இரண்டாவது உண்மைக் கதையின் நாயகி பத்மா. வசதியான பெற்றோருக்குப் பிறந்ததவர். சென்னையின் ஒரு முக்கியப் பகுதியில் அமைந்திருந்த பன்னிரெண்டு வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று அவர் பெயரிலிருந்தது. அந்த வீடுகளிலிருந்து வரும் வாடகைதான் அவர்களது பிரதான வருமானம். இதைத் தவிர அதே கட்டடத்தின் தரை தளத்தில் ஒரு கடையும் வைத்திருந்தனர்

அவளது கணவர் அவளை விட பதின்மூன்று வயது மூத்தவர். பத்மா ஓரளவு வெளிர் நிறத்திலிருப்பாள். உயரம் குறைவு. பார்ப்பதற்கு இவ்வளவு சொத்து வைத்திருப்பவள் போலெல்லாம் தெரியாது. எப்போதும் விலை மலிவான பழைய சேலைகளைத்தான் உடுத்தியிருப்பாள். தெருவில் ஏதாவது சாமி ஊர்வலம் வந்தால் அதைப் பார்க்க வரும்போதும் பண்டிகை நாள்களிலும் அல்லது விசேஷ வீடுகளுக்குச் சென்றால் மட்டும் ஜிகு ஜிகுவென்ற புடைவைகளை உடுத்திக் கொள்வாள்.

அவையும் உயர்ந்த தரத்திலோ, பணக்காரத் தன்மையிலோ அல்லது பட்டுப் புடவைகளாகவோ இருக்காதுயாராவது புதியவர்கள் பத்மாவை சாலையில் பார்த்தால், ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண் என்றுதான் நினைப்பார்கள். சிறிய தங்க மூக்குத்தியும், அவள் நிமிர்ந்து நடக்கும் முறையும், கட்டைக் குரலும் அந்தக் குடியிருப்பில் வசித்த வாடகைதாரர்களெல்லாம் பயப்படும் வகையில்தானிருக்கும். அவளது கணவரும் அவள் அளவு உயரம்தான். ஆனால், மிக மிக பருமனாகவும், மிகக் கருப்பாகவுமிருப்பார். ஒரு வேட்டி மட்டும்தான் அவரது தினசரி ஆடை . அவர் மேல் சட்டை அணிந்து அங்கு யாரும் பார்த்ததேயில்லை. மிகப் பெரிய தொப்பை. அவரது குரல், பேசும் தொனி எல்லாம் அப்படியே பத்மாவை பிரதியெடுத்ததுபோல்தான் இருக்கும். அந்தத் தொனி யாரிடமிருந்து யாருக்கு வந்ததென்று தெரியவில்லை

அந்தக் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மோகன் என்ற ஒருவர் குடியிருந்தார். அவர் பத்மாவின் வீட்டிலும், கடையிலும்தான் எப்போதுமிருப்பார். பத்மாவுக்கு மூன்று குழந்தைகள். அவர்கள் மோகனை மாமா என்றும், பத்மா, தம்பிதம்பி…” என்றும்தான் அழைப்பார்கள். அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் வீட்டில் ஏதாவது ரிப்பேர் ஆகிவிட்டது என்றால் பார்வையிட பத்மா மோகனைத்தான் அழைத்துக் கொண்டு வருவாள்எப்போதாவதுதான் அவளது கணவர் துணைக்கு வருவார். மோகன் அதிர்ந்து பேசி அங்கு யாரும் பார்த்ததில்லை. ‘அவன் பத்மாவிற்கு சொந்தக்காரன்’, ‘இல்லை இல்லை இங்கு குடியிருக்க வந்தவன்தான்’, ‘அவர்களது குடும்ப நண்பர்’, ‘ஒரே ஊர்க்காரர்கள்’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். அங்கு குடியிருப்பவர்கள் மாறிக் கொண்டேயிருந்ததால், புதிதாக வந்து அங்கு வசிக்கும் யாருக்கும் அவர்களுக்குள் என்ன உறவு என்று தெரியவில்லை

அவளிடம் நேராகக் கேட்கவும் பயம். அவளது குழந்தைகளிடம் தாங்கள் இதைப்பற்றி விசாரிக்கப் போய் அவர்கள் அதை அவளிடம் சொல்லிவிட்டால், என்னாகும்..? அவள் வாயைத் திறந்தாலே எப்போதும் கெட்ட வார்த்தைகள்தான் சரளமாக வரும். அவள் கணவருக்கும் அப்படித்தான். யாராவது வாடகையை சரியான நேரத்தில் கொடுக்கத் தவறினாலே அவ்வளவுதான். ஒரே வசைமாரிதான் பொழியும் இருவரின் வாய்களிலிருந்தும். அதனால் இந்த விஷயத்தைப்பற்றிக் கேட்க பயந்து எல்லோருமே அமைதியாய் கிசுகிசுத்துக் கொண்டனர்

ஒரு நாள் அங்கு அதற்கு முன் குடியிருந்த ஒரு பெண் வாயிலாக பத்மாவைப் பற்றிய சில உண்மைகள் தெரிய வந்தன. பல வருடங்களாக அவளுக்கு பத்மாவின் குடும்பத்தைத் தெரியும். பத்மாவை அவளது கணவர் ஒரே ஜாதி, சொந்தம், சொத்து என்ற காரணங்களுக்காகத் திருமணம் செய்து கொண்டதாகவும், ஆரம்பத்திலிருந்தே அவள் கணவருக்கு அவளுடன் சரியாக உடலுறவு வைத்துக் கொள்ள முடியாத பிரச்னை இருப்பதாகவும், அதனால் அவள் மோகனுடன் பழகுவது தெரிந்தும் அவர் அதைக் கண்டும் காணாமலிருப்பதாகவும் கூறினாள்இங்கு குடியிருக்க வருபவர்களுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே விஷயம் புரிந்து விடும். சில சமயங்களில் வாடகைக் கொடுக்க அவளது வீட்டுக்குப் போகும்போதெல்லாம் இப்படி அவர்கள் ஏடாகூடமாக இருப்பதைப் பார்த்த சிலர் உடனே வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விடுவார்கள். அவள் மோகனுடனிருக்கும்போது அவளது கணவர் கீழே கடைக்கு வந்து விடுவார் என்றாள்

ஆனால், பத்மாவும் அவளது கணவரும் பேசிக்கொள்ளும்போது ஏதோ மிகவும் நெருக்கமாக இருக்கும் தம்பதிகள்போல் தோன்றும். ஆனால், பத்மாவுடன் மோகன் நடந்து வரும்போதெல்லாம் அவன் மிகவும் சங்கோஜமாக, ஒரு அடிமையைப் போல்தான் நடந்து வருவான். அவளது கணவருடன் அவன் பேசியோ, ஒன்றாக நடந்தோ அங்கு யாரும் பார்த்ததில்லை. ஏதோ தனது மனைவிக்கு வீட்டு வேலையில் உதவி செய்ய ஒரு வேலையாளை நியமித்திருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் அப்படித்தானிருக்கும் அவர்களது மூவரின் செயல்பாடுகளும், நடந்து கொள்ளும் விதங்களும்

மூன்று வேளையும் மோகனுக்கு சாப்பாடு பத்மாவின் வீட்டிலிருந்து போய் விடும். அவ்வப்போது சில மாதங்களுக்கு ஒரு முறை தனது சொந்த கிராமத்திற்குப் போய் தனது பெற்றோரைப் பார்த்து விட்டுப் பணம் கொடுத்து விட்டு வருவான். அவர்களைப் பொறுத்த வரையில் சென்னையில் அவன் பத்மாவின் கடையில் வேலை பார்த்து சம்பாதிக்கிறான். அவ்வளவுதான் தெரியும்

