பொ.ஆ.16 ஆம் நூற்றாண்டு வரையில் மக்களிடம் வரி வசூல் செய்வதில் திருவிதாங்கூர் அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தொடர்ந்து வந்த எதிர் காலங்களில் (18, 19ஆம் நூற்றாண்டுகளில்) நிலைகுலைந்தது ஏன்? திருவிதாங்கூர் அரசுக்கு உருவான நெருக்கடி என்ன? காண்போம்…
1537 முதல் 1638 வரையில் ஒரு நூற்றாண்டாக நிகழ்ந்த, திருவிதாங்கூர் மீதான நாயக்க மன்னர்களின் படையெடுப்புகளால் ஏற்பட்ட பேரழிவின் போது கூட, திருவிதாங்கூர் அரசுக்கு ஏற்படாத பொருளாதார நெருக்கடி, 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்டதற்கான காரணங்களை காண்போம்..
- சத்திரியர் என்ற தகுதியை அடைய, அரச வம்சத்தினருக்கு பார்ப்பனியம் கற்றுக் கொடுத்த மூடநம்பிக்கை சம்பிரதாயங்கள் மற்றும் கோயில் திருவிழா செலவுகள்:
பார்ப்பனியத்தின் மனுதர்ம சாஸ்திரம் ‘குழந்தை தாயின் கருவில் வாசம் செய்து(தங்கி இருந்து) பிறப்பதால், பிறக்கின்ற குழந்தைகள் அனைவருக்கும் ‘கர்ப்பவாச தோஷம்’ இருப்பதாகச் சொல்கிறது.’
‘கார்ப்பைர்ஹோமைர் ஜாதகர்ம ஜௌட மௌஞ்ஜீ நிபந்தநை:
பைஜிகம் கார்பிகம் சைநோ த்விஜாநாம பம்ருஜ்யதே’ என்ற மனுநீதி சாஸ்திரத்தின் சமஸ்கிருத ஸ்லோகத்தின் பொருள் பின்வருமாறு,
‘கர்ப்பாதானம் முதலான ஹோம சடங்குகளை செய்வதாலும், ஜாதகர்மம், சௌலம், மௌஞ்சீபந்தனம், உபநயனம் முதலான சடங்குகளை செய்வதாலும், பெற்றோரால் ஏற்பட்ட தோஷம், கர்ப்பவாச தோஷம் முதலான தோஷங்கள் நீங்கி பிராமணர்களும், சத்திரியர்களும் வைசியர்களும் பரிசுத்தம் அடைகிறார்கள்’.1* இதில் கூறப்பட்டுள்ள உபநயனம் என்னும் சம்பிரதாயம், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு இரண்டாவது பிறப்பைத் தருகின்றது என்பது, பார்ப்பனியத்தின் நம்பிக்கை. இரு பிறப்பாளர்கள் தாயின் கருவினால் உண்டான தோஷத்தில் இருந்து விடுபடுவார்கள் என்பதே பார்ப்பனியத்தின் தத்துவம்.
ஆக, தாயின் கர்ப்பத்தில் தங்கிய தோஷம் நீங்க பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும் மனு பிராயச்சித்தத்தை கூறியிருக்கிறார், ஆனால் சூத்திரர்களுக்கு கூறவில்லை.
பரசுராமர் சத்திரியர்கள் அனைவரையும் அழித்துவிட்டார் என்று கேரளத்து நம்பூதிரி பிராமணர்களும் மற்றவர்களும் நம்பினார்கள். ஆக, நம்பூதிரி பிராமணர்களின் நம்பிக்கையின்படி, சூத்திரர்களாக இருக்கும் அரச குடும்பத்தினருக்கு, அரசாளும் தகுதியில்லை. அரச குடும்பத்தினர் அரசாளும் தகுதியை பெற வேண்டுமாயின், அதாவது சத்திரியர்களாக மாற வேண்டுமாயின், அவர்கள் இரு பிறப்பை அடைய வேண்டும். இருபிறப்பை அடைய வேண்டுமாயின் ஹிரண்யகர்ப்ப தானம் செய்ய வேண்டும் என்று நம்பூதிரி பிராமணர்கள் சொன்னார்கள்.
