கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். டி கே கோவிந்தன் அவர்கள் எழுதிய கதைக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுமிருக்கிறார். பத்மினி பிக்சர்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் பி.ஆர். பந்துலு தயாரித்து இருக்கிறார். அவர் தயாரித்த முதல் படம் இது. திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.
பாடல்களை எழுதியவர் கே டி சந்தானம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இயற்றிய ‘வெண்ணிலவும் வானும் போல’ இசையமைப்பு தண்டபாணி தேசிகர் எனப் போடுகிறார்கள். அவர் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தான் இசை அமைத்து இருக்கிறாரா எனத் தெரியவில்லை. படத்துக்கான இசையை டி.ஜி. லிங்கப்பா அமைத்திருக்கிறார்.
கணபதியாக டி.ஆர். ராமச்சந்திரன், அம்பலவாணனாக சிவாஜி கணேசன், பத்மினியாக பத்மினி, சாவித்திரி/ ராகினியாக ராகினி நடித்து இருக்கிறார்கள்.

பனிமலைப்பதிப்பகம் வெளியிட்ட பிரம்மச்சரியம் என்ற நூல்தான் திரைப்படத்தில் முதலில் வருகிறது. அதைக் கையில் எடுப்பவர், கணபதி (டி.ஆர். ராமச்சந்திரன்). பிரம்மச்சரியத்தின் சிறப்புகள் என அந்த நூல் சொல்பவற்றை வாசிக்கிறார். “முகத்திலே ஞான ஒளி வீசும்” என்றதும், கண்ணாடியை எடுத்துப் பார்க்கிறார். கண்ணாடியில் சரி, அவர் போட்டிருக்கும் சட்டையிலும் சரி, உடற்பயிற்சி செய்து உரமேறிய ஒரு ஆணின் படம் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கும் போதே கொஞ்சம் எதிர்பார்ப்பு வரத்தான் செய்கிறது.
இப்படி வாசித்துக் கொண்டிருக்கும் போதே, வெளியில் வேலைக்காரரின் குழந்தைகள் சப்தம் போடுகின்றன. இவர் அங்கே போய் “இத்தனை குழந்தைகள் தான் பெற்றுக் கொள்ள வேண்டும் எனச் சட்டம் வரவேண்டும்” என்கிறார். இவ்வாறு திரைப்படம் முழுவதும் அதற்குச் சட்டம் வரணும் இதற்குச் சட்டம் வரணும் என சொல்லிக் கொண்டிருப்பவர், அமெரிக்கா அணுகுண்டைக் கைவிட்டாலும் சரி; ரஷ்யா ஹைட்ரஜன் குண்டைக் கைவிட்டாலும் சரி; இந்தியா தனது அகிம்சையைக் கைவிட்டாலும் சரி; நான் என் பிரம்மச்சரியத்தைக் கை விடுவதில்லை எனப் பெற்றோரிடம் வந்து சூளுரைக்க வேறு செய்கிறார். இப்படி நகைச்சுவையுடன் இணைந்தே திரைப்படம் கிளம்புகிறது.
பெற்றோர், கணபதியைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்க எனக் கணபதியின் அத்தை மகன் அம்பலத்தை வரவழைக்கத் தந்தி அனுப்புகிறார்கள். அம்பலம், பத்மினி இருவரும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள். படிப்பு முடித்து, பத்மினி மதுரை செல்கிறார். இந்த நேரத்தில் தான் தந்தி வருகிறது. இதனால் அம்பலமும் மகிழ்ச்சியாக மதுரைப் புறப்படுகிறார். ஆம் கணபதியும் மதுரையில் தான் இருக்கிறார்.
