கதை வழமையான போதைப் பொருள்கள் வியாபாரம். ஏன் செய்கிறார்கள்? வழமையான பதில் பொருளாதார நெருக்கடி. புதுமை? ஆண்களுக்குப் பதிலாகப் பெண்கள் நடத்துகிறார்கள். ஒரு கேடட் கம்யூனிட்டி குடியிருப்பில் இருக்கும் வெவ்வேறு அடுக்கில் இருக்கும் ஐந்து பெண்களை மையமாக வைத்து கதைக் களமாடுகிறது.
மாலா (நிமிஷா சஞ்ஜெயன்) அந்தக் குடியிருப்பில் வீட்டு வேலை செய்பவள். அடித்தட்டு வர்க்கத்தில் தனியாக ஒரு மகளுடன் வாழும் பெண்களுக்கு உரிய தைரியமும் பெண்ணை படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற வேகமும் குடியிருப்பில் இருக்கும் மேல்தட்டு வர்க்கத்தைப் போல் வாழ வேண்டும் என்கிற கனவுடன் வாழ்பவள்.
ராஜி. (ஷாலினி பாண்டே) மென்மையான மனசுக்காரி. கணவனின் மீது அதீத அன்பு கொண்டு கணவனின் கனவே தன் கனவென வாழ்பவள்.
ஷீலா (ஷபானா அஸ்மி) ராஜியின் மாமியார். அமைதியே உருவான பெண்மணி. சீரியஸ் ஃப்ளாஷ்பேக் உண்டு.
வருணா (ஜோதிகா) மிகப் பெரிய மருந்து கம்பெனியின் நிர்வாக இயக்குநரின் மனைவி. சொந்தமாக பொட்டிக் நடத்திக்கொண்டிருக்கிறாள். வெறுமையான இல்லற வாழ்க்கை.
ஷாஹிதா. (அஞ்சலி ஆனந்த்) ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிகிறாள். பாஸு க்குத் தெரியாமல் சைடில் உள் வாடகைக்கு விடும் வேலையும் செய்கிறாள். இவர்களுடன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தி மற்றும் ஷீலாவின் தோழி மௌஷ்மி.
ராஜி சிறிய அளவில் டப்பா சாப்பாடு விநியோகம் செய்து சம்பாதிக்கிறாள். மாலா ராஜியிடமும், வருணா வீட்டிலும் வேலை செய்கிறாள். வருணா எப்பொழுதும் மாலாவிடம் எரிந்து விழுவதால் மாலாவிற்கு அவளைப் பிடிக்காது. மாலா தனது பகுதியைச் சேர்ந்த ஒருவனிடம் நெருக்கமாகப் பழகி வருகிறாள். அந்தக் காதலன் அவள் மெல்லிதான உள்ளாடையுடன் ஆடும் வீடியோவை அவளுக்கு காட்டுகிறான். ’சினிமா ஹீரோயின் மாதிரி இருக்கேன்ல’ என்று சந்தோஷமாகக் குதூகலிக்கும் போது அதை வைத்து பிளாக்மெயில் செய்கிறான். கஞ்சா விற்றுத் தர நிர்பந்தம் செய்கிறான். அவள் ராஜியின் டப்பாவில் மறைத்து விநியோகம் செய்கிறாள். ராஜிக்குத் தெரிய வர கோபத்துடன் மறுக்கிறாள். மாலா தனது நிலையைச் சொல்கிறாள். அதிகமாகப் பணம் கிடைக்கும் என்கிறாள். கணவனுக்குக் காசு சேர்க்க கஞ்சாவைத் தேர்ந்தெடுக்கிறாள். வீட்டில் வைத்து செய்ய இயலாது என்பதால் வேறு குடியிருப்பில் செய்யலாம் என்று முடிவு செய்து ரியல் எஸ்டேட் அலுவலகம் சென்று பிளாட் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். அவர்கள் வாடகை முன்பணம் அதிகமாகச் சொல்ல வேறு எங்காவது பார்ப்போம் என்று வெளியே வர பின்னாலேயே ஷாகிதா அவர்களிடம் முன்பணம் இல்லாமல் சற்றுக் குறைந்த விலையில் வீடு காண்பிப்பதாகச் சொல்ல, இருவரும் சம்மதிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஷாஹிதாவுக்குத் தெரிய