ஹிரண்யகர்ப்ப தானம்:
தங்கத்தினால் பசுவின் உருவத்தில், ஆறடி உயரம் நான்கு அடி அகலம் கொண்ட தங்கப் பாத்திரம் செய்யப்பட்டு அதில் பஞ்சகவ்யம் நிரப்பப்படும். நிரப்பப்பட்ட பஞ்சகவ்யத்தில் மன்னர் நீராடினால் அவர் புதியதாகப்(இரண்டாவதாகப்) பிறந்து விட்டதாக ஐதீகமாம்.2* இச்சடங்கில் பசுவின் உருவத்துக்கு பதிலாக, தாமரைப்பூவின் உருவத்தை தங்கத்தில் செய்து, இச்சடங்கினை நிகழ்த்தும் வழக்கமும் இருந்தது.
துலாபாரம்:
ஹிரண்யகர்ப்ப தானத்தின் ஒரு பகுதியாக செய்யப்படும் மற்றொரு சடங்கு துலாபாரம் என்பதாகும். மன்னரின் எடைக்கு எடை தங்கத்தை தானம் செய்வதே துலாபாரம் என்ற சடங்காகும்.
ஹிரண்யகர்ப்ப தானத்தில் பசுவாக செய்யப்பட்ட தங்கமும், துலாபாரத்தில் மன்னரின் எடைக்கு எடை நிறுக்கப்பட்ட தங்கமும், இச்சடங்குகளில் அரசர் அணிந்திருந்த தங்க நகைகளும், தங்க நாணயங்களாக செய்யப்பட்டு இச்சடங்குகளை செய்வித்த பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்படும்.
1854ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ராஜாவுக்கு செய்யப்பட்ட, ஹிரண்யகர்ப்ப தானத்துக்காகச் செய்யப்பட்ட தங்கப் பசுவின் எடை தோராயமாக 9,070 கழஞ்சு ஆகும். 9,070 கழஞ்சு என்பது 45,350 கிராம் தங்கமாகும். அதாவது கிட்டத்தட்ட 1,568 பவுன் தங்கம், ஒருமுறை ஹிரண்யகர்ப்ப தானம் செய்ய, திருவிதாங்கூர் அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சடங்கில் சுமார் 22,000 பிராமணர்கள் கலந்துள்ளனர். அந்தப் பிராமணர்களுக்கு மேற்சொன்ன தங்கம் தானமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 3*
சித்திரைத் திருநாள் மஹாராஜாவைத் தவிர திருவிதாங்கூர் அரசர்கள் அனைவருமே மேற்சொன்ன அனைத்து சடங்குகளையும் செய்திருக்கிறார்கள்.4*
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசர் நீராடும் ‘முரஜபம்’ என்ற சடங்கு பிராமணர்களால் நிகழ்த்தப்படும். 1863 ஆம் ஆண்டு, 56 நாட்கள், நிகழ்த்தப்பட்ட ‘முரஜபம்’ நிகழ்வில் சுமார் 6,000 முக்கியப்பிரமுகர்கள், திருவிதாங்கூர் சுற்றுப்பகுதிகளிலிருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டார்கள். அவர்களுக்கான உணவு, தங்கும் வசதிகள் முதலானவை அரசாங்கத்தால் செய்து கொடுக்கப்பட்டன. இந்த நிகழ்விற்கான செலவு சுமார் 16,000 பவுண்டுகள்.5*
‘பவுண்ட்ஸ்’ என்பது பிரிட்டிஷ் பணம் ஆகும்.
மேற்சொன்ன சடங்குகளிலும் திருவிழாக்களிலும் பிராமணர்களுக்கு அறுசுவை உணவு தானமாக அளிக்கப்பட்டதோடு, ஊட்டுப்புரைகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் தவறாமல், அரசின் செலவில் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடானது. பல கல்வெட்டுகளில் பற்பல மக்கள் பிராமணர்களுக்கு உணவு தானம் அளித்த செய்திகள் காணப்படுகின்றன. பிராமணர்களுக்கு உணவு வழங்க, பக்தர்கள் பலரும் தங்கள் நிலங்களைக் கூட நன்கொடையாக வழங்கிய செய்திகளை பற்பலக் கல்வெட்டுகளில் காணலாம். 6*
அதாவது ‘தானம்’ என்ற வார்த்தைக்கு அர்த்தமே பிராமணர்களுக்குக் கொடை செய்வதுதான் என்ற பொதுப்புத்தி உளவியல் ரீதியாக மக்களின் மூளையில் விதைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறாக கடவுள் நம்பிக்கை மிகுந்த விழாக்களுக்கும், பார்ப்பனிய நம்பிக்கை மிகுந்த விழாக்களுக்கும் பெருமளவு பணத்தை செலவு செய்யும் வழக்கத்தை பல்லாண்டுகளாகக் கொண்டிருந்தது திருவிதாங்கூர் அரசு. இதனால் நாட்டின் கஜானா, பிராமண வர்ணத்தாரால் பெருமளவில் சுரண்டப்பட்டது.
