சாணார்* சாதியினர் இந்திய அரசியலைப்புச் சட்டத்தில், தங்களை ‘நாடார்’ என்று பெயர் மாற்றி பதிவு செய்யும் வரை, ‘நாடார்’ என்பது சாணார் சாதியின் ஓர் உட்பிரிவாகத்தான் இருந்தது என்பதற்கு மேலும் இரண்டு சான்றுகளை அறிய முடிகின்றது. அவற்றையும் தருகிறேன்.

*இந்த சொல் பயன்பாடு அந்த காலகட்டத்து ஆவணங்களில் உள்ள காரணத்தாலும் அதன் அரசியல் புரிதற்பொருட்டும் இங்கே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சொல் பயன்பாட்டில் ஆசிரியருக்கோ, எழுத்தாளருக்கோ, ஹெர் ஸ்டோரிசுக்கோ உடன்பாடு இல்லை.

நாடார் என்பது சாணார்களின் தலைவர்களைக் குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதை வி. நாகம் ஐயா எழுதிய ‘Travancore State Manual’ புத்தகத்திலிருந்து அறிய முடிகின்றது. சாணார்களின் உயர் வகுப்பினர் நாடார் என்று அழைக்கப்படுகின்றனர் என்ற குறிப்பு ‘The South Indian Sketches, by Miss. S. Tucker’ என்ற புத்தகத்தில் இருப்பதாகவும் நாகம் ஐயா கோடிட்டுக் காட்டுகிறார். சாணார் சாதியின் சில குடும்பங்களுக்கு மட்டும் திருவிதாங்கூர் ராஜாக்களால் ‘நாடார்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் எட்டு வீட்டு நாடார்கள் என்று அழைக்கப்படுவதாகவும் அப்புத்தகம் உறுதி செய்கிறது.1*

நாகர்கோயில் ஆதிமூல விநாயகர் கோயிலுக்கு அருகில் இருக்கும் தூணில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் கிடைக்கும் செய்தி யாதெனில், திருவிதாங்கூர் அரசரால் குரக்கேணி கொல்லத்தில் குடியமர்த்தப்பட்ட 18 சாதி மக்களிடம், தங்களை உயர் சாதியினர் என்று கருதிக்கொண்டவர்கள்,  அரசுக்குத் தெரியாமல் வரி வசூல் செய்தார்கள். அவ்வாறு மக்கள் கொடுக்கும் வரிகளான(TAXES), கரமுக்கட்டளை, பணம், படவரம், படிப்பணம், ஆனை வரி போன்ற வரிப்பணங்களை, மக்களிடம் இருந்து வசூல் செய்து, மேற்சொன்ன உயர் சாதியினர் என்று வரையறுக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கும் பணியை ‘நாடார்கள்’ செய்தார்கள் என்பதாகும். இந்தக் கல்வெட்டு கொல்லம் 682 ஆம் வருடம் ஆனி மாதம் 15 ஆம் நாளன்று பொறிக்கப்பட்டதாகும்.

இக்கல்வெட்டின் காலம் பொ.ஆ.1507 ஆகும். எனவே சாணார் சாதியினர் தங்கள் பெயரை நாடார் என்று பெயர் மாற்றம் செய்யும் முன்பு, நாடார் என்ற பெயரால் அழைக்கப்பட்ட வகுப்பினர் உயர் சாதியினராகத் தங்களைக் கருதிக் கொண்ட ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஆதரவாளர்களாக இருந்தவர்கள் என்பது தெளிவு.2*

பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய வரிக்கொடுமைகள், சாதியத் தீண்டாமைகள்,  கொத்தடிமை முறை ஆகியவைப் பற்றி அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.

தோள்சீலைப் போராட்டம் பற்றியும், தோள்சீலைப் போராட்டத்தில் அய்யா வைகுண்டரின் பங்கு பற்றியும் அறிவதற்கு முன்பு, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ‘வரி விதிப்பின் வரலாறு’ மற்றும் ‘கொடூர வரி விதிப்புக்கான கட்டாயம்’ போன்றவற்றை அறிவது அவசியம்!