‘ஆண்டு விழா’ எனக் கணபதிக்கு அழைப்பிதழ் வருகிறது. வேண்டா வெறுப்பாகப் போகிறார். அங்கு ஏற்கனவே நடிக்க இருந்த நடிகைக்குக் காய்ச்சல் என்பதால், பத்மினி நாடகத்தில் நடிக்கிறார். அது விசுவாமித்திரர் நாடகம். கணபதிக்குக் கண்டதும் காதல். வீட்டில் தனியாகக் காதல் மொழிகள் பேசுவதைப் பார்த்துத் திருமணத்திற்குக் கணபதி சம்மதித்து விட்டார் என நினைத்து அவரது மாமா மகள் சாவித்திரியை (நடிகை ராகினி) அழைத்து வருகிறார்கள். இவர் சாவித்திரியை அவமானப்படுத்த, மாமா குடும்பம், மீண்டும் ஊருக்குத் திரும்புகிறது. வழியில் பெட்ரோல் போடும் இடத்தில் அந்த குடும்பமும், பத்மினி குடும்பமும் சந்திக்கிறது. அவர்கள் ஏற்கனவே உறவினர்கள் தான். அதனால் சாவித்திரி, பத்மினியின் வீட்டிற்கு வருகிறார். அங்குச் சிலகாலம் தங்கியிருக்கிறார்.
அம்பலத்திடம் கணபதி பெண் யார் எனச் சொல்ல, அம்பலத்திற்குத் திக் என்கிறது. இருந்தாலும் அனைவரும் பெண் பார்க்கச் செல்கிறார்கள். இவர் பெண்ணிடம் பல கேள்விகள் கேட்க, பெண்ணும் பதிலுக்குப் பல கேள்விகள் கேட்கத் திருமணம் நிற்கிறது.
இப்போது அடுத்த நாடகம் ஒன்றைக் குடும்பமே சேர்ந்து அரங்கேற்றுகிறது. சாவித்திரியை, அமெரிக்காவிலிருந்து வந்தவர் (ராகினி) என சொல்லிக், கணபதியின் வீட்டின் முன்னால் இருக்கும் பெரிய வீட்டில் குடியமர்த்துகிறார்கள். நாகரிக மோகம் கொண்ட கணபதி, இப்போது அவரைக் காதலிக்கத் தொடங்குகிறார். எப்போதுமே அவருக்குக் கண்டதும் காதல் தான். திருமணமும் நடைபெறுகிறது.
திருமணத்தன்றே மனைவியுடன் வாகனத்தில் புறப்படுகிறார் கணபதி. இடையில் வண்டி நிற்கிறது. என்ன என விசாரிக்க வந்த சிறுவர்களிடம் “நான் பிள்ளைப் பிடிக்க வந்தவன்” என்கிறார் கேலியாக. அந்த காலத்தில் வண்டியின் முன்னால் ஒரு கம்பி கொண்டு, இயக்கித் தான் வண்டியை ஓட வைப்பார்கள். அப்படிச் செய்தும் வண்டி அப்படியே நின்றதால், ‘அமெரிக்காவில் வாழ்ந்த பெண் தானே! வாகனம் ஓட்டும்’ என்ற எண்ணத்தில் ஆக்சிலேட்டர் கொடுக்கச் சொல்கிறார். இவர் கீழே நிற்கிறார். சாவித்திரியும் ஆக்சிலேட்டர் கொடுக்க, வண்டி தறிகெட்டு ஓடி, மரத்தில் மோதுகிறது. ராகினி மயக்கமடைகிறார்.
இந்த பக்கம், குழந்தைகள், பிள்ளைப் பிடிப்பவன் வந்து இருக்கிறான் என வீடுகளில் போய்ச் சொல்ல, கணபதியை ஊரார் பிடித்து வைத்துக் கொண்டு காவல்துறையைக் கூப்பிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு இக்கட்டிலிருந்தும் தப்பி, ஒருவழியாகக் குடும்பத்துடன் இணைகிறார் கணபதி.