2. ஆங்கிலேயர் ஆதிக்கமும், திருவிதாங்கூர் அரசின் துரோகமும்:
வணிக நோக்கத்தோடு இந்தியாவுக்குள் வந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, இந்திய சமஸ்தானங்களின் அரசியலுக்குள் கால் பதிக்கத் தொடங்கிய போது, ஆதிக்க சாதிகளின் ஆதரவின்றித் தங்களால் இந்திய சமஸ்தானங்களின் அதிகாரங்களை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்திருந்தனர். எனவே மனுவின் வர்ணாஸ்ரமக் கொள்கையை நடைமுறையில் செயல்படுத்துவதில் தடை செய்ய முனைந்தால், ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பை பெற வேண்டி வரும் என்பதை அறிந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, ‘இந்தியர்களின் மதம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான விவகாரங்களில் ஆங்கிலேய அரசு தலையிடாது’ என்று இந்தியா முழுமையும் உள்ள ஆதிக்க வர்க்கத்தினரிடம் உடன்படிக்கை செய்திருந்தனர்.
இந்தியாவில் நிலவிய சாதியப்படிநிலை வேறுபாடுகளை பாதுகாப்பதற்கு, பிராமண வர்ணத்தினருக்கும், ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஆங்கிலேய அரசு ஆதரவு அளித்தது. அதனால் திருவிதாங்கூரின் பிராமண வர்க்கத்தினரும், அரசு அதிகாரிகளும் நிகழ்த்திய, சாதியத் தீண்டாமை, கொத்தடிமை முறை போன்றவற்றை ஆங்கிலேய அரசு கண்டுகொள்ளவில்லை. தனது வியாபாரத்தை முன்னேற்றுவதிலும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும் மட்டுமே ஆங்கிலேய அரசு முனைப்புடன் செயல்பட்டது.
ஆக, தொடக்கத்தில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பார்ப்பனியத்தையும் சாதியப்படிநிலையையும், நெல் முனையளவு கூட உரசாததால், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் நட்புறவு கொள்வதில் திருவிதாங்கூர் அரசுக்கு தடையேதும் இருக்கவில்லை.
1684 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரில், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஆற்றங்கால் ராணி தண்ணீர் செழிப்பும், அதிக மிளகு விளைச்சலும் கொண்ட இடத்தை வழங்கினார். சில ஆண்டுகளிலேயே ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி திருவிதாங்கூரில் அஞ்செங்கோ, விழிஞம், கோவளம் என்று மூன்று இடங்களில் தன்னுடைய வர்த்தக நிறுவனங்களை நிறுவியது.7*
.
பொஆபி 1723 ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கம்பெனியுடன் திருவிதாங்கூர் அரசர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, குளச்சல் துறைமுகத்தில் ஒரு வர்த்தக வங்கிக் கூடத்தை நிறுவினார் திருவிதாங்கூர் அரசர். ஆண்டு தோறும் 10000 பணம் மதிப்புள்ள சரக்குகளை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்க திருவிதாங்கூர் அரசர் உத்தரவிட்டார். அத்துடன், ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தேவையான பொருட்களை, திருவிதாங்கூர் அரசாங்கம் வேறு எந்த ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற கம்பெனியின் உடன்படிக்கைக்கு திருவிதாங்கூர் அரசர் தன் முழு சம்மதத்தைத் தெரிவித்தார். பொஆபி 1726ஆம் ஆண்டு இடவாவில் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு இடத்தை வழங்கியதும் திருவிதாங்கூர் அரசர்தான்!8* இவ்வாறாக ஆங்கிலேயக் கம்பெனி திருவிதாங்கூரில் காலூன்ற முழு ஆதரவையும் நல்கியது அரச வம்சம்.