மனிதக்கூட்டங்களில் பண்டமாற்று முறை வழக்கொழிய ஆரம்பித்து, வணிக நோக்கத்திற்காக பணப்பரிமாற்றம் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மன்னராட்சி கோலோச்சிய காலத்திலிருந்தே மக்களிடம் வரி வசூல் செய்யும் முறையும் உருவாகி விட்டது.

அரசாங்கத்தால் வசூலிக்கப்படுகின்ற வரி, மக்கள் உண்டு, உடுத்து போக மிச்சமாக இருந்தால், அது  மக்கள் நலனுக்கான சேமிப்பு. அதுவே வரி வசூல் போக பசியாற்றுவதற்குக்கூட மக்களிடம் மிச்சமில்லை எனில், அத்தகைய வரி, கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியால் அடிக்கப்படும் கொள்ளை.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் ராஜேந்திரச் சோழன் காலத்தில் நாஞ்சில் நாட்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிகளின் பெயர்களைக் காண முடிகின்றது.

‘ஊர்க்கழஞ்சு, குமாரக்கச்சாணம்(கல்யாண வரி), மீன் பாட்டம், தறி இறை, தட்டரை பாட்டம் (தங்கப் பட்டறை பாட்டம்), காவல் கூலி, கால் கூலி, கோல் கூலி, ஆட்டுப் பாட்டம் (கால்நடைகள் வளர்ப்பதற்கான வரி), இலைவாணிய பாட்டம், தரகுக் கூலி போன்ற வரிகளிலிருந்து குமரி பிடாகையின்(குமரி பகவதி அம்மன் கோயிலின்) தேவதானத்து நிலங்களுக்கு விலக்கு அளிக்கும்படி, ராஜேந்திரச் சோழன் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறுகின்றது அக்கல்வெட்டு. தேவதானத்து நிலங்களுக்கு வரி விலக்கு என்றால், ஏனைய மக்களிடம் இத்தகைய வரி வசூல் சோழர்கள் காலத்திலிருந்தே நடைமுறையில் இருந்தது உறுதி ஆகிறது. 3*

கேரளபுரத்தின் ஒரு கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட,  பொஆ. 1316 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் மேலும் சில வரிகள்(TAXES) குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, ஆதிரை வரி, மூங்கில் வரி, பனை மரங்களுக்கு வரி, ஆனை வரி, படை வரி, கடுமக்கட்டளை போன்றவை. ‘பனைமரங்களுக்கான வரி’ பதின்மூன்றாம் ஆண்டிலிருந்தே வசூல் செய்யப்பட்டு வருவதை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.4*

நாஞ்சில் நாடு முதலான, பெரும்பாலான நாடுகளில் இவ்வாறாக மக்களிடமிருந்து அரசு வரி வசூல் செய்யும் வழக்கம், பல நூற்றாண்டுகளாகவே நடைமுறையில் இருந்து வந்துள்ளதுதான்!

கிட்டத்தட்ட 16 ஆம் நூற்றாண்டு வரையில், திருவிதாங்கூர் பகுதிகளில் வரி விதிப்பு தொடர்பான கல்வெட்டுக்களே காணப்படுகின்றனவே அன்றி வரிக்கொடுமை பற்றிய செய்திகள் பெரும்பாலும் இல்லை.

16 ஆம் நூற்றாண்டு வரையில், திருவிதாங்கூர் அரசால் வசூலிக்கப்பட்ட வரிகள்(Taxes) மக்களின் வேளாண்மையில் ஏற்பட்ட லாப நட்டத்தைக் கணக்கிட்டு வசூல் செய்யப்பட்டது. வேளாண்மை பொய்த்துப் போனால், சாதாரணமாகக் கொடுக்க வேண்டிய வரிப் பணத்தில் இருந்து ஐந்தில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமானது. பயிர் வளர்ப்பின் லாப நட்டங்கள் கிராம சபையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு, நட்டம் ஏற்பட்டால் வரிவிலக்கு அளிக்கப்பட்டது.

