ராஜகுமாரி 1947ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்.

இந்தத் திரைப்படம் பலரின் திரை வாழ்க்கைப் பயணத்தின் முதல் படியாக இருந்து இருக்கிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஏ. எஸ். ஏ. சாமி (A. S. A. Sami) எனும் அருள் சூசை ஆரோக்கிய சாமி இயக்கிய முதல் திரைப்படம் இதுவே. இவர் குருவிகுளம் ஊரைச் சார்ந்தவர். பெற்றோர் வணிகம் நிமித்தமாகக் கொழும்பில் குடியேற இவரது வாழ்க்கை அங்கே கழிந்துள்ளது. பின் குடும்பம் பாளையங்கோட்டைக்குக் குடி பெயர்ந்தது. இலங்கையில் இருந்து வந்தவர் நாடகம், சினிமாத்துறைகளில் கதை, வசனம் எனத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்தத் திரைப்படம்தான் அவர் இயக்கிய முதல் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தில் இவர் அறிமுகப்படுத்திய நாயகன் MG ராமச்சந்தர் எனப்படும் பிற்காலத்தில் எம்.ஜி.ஆர் என அனைவராலும் அழைக்கப்பட்ட மக்கள் திலகம். இதற்கு முன் பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்து இருந்தாலும், நாயகனாக அவருக்கு இதுவே முதல் படம்.

அடுத்து வருபவர் கலைஞர். அவர் உரையாடல் எழுதிய முதல் திரைப்படம் இதுதான். அப்போது அவர், பெரியாரிடம் நாற்பது ரூபாய் சம்பளத்தில் ஈரோடு குடியரசு பத்திரிகையில் வேலை செய்து கொண்டு இருந்து இருக்கிறார். கோவையிலிருந்து திரைப்படத்துக்கு வசனம் எழுத வேண்டும் என அழைப்பு வந்தது. அதை அனுப்பியவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. என அவர் தனது நெஞ்சுக்கு நீதி நூலில் குறிப்பிடுகிறார். திரைப்படத்தில் உதவி ஆசிரியர் மு கருணாநிதி எனப் போடுகிறார்கள்.

பிற்காலத்தில் ஏ. எஸ். ஏ. சாமி, அண்ணாவின் வேலைக்காரி கதையை இயக்கி இருக்கிறார். இவ்வாறு ஏ. எஸ். ஏ. சாமி, மூன்று முதல்வர்களுடன் பணிபுரிந்த புகழுக்குச் சொந்தக்காரர்.

அடுத்து வருபவர் திருச்சி லோகநாதன். அவர் இந்தத் திரைப்படத்திற்காகப் பாடிய காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான் என்கிற பாடல்தான் அவர் பாடிய முதல் பாடல். அந்தப் பாடலுக்கு முன்னணியில் நடித்தவர் MN நம்பியார்.

ஸ்ரீ வள்ளி 1945ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். அதில் உதடு ஒத்திசைவு (lip synchronization) மூலம் பின்னணிப் பாடல் அறிமுகமாகி இருக்கிறது. திரைப்படம் எடுத்து முடித்துவிட்டுப் பார்த்ததில் நாயகி ருக்மணி பாடியது, ஏவிஎம்க்குப் பிடிக்கவில்லை. அதனால், பிந்தைய ஒத்திசைவு முறை மூலம் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பாடலைப் பாடியவர் பெரியநாயகி. அதனால், இவரே தமிழ்த் திரைப்படத்தின் முதல் பின்னணிப் பாடகர். அதன் பிறகுதான் திருச்சி லோகநாதன். இதனால், அவரை முதல் ஆண் பின்னணிப் பாடகர் எனலாம். பெரியநாயகி அப்போது வேறு படங்களில் நடித்துக் கொண்டும், தனக்கான பாடல்களைப் பாடிக் கொண்டும் இருந்தவர்தான். அதனால், திருச்சி லோகநாதனை முதல் தொழில்முறைப் பாடகர் என சொல்லலாம்.

இதே திரைப்படத்தில், திருச்சி லோகநாதனின் பெரியப்பா மகன் எம்.எம்.மாரியப்பாதான் எம்.ஜி.ஆருக்கான அனைத்துப் (4) பாடல்களையும் பாடியுள்ளார். இவரே இரண்டாவது ஆண் பின்னணிப் பாடகர். ஆனால், திருச்சி லோகநாதன் எம்.எம். மாரியப்பா இருவர் பெயரும் திரைப்படத்தில் குறிப்பிடப்படவில்லை.