அவளும் இவர்களுடன் இணைகிறாள். மாலாவின் காதலன் கஞ்சாவைவிட வீரியமுள்ள ஒரு போதைப் பொருளை விற்க வேண்டும் என்று மிரட்ட அவர்கள் அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். மாலா அவனிடம் இருக்கும் அந்த வஸ்துவைப் பிடுங்கிக் கரைக்கிறாள். ராஜி அவனது போனை உடைத்து விடுகிறாள். அடுத்த நாள் அவன் ரயிலில் அடிபட்டு இறந்த செய்தியைப் பார்த்து இனி தொல்லை இல்லை என்று நிம்மதியாகும் போது அவனது பாஸ் வந்து மிரட்டுகிறான். அப்போது ராஜியின் மாமியார் ஷீலா உள்ளே வந்து டீல் செய்ய, அதில் கிடைக்கும் பணத்தை டீல் செய்வதற்கு வருணாவின் பொடிக் பிசினஸைத் தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் வருணாவின் கடை வாடகைக்கு ஷாஹிதா பொறுப்பு. நஷ்டத்தில் இருப்பதால் வாடகை கொடுக்காமல் இருப்பதால் அவளையும் சம்மதிக்க வைக்கிறார்கள். இப்படியாக ஐவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அதன் பிறகு கட்டவிழ்ந்த குதிரையாகிறது கதை. வேகமாக அல்ல இஷ்டத்திற்கு. ஆகவே இதில் கதையைக் காட்டிலும் முக்கியத்துவம் பெறுவது கதை மாந்தர்கள்.
மாலாவின் நிலையும் அவளின் தேவைகளும் இந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது. ஆனால் ராஜியின் இயல்புக்கு இது முற்றிலும் பொருந்தவில்லை அல்லது கொஞ்சம் முட்டாளாக இருக்கிறாள்.

ஷீலாவிற்கு இள வயது பின்னணி ஒன்று. அவள் காஷி என்கிற பெயருடன் போதைப் பொருள் வியாபாரியாக இருந்து ஒரு இன்ஸ்பெக்டரைக் கொலை செய்துவிட்டு, ஊரும் பேரும் மாற்றி தோழியின் குழந்தையை வளர்த்து வருகிறாள். இதை மீண்டும் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் பழைய காஷியாக உணர்கிறேன் என்று சொல்வது நகை முரண்.
ஷாகிதாவுக்கு நிறைய பணம் என்பதைத் தவிர எதுவும் இல்லை. இதன் நடுவில் ஷாகிதாவும் இன்ஸ்பெக்டர் ப்ரீத்தியும் காதல் வயப்படுவதில் பெரிய அழுத்தம் இல்லை. அதே சமயம் அது விகாரமில்லாமல் இயல்பாகவே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு பாலின ஈர்ப்பு கதாபாத்திரம் கட்டாயம் என்கிற ரீதியில் வருகிறது. ஷாகிதா ப்ரீத்தியிடம், ’நீ இன்ஸ்பெக்டர். தைரியமானவள். நம்மைப் பற்றி உன் அப்பாவிடம் இல்ல, உன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் நம்மைப் பற்றிச் சொல்ல முடியுமா என்று கேட்க, இல்லை என்று தலை ஆட்டியபடி போகிறாள்.
வருணா நன்கு படித்தவள். தன் கணவன், கணவரின் நண்பனுடன் தம் அடிப்பது, தண்ணி அடிப்பது எல்லாம் முடிகிறது. கணவனிடம் ஆங்கிலக் கெட்ட வார்த்தைகள் உபயோகப்படுத்தி சண்டை போட முடிகிறது. ஆனால் தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் டிப்ரஷன் மாத்திரைகளை முழுங்கி, புழுங்கி விரக்தியில் இருக்கிறாள்.
வருணாவின் கதாபாத்திரத்தைவிட மாலாவின் பாத்திரப் படைப்பு நன்றாக இருக்கிறது.