குமாரசமுத்திரம், மருங்கூரில் கண்டெடுக்கப்பட்ட பொ.ஆ.1495ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, வலங்கை மற்றும் இடங்கை வகுப்பைச் சார்ந்த, தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சாதியினர், சகலகலை மார்த்தாண்ட விநாயகர் கோயிலுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதை, அரசு தடை செய்ததை உறுதி செய்கிறது. இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்ட பொ.ஆ.1507 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டில்(2*)கூட, உயர் வகுப்பாக வரையறுக்கப்பட்ட சாதியினர் அரசுக்குத் தெரியாமல் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட சாதியினரிடம் வரி வசூல் செய்தத் தகவலைக் கண்டோம். ஆக, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வரி வசூல் செய்வதில் அரசு விலக்கு அளித்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது. அதனால்தான் உயர் வகுப்பினராக இருந்தவர்கள், அரசுக்கு தெரியாமல் வரி வசூல் செய்திருக்கிறார்கள்.

பொ.ஆ.1486 ஆம் ஆண்டைச் சேர்ந்த இடலாக்குடி பரசுராமன் பெருந்தெரு கல்வெட்டு, இடலாக்குடியில் வாழ்ந்து வந்த  ‘சாயக்காரர்’ சாதி மக்களை பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாமல், பிராமணர் மற்றும் பிள்ளைமார் சாதியினர் தடுத்த செய்தியையும், அந்தக் கொடுமைகளில் இருந்து சாயக்காரர் சாதி மக்கள் திருவிதாங்கூர் அரசின் சட்டத்தால், விடுவிக்கப்பட்ட செய்தியையும் தருகிறது. ‘சாயக்காரர்’ சாதி மக்களுக்கு சில வரி விலக்கு சலுகைகளும் அரசரால் அளிக்கப்பட்டுள்ளது. குமரிமுட்டத்தில் உள்ள 1526ஆம் ஆண்டின் இன்னொரு கல்வெட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்சாதி இந்துக்களால் கொடுமைப்படுத்தப்பட்டதையும், பின்னர் அந்தக் கிறிஸ்தவ மக்கள், இந்துக்களின் கொடுமைகளிலிருந்து அரச ஆணையால் விடுவிக்கப்பட்ட உத்தரவுச் செய்தியையும் தருகிறது என நாகம் ஐயாவின் திருவிதாங்கூர் கையேடு குறிப்பிடுகிறது.

ஆக, 16 ஆம் நூற்றாண்டு வரையில் திருவிதாங்கூர் அரசு, வரி வசூலில், மக்களிடம்  ஓரளவுக்கு இரக்கத்தை கடைபிடித்திருக்கிறது என்பதும், சாதியத் தீண்டாமை மற்றும் மத பாகுபாடுகளில் இருந்து மக்களை தன்னால் இயன்ற வரை காத்து வந்துள்ளது என்பதும் தெளிவாகிறது.

ஆனால் மேற்சொன்னது போன்ற சாதியத் தீண்டாமை, ஒடுக்குமுறை, மத ரீதியிலான பாகுபாடு ஆகிய பிரச்சினைகள் எழும் போதெல்லாம், உயர் சாதியினாரகத் தங்களைக் கருதிக் கொண்ட ஆதிக்க சாதியினரால், தாழ்ந்த சாதியினராக வரையறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தனியிடங்களில் குடியமர்த்தப்பட்டு அவர்களின் ‘குடியிருப்பு வரம்புகள்’ அரசால் நிர்ணயிக்கப்பட்டன.5* ஆதிக்க சாதிக்கும் வலிக்காமல், தனது மனசாட்சிக்கும் வலிக்காமல், திருவிதாங்கூர் அரசர்கள் எடுத்த இத்தகைய நடவடிக்கைகள், உருவான பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்கவில்லை, மாறாக  எதிர்காலத்தில், (பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்) ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமைச் சிறைக்குள் முழுவதுமாக அகப்படுவதற்கு வழியாக அமைந்தன என்பதே நிதர்சனம்.

ஆம்! திருவிதாங்கூர் அரசர்களால் குடியிருப்பு வரம்புகளுக்குள் தள்ளப்பட்ட மக்கள், பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், திருவிதாங்கூர் சமஸ்தானத்து சமூகத்தில்  கடைநிலைக்குத் தள்ளப்பட்டனர். அம்மக்கள் வரிக்கொடுமை, சாதியக் கொடுமைகள், அடிமை முறை போன்றவற்றால்  பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆக, வரி வசூல் என்பது பண்டைய காலம் தொட்டே இருந்ததுதான்! ஆனால் வரி வசூலில் ஒரு அறம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த அறத்தை 18, 19 ஆம் நூற்றாண்டுகளின் திருவிதாங்கூர் அரசாங்கம் மீறி விட்டது. இதைத்தான் கீழ்க்காணும் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளும் சொல்கின்றன.