திருமணத்தை மீறிய உறவுகள் பாலியல் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாகும் என்றால், சம்பந்தப்பட்ட இந்த மூன்று பேருமே திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்க வேண்டும் இல்லையா? அப்படி இவர்கள் செய்துகொண்ட இந்த நடைமுறை ஏற்பாட்டில் பத்மா, அவள் கணவர், மோகன் மூன்று பேரும் நிம்மதியாக, சந்தோஷமாக இருந்தார்களா என்றால் அதுதானில்லை. அவளது கணவரை விடுங்கள். பத்மாவும், மோகனும் கூட நிறைவாக இல்லை என்பதுதான் உண்மை

இவர்கள் மூன்று பேரின் மனோபகுப்பாய்வை (Psycho Analysis) ஒவ்வொன்றாக இப்போது பார்ப்போம். இத்தகைய வெளிப்படையான உறவுமுறைகளைத் (Open relationship) தேர்ந்தெடுத்து வாழும் பெரும்பாலான தம்பதிகளின் உளவியலும் வாழ்க்கை முறையும் இப்படித்தானிருக்கும் என்பது இந்த மனோபகுப்பாய்வுகளை படிக்கும்போதே நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்

பத்மாவின் கணவர்:

தன்னால் தன் மனைவியைக் கூடலில் திருப்தியடையச் செய்யமுடியவில்லை. அதனால்தானே இன்னொருவருடன் மகிழ்ச்சியாயிருக்க அவளை அனுமதிக்கிறேன் என்ற நோக்கத்தினடிப்படையில் அவரது கணவர் இச்செயலை அனுமதித்திருந்தது உண்மையெனில், அவருக்குத் தன் மீது ஒரு நல்ல எண்ணமும், மன மகிழ்ச்சியும் இருந்திருக்க வேண்டுமல்லவா…? அது ஏன் இல்லாமல் போனது? தன்னைத் தனக்கே பிடித்திருந்தால் குறைந்தபட்சம் அவர் நல்ல ஆடைகளையாவது அணிந்து கொண்டு சினிமா, பூங்கா என சென்று வந்திருக்கலாம்தானே...? ஏன் கழுவாத முகத்துடன் சுற்றிக் கொண்டு திரிகிறார்அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் நாலு வார்த்தை சிரித்துப் பேசியிருக்கலாம்தானே? அல்லது அமைதியாகவாவது இருந்திருக்கலாம்வாயைத் திறந்தாலே கெட்டவார்த்தைகள். மனதில் பொங்கி வழியும் காமமும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியாத கோபமும் தன் இயலாமையும்தானே பார்க்கும் அனைவரிடத்திலும் ஆபாச வார்த்தைகளாக உமிழப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

சரி, தன் வேலையை, தன் பொறுப்பை எடுத்துக் கொண்டு தனது மனைவியை மோகன் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறானென்றால், அவனுடன் இயல்பாக, நன்றியுணர்வுடன் பழகலாமே? ஏன் எதிரியைப் போல் நடந்து கொள்கிறார்? மற்ற பெண்கள் மீதும் ஒரு நம்பகத்தன்மையற்றவராகவும் மரியாதையில்லாதவராகவும் ஏன் வலம் வர வேண்டும்

அடிக்கடி மூச்சுத் திணறல், உடல் வலி, பலவீனம், நெஞ்சடைப்பு, தலைவலி போன்ற மனவியல் சார்ந்த உடல்நோய்களுக்கு (Psychosomatic Disorders) ஏன் அவர் ஆளாகி மருத்துவமனை, மருத்துவமனையாக ஏறி இறங்க வேண்டும்? அப்போதெல்லாம் அவர் தன் மனைவி மோகனுடனிருக்கும் தனிமையைவிட்டுத் தன்னுடன் வருவதில் ஒரு குரூர மகிழ்ச்சி ஏன் தென்பட வேண்டும்

மோகன்: 

மோகனுக்காவது தான் ஏதோ நல்லது செய்கிறோம் என்ற எண்ணமிருந்ததா என்றால் அதுவுமில்லை. அவன் அந்தக் கட்டிடத்திலிருப்பவர்கள் யாரைப்பார்த்தாலும் கூனிக் குறுகித்தானே நடந்தார்ஒரு பெண்ணுடன் காதல்வயப்பட்டிருக்கும்போது அவளைப் பார்க்கவில்லையென்றாலும், தொடவில்லையென்றாலும் கூட அந்தக் காதலின் அதிர்வலைகள் ஆண்களின் முகத்தில் ஒரு தனிக் களையையும் வெட்கத்தையும் தோற்றுவிக்கும். ஒருநாள் அவளைப் பார்க்கவிலையென்றாலும்கூட அவனின் முகம் வாடி வதங்கிவிடும். நிறைவான காமமும் சேர்ந்து அவளிடமிருந்து கிடைக்கும்போது, இன்னமுமே அந்த மகிழ்ச்சி அவன் முகத்தில் தெரியும்

ஆனால், மோகன் பத்மாவின் கூடவே தினமுமிருந்தாலும் இத்தகைய எந்தவிதமான காதல் அறிகுறிகளுமோ, கலவியில் தான் மகிழ்ச்சியாயிருக்கிறோம் என்ற தோரணையோ அவன் முகத்தில் தென்படாதது ஏன்? இன்னும் சொல்லப்போனால் எப்போதுமே ஒரு விரக்தி நிலையிலும், எதையோ பறிகொடுத்துவிட்டதைப் போலவும்தானிருப்பான்“எப்போ தம்பி கல்யாண சாப்பாடு போடப் போறீங்க…?” என்று நிஜமாகவோ அல்லது பத்மா அங்கிருக்கும்போது அவள் முன் வேண்டுமென்றே குயுக்தியாகவோ யாராவது கேட்கும்போதெல்லாம் அவனது முகம் கிட்டத்தட்ட அழுவது போல் மாறிவிடும். வேறு வழியில்லாமல் புன்னகைக்க முயன்று சமாளிப்பான். இவனுக்கும் அடிக்கடி நோய்வாய்ப்படுவது வாடிக்கையாயிருந்தது.

பத்மா: 

பத்மாவைப் பற்றிய மனோபகுப்பாய்வைப் பார்த்து விட்டு இந்தக்கதையின் தொடர்ச்சியை, எப்படித்தான் இவர்கள் கதை முடிந்தது என்பதைப் பார்க்கலாம்பத்மாவின் குடியிருப்பில் வசிக்கும் மற்ற பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் இவளுக்குப் பிடிக்காது. அதுவும், பத்மா வீடு வைத்திருந்தது சென்னையின் பிரதானப் பகுதியில் என்பதால், அங்கு குடியிருந்த பெண்களும் ஓரளவு வசதியாகவும், நல்ல வேலைகளிருக்கும் கணவரைப் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்பெரும்பாலும் அந்தப் பெண்கள் உடுத்திக்கொள்வது மாடர்னாகவும், அழகாகவுமிருக்கும்.

