என் அன்பே, தூய இனிய இதயமே, இதுபோல் நீ எப்போதும் அளவிற்கதிகமாக அன்புடன் காதலிக்கப்படுபவராகவும், இனிமையாகவும், அழகுடனும் இருந்ததில்லை என்று நான் நினைக்கிறேன். மறுபடியும் எப்போது வருவாய்? உன்னிடம் மீண்டும் எனது காதல் எவ்வளவு ஆழமானது, முழுமையானது என சொல்ல வேண்டும் போல இருக்கும். இருந்தாலும் சென்ற சந்தர்ப்பத்தில் நீ வெற்றிகரமாக என்னைப் பிரிந்துவிட்டாய். நீ எவ்வளவு காதலோடு எனது இதயத்தின் ஆழத்தில் வீற்றிருந்தாய் என்றும், உன் உடலை, உன்னுடைய உண்மையான பிம்பத்தை பார்க்காத நாட்களில் விபரம்புரியாத மென்மையுடனும் நேர்த்தியாகவும் காதல் வரம்புக்குள்ளும் புத்திகூர்மையாகவும் மீண்டும் அந்த நேரத்திற்காக குதூகலிக்கும் எண்ணங்களுடனும் காத்திருப்பேன் என்பதும் உனக்கே தெரியாது.

எனது பிரியமுள்ள கார்ல், நீ இப்போது இங்கே இருக்க நேர்ந்தால் எல்லையில்லா மகிழ்ச்சியை உனது தீரமிக்க இந்த சின்ன பெண்ணிடம் நீ காணமுடியும். நீ இதுவரை இல்லாத மோசமான குறுகிய, தீய எண்ணத்துடன் வந்தாலும் நான் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்க மாட்டேன். மெளனமாகத் தலைகுனிந்து உன் போக்கிரி எண்ணத்திற்கு சரணாகதியாகிவிடுவேன். என்ன, எப்படி இந்த மென்மை, ஏன் இவ்வளவு மென்மை? அந்தி வெளிச்சத்தில் நாம் கலந்துரையாடியது, நம் கற்பனை விளையாட்டு, நமது நீண்ட நேர உறக்கம்- இவை உனக்கு இன்னும் நினைவிருக்கிறதா?

இதயத்தால் காதலிக்கப்படுபவரே…எவ்வளவு நன்றாக எவ்வளவு நேசமாக, எவ்வளவு கவனிக்கத்தக்கதாக, எவ்வளவு மகிழ்ச்சியாக நீ அப்போது இருந்தாய் என்பது இன்னும் நினைவில் உள்ளதா! என் முன்னால் உன்னை அவ்வளவு மேதையாகவும், வெற்றிகரமானவனாகவும் காண்கிறேன். நீ என்னுடனேயே நிரந்தரமாக இருக்க எனது மனம் ஏங்குகிறது; மகிழ்ச்சியில் உனக்காக துள்ளிக் குதிக்கிறது; மந்திரமாகக் கட்டுப்பட்டு ஒரு ஆவலுடன் நீ போகும் பாதையெல்லாம் தொடர்கிறது. பாப்ஸ்கிரிட்டியர், மெர்டன் இன் கோல்டு, பாபா ரூக், பன்சா இந்த அத்தனை இடங்களுக்கும் உனது துணையாக முன்னாலோ பின்தொடர்ந்தோ வந்திருக்கிறேன்.என்னால் உனது வழியெல்லாம் மென்மையாகவும் சீராகவும் உனக்கு தடையாக உள்ளதையெல்லாம் அகற்றியும் வரமுடிந்தது. ஆனால்அப்போது நாமும் நமது எதிர்காலத்திற்காக வேலை செய்யவேண்டும் என்று பெரிதாக எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