மருத நாட்டு இளவரசி திரைப்படத்திலும் எம்.ஜி.ஆருக்கு, எம்.எம்.மாரியப்பாதான் பாடல்கள் பாடியிருக்கிறார். 1945ஆம் ஆண்டு பெரியார், இசைத்தென்றல் என்கிற பட்டம் கொடுத்து இருக்கிறார். ராஜாஜி, காமராஜர், அண்ணா என அனைவரின் பாராட்டையும் பெற்ற நடிகராக இருந்து இருக்கிறார். கலைமாமணி பட்டமும் பெற்றிருக்கிறார் என அவரது நூற்றாண்டு விழா மலர் (2016) கூறுகிறது.

நடிகர்கள்

சுகுமாராக எம்.ஜி.ராமச்சந்தர்

ஆலகாலனாக டி.எஸ்.பாலையா

மந்திரவாதியாக எம்.ஆர்.சுவாமிநாதன்

மல்லிகாவின் தந்தையாக எஸ்.வி.சுப்பையா

பாகுவாக எம்.என்.நம்பியார்

மந்திரவாதியின் சீடராகப் புளிமூட்டை ராமசாமி

மந்திரவாதியின் சீடராக டி.இ.ராமசாமி

நல்லானாக எம்.ஆர்.மாதவன்

பாம்பாட்டியாக நாராயணன்

நடிகைகள்

மல்லிகாவாக கே.மாலதி

விஷாராணியாக கே.தவமணிதேவி

பஹுனியாக எம்.சிவபாக்யம்

சுகுமாரின் தாயாக எம்.எம். ராதா பாய்

அஞ்சலையாக சி.கே.சரஸ்வதி

நடனக் கலைஞராக ஆர்.மாலதி

எடுத்தவுடன் மந்திரவாதியும் அவரது உதவியாளரும் ஒரு குகைக்கு வருகிறார்கள். பல காலம் அலைந்து அவர்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அங்கே ஒரு விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. அதைக் கையில் எடுத்தவுடன் அதனுள் இருந்து சிறு வடிவிலான மனிதன் வருகிறார். அவர், ‘நான் உங்கள் அடிமை. உங்களுக்கு வேண்டிய அனைத்தும் செய்கிறேன்’ என்கிறார். மந்திரவாதி அந்தக் குகை இருக்கும் இடத்தில் பெரிய மாளிகை கட்டும்படி கட்டளையிட, சிறு பூதமும் அவ்வாறே செய்கிறது. இனி திருமணம் முடிப்பதற்குப் பெண் வேண்டும். அதற்காக அழகிய பெண்கள் பலரைக் கொண்டு வருமாறு மந்திரவாதி கட்டளையிட, பூதமும் அவ்வாறே செய்கிறது. ஆனால், மந்திரவாதிக்கு எந்த பெண்ணையுமே பிடிக்கவில்லை. அனைவரையும் தனது அடிமைகளாக வைத்துக்கொள்கிறான்.

அடுத்த காட்சியில், ராஜகுமாரி மல்லிகா (கே. மாலதி) வழக்கம் போல வேட்டைக்குச் செல்கிறார். அவ்வாறு வேட்டைக்குப் போகும்போது, மான் மீது எய்த அம்பு சுகுமாரன் (எம். ஜி. ஆர்) கையில் பாய்கிறது. மல்லிகாவே மருந்து போட்டு விடுகிறார். மல்லிகாவின் உதவியாளர் நல்லானிடம் சுகுமாரும் சரி மல்லிகாவும் ஒருவர் இன்னொருவர் குறித்து விசாரித்துக் கொள்கிறார்கள். இருவரின் சந்திப்பும் நாள்தோறும் நடைபெற்று, காதலும் வளருகிறது. இதை அறிந்த சுகுமாரனின் அம்மா பெரிய இடத்து நட்பு வேண்டாம் என எச்சரிக்கிறார்.

ஆலகாலனைத் (டி. எஸ். பாலையா) தான் மல்லிகாவின் வருங்கால கணவராக மல்லிகாவின் அப்பா (எஸ்.வி.சுப்பையா) நினைத்து இருக்கிறார். மல்லிகாவின் அப்பாவான மன்னர் புகழுரைக்கு அடிமையானவர். அதைப் பயன்படுத்தி ஆலகாலன் செல்வாக்குடன் வாழ்கின்றான்.