பொதுவாக போரின் போது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து விளைவிக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பிப்பதே தலைமையின் அறமாகும். ஆனால் பொஆ 1809 ஆம் ஆண்டு வேலுத்தம்பிக்கு எதிரான ஆங்கிலேயக் கம்பெனியின் போரின் போது, ஆங்கிலேயப் போர்ப்படைக்கு ஆங்கிலேய கவர்னர் பிறப்பித்த சிறப்பு உத்தரவு “போரின் போது திருவிதாங்கூர் முழுமையும் உள்ள, பிராமணர்களுக்கும், மத நிறுவனங்களுக்கும் ஆங்கிலேயப்படை எவ்விதத் தொந்தரவையும் ஏற்படுத்தி விடக்கூடாது” என்பதாகும்.9* அறம் மீறிய இவ்வுத்தரவு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்.
திருவிதாங்கூரின் சாதியக் கொடுமைகளை ஆதரித்து ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், இந்திய தேசத்தின் பிற பகுதிகளின் வளங்களை கொள்ளையடித்தது போலவே, திருவிதாங்கூரின் வளங்களையும், மக்களின் உழைப்பையும் சுரண்டத் தொடங்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி. அத்தகைய ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு பல்லக்குத் தூக்கியாக செயல்பட்டதன் மூலம், தன் சமஸ்தானத்து மக்களுக்கு துரோகம் இழைத்தது திருவிதாங்கூர் அரசு.
இந்நிலையில், இந்தியாவின் சமஸ்தானங்கள், ஜமீன்கள், பாளையங்கள் போன்றவற்றைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஆங்கிலேய அரசு தீட்டிய திட்டங்களில் முக்கியமானது ‘துணைப்படைத் திட்டம்’ அல்லது ‘உதவிச் சேனை ஏற்பாடு’.
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட தேசத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிகள்:
- ஆங்கிலேயர்களின் படை ஒன்று துணைப்படை திட்டத்தை ஏற்றுக்கொண்ட தேசத்தில் நிலையாக நிறுத்தி வைக்கப்படும். அந்த ஆங்கிலேயப் படைக்கு ஆகும் செலவை அந்த தேசத்தினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
- ஆங்கிலேயரைத் தவிர வேறு ஐரோப்பியர்களை அந்த தேசத்தினர் எங்கும் பணிகளில் அமர்த்தக் கூடாது. “ஆங்கிலேயர்களைத் தவிர வேறு ஐரோப்பியர்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது” என்ற உடன்படிக்கையை திருவிதாங்கூர் அரசு ஏற்கனவே செய்திருந்த்து என்பதை நினைவில் கொள்க!
- ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் அந்த அரசு யாருடனும் யுத்தம் செய்யவோ, சமாதானம் செய்யவோக் கூடாது.
- அந்த தேசத்தில் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் நியமனம் செய்யப்பட வேண்டும். அவ்வரசின் செயல்பாடுகள் அந்த ஆங்கிலேய அதிகாரியின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்.