சோழ மன்னன் சிபிச்சக்கரவர்த்தியின் காலத்திலிருந்தே நியாயமான முறையில் தெச்சணத்தில் வரிவசூல் நிகழ்ந்து வந்துள்ளது என்றும், பின்னாளில் நீசன் ஆட்சியில் பெரும் வரிக் கொடுமைகள் நிகழ்ந்தது என்றும் ஆவணப்படுத்துகின்றது அகிலத்திரட்டு!

பன்னிரெண்டு ஆண்டுகள் பரிவாய் இறையிறுத்தால்

பின்னிரண்டாண்டு பொறுத்து இறை தாரும் என்பார்

இவ்வகையாய்ச் சோழன் ராஜ்ஜியத்தை ஆண்டிருந்தான்

சோழன் சொல்நெறியை கேளுமய்யா

வாடிவந்த பச்சினுக்கு வாளால் அவன் உடம்பை

தேடி வந்த வேடனுக்கு தொடை அரிந்து ஈந்தவன் காண்!’6* ஆகியவை முந்தைய சோழர்கள் காலத்தில், தெச்சணத்து பகுதியில் நிகழ்ந்த  வரி வசூல் முறை குறித்து அகிலத்திரட்டு சொல்லும் வரிகளாகும்(lines).

அகிலத்திரட்டில் வருகின்ற ‘தெச்சணம்’ என்பது இந்தியாவின் தெற்கு எல்லைப் பகுதியான நாஞ்சில் நாட்டைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். சோழர்கள் காலத்தில் பன்னிரெண்டு ஆண்டுகள் வரி வசூல் செய்யப்பட்டால், பிறகு இரண்டு ஆண்டுகள் வரி வசூல் நிகழ்வதில்லை என்கிறது அகிலத்திரட்டு.

நீசனின் அரசாட்சியில் வரிக்கொடுமைகள்:

பனை மரங்களின் உடைமையாளரிடம் பனை மரங்களுக்கான வரியை வசூல் செய்வதற்கும், உடைமையாளர் தருகின்ற கூலிக்காக, பனை மரம் ஏறுகின்ற தொழிலாளி ஒருவரிடம், பனை மரம் ஏறுவதற்கு வரி வசூல் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பெறுகின்ற கூலியை வரியாக செலுத்தி விட்டு அந்தப் பனைத் தொழிலாளி  பசியாறுவது எவ்வாறு?

அத்தகையக் கொடூர வரிகளைத்தான் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் அரசு வசூல் செய்தது. அதிலும் பெண்களின் மார்பகங்களை மறைக்க முலைவரி என்ற ஒன்றை கண்டுபிடித்த திருவிதாங்கூர் அரசின் கொடூரத்தை எந்த வார்த்தையால் வர்ணிப்பது?

தாலிக்கு ஆயம் சருகு முதல் ஆயம்

காலிக்கு ஆயம் கம்பு தடிக்கு ஆயம்

தாலம் அது ஏறும் சான்றோருக்கு ஆயம்

தூலம் உடன் அருவாள் தூருவட்டிக்கே ஆயம்

தாலம் அதுக்கு ஆயம் தரணி தனிலே வளர்ந்த

ஆலமரம் வரைக்கும் அதிக இறை வைத்தனனே

வட்டிக்கும் ஆயம் வலங்கைச் சான்றோர் கருப்புக்

கட்டிக்கும் ஆயம் கடு நீசன் வைத்தனனே

கரி இறை பாட்ட இறை கண்டபாட்ட இறையும்

தரிசு இறை காணாத தறை பாட்ட இறை’7*

ஆகிய அகிலத்திரட்டின் வரிகள், 18, 19 ஆம் நூற்றாண்டுகளில், திருவிதாங்கூரில்  நடைமுறையில் இருந்த வரிகளை விவரித்து சொல்கின்றது. அவை,

