ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, 1947ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரம் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஜி.ராமநாதன் இசையமைத்துள்ளார். தெலுங்கில் சஹஸ்ர சிர்சேதா அபூர்வ சிந்தாமணி என்கிற பெயரில் 1960 ஆம் ஆண்டு, இந்தப் படம் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்படத்துக்குப் பாவேந்தர் பாரதிதாசனார் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் என்கிறது இணையம். ஆனால், அவர் பெயரைத் திரைப்படத்தில் காணவில்லை.

ஆண் நடிகர்கள்

மெய்யழகனாக பி.எஸ்.கோவிந்தன்

துறவியாக எம்.ஆர்.சாமிநாதன்

நீதிகேதுவாக எம்.ஜி.சக்ரபாணி

புரந்தரனாக ஈ.ஆர்.சகாதேவன்

குணபதியாக கே.கே.பெருமாள்

மதிவதனனாக ஆர்.பாலசுப்ரமணியம்

காளியாக காளி என்.ரத்தினம்

காவலராக டி.எஸ்.துரைராஜ்

வேலனாக எம்.இ.மாதவன்

மன்னப்பனாக வி.எம்.ஏழுமலை

பெண் நடிகர்கள்

அபூர்வ சிந்தாமணியாக வி.என்.ஜானகி

செங்கமலமாக எஸ்.வரலட்சுமி

மஞ்சளழகியாக ஆர்.பத்மா

தம்பதியாக எம். மாதுரி தேவி

தங்கமாக சி.டி.ராஜகாந்தம்

வேலம்மாவாக பி.ஆர்.சந்திரா

சுந்தரவல்லியாக சுசீலா

செல்வநாயகமாக சரஸ்வதி

பச்சைவேணியாக செல்லம்

எம்.எஸ்.சுப்புலட்சுமி நாட்டியம் எனவும் போடுகிறார்கள். எம்.எஸ் அம்மா எப்போது வருகிறார் எனத் தெரியவில்லை. அதுவரை வெளிவந்த அனைத்துத் திரைப்படங்களிலும் நாயகியாகவே நடித்த அவர், இதில் ஒரு நடனத்திற்கு மட்டும் வந்தாரா எனத் தெரியவில்லை. அல்லது இந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி யார் எனத் தெரியவில்லை.

திரைப்படத்தின் கதையைப் பார்க்கலாம்.

மந்திரவாதி ஒருவர் எவராலும் தன்னை வெல்ல முடியாத வரம் வேண்டும் என்று கேட்க, சிவபூதகணம் வருகிறார். சிந்தாமணி என ஓர் இளவரசி இருக்கிறார். அவரைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, ஆயிரம் பேரின் தலைகளை வெட்டி யாகம் செய்தால், நீ கேட்டது கிடைக்கும் என சொல்கிறார்.

இளவரசி சிந்தாமணி மிகவும் திறமை வாய்ந்தவர். இன்னமும் இன்னமும் கற்க வேண்டும் என நினைப்பவர். அதைப் பயன்படுத்தி, மந்திரவாதி, அரண்மனைக்குள் ஆசிரியராக நுழைகிறான்.

இந்நிலையில் சிந்தாமணியின் தாய்மாமன், அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிக் கேட்கிறார். மந்திரவாதி மூன்று கேள்விகளை மட்டும் சிந்தாமணிக்குக் கொடுத்து, அதற்குப் பதில் வருபவனுக்குத் தெரிந்தால் மணந்துகொள். இல்லையென்றால் தலையை வெட்டி விடு என்கிறார்.

வரும் தாய்மாமாவிற்குப் பதில் தெரியவில்லை. கொல்லப்படுகிறார். ஒவ்வொருவராகப் போட்டிக்கு வருகிறார்கள்; வெட்டப்படுகிறார்கள். இவ்வாறு 999 பேரின் தலைகள் துண்டிக்கப்படுகின்றன.