அம்பலம், பத்மினி திருமணம் நடைபெறுகிறது. ராகினி சாவித்திரியாக மாறுகிறார். இவ்வளவு நாளும் வெறும் அலங்காரத்தையா நாகரீகம் என நினைத்தேன் எனச் சொல்லி, சாவித்திரியை உளப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார் கணபதி. ஒருவர் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க, ‘நானும் சாரி நீயும் சாரி’ எனத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
சிவாஜி, இதற்கு முன்னரே பல திரைப்படங்களிலும் நாயகனாக நடித்திருந்தும், இந்தத் திரைப்படத்தில் இரண்டாம் நாயகனாக வருகிறார். டி.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் பெயரைத் தான் முதலில் போடுகிறார்கள். டி.ஆர். ராமச்சந்திரன், அவருக்கு இணையாக வரும் ராகினி, சிவாஜி, அவருக்கு இணையாக வரும், பத்மினி மட்டுமல்லாமல், வீட்டு வேலையாட்களாக வருபவர்கள், வீட்டில் இருக்கும் அப்பாக்கள், அம்மாக்கள் என எல்லோருமே மிகச்சிறப்பாகச் செய்து இருந்தாலும், தனிப்பட்ட வகையில் ராகினி மிகவும் அற்புதமாகச் செய்து இருப்பதாகத் தோன்றியது. அப்பாவியாக நடனம் ஆடும் சாவித்திரியாகட்டும், நாகரீகமாகக் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து பேசும் ராகினியாகட்டும், அவ்வளவு அழகு; நிறைவு.
மாறுவேடத்தில், ராகினியாக வரும் சாவித்திரிக்கும் அவரது வேலையாளாக வரும் பத்மினிக்கும் முகத்தில் மச்சம் வைத்து இருக்கிறார்கள். மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எந்த பிசிறும் தட்டவே இல்லை. நகைச்சுவைக் கதைக்கு லாஜிக் தேவையில்லை என நினைத்தாலும், ஓரளவிற்கு லாஜிக்கோடு தான் கதை போகிறது.
ப. நீலகண்டன் வசனம் எழுதியிருக்கிறார். படம் முழுக்க அவரது வசனங்களில், நகைச்சுவையும் எள்ளலும் துள்ளி விளையாடுகின்றன. வீட்டில் இருக்கும் நாயக நடிகர்கள் மட்டுமல்லாமல், பெரியவர்கள், வேலைக்காரர்கள் என எல்லோர் வாயிலிருந்தும் அதே எள்ளல் வருகிறது. துளியும் விரசமில்லாமல் எதோ கல்லூரி, நண்பர் குழு உரையாடல் போலத் திகட்டாத நகைச்சுவை. அதுவும் அந்த பெண்பார்க்கும் படலம், எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
பெண் பார்க்க வரும் எல்லோரும் பெண்ணுக்குப் பாடத்தெரியுமா எனக் கேட்கிறார்களே! கல்யாணத்திற்குப் பிறகு எந்த கணவனாவது பாடச் சொல்கிறார்களா? எனப் பத்மினி கேட்க, நமது சட்டம் பேசும் நாயகன் “கேட்கணும் கேட்கணும்; பாடத்தெரிந்த பெண் என்றால், நாள்தோறும் ஒரு மணி நேரமாவது பாட்டக் கேட்டு ரசிக்கணும்னு ஒரு சட்டம் வரணும்“ எனச் சொல்வதாகட்டும், அதற்குச் சுற்றி இருப்பவர் அனைவரின் முக பாவனையாகட்டும், பத்மினி, “உங்களுக்குப் பாடத் தெரியுமா? நடனமாடத் தெரியுமா? சமைக்கத் தெரியுமா? சமத்துவம் பேசும் நாகரிகமானவர், மனைவிக்கும் சமைத்துக் கொடுக்க வேண்டும் தானே என கேட்டதும் அனைவரின் முகபாவனை அவ்வளவு இயல்பாக இருக்கும். அதுவும் மாப்பிள்ளை எனக்குத் தகுதியானவர் அல்லர் எனப் பத்மினி சொன்னதும் அம்பலம் (சிவாஜி) முகத்தில் வரும் நிம்மதி அலாதி தான்.