மந்திரவாதிக்கு எந்தப் பெண்ணையும் பிடிக்கவில்லை என்பதால், பெண்ணைத் தேடி அவனே புறப்படுகிறான். தண்ணீர் எடுத்து வரும் பெண்களை எல்லாம் பார்க்கிறார். யாரையும் பிடிக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில், மல்லிகா சுகுமாரன் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து நல்லான், ‘என்ன பொருத்தமான சோடி’ என மல்லிகா சுகுமாரன் குறித்து ‘மைண்ட் வாய்ஸ்’ எனச் சத்தமாகப் பேசிக்கொண்டு வர, ஆலகாலன் உண்மையை அறிந்து கொள்கிறான். சுகுமாரின் அன்னையிடம் போய் எச்சரிக்கிறான். இதனால் சுகுமார் மாலதியிடம் போய், தன்னை மறந்துவிடும்படி சொல்கிறார்.

ஆலகாலன் மந்திரவாதியிடம் சென்று, மல்லிகாவின் மனதை மாற்றும்படி வேண்டுகோள் வைக்கிறான். வந்து பார்த்த மந்திரவாதிக்கு மல்லிகாவை மிகவும் பிடித்துப் போகிறது. தனது உதவியாளரை அன்னப் பறவை இருக்கை போல மாற்றுகிறான். அதன் மீது அமர்ந்த மல்லிகாவை அந்த இருக்கை புஷ்பக விமானம் போல பறந்து சென்று கொண்டு போய்விடுகிறது.

இப்போது மந்திரவாதி, தனது நாடான ஜாலத் தீவிற்கு மல்லிகாவுடன் சென்றுவிட்டான். ஆலகாலன் ஜாலத்தேவிற்குப் புறப்படுகிறான். மந்திரவாதியின் மந்திரத்தால், கப்பல் புயலில் சிக்கிக்கொள்கிறது.

ஊரில் ராஜகுமாரியைக் காப்பற்றிக் கொண்டு வருபவருக்கு ராஜகுமாரியே கொடுப்பதாக அரசர் அறிவிக்கிறார். சுகுமாரன் ராஜகுமாரியை மீட்கப் புறப்படுகிறார். அவரது அம்மாவும் தயக்கத்துடன் சம்மதிக்கிறார். படகில் செல்லும்போது, எதிரில் ஆலகாலனின் படகு வருகிறது. புயல் குறித்த விவரம் அறிந்த படகோட்டி, அருகில் இருக்கும் வேறு ஒரு தீவில் சுகுமாரனை இறக்கி விட்டுவிட்டுச் செல்கிறார். அதே தீவில், ஆலகாலனின் படகும் தீவில் ஒதுங்குகிறது.

ஆலகாலன் உண்ண உணவுகூட இல்லாமல், இளநீரைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டு, புலம்பிக் கொண்டு போகும் போது, ஒருவரைப் பல்லக்கில் வைத்துச் சிறு கூட்டம் கொண்டு செல்கிறது. அவர்கள், யார் என ஆலகாலன் கேட்டபோது, அவர்களது அரசி அவ்வப்போது போட்டிகள் நடத்துவார் என்றும், அதில் வெற்றி பெற்றவருக்குப் பரிசு கொடுப்பார் என்றும், அவ்வாறு நடைபெற்ற போட்டியில் வென்றவரைப் பல்லக்கில் கொண்டு போகிறோம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். ஆலகாலன், போட்டிக்குச் செல்கிறான்.

சுகுமாரனுக்கு பாகுவும் (எம்.என்.நம்பியார்), அவரது தங்கை பஹுனியும் (எம்.சிவபாக்யம்) உதவுகிறார்கள். போட்டி குறித்து அறிந்த சுகுமாரனும் செல்கிறார். போட்டி சுகுமாரனுக்கும் வீரர் ஒருவருக்கும் (சாண்டோ தேவர்) நடக்கிறது. சுகுமாரன் வெற்றி பெறுகிறார். பின் சுகுமாரனுக்கும் ஆலகாலனுக்கும் போட்டி நடைபெறுகிறது. சுகுமாரனே, எதிர்பார்த்தது போல வெற்றி அடைகிறார்.

விஷராணி, சுகுமாரனிடம் ஆசை சொற்கள் கூறுகிறார். சுகுமாரன் மறுத்ததால் கொலை வரை போகிறார். கொலைக்களத்தில் மந்திரக்கோல், பறக்கும் கம்பளம், மறைந்து போகவைக்கும் மோதிரம் மூன்றும் கிடைக்கின்றன. சுகுமாரன் பகு, பகுனி மூவரும் மந்திரவாதி இருக்கும் ஜாலத்தீவு செல்கிறார்கள்.