மற்றொரு நாட்டு இளவரசரான மெய்யழகனின் ஆறு சகோதரர்களும் இந்த 999 பேர்களுள் இறந்தவர்கள். அதனால் மெய்யழகன், தன் நண்பனுடன் வந்து, சிந்தாமணியின் தோழி செங்கமலத்தைப் பார்க்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். செங்கமலம், மெய்யழகன் வந்த நோக்கத்தை அறிந்து, கேள்விகளுக்கான பதில் என்ன என்று சிந்தாமணியிடம் கேட்க, சிந்தாமணியோ, ‘’எனக்கே தெரியாது. ஆனால், இந்த இந்த ஊர்களுக்குச் சென்றால், தெரிந்துகொள்ளலாம்’’ என ஆசிரியர் சொன்னதாகச் சொல்கிறார்.

மெய்யழகன், மதிவதனாபுரம், சம்பங்கி புரம், நதிசீல புரம் என்ற அந்த மூன்று இடங்களுக்கும் சென்று, பல தடைகளையும் கடந்து, பதில்களைத் தெரிந்துகொள்கிறார். அந்தப் பதிலுக்கு உரியவர்களை உடன் அழைத்தும் வருகிறார். வந்த மூன்று நாட்டவர்களும் மந்திரவாதியால் பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒரு மன்னர், வாளை வீச மந்திரவாதியின் தலை துண்டாக விழுகிறது. அதாவது ஆயிரமாவது தலை மந்திரவாதியினுடையது. வந்த மூவரும் மந்திரநீர் மூலம் இறந்த 999 பேருக்கும் மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள்.

முதன் முதலாக இறந்த தாய்மாமனையே திருமணம் செய்து கொள்ளும்படி மெய்யழகன், சிந்தாமணியிடம் அறிவுரை சொல்ல, அவர்கள் இணைகிறார்கள். மெய்யழகன் செங்கமலத்தை மணந்துகொள்கிறார்.

லிகிதம் (கடிதம்) போன்ற இப்போது புழக்கத்தில் இல்லாத சொல்லாடல்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன.

“என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு விருந்தாக அளிக்கத் துணிந்துவிட்டேன்” என மெய்யழகனுக்கு உதவும் இரண்டாவது நாட்டுப் பெண் சொல்லும்போது, “என் சீரண சக்திக்கு சோதனையா” என மெய்யழகன் கேட்பது, ‘அடடா’ போட வைக்கிறது.

கல்வி என்னைக் கர்வியாக்கியது, மடமையால் மதி இழந்தேன். என்னை மன்னித்து ஆட்கொள்ள வேண்டும் என சிந்தாமணி, வருங்கால கணவர் காலில் விழுகிறார். காலில் விழுவது என்பது, பாவேந்தரின் கொள்கைக்கு மாறுபாடானதாகத் தெரிந்தது.

இறுதிக் காட்சியில் அரச குடும்ப திருமணங்கள் அக்னி வளர்த்து நடைபெறுகின்றன. நண்பனாக வரும் காளியின் திருமணம் மாலை மாற்றி நடைபெறுகிறது. இவையெல்லாம் எதுவும் குறியீடா எனத் தெரியவில்லை.

சிந்தாமணியாக வரும் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் வி.என். ஜானகி அம்மா நன்றாக நடித்து இருக்கிறார். வரலக்ஷ்மி அம்மா மிகவும் அழகாக இருப்பதுடன், இயல்பாக நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நாயகியாக நடித்து வந்த எம். மாதுரி தேவி, சிறிய பாத்திரத்தில் வந்தாலும் நிறைவாக, குறிப்பாக ஆண் வேடத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார்.

மெய்யழகனின் நண்பராக வரும் காளி என். ரத்தினம் நகைச்சுவை கலந்த சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

மொத்தத்தில் பெண் பாத்திரங்களுக்கு முதன்மை கொடுத்துள்ள, விறுவிறுப்பு கொஞ்சமும் குறையாத திரைப்படம்.


(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.