அப்படி அவர்கள் ஆடை அணிந்து கொள்ளும் போதெல்லாம் ஓரக்கண்களால் பத்மா அவர்களை வெறுப்பாகப் பார்ப்பாள். தம்பதிகள் சந்தோஷமாய் வலம் வருவதைப் பார்த்தாலோ அல்லது அங்கு வசிக்கும் பெண்கள் தங்கள் காதலனுடன் வந்தாலோ இவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. அவர்களின் குணத்தையும் நடவடிக்கைகளையும் ஆபாசமான வார்த்தைகளால் மிகவும் மோசமாக வர்ணிப்பாள். ஏதாவது காரணம் காட்டி சண்டையிட்டு அவர்களை வீட்டைக் காலி செய்ய வைத்து விடுவாள்

அங்கு குடியிருந்து விட்டு, வீட்டை காலி செய்த யாருக்கும் அவள் முன்பணத் தொகையை முழுமையாகத் திருப்பித் தந்ததேயில்லை. இந்த ரிப்பேர், அந்த ரிப்பேர், வீட்டை இப்படிச் செய்து விட்டீர்கள், அப்படி செய்து விட்டீர்கள் என்று பல காரணங்களை அடுக்கி பெரும்பான்மையான தொகையைப் பிடித்து வைத்துக் கொண்டு ஒரு சொற்பத் தொகையை மட்டும் கொடுத்தனுப்புவாள்

பெரும்பாலும் அனைவருமே அவளிடம் சண்டையிட்டபடியும், அவளை சபித்தவாறும்தான் வீட்டைக் காலி செய்வார்கள். அவர்கள் அப்படி சபிக்கும்போது இவள் பதிலுக்கு சண்டையிட்டாலும் அதை இவள் விரும்புவது போலவும் தோன்றும். தான் செய்யும் ஏதோ ஒரு தவறுக்கு இந்த வசவுகள் ஒரு பிராயச்சித்தம் என்ற பாவனையில் அவள் இடையிடையே அமைதியாகி அவர்கள் திட்டுவதையும், சபிப்பதையும் வாங்கிக் கொள்வாள். இப்படித் தன்னை இன்னொருவர் துன்புறுத்தும் போது அதில் தான் மகிழ்ச்சியடையும் இந்த Sado masochism அவளுக்கிருந்தது

சிலர் அந்த சொற்பத் தொகையைப் பார்த்தவுடன், அந்த எதிர்பாராத அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நிற்பர். இவளிடம் வாயைக் கொடுத்து அந்த சாக்கடையில் தாங்களும் நனைய வேண்டுமா என்ற பயத்தில் வெகு சில அப்பாவிகள் மட்டுமே இந்தத் தொகையாவது மிஞ்சியதே, பொரி கடலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே போகலாம் என்று அமைதியாக நகர்ந்து விடுவர்இன்னும் சொல்லப் போனால்,வருடத்தில் சில மாதங்களில் எப்போதெல்லாம் அவள் காசு வேண்டுமென்று நினைக்கிறாளோ அப்போதெல்லாம், ஏதாவது காரணங்களை சொல்லி, வம்பிழுத்து ஏதாவதொரு குடித்தனக்காரர்களை காலி செய்யவைத்து விடுவாள். வீடு என்பது ஒருவரின் அடிப்படைத் தேவை. அவர்களின் உணர்வுகள் சார்ந்த விஷயம். இப்படி திடீரென அவர்களின் கூட்டைக் கலைப்பதைப் போல் வீட்டை காலி செய்என்று சொல்லிக் கொடுமைப்படுத்தக் கூடாது என்ற அடிப்படை மனிதநேயம்கூட அவளுக்கிருக்காது

அந்தப் பகுதியில் வீடுகளுக்கான தேவை பெருமளவில் இருந்ததால், ஒரு வீடு காலியாவதற்கு முன்பே அடுத்த வாடகைதாரர்கள் முன்பணம் கொடுத்து விடுவார்கள்அந்தக் குடியிருப்பின் பெரும்பாலான வீடுகளில் போதிய வெளிச்சமும்காற்றுமிருக்காது. அவற்றில் ஆறு வீடுகள் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பழைய தோற்றத்திலிருப்பவை. மீதி ஆறு வீடுகள் கொஞ்சம் புதியதாகவும் பெரிதாவுமிருக்கும்பொதுவாக, வீட்டின் உரிமையாளர்கள் நல்ல காற்றோட்டமான, வசதியான வீட்டைத் தாங்கள் வசிக்க வைத்துக் கொண்டு, சிறியதான, வெளிச்சமும் காற்றும் குறைந்த வீட்டைத்தானே வாடகைக்குக் கொடுப்பார்கள்? ஆனால், காற்றும், வெளிச்சமும் அறவே இல்லாத ஒரு வீட்டில்தான் அவள் வசித்து வந்தாள். ஒரு சிறியஹால்தான் வீடே. அந்த ஹாலின் ஓரத்தில் சமையல் செய்வதற்குக் கொஞ்சம் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். கட்டில்கூட இருக்காது. அழுக்கான பழைய பாய்கள் சுவரோரமாய் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். மூன்று குழந்தைகளும் அவளும் அவளது கணவரும் அங்குதான் படுத்துறங்க வேண்டும்

இரண்டு இரும்பு பீரோக்களும், தகர, மரப் பெட்டிகளும் ஒரு ஓரத்திலிருக்கும். அவள் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளிளெல்லாம் வீட்டுக்குள்ளேயே கழிவறை வசதியிருக்கும். ஆனால், இவள் வசிக்கும் வீட்டுக்கு வெளியேதான் குளியலறை, கழிவறை எல்லாம். அதுவும் இரண்டு குடித்தனங்களுக்குப் பொதுவாகஇவளது வீட்டின் தரையில் ஆங்காங்கே சிமெண்ட் பூச்சு உடைந்து பெயர்ந்திருக்கும். அந்த சின்ன இடத்தில் ஒரு நாயும் பூனையும் வேறு படுத்துக் கிடக்கும். ஆங்காங்கே சாப்பிட்டு விட்டு கழுவப்படாத தட்டுக்களும், காஃபி குடித்து விட்டு கழுவாத டம்ளர்களும் இறைந்து கிடக்கும். யாராவது அவளது வீட்டுக்குள் நுழைந்தாலே தலை சுற்றி விடும். அதே கட்டிடத்தில் இவள் வாடகைக்கு விட்டிருக்கும் வீடுகளோ டைல்ஸ் பளபளக்கும் இரண்டு படுக்கையறை, மூன்று படுக்கையறை வீடுகள். அந்த வீடுகளின் மதிப்பு பலகோடிகள். ஆனால், இவள் சாலையோரத்தில் வாழும் ஏழைகளைவிட மிக மோசமானதொரு நிலையில்தான் வாழ்ந்து வந்தாள்

எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டான்என்று சொல்வார்களே அப்படியொரு கருமித்தனம். அவளது குழந்தைகளும் ஒரே ஆடைகளைத்தான் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவார்கள். குடும்பத்தோடு வெளியே எங்கும் பயணம் செய்து யாரும் பார்த்ததில்லை. எதற்காகப் பணத்தை சேர்க்கிறாள். கொஞ்சம் கூட அனுபவிக்காமல் அந்தப் பணத்தை சும்மா வைத்துக் கொண்டு என்னதான் செய்யப் போகிறாள், அதனால் என்ன பயன் என்று யாருக்கும் புரியாது. இது போதாதென்று வட்டிக்கு விட்டு வேறு வருமானம் பார்ப்பாள்பத்மா தனது திருமணத்துக்கு முன்பும் இப்படியெல்லாம்தானிருந்தாளா என்றால் இல்லை. பார்த்துப் பார்த்து மேட்சிங் மேட்சிங்காக உடைகளும் நகைகளும் பொட்டும் நகப்பூச்சுக்களும் அணிந்து கொண்டு பளிச்சென்றிருந்தவள்தான். எப்போதும் அவளது தலையில் மல்லிகையோ, முல்லையோ, ஜாதிப்பூவோ சிரித்துக் கொண்டிருக்கும். உறவினர் வீடுகளுக்கும், சினிமா, கடற்கரை, பொருட்காட்சி என்று சொந்தங்களுடன் சிரித்துப் பேசி வலம் வந்தவள்தான். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் தனது திருமண வாழ்வை எதிர்நோக்கியிருந்தவள் பிறகு ஏன் இப்படி மாறிப்போனாள்..? 