இதை அறிந்த விஷ ராணியும் ஆலகாலனும் அங்கு செல்கிறார்கள். விளக்கு பகுவின் கையில் கிடைக்கிறது. அதில் வரும் பூதம் மூலம், மந்திரவாதியைக் கல்லாக மாற்றுகிறார். விளக்கை உடைத்து பூதத்தையும் விடுதலை செய்கிறார். விஷாராணியும் இறக்கிறார்.

அதன் பிறகு அனைவரும் விஷாராணியின் தீவிற்கு வருகிறார்கள். ராணி இறந்ததால், இறுதியாகப் போட்டியில் வெற்றி பெற்ற சுகுமாரனை மக்கள் மன்னராக்குகிறார்கள்.

நல்லவன் போல நடித்த ஆலகாலன், கம்பளத்தில் வைத்து மல்லிகாவைக் கொண்டு வந்து, தான்தான் காப்பாற்றியதாக நம்ப வைக்க இருவருக்கும் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. அப்போது அங்கு வந்த பகு, மோதிரத்தை மாட்டிக் கொண்டு யார் கண்ணிலும் படாதவாறு, ஆலகாலனை அடித்து உண்மையை வரவைக்கிறார். மல்லிகா சுகுமாரன் திருமணம் நடைபெறுகிறது.

பூதம், அற்புத விளக்கு என்பதெல்லாம் அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையின் தாக்கமாகவே தோன்றுகிறது. என்ன, பூதத்தின் அளவுதான் சிறியதாக இருக்கிறது. ஆயிரத்தொரு இரவுகள் புதினத்தின் இந்தக் கதை அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்திருக்க வேண்டும்.

ஊரில் ராஜகுமாரியைக் காணவில்லை என்று ஒரே பேச்சாக இருக்கும் போது வலை போட்டுத் தேடுகிறார்கள் என்னும் போது, மீனவர் அப்போது இந்த வலையையும் வைத்துத் தேடுங்கள் எனத் தன் வலையைக் காட்டி சொல்லுவது, துணி வெளுக்கும் பெண் தனது கழுதையைக் காணவில்லை எனச் சொல்வது, கதா காலாட்சேபம் செய்பவர் ராவணன், சீதையைத் தூக்கிக் கொண்டு சென்றது குறித்துச் சொல்வது என அந்தக் காட்சியைப் பற்றி ஒவ்வொருவரின் கோணத்திலும் ஒரு செய்தி உள்ளது என்பது, பார்க்க சுவாரசியமாக இருந்தது.

மந்திரவாதி, அன்னப் பறவை புஷ்பக விமானத்தில் மல்லிகாவைக் கடத்திச் செல்கிறார். ஆலகாலன் தீவில் இருக்கும் போது, ‘அப்பேற்பட்ட ராமபிரானே சீதையை வேண்டாம் என்றாரே, எப்போது ராஜகுமாரி மந்திரவாதியுடன் ஓடிவிட்டாளோ அவளைப் பற்றி நமக்கெதுக்கு கவலை, அவள் மந்திரவாதியுடனே இருக்கட்டும்’ என்கிறார். இவையெல்லாம் ராமாயணத்தின் தாக்கம் எனக் கொள்ளலாம்.

எஸ். எம். சுப்பையா இசையமைத்திருக்கிறார்கள். உடுமலை நாராயணகவி அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

‘காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான்’ பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. பாடலின் களம் விஷாராணியின் நாடு. ஆனால், பாடலில் வரும் ஊரோ காசி. இவ்வாறு முரண்பாடு இருந்தாலும், கவிதை நன்றாகவே இருக்கிறது. உடுப்பது நான்கு முழம் உண்பது நாழி என்கிற ஒளவையரின் நல்வழி நூலின் சொற்றொடரை அழகாகப் பாடலுடன் இணைத்து உள்ளார்.

காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான்

கவலை இல்லாமல் மனம் கலங்காமல்

ஆசை பேராசையினாலே மனம் வாடினோம்

அறிவு கெடாமல் நெறி தவறாமல்

உழைத்திடும் ஏழை மக்கள் உடல் முதலாளி.

