சுய பராமரிப்பு (Self Care)

பள்ளி, கல்லூரி காலங்கள் போன பெண்களுக்கு அழகான நாட்கள் வேறெதுவும் இருக்காது. மிக அதிகம் சிரித்த நாட்களும் அவைகளாகத்தான் இருக்கும். ஆனால் திருமணமான சில காலத்திற்குப் பின் எல்லாவற்றையும் தொலைத்தது போலவே சில பெண்கள் இருப்பார்கள். ஆண்கள் வேலை டென்ஷன் மறக்க நண்பர்களுடன் ட்ரிப், சினிமா, சீட்டு, என பிடித்த வகையில் தங்களை அமைத்துக் கொண்டு, ” இந்த குடும்பத்திற்காகத்தானே எல்லாம் உழைக்கிறேன், உனக்காகத்தானே எல்லாம் செய்யறேன்”, என்று சொல்வார்கள் பாருங்கள், அதிலேயே பெண்கள் அடங்கிவிடுவார்கள்.
ஆனால் 24 மணி நேரமும் வீடு, மிஞ்சிப் போனால் வீதி வரை, அதற்கும் மேலாக கணவன் எப்போதாவது வெளியே கூட்டிச் சென்றால் மட்டும் வெளியே போவது என பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் தனியே பிடித்தபடி போவதற்கும் தயக்கம், நண்பிகளுடன் வெளியே போவதற்குள் ஆயிரெத்தெட்டு தடவையாவது வீட்டைப் பற்றி யோசிப்பார்கள்.

10 வருடங்கள் முன் எங்கள் கல்லூரி வகுப்புத் தோழிகள் எல்லாம் சந்திக்கலாம் என ஏற்பாடு செய்த போது வந்தவர்கள் வெறும் 5 பேர்தான், உள்ளூரிலேயே இருந்தாலும் குடும்பம், வீடு என்று சொல்லி வராமல் விட்டார்கள். அதன் பின் ஒவ்வொரு வருடமும் யார் வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் அந்த சந்திப்பை கட்டாயம் வைத்தோம். இறுதியாக ஒரு வருடத்திற்கு முன்தான் அத்தனை மாணவிகளும் சேர்ந்த சந்திப்பு சாத்தியப்பட்டது. அனைவரையும் ஒரே நாள், ஒரே சமயத்தில் வர வைப்பதற்கு எங்களுக்கு 10 வருடங்கள் தேவைப்பட்டது.. இவையெல்லாம் பெண்களே தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வளையங்கள். இதனால்தான் அவர்கள் மன உளைச்சலுக்கும் அதிகம் ஆளாகிறார்கள்.

சலிப்பு, தன்னிரக்கம், எரிச்சல் இவையெல்லாம் நமக்குத் தேவையில்லாத ஆணிகள். அப்படி இருப்பவர்களுக்கு இப்போது தேவை, உடனடியாக செல்ஃப் கேர். பல வருடங்கள் முன் எனக்கு நடந்த சம்பவம். பிங்க் நிறத்தில் நடுவில் பெரிய பூ வைத்த செருப்பு வாங்கி வந்தேன். அத்தனை ஆசையாய் போடவேண்டும் என என் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் காண்பித்த போது, “இந்த வயசுல எதுக்கு உங்களுக்கு இந்த மாதிரி செருப்பு , சங்கூதற வயசுல சங்கீதாவா? “, என நக்கலாக சொல்லி கேட்டாள். நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. ஒரு பெண் திருமணமாகி குழந்தைகள் பெற்றுவிட்டால், அவள் செத்து விட வேண்டுமா என்ன?