பொதுவாக சரியான பாலியல் துணை அமையாதவர்கள் இப்படித்தான் ஒரு குழப்ப நிலையிலேயே வாழ்க்கையை ஓட்டுவார்கள். தாங்களும் மகிழ்ச்சியாக வாழ மாட்டார்கள், அடுத்தவர்கள் குதூகலமாக வாழ்ந்தாலும் பொறுக்காது. மற்றவர்களையும் சந்தோஷமாக வாழ விடமாட்டார்கள்

கண்டிப்பாக நீங்கள் அனைவருமே இந்த பத்மாவைப் போன்ற குணாதிசயங்களுடைய மனிதர்களைக் கடந்து வந்திருப்பீர்கள். ஏன் இப்படி தங்கள் வாழ்க்கையை அனுபவிக்காமல், பார்க்கும் அனைவரையுமே காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்திருப்பீர்கள். கணவன் இறந்த பிறகு தனியாக வாழும் சில வயதான பெண்களும், கணவனைப் பிரிந்த பிறகு இன்னொரு துணையுடன் வாழ அனுமதிக்கப்படாத பெண்களும் கூட இப்படி நடந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்கள்தான்

Hurt people hurt others என்று சொல்வார்கள் இல்லையா? அது முற்றிலும் உண்மைதான். என்னதான் தங்களை மகிழ்ச்சியானவர்களாகவும் உறுதியானவர்களாகவும் வெளியே காட்டிக் கொண்டு நடித்தாலும் அவர்களே மனதளவில் மிகவும் காயப்பட்டிருப்பதால்அடுத்தவர்களுக்கும் அந்த வலியைக் கடத்தி காயப்படுத்தத்தான் செய்வார்கள்பணமும் காமமும் கிடைக்கப் பெறாத ஆண்களும் காதலும் அன்பும் காமமும் கிடைக்கப்பெறாத பெண்களும் கண்டிப்பாக இப்படித்தான் மற்றவர்களைக் காரணமில்லாமல் காயப்படுத்துவார்கள்.

பெண்களுக்கு வெறும் காமம் மட்டும் கிடைத்தால் போதாது. அது தக்கத் துணையிடமிருந்து, தகுந்த மரியாதையுடன் தரப்பட வேண்டும். மோகனிடமிருந்து காமம் கிடைத்தாலும் அந்த உறவில் தனக்கே தன்மீதான மரியாதை கிடைக்காததாலும், தன் கணவனை எதிர்கொள்ளும் போதெல்லாம் ஏற்படும் குற்றவுணர்வினாலும் தான் பத்மா இவ்வாறு நடந்து கொள்கிறாள்பத்மாவின் நடத்தைக்கு அவளை மட்டும் எப்படி குறை சொல்ல முடியும்? தன் உடல்வாகு ஒரு பிரச்சினை என்று காரணம் காட்டி அவளது மகிழ்ச்சிக்கென்று எதுவும் செய்யாத அந்தக் கணவனுக்கு இதில் பொறுப்பில்லையா? தனது திருமணத்திற்கு முன்பே அவனது உடலைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கும்தானேஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள் என்றால் அவளை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று கூடத் தெரிந்து கொள்ளாமல் எதற்கு ஒரு திருமணம்? அதைக்கூடக் கற்றுக்கொள்ளாமல் அல்லது செயல்படுத்தப் பொறுமையில்லாமல் தங்கள் மனைவிகளை காலம் முழுவதும் ஒரு பைத்தியக்காரியைப் போலவும், காதலுக்கும், அன்புக்கும், நிறைவானகாமத்துக்கும் ஏங்கும் ஒரு பிச்சைகாரியாகவும் அலைய வைக்கும் வேலையை செய்வதற்கு எதற்குத் திருமணம்? பெரும்பாலான ஆண்கள் இதைத்தான் காலம் காலமாய் செய்துகொண்டிருக்கிறார்கள்

தனது மனைவிக்குக் கலவியில் உச்சக்கட்டத்தைக் கொடுக்கத் தன் உடலும் மனமும் ஒத்துழைக்காதுதனக்கு அதற்கேற்றப் பொறுமையும், வெவ்வேறு வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள ஆசையும் இல்லை எனத் தெளிவாகத் தெரிந்திருக்கும் போது, திருமணம் செய்வதையே தவிர்த்திருந்திருக்கலாமே? தன் கையே துணை என்று காலம் முழுவதும் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாமே. அந்தப் பெண்ணின் வாழ்க்கையாவது காப்பாற்றப்பட்டிருக்குமில்லையா

உண்மையில் சொல்லப்போனால், ஒரு ஆணின் உடல்வாகுக்கும், அவன் தன் துணையைக் கூடலில் உச்சக்கட்டமடைய வைப்பதற்கும் எந்தத் தொடர்புமில்லை. இதெல்லாம் ஆண்கள் தங்களது சோம்பேறித்தனத்துக்கும் அக்கறையின்மைக்கும் சொல்லிக் கொள்ளும் சுயநலமிக்கக் காரணங்கள்தான். ஒல்லியான உடலமைப்புக் கொண்டிருந்தாலும் பருமனாக இருந்தாலும் அவனது உடலின் உறுதித்தன்மை எப்படி இருந்தாலும் இன்னும் சொல்லப்போனால் அவனது ஆணுறுப்பின் அளவு எப்படியிருந்தாலும் அவன் மனது வைத்தால் கூடலில் சிறப்பாகச் செயல்பட முடியும். இதைப் பற்றி விரிவாக தீண்ட, தீண்ட என்ற அத்தியாயத்தில் பேசுவோம்

சொத்துக்காகத் திருமணம், ஜாதிக்காகத் திருமணம், குடும்பத்திற்காகத் திருமணம், சமூகத்திற்காகத் திருமணம், ஊருக்காகத் திருமணம் என்று செய்து கொண்டு அவளுக்காக எதுவுமே செய்யாமலிருப்பது எந்த விதத்தில் நியாயம்ஆண்கள் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தக் கோபமுமில்லை. ஆனால், பெண்கள் மீதான அவர்களது அக்கறையின்மைக் குறித்தான கோபம்தான் என் மனம் முழுவதும் மண்டிக்கிடக்கிறது. வாய் திறந்து பேசமுடியாமல், யாரிடமும் சொல்லவும் முடியாமல் முடங்கிப் போய், மனதிற்குள்ளேயே புழுங்கிக் கொண்டு அழுது கொண்டிருக்கும் பல கோடிப் பெண்களின் சார்பில்தான் நான் இந்தக் கேள்விகளைக் கேட்கிறேன்.