இத்தகைய ஏகாதிபத்தியக் கோட்பாடுகள் கொண்ட துணைப்படைத் திட்டத்தை முதன்முதலில் ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேய அரசுக்கு அடிமையானவர் ஹைதராபாத் நிஜாம் மன்னர். ஏற்க மறுத்த மன்னர்களான சிந்தியா, ஹோல்கார், பீஷ்வா ஆகியோர் மீது, ஆங்கிலேய அரசு போர் தொடுத்து வென்றது. அதன் பிறகு அந்த அரசுகளும் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. அயோத்தி நவாப்பும் அத்திட்டத்தில் இணைந்தார்.10*
மேற்சொன்ன துணைப்படைத்திட்டம் என்ற ஏகாதிபத்திய அடக்குமுறையை வெல்லெஸ்லி பிரபு 1798ஆம் ஆண்டு கொண்டு வந்தார். ஆனால் அதற்கு முன்பு, “ஆங்கிலேயர்களின் அனுமதியின்றி திருவிதாங்கூர் அரசு எந்த முடிவையும் எடுக்காது” என்று 1788ஆம் ஆண்டிலேயே திருவிதாங்கூர் அரசர் ராமவர்மா கூறி விட்டார். திருவிதாங்கூர் அரசின் நட்பை வேண்டி திப்பு சுல்தான் அனுப்பிய தூதுவர்களை வரவேற்றத் திருவிதாங்கூர் அவையில் ஆங்கிலேயப்படையின் மேஜர் பேன்னர்மென் முக்கியப்பங்கு வகித்ததாகக் குறிப்பிடுகிறது நாகம் அய்யா எழுதிய THE TRAVANCORE STATE MANUAL I. திப்பு சுல்தானின் தூதுக்கு திருவிதாங்கூர் அரசின் பதில், “ஆங்கிலேயர் அனுமதியின்றி திருவிதாங்கூர் அரசு எந்த முடிவையும் எடுக்காது” என்பதாகும். ஆக, ஆங்கிலேயர்கள் தங்களது ஏகாதிபத்திய அதிகாரத்தை செலுத்தத் தொடங்கும் முன்பே, ஆங்கிலேயரிடம் அடிபணிந்து விட்ட அரசு திருவிதாங்கூர் அரசு என்பது நிரூபணமாகிறது.
மேற்சொன்ன சம்பவத்தைத் தொடர்ந்து, திப்பு சுல்தான் திருவிதாங்கூர் மீது படையெடுத்து வர ஆயத்தமானது. திருவிதாங்கூர் அரசு ஆங்கிலேயர்களின் நட்பை நாடியது. திப்புவிடமிருந்து திருவிதாங்கூரைக் காப்பாற்ற, ஆங்கிலேயப்படையின் மூன்று பட்டாலியன்கள் திருவிதாங்கூர் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த ஆங்கிலேயப் பட்டாலியன்களுக்கு ஆகும் செலவை திருவிதாங்கூர் அரசு, ஆங்கிலேயக் கம்பெனிக்கு ‘பணம் அல்லது பணத்துக்கு ஈடான மிளகு’ கொடுத்து விடுவது என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரு பட்டாலியனுக்கு ஒரு மாதத்திற்கு ஆன செலவு 1,750 ஸ்டார் பகோடாக்கள், 40 ஃபணம்கள், 40 ரூபாய்கள்! இச்சம்பவங்களும் ஒப்பந்தமும் நடந்தேறியது 1788 ஆம் ஆண்டு. அதாவது ஆங்கிலேயர்கள் துணைப்படைத் திட்டத்தை தொடங்குவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே திருவிதாங்கூர் தனது எல்லையில் ஆங்கிலேயப்படைகளுக்கு இடம் கொடுத்து, தன்னையும் தன் மக்களையும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு அடிமையாக்கிக் கொண்டு விட்டது.11*
ஸ்டார் பகோடா = பிரிட்டிஷ் பொற்காசு.

ஃபணம் = திருவிதாங்கூர் காசு.

ஒரு நாட்டின் அரசன், தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள நடத்தும் போராட்டம் சுதந்திரப் போராட்டம் அல்ல! அது பதவிச் சண்டை.
தன் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், சுயமரியாதையையும் காப்பாற்ற ஒரு நாட்டின் தலைவன் நடத்தும் சண்டையே சுதந்திரப் போராட்டம் ஆகும்.
இங்கே திருவிதாங்கூர் அரச வம்சம் தங்களின் அரசப் பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள, சொந்த நாட்டின் மக்களைச் சுரண்டி, அயல் நாட்டானுடன் பங்கிட்டுக் கொண்டிருக்கிறது.
திப்பு சுல்தானுக்கு பயந்து மாமன்னர் ராம வர்மா ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் பொஆ 1795ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, ஆண்டு தோறும் நான்கு லட்சம் ரூபாய் ஆங்கிலேயருக்கு திருவிதாங்கூர் அரசு கப்பமாகக் கட்ட வேண்டும். கப்பத்தொகையை கட்ட இயலாத நிலையில் திருவிதாங்கூர் அரசு இருந்தது.
