கோடை மழையால் சிறிது நேரம் வெயில் தணிந்திருந்து, மண் வாசனை மனதை இதமாக்கியது. வானிலை மிக இனிமையானதாக இருந்ததால், சட்டென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

“ஏங்க பீச் போகலாமா?” என்று என் கணவரிடம் கேட்டேன். இதைக் கேட்டவுடன் குழந்தைகள் இருந்த இடத்திலேயே குதிக்க ஆரம்பித்துவிட்டனர். கணவரும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார்.

கடற்கரையில் தேவையில்லாத எண்ணெய்ப் பண்டங்களைத் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்வதைத் தவிர்க்க, வீட்டிலிருந்த மக்காச்சோளத்தை வேகவைத்து உப்பு, மிளகு, வெண்ணெய் தடவி அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டோம்.

நாங்கள் கடற்கரையை அடைந்த கணமே என் மகள் தன் சிப்பி தேடலை ஆரம்பித்தாள். என் மகன் இரு கால்களையும் அவன் தோண்டிய மணலில் புதைத்துக் கொண்டு, ஒரு குச்சியால் மணலில் ஆங்கில வார்த்தைகளை எழுத ஆரம்பித்தான். கணவர் கடற்கரை ஓரமாகத் தன் நடைப்பயணத்தை ஆரம்பித்தார். நான் அமைதியாக மணலில் அமர்ந்து கொண்டு கைகளில் ஒட்டியிருந்த மணல் துகள்களைத் தட்டிவிட்டு அந்த அலைகளின் ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘கடலின் மேற்பரப்பில் காற்று எழுதி அனுப்பும்

கவிதை வரிகளுக்கான கை தட்டல்தான்

இந்த அலை ஓசை’ என்கிற அற்புதமான வாணிதாசனின் கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வந்தன.

அந்த அலையின் ஓசையை ரசித்து கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கணம் பசியால் என் வயிறு உறுமும் ஓசையையும் கேட்டேன். அதுவும் அந்த வெண்ணெய் தடவிய சூடான மக்காசோளத்திற்கு வயிறு ஏங்குவதை உணர்ந்தேன்.

‘சோறு முக்கியம் பிகிலு’ என்கிற வசனம் நினைவிற்கு வந்து சிரித்துக் கொண்டேன்.

பாத்திரத்தைச் சட்டென்று திறந்து ஒன்றைக் கையில் எடுத்து, கடித்து ருசிக்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல ஒரு காகம் என்னருகில் வந்து நின்றது. மேலும் கீழும் என்னை உற்று பார்ப்பது போல் தெரிந்தது. அது மக்காச்சோளத்தின் ஒரு பங்கை எனக்குக் கொடுக்க மாட்டாயா என்று கேட்பதைப் போல உணர்ந்தேன். என் கையால் மக்காச்சோளங்களைப் பிரித்து எடுத்து காகத்தின் அருகில் வைத்தேன். குதித்து குதித்து என்னருகில் வந்தது காகம். என்ன மகிழ்ச்சி! ஆசையுடன் அதைச் சாப்பிட்ட காகத்தைக் கண்டு நானும் மகிழ்ச்சியடைந்தேன். இன்னும் கொஞ்சம் பிரித்து காகத்தின் அருகில் வைத்தேன். பின்னர் அந்தக் காகம் வழக்கம் போல தன் சகாக்களை அழைத்தது.

‘ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்-காக்கை

அழைத்துத் தன் இனத்தோடு குந்திப் பொறுக்கும்

காக்கை யிடத்திலுள்ள ஒற்றுமை… ‘ என்கிற பாரதிதாசனின் கவிதை நினைவிற்கு வந்தது.

அந்தக் காகம் அழைத்தவாறே அனைத்து சகாக்களும் வருகை தந்தனர். நான் இன்னும் கொஞ்சம் பிரித்துத் தூவினேன். அவர்கள் விரைவாக அவற்றை ருசித்தனர். ’ ‘மகிழ்ச்சி ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் டோபமைன் சுரப்பதை உணர்ந்தேன். நான் அவர்களைச் சுற்றி மேலும் மேலும் மக்காச்சோளங்களைப் பிரித்தெடுத்து தூவினேன். காகங்கள் விருந்தில் மகிழ்ந்தன. நான் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த என் குழந்தைகள் என் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு, என்னுடன் சேர்ந்து கொண்டு அவர்களும் மக்காச்சோளங்களைத் தூவ ஆரம்பித்தனர். காகங்கள் இன்ப வெள்ளத்தில் களித்தன. பாத்திரத்தில் இருந்த மொத்த மக்காச்சோளமும் காகங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.

வியப்பு என்னவென்றால் எங்கள் யாருக்கும் அவ்வேளையில் பசி என்ற ஒன்று எடுக்கவேயில்லை!

கொடுப்பதிலிருந்த மகிழ்ச்சி எங்கள் ஆன்மாவின் பசியை முழுவதுமாக நிரப்பியிருந்தது.

ஈதலை காட்டிலும் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை என்கிற வள்ளுவனின் வாக்கு அன்று எங்களுக்குப் புலப்பட்டது. கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி, எதையாவது வைத்திருப்பதிலோ அல்லது எதையாவது பெறுவதிலோ உள்ள மகிழ்ச்சியைவிடப் பல மடங்கு அதிகம் என்பதை அந்த நாள் உணர்த்தியது.

“நீங்கள் மனிதகுலத்தின் ஒரு சதவீத அதிர்ஷ்டசாலி பட்டியலில் இருந்தால், மற்ற தொண்ணூற்று ஒன்பது சதவீதத்தைச் சேர்ந்த மனிதகுலத்தைப் பற்றிச் சிந்திக்க நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்கிறார் உலகின் ஐந்தாவது பணக்காரரான வாரன் பஃபெட்.

நம் ஒவ்வொரு நாளையும் நாம் செய்யும் அறுவடையைக் கொண்டு மதிப்பிடாமல், நாம் நடும் விதைகளைக் கொண்டு மதிப்பிடத் தொடங்குவோம்!

கொடுப்பதால் யாரும் ஒருபோதும் ஏழையாகிவிடுவதில்லை என்கிற எண்ணத்தை மனதில் நிறுத்திக்கொள்வோம்!

நாம் ஒவ்வொருவரும் வாழ்வதின் அர்த்தம் நம் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் கொடுப்பதில்தான் இருக்கிறது தோழர்களே!

(தொடரும்)

படைப்பாளர்:

சித்ரா ரங்கராஜன்

கட்டிடக் கலை மற்றும் உட்புற வடிவமைப்பாளராக சென்னையில் தன் கணவருடன் நிறுவனத்தை நடத்திவருகிறார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதை ஆர்வமாகக் கொண்டுள்ளவர். புத்தகங்களுக்குப் படங்கள் வரைவதிலும் நாட்டம் கொண்டவர். பெண்ணியச் சிந்தனையில் மிகுந்த ஆர்வமுள்ளவர். ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஓர் எழுத்தாளருக்கு முக்கியப் பங்குண்டு என்பது இவருடைய வலுவான கருத்து. ஹெர் ஸ்டோரிஸில் ‘மேதினியின் தேவதைகள்’ என்கிற தலைப்பில் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். இது இவருடைய இரண்டாவது தொடர்.