ஹலோ தோழமைகளே, நலம். நலம்தானே?

எல்லைக்கோடு வகுப்பதைத் தொடர்ந்து இந்த அத்தியாயத்தில் சுய பராமரிப்பு (Self Care) பற்றிப் பார்க்கப் போகிறோம்.

சுய பராமரிப்பு என்ற உடன் அது மிகவும் செலவு பிடிக்கும் விஷயம் என்கிற எண்ணம் மேலெழுந்தால் அதை நன்றாக அழுத்தி துடைத்து விடுங்கள்.

சுய பராமரிப்பு என்பது நம் உடலை, மனதை, பழக்க வழக்கங்களை நன்றாக வைத்துக்கொள்வது அவ்வளவே. அதற்கு மேல் உங்களுக்கு ஆசையும் வசதியும் இருப்பின் அழகு நிலையம், அதிக விலையுள்ள ஆடைகள் என்று செலவு செய்யலாம். ஆனால், இதெல்லாம் உங்களின் விருப்பத்தின் பேரில் செய்வதே தவிர சுய பராமரிப்பில் சேராது.

  • உடலைப் பராமரிப்பது : உடலைப் பராமரிப்பது என்ற உடன் ஜீரோ சைஸ் மெயிண்டைன் செய்வதல்ல. உடலைச் சுகாதாரமாக, ஆரோக்கியமாகப் பேணுவது. தேவையான, முடிந்த உடற்பயிற்சிகள் செய்வது, ஆரோக்கியமாக உண்பது, உடல் கொடுக்கும் ஆரோக்கிய கேட்டின் சமிஞ்சைகளைப் புறக்கணிக்காமல் கவனிப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்கள்தாம். ஆனால், பெரும்பாலோர் முக்கியமாகப் பெண்கள் குடும்பத்தினருக்காக எவ்வளவு வேலை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், தனக்கென ஒரு மணி நேரம் ஒதுக்கி நடை பயிற்சியில் ஈடுபட நேரம் கிடைக்காது.  தினமும் வீட்டில் மூன்று வேலையும் புதிதாகச் சமைத்தாலும், நேற்று மீந்து போன, காலையில் செய்து மிச்சமான உணவை  வீணாகக் கூடாது என உண்பர். அவர்களை யாரும் பழையதைச் சாப்பிட வேண்டுமென்று கட்டாயப்படுத்துவதில்லை. ஆனாலும் உணவை வீணாக்கக் கூடாது என்று உடம்பை வீணாக்கிக்கொள்வர்.  நேற்று வைத்த குழம்போ சட்னியோ வீணாகப் போனால் ஆகும் செலவைவிட நம் உடலைக் கெடுத்துக்கொண்டால் மருத்துவரிடம் செலவழிக்கும் தொகை மிக அதிகம். நம் உடலுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்க வேண்டியது, நமது தலையாய கடமை. அதைக் கொடுக்கத் தவறும் போது, நாம் மிகவும் நேசிக்கும் குடும்பத்தினருக்கே நாம் பாரமாகிப் போகும் வாய்ப்பும் உண்டு. யோசியுங்கள் தோழிகளே. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என்ன என்ன தேவை என்று பார்த்துப் பார்த்து வாங்குவர், தனக்கென வாங்கினால் இருப்பதிலேயே கம்மி விலையுள்ள சோப், ஷாம்புவைத் தேர்ந்தெடுப்பர். எனக்கெதுக்கு இப்போ இவ்வளவு விலை அதிகமா என்கிற சப்பை காரணம் சொல்லிக்கொண்டே. குடும்பத்தில் ஒருவருக்குச் சிறு ஆரோக்கியப் பிரச்னை என்றாலும் உடனடியாகக் கவனிக்கும் பல பெண்கள், தனக்கு என்றால், ஏதோ ஒரு மாத்திரையை விழுங்கிவிட்டு வேலையைப் பார்க்கப் போய்விடுவர்.  தன்னை நேசிக்கும் ஒருவரால் இவ்வாறு தன்னை வஞ்சித்துக் கொள்ள முடியவே முடியாது. நாம் வாழும் வரை நம் உடன் வரப்போவது உடலும் மனமும்தான். அதை ஆரோக்கியமாகப் பாதுகாப்பது சுய நேசத்தினாலே சாத்தியம்.
  • மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது :

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதாவது சற்று வெளிப்படையாகத் தெரியும். உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உடலில் வரும் சில அறிகுறிகள் காட்டிக்கொடுக்கும். ஆனால் மனம்?

வெளிப் பார்வைக்கு ஒன்றும் தெரியாது, அனைத்தும் நலம் போலத்தான் இருக்கும். மற்றவருக்கு மட்டுமல்ல நமக்கே புரியாது மனதின் ஆரோக்கியம். அதனால் மிகுந்த கவனம் தேவை. தினமும் சிறிது நேர மூச்சுப் பயிற்சி மனதை அமைதியாக வைத்துக் கொள்ள உதவும். தினமும் நாட்குறிப்பு எழுதுவதும், அன்றைய விஷயங்களை நாம் அசைபோட்டுப் பார்க்கவும், அதனால் நமக்கு ஏற்பட்ட கோபம், பொறாமை போன்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் உதவும். ஒவ்வொரு நாளின் முடிவிலும் நம்மை நாமே சீர் தூக்கிப் பார்த்துக்கொள்ளவும், தவறான எண்ணங்களைக் களையவும் உதவும். நடந்ததை மாற்ற முடியாதுதான், ஆனால் இனியொருமுறை அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் நாம் மனதளவில் முதிர்ந்து வருகிறோம் என்பதே மிகுந்த உவப்பைத் தரும் விஷயம்தான். நம் உணவு என்பது உடலுக்கானது மட்டுமல்ல, மனதிற்கானதும்தான். நல் உணவு தொடர்ந்து உண்ணும் போது மனதும் அமைதியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். வீணாகப் புறம் பேசுதல், அடுத்தவரின் நிலையை ஆராயாமல் அவர்களைப் பற்றிய முடிவுக்கு வருதல் இது போன்ற செயல்களும் நம்மை அறியாமலேயே நம் மனதிற்குச் செய்யும் தீங்கு. எண்ணம், பேச்சு, செயல் அனைத்திலும் நல்லவை மட்டும் இருந்தால் மனநலம் நிச்சயம் நம் வசமாகும். அடுத்தடுத்த படிகளை வரும் அத்தியாயத்தில் காணலாம்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.