‘பெண் கழுத்தில் அணியும் தாலிக்கு வரி, காய்ந்த இலை சருகுகள் முதலாக எல்லாவற்றுக்கும் வரி, முக்காலி வைத்திருந்தால் அதற்கு வரி, கம்புக்கு வரி, மரம் ஏறுகின்ற சான்றோருக்கு(சாணாருக்கு) வரி, தூலம், அரிவாள், தூருவட்டி போன்ற விவசாயத்துக்கு தேவையான சாதனங்கள் வைத்திருந்தால் அதற்கு வரி, ஆலமரம் முதலாக தரணியில் வளர்ந்த அனைத்து மரத்துக்கும் அதிக வரி வைத்தானே! வட்டி வாங்கினாலும் வரி, கருப்புக்கட்டி(கருப்பட்டி) காய்ச்சினாலும் வரி! கரி எனப்படும் கரிக்கட்டைக்கு வரி, நெல் வயல்களுக்கு வரி, கண்ணால் கண்ட நெல் வயல்களுக்கு வரி, கண்களால் காணாத வழுக்கையாகக் கிடக்கும் நெல் வயல்களுக்கும் வரி, தரிசு நிலத்துக்கும் வரி’

 ஆயம் = வரி, இறை = வரி, கரி = கரிக்கட்டை, சாம்பல்,(துணி வெளுப்பவர்கள் துணிகளை அயர்ன் செய்ய பயன்படுத்தும் கரித்துண்டுகள்) பாட்டம் = நெல் வயல், தறை = வழுக்கை அல்லது வெறும் தரை என்ற பொருளில்கூட வந்திருக்கலாம். எதுவானாலும், நெல் விளையாத, கண்ணால் காணாத நெல் வயலுக்குக் கூட வரி வசூல் செய்யப்பட்டது என்ற பொருளே பொருந்துகின்றது.

இங்கு வரி விதிக்கப்பட்டிருக்கும் முறையை ஆழ்ந்து நோக்க வேண்டும்.

பனை மரத்துக்கு வரி, பனை மரம் ஏறுகின்ற தொழிலாளிக்கு வரி, பனை மரம் ஏற பயன்படும் தூலம், அரிவாள், கம்புதடி போன்றவைகளுக்கும் வரி, காய்ச்சுகின்ற கருப்புக்கட்டிக்கும் வரி என்றிருந்தால் பனை ஏறும் தொழிலில் லாபம் என்று ஒன்றை ஈட்ட முடியுமா? பனையேறும் தொழிலாளி பசியாறத்தான் முடியுமா? நெல் வயல் விளைந்தாலும், விளையாவிட்டாலும், தரிசாகக் கிடந்தாலும் வரி! எனில் விவசாயி வாழ முடியுமா?

கோயில்களின் தேவதான நிலங்களுக்கு வரி விலக்கு செய்து விட்டு, சாமான்ய மக்களிடம் வரி வசூல் செய்த மன்னனின் ஆட்சியையே சமதர்மமற்ற கொடுங்கோல் ஆட்சி என்று சாடி, பொதுவுடைமை பேசுகின்ற அறிவுச் சமூகத்தில், மேற்சொன்னபடியான திருவிதாங்கூர் அரசின் வரி வசூல் முறையை என்ன பெயர் சொல்லி இடிந்துரைப்பது?

இதுவரையில், திருவிதாங்கூர் சமஸ்தானத்துச் சட்டப்படி வசூலிக்கப்பட்ட வரிகள்(taxes) பற்றி பார்த்தோம். சட்டத்துக்குப் புறம்பாக திருவிதாங்கூரில் ஒடுக்கப்பட்ட மக்களிடம் அரசு அதிகாரிகள் செய்த  கொள்ளை பற்றிக் கீழ்க்காணும் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் விளக்கிக் கூறும்.

பாழிலேச் சான்றோர்க்கு படுநீசன் கொள்ளுகின்ற

ஊழியங்கள் எல்லாம் உரைக்கக் கேள் அன்போரே!