உடுப்பது நான்கு முழம் உண்பது நாழி

உண்மையென்று தெரிந்து நெசமாக சந்தோசமாக

கூரை வீடாம் ஓலைக் குடிசையிலே

உருண்டாலும் சீலம் மாறோம்

கோடீஸ்வரரோடுதான் ஈடாகவே வாழுவோம்

கூரை வீடாம் ஓலைக் குடிசையிலே

குறையணுகாமலே வசதி பெறாமலே

கதை நெடுகவே இந்திய நாடு, தமிழ்நாட்டுப் பண்பாடு குறித்த சிறப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன.

மந்திரவாதி இருப்பதோ ஜாலத்தீவு. அவரிடம், அவரது உதவியாளர், தமிழ்நாடு என ஒரு நாடு இருக்கிறதாம்; அந்த நாட்டின் பாடல் ஒன்று கேட்க வேண்டும் என்ற உடன், சில பெண்கள் இணைந்து கர்நாடக சங்கீதம் பாடுகிறார்கள். ஒருவர் ஆடினால் நன்றாக இருக்கும் என உதவியாளர் சொல்ல, ஒருவர் என்ன இருவர் வந்து ஆடுவார்கள் என மந்திரவாதி சொல்ல

“சதூராட்டம் ஆனந்தம் தரும்” என இரு பெண்கள் வந்து பரத நாட்டியம் ஆடுகிறார்கள். பின் அது குழு நடனமாகிறது. அன்றைய காலகட்டத்தில் சதூராட்டம் என்ற சொல்லாடல் தான் இருந்து இருக்கிறது என தெரியவருகிறது.

தமிழ் நாட்டிற்குள் வரும் மந்திரவாதி, பேய் பிடித்தவர் என வரும் பெண்ணுக்கு, “எருமை சாணியைக் கரைத்து ஊற்றிக் குடுமியில் (முடியில்) ஒரு சாண் வெட்டி இரண்டு நாட்கள் பட்டினி போட வேண்டும்” என மருத்துவம் செய்கிறார். இவ்வாறு அன்று வழக்கம் இருந்து இருக்கலாம்.

நல்லானும் அவர் மனைவி அஞ்சலையையும் சண்டை போட அஞ்சலை கணவனை அடிக்கிறார். இந்தக் காலகட்டத்தில் வந்த மந்திரவாதியிடம் அஞ்சலை, நல்லானை வசியம் செய்ய என மருந்து வாங்கிச் செல்கிறார். இதை அறிந்த நல்லான், போய் மந்திரவாதியிடம் சண்டை போட, மந்திரவாதி நல்லானைக் குரங்காக மாற்றுகிறான். பின் இயல்பு நிலைக்கு மாற்றுகிறார். இப்படிச் சில மந்திர தந்திரக் காட்சிகள் வைத்துள்ளார்கள்.

அனைவரும் இயல்பாக நடித்துள்ளார்கள். வாள் சண்டையில் அப்போதே எம்.ஜி. ஆர் மிகவும் கை தேர்ந்தவராக இருந்து இருக்கிறார். அந்தக் கால நாகரீகமான நீள முடியுடன் அவர் வருகிறார். காதல் காட்சிகளில் குறும்பு ததும்பும் முகமாக மிகவும் பொருத்தமாக இருக்கிறார். பகு, மோதிரத்தை அணிந்து கொண்டு, ஆலகாலனை (பாலையா) அடிக்கும் போது, பாலையா கொடுக்கும் உடல் மொழி சிறப்பாக உள்ளது. எஸ் வி சுப்பையா, நாயகியின் அப்பாவாக வருகிறார். அப்போது அவர் வயதில் குறைந்தவராக, அதாவது நாயகனைவிட இளம் வயது உடையவராகத்தான் இருந்திருப்பார். ஒளவையார் இளமையாகவே இருந்திராமல், முதுமை அடைந்தது போல இவரும், தொடக்க காலமிருந்தே வயதானவராகவே நடித்திருக்கிறாரோ எனத் தோன்றியது. நாயகி, இயல்பாக நடித்துள்ளார். பஹுனியாக வரும் எம்.சிவபாக்யம் நடனம், நடிப்பு, உடல்மொழி எல்லாம் மிகவும் அருமையாக இருக்கிறது.

ஆர்ட் செட்டிங் AJ டொமினிக் எனப் போடுகிறார்கள். மிகவும் நன்றாக இருக்கிறது. திரைப்படத்தை, ஜுபிடர் தயாரிப்பு பிக்சர்ஸ் எடுத்துள்ளது.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.