மாலை 6 மணி.
மழை பெய்யுமா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருந்த வானம்போலவே பானுவும் இருந்தாள்.
அலுவலக கார் பார்க்கிங்கில் நின்றுகொண்டிருந்தாள். கையில் காரின் சாவி. ஆனால் வீட்டுக்குச் செல்ல மனம் இல்லை.
அலுவலக விளக்குகள் ஒவ்வொன்றாக அணைய, மெலிதான இருள் அங்கே பரவ ஆரம்பித்தது.
வெளியே மழையின் மண்வாசனை, “வா… கொஞ்சம் நனையலாம்…” என்று அழைத்தது.
ஆனால் பானுவுக்கு அதில்கூட ஆர்வம் தோன்றவில்லை.
அன்று முழு நாளும் நிற்கக்கூட நேரமில்லாமல் வேலை இருந்தது. காலையில் இருந்து ப்ராஜக்ட் மீட்டிங். டீம் லன்ச் என்று ஒரே பிஸி.
டீம் லன்ச் போனபோது, ப்ராஜக்ட் ஓகே ஆன சந்தோஷத்தில் மொத்த டீமும் உற்சாகமாக இருந்தது.
பானுவுக்கு மட்டும் மனம் எதிலும் லயிக்கவில்லை.
ஒரே ஒரு கேள்வி மட்டும் அவளை விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.
“வாழ்க்கை எப்போது இப்படி மாறிவிட்டது?”
ஒரு காலத்தில், சிறிய விஷயங்களிலேயே அவளுக்குச் சந்தோஷம் இருந்தது.
அம்மாவுடன் தேநீர் குடிப்பது. மழை வந்தால் ஜன்னலருகே நின்று வேடிக்கை பார்ப்பது. தோழிகளுடன் அரட்டை அடிப்பது. இசை கேட்பது, பாடுவது என இதெல்லாவற்றிலும் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள்.
இப்போது?
வாழ்க்கை முழுவதும் ஓட்டமாக மாறிவிட்டது.
பெரிய இலக்குகள்.
பெரிய பொறுப்புகள்.
பெரிய பிரச்னைகள்.
ஆனால் அந்தப் பெரிய வாழ்க்கையில், சிறிய மகிழ்ச்சி எப்போது காணாமல் போயின என்று அவளுக்கே தெரியவில்லை.
மொத்தத்தில், அவள் வாழ்கிற வாழ்க்கையில், அவள் இல்லை.
ஒருகாலத்தில் பெரிதும் விரும்பிய விஷயங்கள் இப்போது நடந்தாலும், அதை ரசிக்கிற மனநிலையில்கூட இல்லை.
உற்சாகமாகப் பட்டாம்பூச்சியைத் துரத்திய அந்தச் சிறுமி, எப்போது காணாமல் போனாள்?
இன்று நினைத்ததை வாங்கும் அளவுக்குப் பணம் இருக்கிறது. ஆனால் எதை வாங்கினாலும், பழைய உற்சாகம் இல்லை.
“என்னை எப்போது தொலைத்தேன்…”
பல ஆண்டுகளாக அவள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தாள். அந்த வாழ்க்கையில், அவளுக்கான ஒரு செங்கல் கூட இல்லை என்று யோசித்தபடியே, இலக்கில்லாமல் காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
ஒரு பூங்காவைப் பார்த்ததும், காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றாள். இயற்கை எப்போதுமே அவளுக்கு இதமான ஒன்று.
அங்கே உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள், அவள் கவனத்தை ஈர்த்தனர். ஒரு கணம், அந்த உற்சாகம் அவளையும் தொற்றிக்கொண்டது.
அவள் மனதில், சிறுமி பானு வந்தாள்.
இந்தக் குழந்தைகளைப் போலத்தான், அவளும் எந்தக் காரணமும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தாள்.
எங்கே போனாள் அந்த பானு?
சிறுவயதில், பானுவுக்குப் பாடுவதில்தான் ஆர்வம். ஆனால் அப்பாவின் விருப்பத்திற்காக, அவள் என்ஜினியரிங் படித்தாள்.
“கணக்கும் அறிவியலும்தான் வாழ்க்கைக்கு உதவும். மீதியெல்லாம் பொழுதுபோக்கு…” என்பார்.
அவரையும் குற்றம் சொல்ல முடியாது. மிக எளிய பின்னணியில் இருந்து, பற்றாக்குறையோடு வாழ்ந்தவர்.
தன் மகள் எதற்கும் கஷ்டப்படக் கூடாது என்பதுதான் அவரது ஆசை.
படிப்பு, மதிப்பெண், கேம்பஸ் இண்டர்வ்யூ என அப்பாவிடம் தன்னை நிரூபிக்க ஓடிய அந்த ஓட்டத்தில், பாடகி ஆக ஆசைப்பட்ட பானு தொலைந்தே போனாள்.
வேலை, நல்ல சம்பளம், நிலையான வாழ்க்கை, இவற்றையெல்லாம் பார்த்த அப்பா, “மகள் செட்டிலாகி விட்டாள்…” என்று மகிழ்ந்தார்.
அந்தச் சந்தோஷத்தோடே அவர் வாழ்க்கை முடிந்தது.
ஆனால்…
அப்பாவின் கனவை நிறைவேற்றியபோது, தனது கனவை எங்கேயோ தவறவிட்டிருந்தாள் பானு.
சில நாட்களுக்கு முன், தன்னுடன் படித்த பிரேமா பின்னணி பாடகியாக அறிமுகமான செய்தியைப் பார்த்ததிலிருந்து, அவள் மனம் அமைதியாக இல்லை.