பனை கேட்டு அடிப்பான் பதநீர் கேட்டு அடிப்பான்

கனத்த கற்கண்டு கருப்புக்கட்டி கேட்டு அடிப்பான்

நாருவட்டி ஓலை நாள்தோறும் கேட்டு அடிப்பான்

வாதுக்கு நொங்கு வாய் கொண்டு கேட்டு அடிப்பான்

நெடுமட்டை கேட்பான் நெட்டோலைதான் கேட்பான்

கொண்டு வா எனவே கூழ்பதநி கேட்டு அடிப்பான்

சில்லுக்கருப்புக்கட்டி சீரகம் இட்டே ஊற்றி

கொல்லை தனில் சான்றோரைக் கொண்டு வா என்று அடிப்பான்

மீச்சுக் கருப்புக் கட்டி மிளகு பலகாரமிட்டு

வீச்சுடனே கொண்டு வீட்டில் வா என்று அடிப்பான்

வட்டிக் கருப்புக்கட்டி மணல் கருப்புக் கட்டியோடு

வெட்டக் கருப்புக்கட்டி வெண் கருப்புக்கட்டியோடு

தோண்டிக்கும் பாய்க்கும் சுமடு அதுக்கும் ஓலை

வேண்டியதெல்லாம் எடுத்து விரைவில் வா என்று அடிப்பான்

காலைப் பதநீர் கண் முத்தா நொங்குகளும்

மாலைப் பதநீர் வற்றக்காயும் பதநீர்

கொதிக்கும் பதநீர் கொண்டு வா என்று அடிப்பான்

விதிக்கு உகந்த சான்றோர் விரைவாய்க் கொடுத்திடவே

இத்தனையும் வேண்டி இவன் கொண்டு போனாலும்

பத்தி உள்ள சான்றோர்க்குப் படுந்துயரம் மாறாதே’ 8*

என்ற அகிலத்திரட்டு வரிகள் சான்றோர் என்று குறிப்பிடுவது சாணார் சாதி மக்களையும் மற்றும் நீசன் என்று குறிப்பிடுவது திருவிதாங்கூர் அரசின் கொடுங்கோல் அதிகாரிகளையும் ஆகும். மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகள்(lines) மிக எளிமையான வார்த்தைகளில் எல்லோருக்கும் புரியும்படி இருப்பதால் இவ்வரிகளுக்கு, விளக்க உரை தேவையில்லை என்றே கருதுகிறேன்.

ஊழியங்கள் = கூலி இல்லாமல் வேலைகள் செய்வது, சான்றோர் = சாணார் சாதி மக்கள்.

அடிமை முறையும் வழக்கத்தில் இருந்ததால் மேற்சொன்ன கொள்ளைகளை அடிப்பதில் திருவிதாங்கூர் அரசு அதிகாரிகளுக்குத் தயக்கமும் தடையும் இல்லாதிருந்தது என்பதை உணர முடிகின்றது.

அடிமை முறையின் ஒரு பகுதியாக இருந்த ‘கூலி இல்லாத வேலை’ என்ற முறையும் ஆதிக்க உணர்வு கொண்ட அரசு அதிகாரிகள் கொள்ளையடிக்க வசதியாக இருந்திருக்க வேண்டும்.

கூலி இல்லாத வேலை என்பதையே ஊழியம் என்றழைப்பர். இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் இறைவனுக்கு செய்யும் தொண்டினை ஊழியம் என்றழைப்பது, அந்த அடிமை முறையைக் குறிப்பிடும் வார்த்தையின் எச்சம்தான்! மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகளில் ‘பாழிலேச் சான்றோர்க்கு படுநீசன் கொள்ளுகின்ற

ஊழியங்கள் எல்லாம்உரைக்கக் கேள் அன்போரேஎன்ற வரியில் வருகின்ற ‘ஊழியங்கள்’ என்ற வார்த்தையைக் கவனிக்க!