என் உறவினப் பெண் ஒருவர் எனக்கு எப்போது பேசினாலும், “அவர் அப்படி செய்தார், இவர் இப்படி செய்தார் “, என பெரும்பாலும் அடுத்தவரின் குறைகள் மட்டுமே பேசுவார். நான் அடிக்கடி வாட்ஸ் அப்பில் போட்டோக்களை மாற்றும் போது, ” நமக்கெல்லாம் வயசாயிடுச்சு. இனி நாம ஃபிட்டா இருந்து என்ன உலக அழகி போட்டிக்கா போகப் போறோம்? நம்ம புள்ளைங்களை ஒழுங்கா கவனிச்சுகிட்டாவே போதும்”, என்ற வார்த்தைகளை போகிற போக்கில் சொல்வார். உடலை ஃபிட்டாக வைப்பது ஆரோக்கியத்திற்கான அடிப்படை என்பதறியாமல் அழகியல் சார்ந்தது என பலரும் நினைக்கிறார்கள். அப்படி இருப்பது பாவமல்ல. சுய பராமரிப்பு என்பது உடலை மட்டுமில்லை நம் மனதையும் புத்துணர்வாக வைத்துக் கொள்வதுதான்.

நம்முடைய சுய பராமரிப்பு, எந்த விதத்தில் குழந்தை வளர்ப்பிற்கு இடையூறாக இருக்கும்? தம்மை தாமே பராமரிக்காமல் இருப்பவர்களின் வீட்டில் கொஞ்சம் போய்ப் பாருங்கள். வீடுகள் சுத்தமின்றி அழுக்கு படிந்து, பாத்ரூம்களில் ஈரத்துணிகள் ஒதுங்கி இருக்கும். சுய பராமரிப்பு இல்லாதவர்கள் தங்களை மட்டுமில்லாமல், தங்களைச் சுற்றியும் சரியாக பராமரிக்க மாட்டார்கள்.

Photo by Gage Walker on Unsplash

” ஏன் இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுக்கற?”, “ஏன் தலைமுடியை விரிச்சு போட்ற?”, “ஏன் டிக்டாக் பண்ற?”, “வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்ல எதுக்கு இப்படி வைக்கிற.. உனக்கு என்ன சின்ன பொண்ணுன்னு நினைப்பா?”, இந்த மாதிரி கேள்விகளை என்னுடைய 35 ஆவது வயதிலிருந்து இப்போது வரை விதம் விதமாக எதிர்கொள்கிறேன். இப்படிக் கேட்டு நம்மை பலவீனப்படுத்துவதற்காகவே நம்மை சுற்றிலும் இருப்பார்கள்.

வேறெப்படி இவர்களுக்கு இருக்க வேண்டும்? எப்போதும் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டும், என் வீட்டில் யாரும் என் மேல் அக்கறை படுவதில்லை, பாசமாய் இருப்பதில்லை என புலம்பிக் கொண்டும் இருக்க வேண்டுமா? ஒதுக்கி விடுங்கள்! அவர்கள் அப்படித்தான். அவர்களை பொருட்படுத்தாமல் நமக்கு பிடித்தபடி இருப்பதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதில். சக பெண்களை முடக்க நினைப்பதில் ஆண்களை விட நம்மை சுற்றியுள்ள பெண்கள்தான் அதிக முனைப்போடு இருக்கிறார்கள். பெண் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் ஆட்டம், கொண்டாட்டம் என்று இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் அவள் பொறுப்பற்றவள். அக்கறையில்லாதவள் என்ற முத்திரையை அளிப்பது ஆண்களைக் காட்டிலும், சக பெண்கள் என்பதுதான் இங்கே வேடிக்கையே.

யாரும் 24 மணி நேரமும் அறிவார்ந்து சிந்திப்பதில்லை. எல்லாருக்குள்ளும் சிறு சிறு முட்டாள்தனங்கள் உண்டு. உங்களுக்கு பிடித்த சின்ன சின்ன விஷயங்கள் செய்வதால் உங்களுக்கு மனமுதிர்ச்சி இல்லை என்று அர்த்தமில்லை. அப்படி சொல்பவர்களுக்குத்தான் அடுத்தவர் விஷயத்தில் தலையிடக் கூடாது என்ற மனமுதிர்ச்சி கொஞ்சமும் இல்லை என எடுத்துக் கொள்ளலாம்.