இயக்குநர் ப. நீலகண்டன் அவர்களின் மாபெரும் வெற்றி என்றே இதைச் சொல்லலாம். ஆண், பெண் சமத்துவம் பற்றிச் சொல்லும் பெண் பார்க்கும் படலம் இது. இப்போதும் நிலை எல்லா வீடுகளிலும் மாறவில்லை. கரண்டி என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது எனத்தான் பல வீடுகள் உள்ளன. சாப்பிட விரும்புபவர்கள் வீட்டுச் சாப்பாடு சாப்பிட நினைக்கும் அனைவருக்கும் சமைக்கத் தெரியவேண்டும். இதில் ஆணென்ன பெண்ணென்ன!
வெளியே வந்த அம்பலத்திற்கு இப்போது பத்மினியைச் சந்திக்க வேண்டும். அதனால், ‘நான் போய்க் கேள்வி கேட்டு வருகிறேன்’ என வீரமாக அம்பலம் சொல்ல “கும்பகோணத்தில் அடிபட்டதுக்குக் குத்தாலத்திலே மீசை துடிச்சுதாம். அப்போ மழை பெய்ஞ்சுது இடி இடிச்சுது சும்மா இருந்துட்டு” எனச் சொல்லும்போது கணபதியின் முகபாவனை அடடா!
பிற்காலத்தில் பல படங்களில் மாவு மேலிருந்து கொட்டி, முகம் முழுவதும் மாவாகி உட்கார்ந்து இருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் பார்த்து இருக்கிறோம். அது இதிலேயே வருகிறது. மாவு கொட்டப்பட்டு, வெள்ளை முகமான சிவாஜி முகம், பார்க்கப் பார்க்கச் சிரிப்பு வரும் முகம்.
வீடுகள் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டுள்ளன. கணபதியின் வீட்டில், ராஜேந்திர பிரசாத், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் படங்களுடன், ஆணழகன் சிலையும் உள்ளது.
பத்மினி வீடு, குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம், சுவரில் மாட்டப்பட்ட டெனிஸ்/ பாட்மிண்டன் ராக்கெட்டுகள் என உள்ளன. தேவதாஸ் போன்ற வேறு சில திரைப்படங்களிலும் இவ்வாறு டென்னிஸ் ராக்கெட்டுகள் சுவரிலிருந்தன. அப்போது நாகரீகமான பெண்களுக்கான அடையாளமாக இது இருந்து இருக்கலாம். இதைச் சொல்லும்போது, ஒரு காணொளி நினைவிற்கு வந்தது. இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மையார், ஒரு மாநாட்டின் தலைவராக இருந்திருக்கிறார். அவரைப் பற்றிப் பெரியார், “இந்த மாநாட்டின் தலைவரான இந்திராணி பாலசுப்ரமணியம் அவர்கள், ஒரு பெண்கள் சங்கம் அமைத்து (1930) கோஷா ஸ்திரீகள் (இஸ்லாமியர்) உள்படப் பெண்களைச் சேர்த்துக் கொண்டு, பாட்மிண்டன் கற்றுக் கொடுத்தார்” என எழுதியதாக அருள்மொழி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அப்பவே நகரில் (மதுரை) குப்பை வண்டி இருந்திருக்கிறது. மாட்டு வண்டியின் பின்னால் பெரிய பெட்டி மாதிரி வைத்து இருக்கிறார்கள்.
பாரதி தாசனார் எழுதி ஜெயலக்ஷ்மி ( ராதா ஜெயலக்ஷ்மி சகோதரிகளில் ஜெயலக்ஷ்மி) அவர்கள் பாடிய பாடல்
வெண்ணி லாவும் வானும் போலே
வீரனும்கூர் வாளும் போலே
வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே -எனது
கண்ணும் ஒளியும் போலே –
கன்னல் தமிழும் நானும் அல்லவோ?
வையகமே உய்யு மாறு
வாய்த்த தமிழ் என்அரும் பேறு!