’ஊழியம்’ எனப்படும் ‘கூலி இல்லாத வேலை’ என்ற நடைமுறைக்கு அகிலத்திரட்டு அம்மானை மேலும் தருகின்ற சான்றுகள் இதோ கீழே தருகிறேன்.,

ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான்

குளம் வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல்

களம் பெரிய சான்றோரை கைக்குட்டைப் போட்டு அடிப்பான்

சான்றோர்கள் தன் பனையில்த்தான் முளைத்த ஓலை எல்லாம்

வீணாக நீசன் வெட்டித்தா என்று அடிப்பான்

வெட்டிக் கொடுத்தாலும் வெற்றியுள்ள சான்றோரை

கட்டிச் சுமையெனவே கைக்குட்டைப் போட்டு அடித்து

சுமந்து போனாலும் தொகை எண்ணமும் கேட்டு

பவந்து மொழி பேசிப் பணமும் மிகக் கேட்டு அடிப்பான்’9*

பொருள்: சிறப்பான சாணார்களை நீசன் ஊழியம் என்னும் கூலியில்லா வேலை செய்யச் சொல்லி அடிப்பான். குளம் வெட்டச் சொல்லி, (குளம் வெட்டி முடித்த பிறகு) கூலி கொடுக்காமல், களத்தில் பெரிய சாணார்களைக் கை விலங்கு போட்டு அடிப்பான். சாணார்கள் வளர்த்த பனை மரங்களில் முளைத்த பனை ஓலைகளை எல்லாம், வீணாக நீசன் வெட்டித் தரச் சொல்லிக் கேட்டு அடிப்பான். பனை ஓலைகளை வெட்டிக் கொடுத்தாலும், ஓலைகளைக் கட்டிச் சுமக்கச் சொல்லி, கை விலங்கு போட்டு அடித்து, சாணார்கள் வெட்டி வந்த ஓலைகளின் எண்ணிக்கை போதாது என்று சொல்லி, பாவ(பவந்து) மொழிகள் பேசி, பணமும் கேட்டு அடிப்பான்.

சான்றோர் = சாணார், ஊழியம் = கூலியில்லா வேலை, கைக்குட்டை = கை விலங்கு, எண்ணம் = எண்ணிக்கை.

மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானை பாடல் வரிகளில் ‘பணமும் கேட்டு அடிப்பான்’ என்ற வரி திருவிதாங்கூர் அரசு அதிகாரிகளின் பகல் கொள்ளையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அடிமை முறை அமுலில் இருந்தத் திருவிதாங்கூர் அரசின் கீழ் வாழ்ந்த மக்கள் பட்ட துன்பங்களைக் கீழ்க்காணும் அகிலத்திரட்டின் வரிகள் விளக்கும்.

ஆமிசங்கள் இல்லாத அன்நீத வம்பு இறையும்

நேமித்து வைத்த(து) நிலையுள்ள சான்றோரை

அடித்துக் கை கெட்டி ஆண் பெண் வரைக்கும் இட்டு

இடித்து அடைத்துப் பட்டினிகள் இரவு பகல் போட்டு

பெண் ஆணுடைய பெருமை மிகக் குலைத்து

மண்ணாண்ட சான்றோரை வரம்பு அழித்து மாநீசன்

சான்றோரைத் தான் கண்ணில் காண ஒட்டாமல்

வீணாட்டம் செய்து விரட்டி அடித்து மிக

பம்பழித்து சான்றோரை பல சாதியின் கீழாய்

தும்பழித்து வேலை தூறு பட கொண்டனனே’10*

பொருள்: உண்ண உணவுகூட இல்லாமல், வம்பாக, அநியாயமாக வரிகளை நியமனம் செய்து வைத்து, சாணார்களை அடித்து, கைகளைக் கட்டிப் போட்டு, ஆண் பெண் பேதம் பார்க்காமல், அடித்து இடித்து, அறையில் அடைத்து, இரவு பகல் என்று பல வேளைகள் பட்டினி போட்டு, பெண்கள் மற்றும் ஆண்களின் பெருமை மிகக் குலைத்து, மண்ணாண்ட சாணார்களின் வரம்பழித்து, அவர்களை வீணாக விரட்டியடித்தான் நீசன். பல சாதிகளை விடவும் கீழாக சாணார்களை தும்பாக அழித்து, வேலைகள் செய்ய வைத்தான்.