இப்படி பொறுப்பில்லாமல், மனைவியின் உடல், மன திருப்தி மேல் அக்கறையில்லாமல் நடந்து கொள்வது தனது மனைவியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு கட்டத்தில் அது தனது உடல் நலத்திற்கும், மன நலத்துக்குமே கேடு விளைவிக்கும் என்பதையும் ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அதுதான் நடந்தது பத்மாவின் கணவருக்கும்

திருமணத்தை மீறிய உறவுகளின் மூலம் காமத்தை அடைய நினைக்கும் பயணத்தில் இத்தகைய மனப்பிறழ்வடையும் சிக்கலைத்தான் பெண்கள் பெரும்பாலும் சந்திக்கிறார்கள். இது காமம் கிடைக்காத நிலையை விடக் கொடுமையானதாகவும், வலிமிகுந்ததாகவும், கையாள முடியாததாகவும் இருப்பதால்தான் பெரும்பாலான பெண்கள் இம்முறையைத் தேர்வு செய்வதில்லை

சரி, இப்போது பத்மாவின் உண்மைக்கதையை மீண்டும் தொடர்வோம்

இதற்கிடையில் ஒவ்வொரு முறையும் மோகன் அவனது சொந்த ஊருக்குச் சென்று வரும்போதெல்லாம் அவனது பெற்றோரும், உறவினர்களும், அக்கம்பக்கத்திலிருப்பவர்களும் அவனது திருமணத்தைப் பற்றிப் பேச்செடுக்கத் தொடங்கினர்“எங்களுக்கும் வயதாகிறது, உனக்கும் திருமண வயது கடந்து கொண்டிருக்கிறது , இன்னும் ஏன் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக்கொண்டேயிருக்கிறாய்?” என்று கேள்வியில் தொடங்கும் அவனது அம்மாவின் குரல் ஒவ்வொரு முறையும் அழுகையில்தான் முடியும். அரசல் புரசலாக பத்மாவிற்கும், இவனுக்குமுள்ள உறவு பற்றி அங்கும் பேசப்பட, அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டுமென மோகனும், அவனது பெற்றோரும் நினைத்தனர்

ஊரில் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி சமாளித்து விட்டு இந்தப் பேச்சை பத்மாவிடம் எடுக்கும்போதெல்லாம் அவள் அவனுடன் சண்டையிடத் தொடங்கினாள். மோகன் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் அவனின் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லைஒருமுறை மோகனுக்குத் தெரியாமலேயே ஊரில் பெண்பார்க்கும் படலத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டாள் அவன் அம்மா. ஒரு பெண்ணைப் பார்த்து அவளை அவனுக்கும் பிடித்துப் போய்விட திருமணத்திற்கு சம்மதித்து விட்டான். அவ்வளவுதான், விஷயம் தெரிந்ததும் பத்மா வெடித்து அழத் தொடங்கினாள்மோகனிடமிருந்து அவள் இந்த முடிவை எதிர்பார்த்திருக்கவில்லை. காலம் முழுவதும் தங்கள் உறவு இப்படியே தொடரும் என்று குருட்டுத்தனமாக நம்பியிருந்தாள். தனது உடல் தேவைக்கு என்று தொடங்கிய உறவு அவனை விட்டுப் பிரிய முடியாத அளவுக்கு உணர்வளவிலும் இறுகிப் போயிருந்தது

தனது பெற்றோரைப் பார்த்துக் கொள்ள ஒரு மருமகள் வேண்டுமென்றும் தனக்கு வேறு வழி தெரியவில்லை எனவும் மோகன் கைவிரித்தான்பத்மாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேண்டாவெறுப்பாக, தானே அவனுக்கு முன் நின்று திருமணத்தை நடத்தி வைப்பது போல ஒரு நடிப்பு நடித்து அந்தக் குடியிருப்பில் வசித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் பத்திரிக்கை வைத்தாள். மோகனின் திருமணத்திற்குப் பிறகும் அவனைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கடன் என்ற பெயரில் அவனது திருமணத்துக்கு அவனால் அவ்வளவு எளிதாகத் திருப்பிக் கொடுக்க முடியாத பெரும் தொகையைக் கொடுத்தாள்.

அவன் திருமணத்திற்குப் பின்னும் இதே குடியிருப்பில்தான் வசிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணத்தைக் கொடுத்தாள். திருமணமாகி ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. மோகன் தனது மனைவியிடம் பேசும்போதெல்லாம் பத்மாவின் குரல் ஓங்கி ஒலிக்கும். அவனது திருமணம் வரை வெளியே காட்டிக்கொள்ளாமல் ஓரளவு மறைக்கப்பட்டிருந்த அவர்களது கதை பத்மாவின் நாராச வார்த்தைகளால் ஊருக்கே தெரிய ஆரம்பித்ததுஅவனது மனைவி மிகவும் சிறிய பெண் என்பதால் அவளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. வயதில் பத்மா மோகனைவிடப் பெரியவளாயிருந்தாலும் அத்தனை வருடங்களாக அவனுடன் உறவிலிருந்தாலும் அவனது திருமணத்துக்குப் பிறகு தனது மனைவியுடன் அவன் பழகுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி இந்த முக்கோண உறவைப் பக்குமாய் கையாள்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை

பத்மா எதற்கெடுத்தாலும் கத்தத் தொடங்கினாள். தன் கணவனையும் கூட்டுசேர்த்துக் கொண்டு மோகனை அவமரியாதையாக நடத்தத் தொடங்கினாள். அவளது குழந்தைகள்தான் பாவம். ஏன் எப்போதும் தங்கள் வீட்டில் இவ்வளவு கூச்சல் என்று புரிந்தும் புரியாமலும் விழித்தார்கள்

ஒரு நாள் அந்தக் குடியிருப்பில் ஒரு பெண்ணுக்குப் பூப்புனித நீராட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கொஞ்சம் நேரம் அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொள்ள மோகனின் மனைவியிடம் விழா நாயகியின் அம்மா, நகைகளைக் கேட்க அவளும் தந்து விட்டாள்இந்த ஒன்றுமில்லாத, உப்புச் சப்பில்லாத காரணத்தை பூதாகரமாக்கி மோகனையும் அவனது மனைவியையும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் பேசி அவளை அடிக்கவே போய்விட்டாள் பத்மா. ‘எப்படி என் அனுமதியில்லாமல் நீ உன் நகையை அடுத்தவருக்குத் தரலாம்..?’ என்று ஒரே சண்டை. அவளது நகை, அவள் யாருக்கோ தருகிறாள் இதில் இவளுக்கு என்னப் பிரச்சினை என்று அங்கிருக்கும் எல்லோருமே முணுமுணுத்தார்கள். யாருக்குமே எதுவும் புரியவில்லை. இவளது செயலில் கொஞ்சம்கூட நியாயமில்லை என கோபப்பட்டார்கள். சிலர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக முதன் முறையாக பத்மாவிடம் பேசப் போய் அது பெரும் வாய்த்தகராறில் முடிந்தது

மோகனும் அவனது மனைவியும் தனக்கு வாய்த்த அடிமைகள் என்பது போல் நடந்து கொள்ளத் தொடங்கினாள் பத்மா. மோகன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்குச் சென்று விட்டான். அதன் பிறகு இவள் அந்த ஊருக்குப் போய், தன் பணத்தைக் கொடுக்குமாறு சண்டையிட்டும் சென்னை வந்து மீண்டும் தனது கடையில் வேலை பார்த்து தன் கடனை அடைக்கும்படியும் வற்புறுத்தி அவனை அழைத்து வந்தாள். மோகன் தன் மனைவியைத் தனது பெற்றோரிடம் விட்டுவிட்டு பத்மாவுடன் சென்னைக்கு வந்தாலும் வெகு நாட்களுக்கு அந்த முடிவு நிலைக்கவில்லை. பழையபடி அவர்களுக்குள் சுமூகமான உறவு ஏற்படவேயில்லை

மோகன் மீண்டும் தனது ஊருக்குப் போய்விட்ட பிறகு, பத்மா ஒரு மனநோயாளி போல் நடந்து கொள்ள, அவனது கணவனும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அந்தக் குடும்பமே மிக மோசமானதொரு சூழலுக்குத் தள்ளப்பட்டது. பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்த காசை செலவழிக்க ஒவ்வொரு மருத்துவமனைக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள் திருமணத்தை மீறிய உறவுகள், பாலியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாகுமா..? 