சத்திரியப்பட்டம் பெறுவதற்காக பார்ப்பனர்களுக்கு கஜானாவை வாரி வழங்கிக் கொண்டிருந்த அரசுக்கு பட்ஜெட் தட்டுப்பாடு வந்ததில் வியப்பேதும் இல்லை. இந்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேய அரசு பொஆபி 1805 ஆம் ஆண்டு நிறைவேற்றிய உடன்படிக்கையின் படி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆங்கிலேயப் படைகள் நிரந்தரமாக நிறுத்தி வைக்க, திருவிதாங்கூர் அரசரால் அனுமதி வழங்கப்பட்டது.12*
இத்தகைய அரசியல் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்களின் சித்திரவதை வாழ்க்கைக்கு நடுவே முத்துக்குட்டி(அய்யா வைகுண்டர்) 1809 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஹிரண்யகர்ப்பதானம் முதலான மூட நம்பிக்கை சம்பிரதாயங்களால் ஏற்பட்ட செலவுகளையும், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டியதால் ஏற்பட்ட செலவுகளையும் சமாளிக்க, திருவிதாங்கூர் அரசர் சமஸ்தானத்து மக்களில், உயர் சாதிகள் என்று வரையறுக்கப்பட்ட செல்வந்தர்களிடமும், நிவுடைமையாளர்களிடமும் நன்கொடை வசூல் செய்ய முடிவு செய்தது. உயர்சாதி என்று வரையறுக்கப்பட்ட, செல்வந்தர்களும், நிலவுடைமையாளர்களும் ஒரு ஆளுக்கு 20,000 பணம் அரசுக்கு நன்கொடை செலுத்தும்படி திருவிதாங்கூர் அரசு ஆணையிட்டது.
ஏனென்றால் சாதியாலும் தீண்டாமையாலும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் திருவிதாங்கூர் அரசு, ஏற்கனவே 110 விதமான வரிகளை(TAXES) வசூல் செய்து கொண்டிருந்தது. ஆயினும் உயர்சாதிகளாகத் தங்களைக் கருதிக் கொண்ட, செல்வந்தர்களான நாயர், பிராமண வர்க்கத்தினர், வெள்ளாளர் முதலானோர் அரசாங்கம் அறிவித்த நன்கொடையை வழங்க மறுத்து, கிளர்ச்சி செய்தனர். வேலுத்தம்பி என்பவர் இந்தக் கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கிளர்ச்சியின் முடிவில் வேலுத்தம்பி திருவிதாங்கூர் அரசின் வர்த்தக அமைச்சரானார். மேட்டுக்குடியினருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. குடியானவர்கள் அனைத்து விதமான வரிகளையும்(TAXES) கட்ட நிர்பந்திக்கப்பட்டார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்து போர்ப்படையான நாயர் படையினர், அம்மக்களிடம் வரி வசூல் செய்ய வன்முறைகளைக் கையாண்டனர்.
பின்னாளில் வேலுத்தம்பி, ஆங்கிலேயர்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வரிச்சுமை அதிகரித்ததேத் தவிரக் குறையவில்லை. கடந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட வரிகள்(TAXES) மட்டுமின்றி பல்வேறு வரிகள்(taxes) திருவிதாங்கூர் மக்களிடம் வசூலிக்கப்பட்டன. தலைவரி, முலை வரி, குடை வரி, பிராயசித்தம் வரி போன்றவை அவற்றுள் சில. 12*
வலிமையானவனுக்கு பயந்து, எளியவனை நசுக்கும் அரசை கோழை அரசு என்று வர்ணிப்பதில் தவறில்லை என்று கருதுகிறேன். உயர்சாதியாகத் தங்களைக் கருதிக்கொண்ட ஆதிக்க வெறியர்களின் கிளர்ச்சிக்கு பயந்து, ஒடுக்கப்பட்ட மக்களை சித்திரவதை செய்த கோழை அரசு திருவிதாங்கூர் அரசு.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேய அரசு மேற்சொன்ன விதமான சதிகளையும், வரி, கப்பம் என்ற பெயர்களில் சுரண்டலையும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது மட்டும்தான் நிகழ்த்தியதா? என்றால் இல்லை. இந்தியா முழுவதும் ஆங்கிலேய அரசு தனது ஏகாதிபத்தியத்தை செலுத்தி வரி, கப்பம், திரை, கிஷ்டி என்ற பெயர்களில் சுரண்டலை நிகழ்த்தியது. பல்வேறு இந்திய சிற்றரசர்களும், பாளையக்கார்ர்களும் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைக்கு தலைபணியாமல், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், தீரன் சின்னமலை போன்ற வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களில் சிலர். திப்பு சுல்தான் ஆங்கிலேய அரசின் சுரண்டலையும் ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து போரிட்ட மாவீர்ர்களில் முக்கியமானவர்.