அவளுக்குப் பொறாமை இல்லை.
ஒருகாலத்தில், தானும் இப்படியொரு வாழ்க்கையை கனவு கண்டிருந்ததை நினைத்ததால் அமைதி தொலைந்தது.
அங்கு குழந்தைகள் ஒவ்வொரு பூவாகப் பார்த்துப் பெயர் சொல்லி மகிழ்ந்துகொண்டிருந்தனர்.
“ஹே, இது ரோஸ்!”
“ஜாஸ்மின் எவ்வளவு அழகா இருக்கில்ல!” என்று அதிசயித்த சிறுமியின் மழலையில் மூழ்கியிருந்த பானுவின் கண்களில், யார் கண்ணிலும் சிக்காத ஒரு காட்டுப்பூ பட்டது.
அதுவும் எத்தனை அழகு!
யாரும் பார்க்கவில்லை என்பதால் அதன் அழகு குறைந்துவிட்டதா?
யாரும் பாராட்டவில்லை என்பதால் அதன் அர்த்தம் இல்லாமல் போய்விட்டதா?
பானுவிற்குச் சட்டென திரை விலகியது.
பாடுவதுதான் முக்கியம்.
அது திரையிலா, இல்லையா என்பது முக்கியமில்லை.
அந்தக் காட்டுப்பூவைப்போல, தானும் தன்னால் ஆன அளவுக்கு மகிழ்ச்சியாகப் பாடினால் போதும். ஆனால் பல வருடங்களாக விட்டுப்போன கலை கை வருமா என்கிற குழப்பம் இருந்தது.
அப்படியே அமர்ந்திருந்த பானுவின் காதில் அருகில் யாரோ ஒரு கோச் சொல்வது விழுந்தது.
“டெய்லி பிராக்டிஸ் பண்ணினாதான் முடியும். ஒரே நாளுல எதுவும் வராது.”
ஆம்.
அது அவளுக்கான பதில்தான்.
ஒரே நாளில் எதுவும் மாறாது.
ஆனால், ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் சிறிய விஷயங்கள், ஒருநாள் வாழ்வையே மாற்றிவிடும்.
அன்று இரவு, வீட்டுக்குத் திரும்பியபோது, பல மாதங்களுக்குப் பிறகு, பானு தனது திறன்பேசியை சைலன்டில் வைத்தாள்.
ஜன்னலைத் திறந்து, வீசிய காற்றைக் கண்களை மூடி அமைதியாக உள்ளிழுத்தாள்.
பின் டையரியைத் திறந்து, “நாளை வாழ்க்கை மாற வேண்டும் என்றால், இன்று நான் என்ன சிறிய மாற்றம் செய்யலாம்?” என்று எழுதினாள்.
நீண்ட நேரம் அந்த வரியை பார்த்துக்கொண்டிருந்தாள், பதில் உடனே வரவில்லை.
ஆனால்…
பல நாட்களுக்கு பிறகு, அவள் முற்றிலும் உடைந்து போகவில்லை என்று உணர்ந்தாள்.
அடுத்த நாள் முதல், சிறிது நேரம் பாட்டுப் பயிற்சி செய்ய ஆரம்பித்தாள்.
மூச்சுப் பயிற்சி செய்தாள்.
அம்மாவுடன் தேநீர்க் குடித்துக்கொண்டே பேசினாள்.
நண்பர்களுடன் நேரம் செலவிட ஆரம்பித்தாள்.
“நான் இப்போதே பாடகி ஆக வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒருநாள் ஆகத் தயாராக இருக்கலாம்…”
ஒருவேளை பாடகியாக ஆகவில்லை என்றாலும், பாடுவது அவளுக்கு இன்னும் மகிழ்ச்சி தருகிறது என்பதே, அவளுக்குப் பெரிய நிம்மதியாக இருந்தது.
வாழ்க்கை சில நேரம், ஒரே நாளில் மாறாது. ஆனால், ஒரு நாள் எடுக்கப்பட்ட சிறிய நல்ல முடிவுகள், பல மாதங்களுக்கு பிறகு, ஒரு புதிய வாழ்க்கையாக மாறும். பிறகு திரும்பிப் பார்க்கும்போது, அது அதிர்ஷ்டம் போலத் தோன்றலாம். ஆனால் அந்த மாற்றம், பல நாட்கள் யாரும் கவனிக்காத சிறிய முயற்சிகளிலேயே மெதுவாக உருவாகியிருந்தது.
சில நாட்கள் கழித்து, ஒரு நாள் மாலை, மழை பெய்துகொண்டிருந்தது. பானு தேநீர் தயாரித்தாள். ஒரு கப்பை அம்மாவிடம் கொடுத்து, மற்றொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, ஜன்னலருகே அமர்ந்தாள்.
மெலிதான குரலில், ஒரு மழைப் பாடலை ஹம் செய்தாள்.
அழகாக, சரியான ஸ்ருதியோடு அமைந்தது.
முதல் முறையாக அவள் மனதில் ஒரு நம்பிக்கை உருவாகியது.
“இன்னும் தாமதமாகிவிடவில்லை…”
நீங்கள் கனவை விட்டுவிட்டதாக நினைக்கும் நேரத்திலும், கனவு உங்களை முழுமையாக விட்டுவிடாது.
சின்ன சின்ன ஆசைகள்…
மீண்டும் சிறகடிக்கத் தொடங்கின.
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.