மூன்றாவது கதையையும் சொல்லி முடித்த பிறகு இத்தகைய சூழல்களிருப்பவர்களுக்கான சரியான தீர்வுகள் என்ன என்பதையும், வந்தபின் தீர்ப்பதை விட வருமுன் காப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும் பேசுவோம்

மூன்றாவது உண்மைக் கதைதான் இன்னும் என்னால் நம்ப முடியாத ஒன்று

அவள் பெயர் பார்கவி. நெடுநெடுவென்ற வளர்த்தி. அந்த உயரத்திற்கேற்றதை விடக் கொஞ்சம் அதிகமாகவே பருமன் . வாட்ட சாட்டம் என்று சொல்வார்களே அப்படியிருந்தாள். அடர் கருப்பு அல்ல. ஆனால், மாநிறத்தைவிட நிறம் குறைவு. அவளது முகமெங்கும் அள்ளித் தெளித்திருந்தன பருக்கள். பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிந்துகொண்டிருந்தாள். மாணவர்களிடம் பேசுவது போன்ற, வகுப்பெடுப்பது போன்ற அதே தோரணையில்தான் அவள் கணவனருகிலும் நின்றாள், உட்கார்ந்தாள், பேசினாள்அவளது கணவன் அவளைவிட உயரம் குறைவு. எடையும் குறைவு. ஒல்லியாக இல்லை. கொஞ்சம் பூசினாற்போன்ற உடல்வாகுடனிருந்தார். அவளை விடக் கொஞ்சம் நிறம் அதிகம். மாநிறம். மிகவும் சாதாரணமாக, எளிமையாகத்தான் இருந்தது அவரது பேச்சுஇவர் சுற்றி வளைக்கவெல்லாமில்லை. அவளை வெளியே அனுப்பவும் தேவையில்லை, இங்கேயேயிருக்கட்டும் என்று கூறித்தான் பேச ஆரம்பித்தார்

எங்க சொந்த ஊர்தான் மேம் இவளுக்கும். தெரிஞ்சவங்கதான். கல்யாணத்துக்கு முன்னாடியே இவ இங்க சென்னைல தங்கித்தான் வேலை பார்த்துட்டிருக்கா. அப்பவே, வேற ஜாதியைச் சேர்ந்த ஒரு பையனை இவ காதலிக்கறது தெரிஞ்சு இவங்க வீட்டுல ஒத்துக்கல. அதுக்கு முன்னாடியே ரெண்டு, மூணு பசங்களைக் காதலிச்சிருக்கறா. இது எல்லாமே எனக்குத் தெரிஞ்சிருந்தும் அவங்க வீட்டுலயிருந்து வந்து எங்ககிட்ட கெஞ்சினதுல மனசு இரங்கித்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்ஒரே ஜாதி, தெரிஞ்சவங்க வேற. அந்த சொந்தம் விட்டுப் போயிடக்கூடாது. தெரியாவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன ஆகுமோ இப்படிலாம் அவங்க சொன்னது எனக்கும் சரின்னு தோண, நானும் இவளைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். எனக்கும் எங்க ஜாதியிலேர்ந்து வெளியே சரியா வரன் அமையலஅவ கேரக்டர் பத்தி என் ஃபிரெண்ட்ஸ்லாம் சொன்னப்பக் கூட நான் இந்த காதல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி சகஜம்தானே, கல்யாணத்துக்கு அப்புறமா மாறிடுவாபாத்துக்கலாம்…” னு சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இவளும் என்னைப் பிடிக்கலேனோ, இந்தக் கல்யாணம் வேண்டாம்னோலாம் சொல்லலை.

ஏன்னா, எங்க வீட்டுல எதுக்கெடுத்தாலும் அடிப்பாங்க மேடம் . இவரைக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா அடி பிருத்துருவாங்க அதான் நான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்…” என்று தன் கணவனை இடைமறித்துப் பேசினாள்.

“கல்யாணத்துக்கு அப்புறமும் கூட வேலை பார்க்கற ஒருத்தர் மேல லவ்வுனு சொல்லி இவ சுத்தத் தொடங்க, அதை நான் இவ வீட்டுல சொல்லப் போய் அது ஒரு பெரிய பிரச்சினை ஆகிடுச்சுஇவளை அடி பின்னிட்டாங்கஅதையும் மன்னிச்சுக் குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் எங்களுக்குப் பொறந்துதிருச்சுஅந்த சமயத்தில எங்க வீட்டுலேயும் இவளோட அம்மா வீட்டுலேயும் மாறி மாறி சில மாசங்கள் தங்கியிருந்தாள்எல்லாம் ஒழுங்காதானே போயிட்டிருக்குனு நினைச்சு கொஞ்சம் சந்தோஷமாயிருந்தேன். இவ வேலையை விட்டுட்டா குழந்தையைப் பார்த்துக்கறதுக்காக. அப்ப, என் தம்பிகூடப் பிறந்த தம்பி இங்க சென்னைக்கு வேலை தேடி வந்தான். எங்க வீட்டுல தங்கிக்கிறேனு சொன்னான். நானும் எதுவும் தப்பா நினைக்காம சரின்னுட்டேன்…” 

கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். “ஆஃபிஸ் வேலை முடிஞ்சதும் சொந்தமா செய்யற பிஸினெஸ் விஷயமா அலைஞ்சுட்டு வீட்டுக்கு வர லேட் ஆகிடும் மேடம். பிறந்திருக்கறது பெண் குழந்தை. அதோட எதிர் காலத்துக்குக் காசு சேர்க்கணும்ங்கறதுக்காக நாயா, பேயா அலைஞ்சிட்டு வருவேன்ஒரு நாள் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன். என்னை அந்த நேரத்துல ரெண்டு பேருமே எதிர்பார்க்கல. முதல்ல இவ வர்றா, பின்னாடியே அவனும் அதே ரூம்லயிருந்து வர்றான், சட்டையிலாம. இவ வெச்சிருந்த பூவெல்லாம் கட்டில்ல சிதறி இருக்குகுழந்தை தரையில படுத்து தூங்கிட்டிருக்கு எனக்குத் தூக்கி வாரிப் போட்டுச்சு. எல்லாம் புரிஞ்சிருச்சு. ஆனா, அப்ப நான் எதுவும் கேட்கல. அடுத்த நாள் நான் ஆஃபீஸுக்கு லீவ் போட்டுட்டேன். அவன் வெளியேக் கிளம்பிப் போனதும், பளார்னு இவளை ஒரு அறை விட்டு, என்ன நடந்துச்சுன்னு கேட்டேன்உண்மையை ஒத்துக்கிட்டா. இப்ப இவ என்ன சொல்றானு நீங்களே கேளுங்க …” என்றார்

அவள் எந்த முக அசைவும் உடலசைவுமில்லாமல் சிலைபோல் உட்கார்ந்திருந்தார். அவளிடமிருந்து பொதுவாக மற்ற பெண்கள் சொல்லும் அதுவரை பெரும்பாலும் நான் கேட்ட வார்த்தைகளைத்தான் எதிர்பார்த்தேன்.