மேன்மை தாங்கிய ’ஏவாளின்’ பாவத்தால் ஆண் வீழ்ந்ததை கண்டுகொள்ளாதற்காக நாம் கண்டனத்திற்கு உள்ளானோம். நமக்கு எல்லாமே நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும், கஷ்டத்துடனும், வருத்தியும் பெறவேண்டியிருக்கிறது. அதிகப்படியாக நமக்கு சாக்ஸ் பின்னுதலும், சாவிகளுடனும், ஊசிகளுடனும் இதற்குமேல் வேறு எந்த பாவத்தையும் செய்ய வாய்ப்பில்லை. “டட்ஸ்சி ஜார்பூச்சர்” எங்கு அச்சடிக்கவேண்டும் என்று முடிவு செய்யும்போது மட்டும், பெண்களுக்கான ரத்து அதிகாரம் கண்களுக்கு தெரியாமல் பிரயோகிக்கப்பட்டு, சிறிய அத்தியாவசியமான பாத்திரத்தை அவளை வகிக்க வைத்துவிடுகிறது.

இன்று மாலையில் எனக்கு ”ஸ்ட்ராஸ் பர்க்” பற்றி ஒரு மிகச்சிறிய யோசனை தோன்றியது. சொந்த நாட்டுக்கு நீ திரும்புவதற்கு தடையில்லாவிட்டால், ஜெர்மனிக்கும், ப்ரான்சிற்கும் இந்த வழியாகப்போவது உனக்கு சிரமமானதாகயிருக்கும். மேலும் விடுதலையடைந்த இறையாண்மை மிக்க அதிகார வர்க்கம், நிச்சயமாக உன்னிடம், ”எங்கள் நாட்டில் இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் வெளியேறு; அல்லது வேறு எங்காவது தங்கிக்கொள்”, என்று சொல்லிவிடும். எல்லாவற்றையும் விட நான் சொல்வது வெறும் ஆலோசனைதான்; மேலும் என்ன செய்யலாம் என்பது அதுவும் இதுபோன்ற பின்னணியில் சிறிய கோழிக்குஞ்சு எப்படி பதுங்கவேண்டும் என்பது பற்றி நமது பழைய நண்பர் ரூகிற்கு நிச்சயமாகத்தெரியும். அதற்கான தனி மனுவுடனும் வருவான். எனவே தந்தை ஆப்ரஹாம் நலனுக்காக இந்த பிரச்சனையை இத்தோடு விட்டுவிடுவோம்.

இன்று காலை நான் எல்லாவற்றையும் சரி செய்து கொண்டு வரைபடக்காரர்களை அவர்கள் இடத்திற்கே திருப்பி அனுப்பி விட்டு சிகரெட் துண்டுகளை பொறுக்கி அதன் சாம்பலை சுத்தம் செய்து கொண்டிருக்கையில், “அல்த்தாஸ்சென்” பேப்பர்களை கிழித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் இத்துடன் இணைத்திருக்கும் பக்கத்தை பார்க்க நேர்ந்தது. நமது நண்பர் லூத்விக்கை நீ உறுப்பினர் குழுவிலிருந்து நீக்கும்பொழுது இந்த முக்கியமான பக்கத்தை இங்கே விட்டுவிட்டாய். நீ இந்தப்பக்கத்தை முன்பே படித்திருந்தால் ஒன்றும் அவசரமில்லை. ஆனால் தகுதியான புத்தகமாகச் சேர்க்கும் பொழுது இதையும் சேர்க்க வேண்டியதாகயிருந்தால் இது அவசியமாகத் தேவைப்படும். சேர்க்காவிட்டால், ஒருவேளை மொத்த வேலையும் சீர்குலைந்துவிடக் கூடும்.

நிச்சயமாக நீ மேலும் பல பக்கங்களை வீசி எறிந்திருக்கலாம். இது தொந்தரவான மற்றும் இரக்கப்படக்கூடிய வேலைதான். தனித்தனியான பக்கங்களை கவனமாக பார்த்துக்கொள்ளவும்…நீ இங்கு வந்து சென்றபின் எனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தையும், அதனால் ஏற்பட்ட சோர்வையும் குறித்து அவசியம் சொல்லியாகவேண்டும்.