ஓர் இடத்தில், ’உனக்குத்தான் எல்லாம் இருக்கே! நீ ஏன் இந்த வேலையைச் செய்ற?’ என்று மாலா கேட்கிறாள். ’நான் நடத்துகிற பிசினஸ் நல்லா சக்சஸ் ஆச்சுனா அவ புருஷன் நல்லா சப்போர்ட் பண்றான் பணம் கொடுக்கிறான் என்பார்கள். அதே சமயம் நான் தோற்றுப் போனால் புருஷன் காசை வீணாக்குகிறாள் என்பார்கள். ஆனா நான் பட்ட கஷ்டங்கள் யாருக்கும் தெரியாது. அதான் ஒரு வேலைக்காரியுடன் சேர்ந்து பிசினஸ் பண்றேன்’ என்பாள். ’என்ன சும்மா வேலக்காரி, வேலக்காரினு மட்டம் தட்டுற. உனக்கு முடியாமதானே என்னைக் கூப்பிடுற. எப்பப் பாரு வேலக்காரிங்கிறது. தஸ்ஸு புஸ்சுனு இங்கிலிஷ்ல கெட்ட வார்த்தைல திட்றது. இதைத் தவிர என்ன தெரியும் உனக்கு?’ என எரிச்சல் அடைகிறாள் மாலா. பின் வருணாவைப் பார்த்து உனக்கு, ‘ஃப்ரீயா மரியாதை கிடைக்கிறது அதனால் உனக்கு அதன் மதிப்பு தெரியவில்லை’ என்கிறாள்.
புரியாமல் எரிச்சலுடன் என்ன சொல்ற என வருணா கேட்க, ’ஆமாம். உன் புருஷன் உயர்ந்த உத்தியோகத்தில் இருக்கிறான். பணம் இருக்கிறது. கேட் செக்யூரிட்டில இருந்து லிப்ட் ஆபரேட்டர் வரைக்கும் வேலை பார்க்கிற எல்லாரும் உனக்கு சல்யூட் அடிக்கிறான். ஆனா நான்? நானும் உழைச்சுதான் சம்பாதிக்கிறேன். எல்லாரும் இளக்காரமா பார்க்கிறான்’. அதற்கு வருணா, ’ஆனா சொந்த வீட்டில் மரியாதை இல்லையே?’ என்று கழிவிரக்கத்துடன் சொல்கிறாள். அது சரி என்கிறாள்.
போதை என்பது சம்பந்தபட்ட ஆட்களுக்கு மட்டுமல்ல, பாலியல், கொலை,திருட்டு என்று சமூகக் குற்றங்களுக்கு முதல் காரணமாக இருக்கிறது என்கிறது புள்ளி விவரங்கள். ஆனால், கதைகளில் இது ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் என்கிற ரீதியில், பணத் தேவைக்குப் பண்ணுவது போல் தொடங்கி, ஒரு கதாபாத்திரத்தை மாஸ் நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்!
ஹீரோக்கள் ரவுடித்தனம் செய்வது, பெண்களைத் தூரத்துவது மாஸ் என்பது போல படமெடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், பெண்களை வைத்து அப்படி எல்லாம் மாஸ் கதைகள் சொல்லவில்லை. இரண்டு, மூன்று படங்களில் மட்டுமே பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு இருந்தன. அதுவும் அந்தக் கதாபாத்திரங்கள் படுபயங்கர வில்லியாக மட்டுமே . அது பெண்கள் புத்தியுள்ளவர்கள் என்கிற காரணமாக இருக்கலாம்.
ஆனால், சமூகக் குற்றங்களுக்கு அடிப்படையான இந்தப் போதைவஸ்துகளை நார்மலைஸ் செய்வது, அதுவும் பெண்களை வைத்து செய்வது மிகப் பெரிய நெருடல். காரணம் குற்றங்களின் முதல் களம் பெண்களின் உடலே என்பதால்.
படைப்பாளர்

ரமா கவிதா
தீவிர வாசிப்பாளர். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதிவருகிறார். ஓவியத்திலும் நாட்டம் உண்டு. எதையும் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்.