துய்யதான சங்க மென்னும்
தொட்டிலில் வளர்ந்த பிள்ளை- தம்
கையிலே வேலேந்தி இந்தக்
கடல் உலகாள் மூவேந்தர்
கருத் தேந்திக் காத்தார்; அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல
நடிகர் சந்திரபாபு சிவாஜி கணேசனுக்குப் பின்னணியாகப் பாடிய “ஜாலி லைஃப் ஜாலி லைஃப்” பாடல் மட்டுமல்ல அதற்கு, கணபதியும் அம்பலமும் ஆடும் அழகும் அலாதி தான்.
ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தாலி கட்டினால் ஜாலி லைஃப்
ஜாலி லைஃப் ஜாலி லைஃப் தம்பதியான ஜாலி லைஃப்
வாலிப வயதில் பேசலாமோ வரட்டு வேதாந்தம்
வாழ்க்கை இன்பமாய் வாழ்வதற்கே
லஃப் இஸ் ஃபார் லிவிங் மை டியர் பாய்
இது வாலிப சித்தாந்தம்
கல்யாணம் ஆனதும் பெண்டாட்டி கூடவே
கொண்டாட்டம் போடுவே பின்னாலேயே நீ ஓடுவே – என்ன
சொன்னாலும் பின்பாட்டு பாடுவே
என்னக் கண்டாலும் காணாத மாதிரி
ஏதோ காணாததைக் கண்ட மாதிரி
புது பெண்டாட்டி – ஹா புது பெண்டாட்டி- கூடவே…
ஏ.எம்.ராஜா மற்றும் ஜிக்கி பாடிய பாடல்
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
ஐயாவே மெய்யாக பெண்ணிடம் தோல்வியடையலாமா?
காதல் களத்திலே தோல்வியடைவதே
ஆணுக்கு வெற்றி தானே!
இது நான் சொல்வதல்ல வான்புகழ் வள்ளுவன்
குறளைப் படித்துப் பாரு.-திருக்
குறளைப் படித்துப் பாரு
பேச்சினில் பெண்கள் மயங்கிய காலம்
போச்சுது மிஸ்டர் பாருங்க
ஏய்ய்க்க நினைச்சா இது முடியாது
இது ninteen sixty fourங்க
சுட்டித்தனமாக பேசாதே
தாலி கட்டிவிட்டால் வட்டியும் முதலுமாய்
திட்டம் நிறைவேறாது
பட்டப்பகல் கனவாகுமே
மிஸ்டர் இது பழைய காலமல்ல
காலம் மாறியபோதும்
மனைவி கணவனுக்கடிமை தானே!
கட்டிய கணவன் தட்டி நடந்தால் கொட்டிவிடும் பல் வீணே
ஐயோ நான் என் செய்வேன்
அப்போதே தெரியாமல்
மெய்யாக மோசம் போனேனே!
தெய்வமே தெய்வமே!
ஐயையோ. வேடிக்கை பேச்சு- வெறும்
வேடிக்கை பேச்சு
வினையாய்ப் போச்சு தப்பிதம் தானே
ஒப்பாரி வேண்டாம்
மன்னிப்பு கேட்டுக்கிறேன் போதுமா?
கன்னத்தில் போட்டுகிறேன் பாரம்மா
வாங்காமல் விடுவேனோ
சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்கள் பாடிய பாடல்
அழகே ஆனந்தம் மண – மாருதம் வீசும் வசந்தமாலை
வானின் மேலே அழகான ஓடம் போலே
கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம் – இயற்கை
அசைந்தாடும் ரோஜா உன்னை அவர்மீது வீசுவேன்
அன்பாக என்னக் கண்டு ஏதேதோ பேசுவார்
இசைந்தே உல்லாசமாக – இன்பமே கொண்டாடும் அந்த
கண்ணோடு கண்ணும் காதல் கருத்தோடு உள்ளமே
கலந்தே ஒன்றாகி இன்பக் காவிய வெள்ளமே
முன்னோடிப் பாயும் அன்பில் மூழ்கியே சந்தோஷம் காணும் -அழகே
ராதா ஜெயலட்சுமி அவர்கள் பாடிய பாடல்
மது மலர் எல்லாம் புதுமணம் வீசி
மகிழ்ந்திடும் வசந்த காலம்
மனதில் பசுமையும் நினைவில் இனிமையும்
வழங்கிடும் வசந்த காலம்
கண்ணாடி உருகி பாய்வது போன்ற
தண்ணீரின் சல சல ஒலியும்
பண்ணோடு மனதைப் பாடும் வண்டின்
பாங்கான ரீங்கார இசையும்
மனதில் பசுமையும் ….
