு மீண்டும் மிகச் சோர்வாகிவிட்டது. கிழங்கும் ஒரு முட்டையும் சாப்பிட்டேன். இப்போது விடைபெறுகிறேன்.

பிரிவு வேதனை மிகுந்தது. இதயத்திலேயே அது வலியை உண்டாக்கும். விடை பெறுகிறேன் என் ஒரே அன்பால் நேசிக்கப்படுபவரே… இனிய குறும்பு முகமே… டலட்டா டலட்டா.. விடைபெறுகிறேன். விரைவில் கடிதம் எழுது.

உன்

ஜென்னி

கட்டுரையாளர்:

சோ.சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர்.

வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள்மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற நூலாக எழுதியிருக்கிறார் சுத்தானந்தம். இதில் அவருடைய கிராம வாழ்க்கை, தொழில் வாழ்க்கை, இயக்க வாழ்க்கையின் சில பகுதிகளை அறிந்துகொள்ளலாம்.