அப்படியெல்லாம் எதுவுமில்லை மேம். இவர் ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு சந்தேகப்படறாரு…” இந்த வார்த்தைகளைத்தான் அவள் சொல்வாள் என்று நினைத்தேன், ஒருவேளை அவளது கணவர் சொல்வது போல் உண்மையாகவே அப்படி நடந்திருந்தால்கூடஆனால், “ஆமாம் மேடம். இவர் சொல்றதெல்லாம் உண்மைதான். எனக்கு இவரைப் பிடிக்கல. இவர் தம்பியைத்தான் பிடிச்சிருக்கு. அவர் கூடத்தான் நான் வாழப் போறேன்என்று வெட்டு ஒன்று, துண்டு ஒன்றாகப் பேசினாள்

ஏய்நான் உனக்கு என்னடி குறை வெச்சேன். இப்படி உட்கார்ந்து உங்கிட்டப் பொறுமையாப் பேசிட்டிருக்கேன் பாரு, என்னைச் சொல்லணும்…” 

எங்க பொறுமையாப் பேசற? ஊர்லயிருந்து வரும்போது பஸ்ல என்னை இந்த விஷயத்தைச் சொல்லிக் குத்தி குத்திக் காட்டித் திட்டிட்டே வரல. அடிக்கல…?”

ஆமா, அப்படி உங்க ரெண்டு பேரையும் பார்த்து ஒரு வாரம் கூட ஆகல. திட்டாம, அடிக்காம கொஞ்சுவாங்களா…” மாறி, மாறி ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள்

மேடம்எப்பப் பார்த்தாலும் பிஸினெஸ், பிஸினெஸ்னு காலைல வேலைக்குக் கிளம்பினார்னா, ராத்திரி பதினோரு மணிக்கு வர்றாரு. சாப்பிட்டுத் தூங்கிடறார். எங்கிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசினதில்லை.” 

யாருக்காக வேலை செய்யறேன்உனக்காகவும் குழந்தைக்காகவும் தானே. நீ அதைப் புரிஞ்சுக்குவேனு நினைச்சேன். சரி, அதான் இனிமே பிசினஸை விட்டுடறேன்னு சொல்லிட்டேன்ல. இப்ப ஒரு மாசமா சீக்கிரமாத்தானே வீட்டுக்கு வந்துட்டிருக்கேன்….” 

மேம் , இவர் ஏதோ என்னை அதிகாரம் செய்யறது மாதிரியே, ஏதோ ஒரு சின்னக் குழந்தைக்கு அட்வைஸ் செய்யற மாதிரியேதான் மேம் பேசறாரு. நான் குடும்பம் நடத்த வந்தேனா, இல்லை பாடம் படிக்க வந்தேனா? அவங்க தம்பி கூடப் பேசறப்ப நாங்க ரெண்டு பேரும் சமம்னு ஒரு ஃபீல் வருது. அது இவர்கிட்ட எனக்கு சுத்தமா வரல …” என்றாள்

இதெல்லாம் ஒரு காரணமாடி…” அவள் கணவர் கொதித்தார்

மேம், தப்பு பண்றதுக்கு என்னல்லாம் காரணம் சொல்றா பாருங்க. இவ வீட்டுக்கு மட்டும் இப்ப நான் இந்த விஷயத்தை சொன்னேன்னா, இவளை அடிச்சே கொன்னுருவாங்க. இதுல சம்பந்தப்பட்டிருக்கறது வேற யாராவதாயிருந்தா பரவாயில்ல, அவன் என் கூடப் பிறந்த தம்பி. நான் வெளியே சொன்னேன்னா, இவ மானம் மட்டுமல்ல, எங்க குடும்ப மானமும் சேர்ந்துதான் போகும். அதுக்குத்தான் மேம் பயப்படறேன் அந்த தைரியத்துலதான் இவ ஆடறாஎன்றார்

இதுக்கு என்ன முடிவு வெச்சிருக்கான்னு எங்கிட்ட சொன்னா. நான் அதைக் கேட்டு ஆடிப்போய்தான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன். எனக்குத் தலையை சுத்துது. பைத்தியமே பிடிச்சுரும் போலயிருக்கு…” என்று சொல்லியபடி தலையில் கைகளை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டார். ஏளனமாகத் தன் கணவரை ஒரு பார்வை பார்த்தாள். அவள் உதட்டோரம் மெல்லிய சிரிப்பு படர்ந்திருந்தை நான் கவனித்தேன்

மேம், இவரு சொல்ற மாதிரி எங்க வீட்டுல தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்டுருவாங்க. இவர் முன்னாடி நாங்க ஒண்ணா இருந்தா இவருக்கும் மனசு கஷ்டமாயிருக்கும். அதான், நான் ஒரு ஐடியா சொன்னேன். இங்க சென்னைல எங்களுக்குத் தெரிஞ்சவங்களோசொந்தக்காரங்களோ யாரும் கிடையாது. கொஞ்சம் தள்ளி ஒரு வீடு பார்த்துட்டு நானும் இவர் தம்பியும் வாழ்ந்துக்கறோம். எங்க சொந்தக்காரங்க எப்பவாவது எங்களைப் பார்க்க சென்னைக்கு வந்தா, நான் இவர் வீட்டுக்குப் போய் நாங்க ஒண்ணா வாழ்ந்திட்டிருக்கற மாதிரி காமிச்சுக்கறேன்…” என்றாள்

எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. திகிலுடன் அவள் கணவரைப் பார்த்தேன்

இதையேதான் மேம் எங்கிட்ட ஒரு வாரமா சொல்லிட்டிருக்கா.” 

சரிம்மா, அப்ப குழந்தை?”

அதை நான் பார்த்துக்கறேன் மேம். ஆனா, அதுக்காகற செலவுக்கு மட்டும் இவர் காசு கொடுத்துடணும்…” 

வேணாம் உங்கிட்ட என் குழந்தை வளர்ந்தா, அதுவும் நாசமா போய்டும்” 

சரி, அப்ப நீயே வெச்சுப் பார்த்து வளர்த்துக்கோ…” 

அடுத்த நொடி பறந்தது பதில்

இப்ப உங்க தம்பி எங்கே..?” 

அவனை ஊருக்கு அனுப்பி வெச்சுட்டேன் மேம். அவன்கிட்ட நான் தனியாப் பேசினதும் , அவன் கூட இவளை விட்டுட்டு வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு ஒதுங்க ஒத்துக்கிட்டான் மேம். இவதான் தினமும் அவனுக்கு ஃபோன் பண்ணி, இந்த ஐடியாவை சொல்லி வா, வாங்கறா. அவன், அண்ணன் சொன்னா சரின்னு சொல்லி ஃபோனை வெச்சுட்டான், என்று ஏதோ அவரது தம்பி ஒன்றும் தெரியாத அப்பாவி என்பது போல் பேசினார்இப்ப இவளுக்கு எவ்வளவு தைரியமிருந்தா, என்னை இவ எந்தளவுக்கு இளிச்சவாயன்னு நினைச்சிருந்தா, இந்த ஐடியாவுக்கு நீ ஒத்துக்கிட்டு அதுக்கு உன் தம்பியையும் சரி சொல்ல வைம்பா. என்னைப் பார்த்தா என்ன கேனை மாதிரி இருக்கா. அவன் என் தம்பிஉனக்கும் தம்பி மாதிரிதான்அது கூடவா புரியல?” 