பழமையின் உயர்வை புதிய தமிழிலே
பாடிடும் கவிஞனைப்போலே
அழகெனும் மெருகால்
உலகினை புதுமை ஆக்கிடும் வசந்த காலம்
மனதில் பசுமையும் ….
V. N. சுந்தரம் அவர்கள் பாடிய பாடல்
கவியின் கனவில் வாழும் காவியமே
கருத்தில் அழகு செய்யும் ஓவியமே
உயிரோவியமே – இளம்
சுவைசேர் கனிரசமே தோகையே
உன் நினவாலே தவிக்கின்றான் ஒருவன்
டிரைவர் இல்லாக் கார் போலே -இளம்
காப்பி கசக்குதம்மா மிளகாய்
காரம் இனிக்குதம்மா
பூப்போன்ற இட்லியும் பூரியும்
புளிப்பாய் தோணுதம்மா
சாப்பிட வேண்டுமென்றால் வயிறோ
சண்டை பிடிக்குதம்மா
ஆப்பிளும் ஆரஞ்சும் வியாதியை
அதிகமாக்குதம்மா
தீராத காதலிது தேன்மொழியாளே
வேறு யாராலும் போகாது மான் விழியாளே
மீறிவிட்டால் காதல் ஜூரம் மின்னலிடையே
அன்பு மீறிவிட்டால் அன்பு மீறிவிட்டால்
காதல் ஜூரம் மின்னலிடையே
தெர்மா மீட்டருக்கும் அடங்காது அன்னப் பேடையே
பாராயோ அன்புடனே பஞ்சவர்ணமே
திரும்பிப் பாராயோ கண்ணால் பாராயோ
அன்புடனே பாராயோ பாராயோ பாராயோ
என பல சிறந்த பாடல்கள் உள்ளன. ராதா ஜெயலட்சுமி. V. N. சுந்தரம், சந்திரபாபு, ஏ.எம்.ராஜா, ஜிக்கி, சூலமங்கலம் ராஜலட்சுமி, T. V. இரத்தினம், கண்டசாலா என பலரும் பின்னணி பாடியிருக்கிறார்கள்.
ராதா ஜெயலட்சுமி இருவரும் சகோதரிகளாகவே பல மேடைகளை இணைந்து கண்டவர்கள். திரைப்படங்களிலும் பாடல்கள் பாடியிருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தில் இருவரும் இணைந்து ஒரு பாடலும் ஜெயலக்ஷ்மி அவர்கள் மட்டும் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்கள். சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்களும் அவர்களது ராஜலட்சுமி சகோதரி ஜெயலக்ஷ்மியும் பக்திப் பாடல்கள் குறிப்பாக கந்தசஷ்டி கவசம் பாடல்கள் மூலம் மிகவும் புகழ்பெற்றவர்கள்.
மிக மிகத்தரமான நகைச்சுவைத் திரைப்படம் என எனக்குத் தோன்றியது. நீங்களும் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.
இந்தப் படம் DDல் பார்த்த ஞாபகம் இருக்கிறது, (படத்தின் பெயர் ஞாபகம் இருக்கிறது, கதை மறந்து போச்சு)
இப்போது பார்க்கும்போதும் அலுப்பு தட்டவில்லை. மிகச்சில படங்களே அவ்வாறு இருக்கும். பாருங்கள்.