ஆமிசம் = உணவு, விவசாயத்தில் விளையும் பயிர். அன்நீதம் = நீதத்தின் எதிர்ச்சொல், அநியாயம் என்ற அர்த்தத்தில் வந்தது, நேமித்து = நியமித்து என்ற வார்த்தையின் திரிபு(வழக்குச்சொல்), கெட்டி = கட்டி(கட்டுதல்) என்ற சொல்லின் திரிபு(வட்டார வழக்குச் சொல்)

மேற்சொன்ன அகிலத்திரட்டு வரிகளில் (lines), மக்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதும், அதிகார வர்க்கத்தின் வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டதுமானச் செய்தி தெளிவுபடக் கூறப்பட்டுள்ளது. மேலும்,

‘ஆண் பெண்ணின் பெருமை மிகக் குலைத்து’ என்ற வரி, வன்புணர்வு முதலானக் குற்றச்செயல்களாக இருக்கலாம் என்ற ஐயத்தையும் எழுப்புகின்றது.

கோவில் சிவாலயங்கள் கூடச் சிங்காசனங்கள்

நாவுலகும் கள்ளாய் நாடி இருந்தாலும்

சாணான் கள்ளேறி என சண்டாள நீசன் எல்லாம்

வீணாகச் சான்றோரை விரட்டி அடிப்பான் காண்’ 11*

என்ற அகிலத்திரட்டின் வரிகளை உற்று நோக்குக!

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், திருவிதாங்கூர் சமஸ்தானத்து எல்லைக்குள், சிவாலயங்கள் முதலான கோயில்களில் பூசை செய்த பூசாரிகளும் ‘கள்’ என்னும் மதுவை குடித்தார்கள் என்ற செய்தி, சிங்காசனங்கள் என்ற அரசர் அரண்மனைகளிலும் கள் விரும்பிக் குடிக்கப்பட்டது என்ற செய்தி, இறுதியாக சாணார் சாதி மக்கள் அவர்களின், தொழிலின் பெயராலும், சாதியின் பெயராலும் இழிவு செய்யப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்ட செய்தி – ஆகிய செய்திகள் மேற்சொன்ன வரிகளில் பொதிந்துள்ளதைக் கவனத்தில் கொள்க!

தங்களை சுத்தமானவர்கள் என்று வெளியே பிரச்சாரம் செய்து கொண்டு, கோயிலுக்குள் மது குடித்து உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கும் பூசாரிகளும், அரண்மனையில் மது குடித்து உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கும் அதிகார வர்க்கமும், பிழைப்பிற்காக ‘கள்’ இறக்கி, உழைப்பின் வலி நீங்க மருந்தாக மது குடிக்கும் மக்களை இழிவாகச் சித்தரிக்கும் விநோதம் வரலாற்றுச் சுவடுகளில் மட்டுமல்ல இன்றும் தொடர்கின்ற அவலம்தான்!

மக்களின் வருமானத்தை விட அதிகமான வரிகள் (taxes), கொத்தடிமை என்னும் அடக்குமுறை, வன்முறைக் குற்றச்செயல்கள், சாதியின் பெயரால் இழிவு  போன்றவற்றால், இம்மக்கள் துன்புறுத்தப்பட்டதன் காரணம் என்ன? அதிக வரி விதிக்க வேண்டிய நிர்பந்தம் திருவிதாங்கூர் அரசுக்கு ஏன் வந்தது? மார்பக வரி விதிப்பும், மார்பை மறைக்க மறுப்பும், அதற்கான எதிர்ப்பில் அய்யா வைகுண்டரின் எழுச்சியும் இனி வரும் கட்டுரைகளில்.

தொடரும்…

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

தரவுகள்:

  1. THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, IN THREE VOLUMES, VOL: II, PAGE NO: 392 & 393.
  2. THE TRAVANCORE STATE MANUAL, V.NAGAM AIYA, IN THREE VOLUMES, VOL: I, first published 1906, page no: 196.
  3. THE TRAVANCORE STATE MANUAL, V. NAGAM AIYA, VOL:I, PAGE NO: 181 & FROM 187 TO 192.
  4. THE TRAVANCORE STATE MANUAL, V. NAGAM AIYA, VOL:I, PAGE NO: 198.
  5. THE TRAVANCORE STATE MANUAL, V. NAGAM AIYA, VOL:I, PAGE NO: 197.
  6. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 7, 8.
  7. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 112, 113.
  8. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 112.
  9. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 113.
  10. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 113, 114…
  11. பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்: 113, 114…