எப்படி அவன் எனக்குத் தம்பி ஆக முடியும்? உன்னை விட இரண்டு வயசு சின்னவன். அவ்வளவுதானே…?” அங்கு கனத்த மௌனம் நிலவியது

இது எப்படி சரிவரும்…” 

ஏன் மேம் சரி வராது? இருவரும் அடுத்தடுத்துக் கேட்டார்கள்

உங்க கணவர் என்ன பண்ணுவார்?” 

அவரும் கல்யாணம் பண்ணாம ஏதாவது ஒரு பொண்ணோட வாழட்டும். சொந்தக்காரங்க வரும் போது மட்டும் நடிக்கலாம்”, என்றாள் அசால்டாக

அப்ப மூணு வீடு பார்க்கப் போறீங்களா…?” 

சில நிமிட அமைதிக்குப் பின் தொடர்ந்தாள். “எனக்கு அவரைத்தான் மேம் பிடிச்சிருக்கு. நான் கண்டிப்பா என் மனசை மாத்திக்க மாட்டேன்கல்யாணம் எதுக்காக மேம் பண்றோம்..? தனக்கு சமமா நம்மளை ஒருத்தன் நடத்தணும். பொண்டாட்டியை படுக்கையில சந்தோஷமா வெச்சுக்கணும்ங்கறதுக்குத்தானே? இது ரெண்டையுமே பண்ணாம, ஆனா உனக்கு நான் புருஷன்ங்கற பேரும் பெருமையும் மட்டும் எனக்கு வேணும்னு ஒருத்தன் சொன்னானா, சாரி மேம் நான் கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன். இது ரெண்டுமே எனக்கு இவர்கிட்ட கிடைக்கல, அவங்கிட்டதான் கிடைக்குது… காலம் முழுக்க இது ரெண்டுமில்லாம நடிச்சுட்டு இவர்கூட வாழ்றதுக்கு நான் தியாகி இல்ல. எத்தனை நாள் கெஞ்சிருப்பேன். சீக்கிரம் வீட்டுக்கு வா. படுக்கையில இப்படி நடந்துக்க, அப்படி நடந்துக்கோனுஊஹூம்ஒரு நாள்கூட காது கொடுத்து கேட்கலையே இப்ப இவர் தம்பி வந்ததுக்கப்புறம்தான் நான் வாழ்க்கையில இது வரைக்கும் எவ்வளவு இழந்திருக்கேன்னு புரியுது . இவரால அதுக்கப்புறமும் எனக்குப் பிடிச்ச மாதிரி பேசவும், படுக்கையில நடந்துக்கவும் முடியல, தெரியல. இனிமேல் அப்படி நடந்துப்பாருன்னும் தோணலை. இன்னும் நாப்பது, ஐம்பது வருஷம் இதே மாதிரி எதுவுமில்லாம வாழ்றதை நினைச்சாலே பயமாயிருக்கு மேடம்

“நான் சொன்னதுக்கு இவர் சரின்னா, ஒரே ஊர்ல அப்பப்ப இவரையும் பார்த்துக்கிட்டு, குழந்தையையும் பார்த்துக்கிட்டு இருப்பேன். இல்லேன்னா, அவன் கூட ஏதாவது கண்காணாத ஒரு ஊருக்குப் போய் எப்படி வாழ்றதுன்னு எனக்குத் தெரியும்

சட்டென எழுந்து அந்த அறையைவிட்டு வெளியேறினாள்

கண்டிப்பா அவ போயிருவா மேம். எனக்கு நல்லாத் தெரியும் எனக்கும் இப்ப அவ முகத்துல முழிக்கற எண்ணமே போயிருச்சு. நான் எப்படி மேம் என் சொந்தக்காரங்க முன்னாடி முழிப்பேன்.என் குழந்தையோட தற்கொலை பண்ணிக்கலாமானு தோணுது…”என்று கதறியவருக்கு நடைமுறை வாழ்க்கைக்குத் தகுந்தபடி அவள் மனைவியிடமிருந்து விவாகரத்து வாங்கி, தன் குழந்தையுடன் எப்படி வாழ்வது என்று சொல்லிக் கொடுத்தேன்.

ஆனா, ஒரு விஷயம் கேட்க நினைக்கறேன். உங்க மனைவி உங்ககிட்ட எதிர்பார்த்த, கேட்ட விஷயங்கள் உண்மையா..?” 

ஆமா மேம். ஆனா, நான் என்னை மாதிரிதானே இருக்க முடியும்?” 

ஒருவேளை இன்னொரு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தீர்கள் என்றால், இந்த விஷயங்களைப் படித்துவிட்டு திருமணம் செய்யுங்கள்…” என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தனுப்பினேன்

நம் சமுதாயத்தில், “என் கணவன் என்னைப் பாலியல் உறவில் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவில்லை. நான் அதிருப்தியுடனிருக்கிறேன், என்னை அவன் தனக்குச் சமமாக மதிக்கவில்லை, அப்படியே வாழ்ந்து சாக எனக்கு விருப்பமில்லை…” என்று ஒரு பெண் சொல்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது

அப்படியிருக்கையில் இந்தப் பெண் தன் கணவனின் முகத்தைப் பார்த்து, “நீஎன்னை மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்வதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. உனது சகோதரனிடம் நான் நிறைவாய் உணர்கிறேன். என் வாழ்க்கையை, இன்னும் ஐம்பது ஆண்டுகள் உன்னைப் பொறுத்துக் கொண்டு கடத்த முடியாது…” என்று சொன்னதை அதுவரை நான் கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை. அதற்கு முன்பும், அதன் பிறகும் அவளைப் போல் ஒரு பெண்ணை நான் கடந்துவரவில்லை

அதற்குப் பிறகு அந்தப் பெண்ணும், அவளது கணவனின் சகோதரனும் அவர்கள் நினைத்தபடி வாழ முடிந்ததா, அவள் வாழ்க்கை என்னவானது என்றெல்லாம் எனக்கு எந்தத் தகவலையும் அவர்கள் தெரியப்படுத்தவில்லை. ஆனால், அவளது கணவர் சொன்னது போல் , குடும்ப நிர்பந்தங்களின் காரணமாகவோ அல்லது, சமூக நியதிகளுக்குக் கட்டுப்பட்டோ ஒருவேளை அவள் தன் கணவனுடன் சேர்ந்து வாழ நேரிட்டிருந்தால் அந்த வாழ்க்கை அவர்கள் இருவருக்குமே நரகமாகத்தான் இருந்திருக்கும். கண்ணாடிப் பொருளில் விரிசல் விழுந்தது போல்தான் அந்த உறவும். கண்டிப்பாக நடந்து முடிந்த இந்த சுவடுகளின் கீறலை அவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கும்

இந்த விஷயத்தைப் பற்றி இன்னும் விரிவாகவும் நான் சொன்ன இந்த மூன்று கதைகளிலும் சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்திருந்தால், எப்படி நடந்திருந்தால் தங்கள் வாழ்க்கையை சரியாகக் கொண்டுபோயிருக்கலாம் என்பதைப்பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் பேசுவோம்கூடவே ஆராய்ச்சி வகுப்புகளில் நாம் செய்து கொண்டிருக்கும் மிகப் பெரிய தவறைத் தவிர்த்து, திருமண உறவுகளில் எழும் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பற்றியும் அலசுவோம்

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.