நீ உன் அருமை மூக்கைப் பற்றி எந்தக் கவலையும் படாமல்; குளிர் காற்று பருவநிலை போன்றவற்றின் தயவில் எதுவாவது நடந்து விட்டு போகட்டும் என ஒரு கைகுட்டை கூட உன்னுடன் எடுத்துப்போகவில்லை. அது எனக்கு முதலில் பிரதான அக்கறை கொள்ளச்செய்தது. இரண்டாவது விசயம் முடி திருத்துபவர் இங்கு வந்தார். நான் அதை அனுகூலமாக எடுத்துக்கொண்டு, எப்போதவது தோன்றும் கரிசனத்துடன் உனக்கு மேன்மைதாங்கிய மருத்துவர் எவ்வளவு தரவேண்டியதிருக்கிறது எனக்கேட்டேன். பதில் 7½ வெள்ளி நாணயம் என்றார். நான் உடனே மனத்தில் கணக்குப்போட்டு 2 1/2 நாணயம் மிச்சம் பிடித்தேன். என்னிடம் சில்லரை இல்லாததால் 8 வெள்ளிக் காசுகளை நிச்சயம் மீதி கொடுப்பார் என நம்பிக்கையுடன் கொடுத்தேன்.

ஆனால் அந்த அயோக்கியன் என்ன பண்ணினான் தெரியுமா?அவன் எனக்கு நன்றி சொல்லிவிட்டு எல்லாவற்றையும் பாக்கெட்டில் போட்டுக்கோண்டு எனது ஆறு பென்னிகளையும் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் விட்டான். நான் இப்பொழுது அதற்காக ஏங்க வேண்டியதாகிவிட்டது. நான் இன்னும் அதற்காக அவனை திட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என்னை கண்டுகொண்டதாகவோ, என் பேதலிப்பை உணர்ந்தவனாகவோ தெரியவில்லை. அம்மாவும் எனக்கு ஆறுதல் சொல்லவில்லை. சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் நல்ல பொருள்களெல்லாம் போனது மாதிரி இந்த ஆறு பென்னியும் போய்விட்டது. அது ஒரு ஏமாற்றமே!

நான் இப்போது உடைகள் விசயத்திற்கு வருகிறேன். நான் இன்று காலை வெளியே போன பொழுது, ‘ஒல்ப்ஸ்’ கடையில் புதிய பின்னலாடைகளைப் பார்த்தேன். அதை உன்னால் குறைந்த விலையில் வாங்கமுடியாவிட்டாலும், அல்லது வேறு யார் மூலமாவது தேர்ந்தெடுக்க முடியாவிட்டாலும், என் அன்பு இதயமே இந்தவிசயத்தை என்னிடம் விட்டுவிடு. பொதுவாக என் அன்பு இதயமே இப்போதைக்கு நீ எதையும் வாங்காமல் அந்தப்பணத்தை சேமித்து உன் பிரயாணங்களுக்காக வைத்துக்கொள்ளவும். என் இனிய இதயமே கவனிக்கவும், நான் பின்பு உங்களுடன் இருக்கும்பொழுது இருவரும் சேர்ந்து வாங்குவோம். அப்போது யாரும் நம்மை ஏமாற்ற முயன்றாலும் அந்த ஏமாற்றம் நம் இருவருக்குமாகிவிடும். எனவே என் அன்பே இப்போது எதுவும் வாங்க வேண்டாம். அது மலர் வளையத்திற்கும் பொருந்தும். நான் கவலை கொள்வது, நீ அதிக விலை கொடுக்க வேண்டுமே என்பாதால்தான்.