இவீரர்கள் தன் தேசத்து மக்களின் வாழ்வாதாரம் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். ஆனால் திருவிதாங்கூர் அரசு ?!!
இவ்வாறாக மக்களுக்காக போராடி உயிர் நீத்த வீரபாண்டிய கட்டபொம்மனை தெலுங்கன் என்று மொழிப்பிரிவினைக்குள்ளும், தீரன் சின்னமலையை சாதிப்பிரிவினைக்குள்ளும், திப்பு சுல்தானை முகம்மதியன் என்று மதப்பிரிவினைக்குள்ளும் தள்ளி, அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சிறுமைப்படுத்தி விட்டு, ஆங்கிலேயர்களின் காலடியில் மண்டியிட்டுக் கிடந்த திருவிதாங்கூர் அரசின் இந்துத்துவக் கொள்கையை, தன் கொள்கையாக பறையறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இந்துத்துவ பாசிசக் கட்சியான பாரதீய ஜனதா கட்சி!
இந்துத்துவத்தின் பாசிசப் பாதையை தேர்ந்தெடுக்கும் இன்றைய இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிய முற்படுவது நல்லது…
பொஆபி 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள் திப்பு சுல்தான் ஆங்கிலேயப்படையினரால் போரில் கொல்லப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் ஆங்கிலேயப்படையின் மேஜர் பேனர்மென் எழுதிய தீர்ப்பால் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். பொஆபி 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் வேலுநாச்சியார் இயற்கை எய்தினார். 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் நாள் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனர். 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் நாள் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.
இவ்வாறாக ஆங்கிலேயரின் துணைப்படைத் திட்டம் என்ற ஏகாதிபத்திய அடக்குமுறையை எதிர்த்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராக ஆங்கிலேய அரசின் சதியால் அழிக்கப்பட்ட பிறகு, இந்திய நாட்டின் பல தேசங்கள் ஆங்கிலேயர் வசமானது. ஆனால் திருவிதாங்கூரை திருவிதாங்கூரின் அரசரே ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொண்டார். அதன் பிறகே முத்துக்குட்டி 1809 ஆம் ஆண்டு பிறந்தார்.
தரவுகள்
- மனுநீதி என்னும் மனுதர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும்), அன்னைஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா, பக்கம் எண் – 50.
- திருவிதாங்கூர் அரசாட்சி (கிபி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரத்னகுமார் phd, பக்கம் எண் – 56.
- ‘THE LAND OF CHARITY’, REV SAMUEL MATEER, FIRST PUBLICATION 1871, PAGE NO : 168 TO 173.
- திருவிதாங்கூர் அரசாட்சி (கிபி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரத்னகுமார் phd, பக்கம் எண் – 56.
- ‘THE LAND OF CHARITY’, REV SAMUEL MATEER, FIRST PUBLICATION 1871, PAGE NO : 168 TO 173.
- கன்னியாக்குமரிக் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, 6 தொகுதிகளையும் ஆராய்ந்து படிக்க!
- The Travancore state manual I, V. Nagam Iya, 1906, page no: 314.
- திருவிதாங்கூர் அரசாட்சி (கிபி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரத்னகுமார் phd, பக்கம் எண் – 19.
- The Travancore state manual I, V. Nagam Iya, 1906, page no: 440.
- ஐக்கிய திராவிடம், விவேகி, திராவிட கலா நிலையம் வெளியீடு, முதல் பதிப்பு 1947, பக்கம் எண்: 31.
- The Travancore state manual I, V. Nagam Iya, 1906, page no: 388 to 390.
- திருவிதாங்கூர் அரசாட்சி (கிபி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் ஜெ.விஜயரத்னகுமார் phd, பக்கம் எண் – 27, 30 & 59.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.