Photo by Gage Walker on Unsplash

உங்களுக்கு தோன்றும் ஆசைகளை அவ்வப்போதே அனுபவித்துவிடுங்கள். பிள்ளைகளுடன் உங்களுக்கும் காற்றாடி விடுவது பிடிக்குமா? டீக்கடையில் டீ குடிக்க தோன்றுகிறதா? மழையில் விளையாடுவது பிடிக்குமா? திடீரென வண்டியில் ரைட் போக தோன்றுகிறதா? விதவிதமாய் போட்டோக்கள் எடுக்க தோன்றுகிறதா? யோசிக்காதீர்கள். இறங்கிவிடுங்கள். ஏனென்றால் அந்த ஆசை இன்று இருக்கும், நாளை இருக்குமா என தெரியாது.

ஒருமுறை என் மகளை நச்சரித்து எனக்கு பிடித்தது போல் புகைப்படங்கள் அபார்ட்மென்டின் வளாகத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். அதைப் பார்த்த என் மகளுடைய தோழியின் அம்மா அவளைக் கூப்பிட்டு, “எனக்கும் தனியா போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை, வீட்ல யாரிடமாவது சொன்னா கண்டுக்க மாட்டாங்க..நீ என்னை எடுத்து தர்றியா?”, என கேட்டிருக்கிறார். இதையெல்லாம் வெளியே சொன்னால் நம்மை என்ன நினைப்பார்கள் என்ற தயக்கம்தான் பெண்களை பல விஷயங்களில் அமைதி காக்க வைத்திருக்கிறது.

நான் கொரோனா ஊரடங்கு சமயத்தில் டிக் டாக் வீடியோ செய்து போஸ்ட் செய்து கொண்டிருப்பேன். அதைப் பார்த்த ஒரு நபர் என்னுடைய முகப்புத்தக மெசஞ்சரில் வந்து, “ நீங்களே இப்படி டிக் டாக்லாம் செய்யலாமா? உங்களுக்கு ரெஃப்ரெஷ்மென்ட் வேணும்னா ஸ்ம்யூல் இருக்கு, அதில பாட்டு பாடி இங்க போஸ்ட் பண்ணுங்க”, என்று சொன்னார். இப்படித்தான் யார் எவரென தெரியாதவர்கள் எல்லாம் கொஞ்சமும் அறிவில்லாமல் அடுத்த பெண்ணிடம் ஆதிக்கம் செலுத்தி அட்வைஸ் பண்ண ஆரம்பிப்பார்கள். என் எல்லை எது என இவர்கள் யார் சொல்வது? எதை எப்போது பண்ண வேண்டும் என பக்குவம் நமக்குள் இருந்தால் போதும் . இப்படி சொல்பவர்களை மதிக்கக் கூட தேவையில்லாமல் போய்கொண்டிருக்கலாம்.

உங்களை எப்போதும் தாழ்த்திக் கொண்டிருக்கும், குறை சொல்லும் மனிதர்களை ஒதுக்கி வைத்துவிட்டு , உங்களை ஊக்குவிக்கும்,நேர்மறை என்ணத்துடன் இருப்பவர்களுடனே உங்கள் நேரத்தை செலவழியுங்கள். இன்னும் இளமையாக உணர்வீர்கள். புத்துணவுடன் இருப்பீர்கள். அழகாய் உடை உடுத்துவதும், பர்சனாலிட்டியை மேம்பப்டுத்துவதும் வயதைப் பொறுத்து அல்ல. நம் எண்ணத்தைப் பொறுத்து. அவை நம்மை ஊக்குவிக்கும் கருவிகள். இன்னும் பல காலம் மகிழ்ச்சியாய் இயங்க வைக்கும் ஆயுதம். அந்த ஆயுதம்தான் மற்றவர்களிடமிருந்து உங்களை வித்தியாசப்படுத்தும். நமக்கு நாமே சுய மரியாதை அளித்தால்தான் நமக்கு மற்றவர்கள் அளிப்பார்கள்.

என்னென்ன விஷயங்கள் இந்தந்த வயதில்தான் செய்ய வேண்டும் என நம் சமூகம் கட்டமைத்திருக்கும் இந்த சீழ் பிடித்த சிந்தனைகளை முதலில் உடைப்போம்.

கட்டுரையின் முந்தைய பகுதிகள்:

கட்டுரையாளர்

ஹேமி கிருஷ்

பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.