இருந்தாலும் நாம் இருவரும் சேர்ந்து பார்த்து வாங்குவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். உன்னால் மலர்கள் வாங்காமல் இருக்க முடியாது என்றால், அது வெளிர்சிவப்பு வண்ணத்திலாவது இருக்கட்டும். அது எனது பச்சை வண்ண ஆடைக்குப் பொருத்தமாக இருக்கும். ஆனால் நீ எல்லா செலவையும் மொத்தமாக கைவிடுவதையே நான் விரும்புகிறேன். உண்மையிலேயே என் இனிய இதயமே அதுவே சிறந்தது. எனது சட்ட பூர்வமான, தேவாலயத் திருமணம் முடித்த கணவனான பின்பு நீ அதை வாங்கிக்கொள்ளலாம். மறந்துவிடுவதற்குள் மேலும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எனது கடிதங்கள் வேறு யார் கைக்கு போனாலும் நான் மிகக்கோபமாகிவிடுவேன். மேலும் இதையே எனது இறுதிக்கடிதமாக பார்த்துக்கொள்.

இதன் தன்மை வெளிப்படையான அர்த்தத்தை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் ஆழமான, விவரிக்க முடியாத உணர்வுகளை கிளறிவிட்டுவிடும். எதையும் வீணாக்குபவனாக இருந்தால் இந்த முடிவை எடுத்துவிடு. அல்லது அது நியாத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்துமா? வெடித்த குண்டுகள் திரும்பி வந்தாலும் கோபம் தணிந்துவிடுமா? என்னால் எவ்வளவு விரைவாக லாப்ஃப்ரேஜை அனுப்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பிவைக்கிறேன். நீ அந்த சோகமான கடிதச்செய்தியை ’ஈ’யிடம் சேர்த்து விட்டாயா? பாஸ்போர்ட் நபர்கள் விரும்புகிறார்களா?

எனது இனிப்பான இதயமே, மேலே உள்ளதெல்லாம் யதார்த்தமான கேள்விகள். நான் இப்போது பிரச்சனையின் முக்கியமான பகுதிக்கே (இதயத்திற்கே) வருகிறேன். நீ அந்த ஸ்டீம் படகில் சரியாக நடந்து கொண்டாயா அல்லது மறுபடியும் அந்த சீமாட்டியும் படகில் இருந்தாளா? நீ மோசமான பையன்,உன்னிடமிருந்து விபரத்தை வெளிக்கொண்டு வந்துவிடுவேன். எப்போதுமே அந்த ஸ்டீம் படகுதானா? இப்படி அலைந்து கொண்டிருப்பதால் எனக்கு சில நிபந்தனைகளை நமது சமூக, திருமண ஒப்பந்தத்தில் சேர்த்தாக வேண்டியிதிருக்கிறது. பின்பு இது போன்று நேர்ந்தால் கடுமையான தண்டனையுண்டு. நான் எல்லாவிதமான பிரச்சனைகளையும் எழுதி, அதற்கான தண்டனையையும் குறிப்பிட்டு இரண்டாவது திருமணத்திற்கான சட்ட ஷரத்தையும் சட்டப் பூர்வமாக்கிவிடுவேன். நான் உன்னிடமே அதை காண்பிக்கிறேன்.

நேற்று மாலை எனக்கு மீண்டும் மிகச்சோர்வாகிவிட்டது. எப்படியாயினும் இப்பொழுது விடை பெறுகிறேன். பிரிவு என்பது வேதனை மிகுந்தது. இதயத்திலேயே அது வலியை உண்டாக்கும். விடை பெறுகிறேன் என் நேசிக்கப்படுபவனே…இனிய கறுப்பு சிறுவனே…என்ன, எப்படி என்ற கொள்கை இல்லாத முகமே! டலட்டா..டலட்டா..விடை பெறுகிறேன். சீக்கிரம் கடிதம் எழுது..டலட்டா, டலட்டா.

முந்தைய கடிதங்கள் இங்கே:

கட்டுரையாளர்:

சோ சுத்தானந்தம்

ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர். வாழ்க்கையே ஒரு பயணமாக இருந்தாலும், தான் மேற்கொண்ட சில பயணங்கள் மூலம் சுவாரஸ்யமான அனுபவங்களை ‘பயணங்கள் முடிவதில்லை’ என்கிற நூலாக எழுதியிருக்கிறார் சுத்தானந்தம்.